ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தமிழ்நாட்டில் ஒருவர்கூட இறக்கவில்லையா? மருத்துவத் துறை அமைச்சர் மா.சு.வும் செயலர் இராதாகிருஷ்ணனும் சொல்வது உண்மையா?

23 Jul 2021

கடந்த ஜூலை 20 செவ்வாய் அன்று ஒன்றிய அமைச்சர் பாரதி பிரவீன்  பவார், கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவில் ஒருவர்கூட சாகவில்லை என்று மாநிலங்களவையில் சொன்னார். இப்படி பச்சைப் பொய்யை சொல்வது, கொடுத்த வாக்குறுதியை மீறுவது , கடவுளின் மீதோ, நேருவின் மீதோ, ஆங்கிலேயர் மீதோ, முகலாயர் மீதோ, பாகிஸ்தான் அல்லது சீனாவின் மீதோ பழிபோடுவது மோடி அரசுக்கும் சங் பரிவாரங்களுக்கும் புதிதல்ல. ஆனால்,  இதை தொடர்ந்து ஜூலை 21 புதன் அன்று தமிழ்நாட்டு மருத்துவ அமைச்சர் மா.சுப்ரமணியனும் செயலர் இராதாகிருஷ்ணனும் இதே கூற்றை சொல்லியுள்ளனர். அவர்கள் சொல்வது உண்மையா?

கடந்த ஜூன் இறுதியில் ’தி இந்து’ ஆங்கில நாளிதழில் வந்த ஒரு செய்தியில்,  தொற்றியல் நிபுணரும் கொரோனா தடுப்புக்கான மருத்துவ ஆலோசனைக் குழுவில் இருப்பவருமான  மருத்துவர் பிரப்தீப் கவுர், ஆக்சிஜன்  ஆக்கத்தில் தன்னிறைவு பெற வேண்டும், இரண்டாம் அலையில் அது பெரிய இடர்பாடாக இருந்தது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மே 25 ஆம் நாள் அன்று கார்டியன் இதழில் “Oxygen shortage threatens ‘total collapse’ of dozens of health systems”  என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையில்   மருத்துவக் கட்டமைப்பே முறிந்துவிழக் கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றிருந்தது. மருத்துவர் பிரப்தீப் இதை தனது டிவிட்டரில் பகிர்ந்துவிட்டு, “We failed to learn from oxygen crisis in Latin America; at least now develop a comprehensive strategy for medical oxygen.Despite tremendous capacity and expertise in oxygen manufacturing in industrial sector, we lost lives due to poor planing, forecasting and distribution”

”இலத்தீன் அமெரிக்க ஆக்சிஜன் நெருக்கடி பற்றிய பட்டறிவிலிருந்து நாம் பாடம் கற்க தவறிவிட்டோம். இனியேனும் மருத்துவ ஆக்சிஜனுக்காக ஓர் ஒருங்கிணைந்த உத்தியை வகுக்க வேண்டும். தொழில்துறைக்கான ஆக்சிஜன் ஆக்கம் செய்வதில் பெருமளவிலான திறனும் தேர்ச்சியும் இருந்தபோதும் போதிய திட்டமிடல், முன்கணித்தல் மற்றும் பங்கிடுதல் இல்லாததால் நாம் உயிர்களை இழந்தோம்”  என்று வருந்துகிறார்.

மே 5 அன்று செங்கல்பட்டு மருத்துவமனையில் 13 கொரோனா நோயர்கள் மூச்சு திணறி இறந்தனர். ” செத்தவர்களில் ஒருவர்தான் கொரோனா நோயர்” என்பதும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமில்லை, போதிய அழுத்தம் இல்லாததுதான் காரணம்” என்பதும் மாவட்ட மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் கருத்து. ஆக்சிஜன் பற்றாக்குறையே சாவுக்கு காரணம் என்பது இந்த சாவுகளைக் கண்டித்து அங்கு போராடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கருத்து (ஸ்க்ரால் இணையதள செய்தியைக் கீழே காண்க).

கடலூரில் ஓர் அரசு கொரோனா மருத்துவமனையில், தனது கணவரின் ஆக்சிஜன் உருளையை வேறொருவருக்கு மருத்துவர் எடுத்துச் சென்றுவிட்ட நிலையில், அவர் மூச்சு திணறி இறந்துவிட்டார் என்று சொல்லி  அவரது மனைவி கதறி அழுததை நாடே பார்த்தது; கேட்டது.

மார்ச், ஏப்ரல் மாதத்தில் தேர்தல் களேபரத்தில் அதிமுக மூழ்கி கிடந்தது. ஏனைய எதிர்க்கட்சிகளும்கூட இரண்டாம் அலையை எதிர்கொள்வது பற்றி அக்கறை காட்டவில்லை; தேர்தலிலேயே முழுக் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தன. எனவே, தமிழக அரசிடம்  இரண்டாம் அலையை எதிர்கொள்ள எந்த திட்டமும் இல்லை என்பதே உண்மை.

மருத்துவமனையில் நேர்ந்த மூச்சு திணறல் சாவுகள் ’கோவிட் நிமோனியா’ என்ற காரணத்திலான சாவு என்று சொல்லப்படுகின்றது. மருத்துவமனைக்குள் ஆக்சிஜன் பற்றாகுறையால் யாரும் சாகவில்லை என்ற கூற்றை முற்றாக மறுத்துவிட முடியாது. ஆனால்,  மே மாத தொடக்கத்தில் நோய்த்தொற்று பரவல்  அதிகரித்த நிலையில், எதிர்பாராத எண்ணிக்கையிலான நோயர்களுக்கு மருத்துவமனை சிகிச்சையும் ஆக்சிஜன் உதவியும் தேவைப்பட்டது. அப்போதுதான், ஆக்சிஜன் ஆக்கத்தை பெருக்குவதற்கான எல்லா முயற்சிகளும் புதிததாக ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான தமிழக அரசால் முழுவீச்சில் செய்யப்பட்டன. அந்நேரத்தில், மருத்துவமனைக்குள்ளும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் நேர்ந்திருக்க நிறைய வாய்ப்புண்டு. அப்போது மருத்துவமனையில் கொரோனா நோயர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்க்ள்,செவிலியர்கள் மற்றும் நோயர்களோடு உடனிருந்தவர்களால் மட்டுமே இதை உறுதிப்படுத்த முடியும். ஆனால், இக்காலகட்டத்திலும் அதற்குப் பின்னுங்கூட மருத்துவமனைக்கு வெளியே ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சு திணறி ஏற்பட்ட கோவிட் சாவுகள் அரசின் கணக்குக்கு வரவில்லை என்பதே நம்முடைய புரிதல்.

எந்த ஒரு கொரோனா மருத்துவமனைக்கு சென்றாலும் அந்த மருத்துவமனை வாயிலேயே  ஆக்சிஜன் அளவைப் பார்த்து ஆக்சிஜன் தேவையா? இல்லையா? என்று முடிவு செய்கின்றனர். ஒருவருக்கு ஆக்சிஜன் உதவி தேவை இருந்து அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை காலி இல்லை என்றால் அவரை உள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள். அதாவது அவருக்கு அட்மிசனே போடமாட்டார்கள்.

ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தால் மே மாத முதல் மூன்று வாரங்கள் இராஜீவ் காந்தி மருத்துவமனை வாயிலில் மணிக்கணக்கில் நோயர்கள் காத்திருக்க நேர்ந்தது. அந்நேரத்தில் மருத்துமனை வாயிலிலேயே இறப்புகள் நடந்துள்ளன.

104 உதவி எண் என்றாலும் சரி stopcorona இணையத்தின் வழியாக பதிவு செய்தாலும் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாவிடில் “நீங்களும் முயலுங்கள். நாங்களும் முயல்கிறோம்”  என்ற அளவில் தான் மே மாத மத்தியில் சொல்லிக் கொண்டிருந்தனர். இத்தகைய அனுபவங்கள் பலருக்கு இருந்திருக்கும். அதுமட்டுமின்றி, அப்படி முதன்முறை சொல்லிய பிறகு அந்த பதிவருக்கு பின் தொடரலும் கிடையாது. மருத்துவமனையில் இடம் வேண்டி  பதிவு செய்தோருக்கு இடம் கிடைத்ததா? நோய் தீர்ந்ததா? பிழைத்தாரா? இறந்தாரா? என்ற பின்தொடரல் எதுவும் இணையப் பதிவு ஏற்பாட்டில் அப்போது கிடையாது. இப்போதேனும் அப்படியொரு ஏற்பாட்டிற்கு சென்றால்தான் அதற்கு பொருள் உண்டு. அது ஒரு tracking system த்தைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தால் மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை என்பதுதான் இரண்டாம் அலையில் நாம் எதிர்கொண்ட மருத்துவ நெருக்கடி. மருத்துவமனை வாயிலில் ஆம்புலன்சுகள் வரிசைக்கட்டி நின்றன.  அப்படி மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் ஆம்புலன்சில், வீட்டில் இறந்தவர்கள் கொரோனா சாவுக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆக, தங்கள் மருத்துவமனைகளில் எவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என்று சொல்லிக் கொள்ளலாமே ஒழிய தமிழ்நாட்டில் யாரும் ஆக்சிஜன் கிடைக்காமல் இறக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஏனெனில், ஆக்சிஜன் படுக்கை காலியாக இருந்தால் மட்டுமே ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

”ஆனதாயிற்று போன உசுறு திரும்பவா போகுது” என்று முட்டுக்கு முந்த வேண்டாம். தெளிவான கணக்கெடுப்புகள் இருந்தால்தான் எங்கே தவறு நடந்தது, யாருக்கு அதாவது எந்த சமூகப் பிரிவினருக்கு, வட்டாரத்தினருக்கு நேர்ந்தது என்று அடையாளம் காண முடியும். அவர்களுக்கு நீதியை உறுதி செய்ய முடியும். எதிர்காலத்தில் இந்த தவறு திரும்ப நேராமல் தடுக்க முடியும். எனவே, கணக்குப் பார்ப்பதும் புள்ளிவிவரங்களை சேகரிப்பதும் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிப்பதும் தொற்று நோய்க்கு எதிரான முயற்சிகளில் மிகவும் முக்கியமாகும்.

ஒன்றிய பாசக அரசு சொல்வது போலவே ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட இறக்கவில்லை என்று திமுக அரசும் சொல்வதற்குப் பின்னால் இரகசிய உடன்படிக்கை எதுவும் இருக்காது என்று நம்புவோமாக.

 

– செந்தில்

https://www.thehindu.com/news/national/tamil-nadu/experts-look-at-the-way-ahead-for-tamil-nadu/article34958489.ece

https://www.theguardian.com/global-development/2021/may/25/oxygen-shortages-threaten-total-collapse-of-dozens-of-health-systems

https://scroll.in/latest/994181/tn-13-patients-die-in-chengalpattu-hospital-doctors-allege-oxygen-shortage-officials-deny

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW