அருட்தந்தை ஸ்டேன் சுவாமியைக் கொன்றது பாசிச பாசக அரசே! மனசாட்சி உள்ளோர் மவுனம் கலைப்பீர்

08 Jul 2021

அருட்தந்தை ஸ்டேன் சுவாமிக்கு அகவை 84. அவர் மும்பையில் தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்துபோனார். அவர் இறக்கும்போது ஊபா என்னும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரது இரு செவிகளும் கேட்கும் திறனை இழந்தவை. அவருக்கு நடுக்குவாத நோய். ஆனால், அவர் மாவோயிஸ்ட் கட்சிக்கு நிதியுதவி செய்தார், அரசாங்கத்தை தூக்கி எறிய திட்டம் தீட்டினார் எனப் பற்பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. தன் வாழ்வின் கடைசி எட்டு மாதங்கள் அவர் மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். யார் இந்த ஸ்டேன் சுவாமி?

அவர் ஒரு தமிழர், 1937 இல் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகில் உள்ள விரகாலூரில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்த  பின்னர் பிலிப்பைன்ஸிலும் பெல்ஜியத்திலும் பட்டம் பயின்றவர்.  தன் 20 ஆவது அகவையிலேயே ஏழைகளுக்கு உழைப்பதென்று தீர்க்கமாக முடிவு செய்து கொண்டவர். தனது 33 ஆவது அகவையில் ஏசு சபையில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் பெங்களூரில் உள்ள சமூகவியல் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர். பின்னர் 1990 இல் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியினருக்காக உழைத்துவந்தவர்.

இந்தியாவில் உள்ள கனிமவளங்களில் 40% ஜார்கண்டில் உள்ளது. கனிம வளச் சுரங்கங்கள், அணைகள், சிறுநகரங்கள் எனப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் பழங்குடிகள் இடம்பெயர்க்கப்பட்டனர்.  அவர்களுக்கு உரித்தான காடுகளும் காட்டில் உள்ள கனிம வளங்களும் கார்ப்பரேட்களால் கொள்ளையடிக்கப்பட்டன. இது போன்ற திட்டங்களை அமலாக்குவதற்கு முன், பழங்குடி கிராம சபைகளின் கருத்தறிய வேண்டும் என்று சொல்லும் PESA சட்டத்தை நடைமுறைப்படுத்த ஸ்டேன் சுவாமி பாடுபட்டார். அரசமைப்பு சட்டத்தின் 5 வது பட்டியலில் சொல்லப்பட்டுள்ளபடி பழங்குடிகளே உறுப்பினர்களாக இருந்து நிர்வகிக்கும் ’பழங்குடி ஆலோசனைப் பேரவைகள்’ ஏன் அமைக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பினார். பழங்குடிகளின் ஒப்புதல் இன்றி அவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட நிலங்களுக்காக இழப்பீடு கேட்டுப் போராடச் செய்தார்.  வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் இடம்பெயர்க்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக ஓர் அமைப்பை உருவாக்கினார்.  பழங்குடிகளின் அரசியல் சட்ட உரிமை, நிலவுரிமை, மனித உரிமை ஆகியவற்றுக்காக அரும்பாடுபட்டார். தங்களுக்காக உழைத்ததால் அந்தப் பழங்குடி மக்களால் ‘அப்பா’ என்று அவர் அன்போடு அழைக்கப்பட்டார்.

பழங்குடி மக்களில் ஏராளமானோர் ’மாவோயிஸ்ட்கள்’ என்று பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்படி சிறையில் அடைக்கப்பட்ட 3000 பேர் மீதான வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கினார்.

பாம்பு விசம் முறிக்கப் போனவன் பாம்புக் கடிக்கு ஆளானது போல் அருட்தந்தை மீதே ‘மாவோயிஸ்ட்’ ஆதரவாளர் என்ற முத்திரையிடப்பட்டு, தேசிய புலனாய்வு முகாமையால்(NIA) கடந்த அக்டோபரில் ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பீமா கோரேகான் பொய் வழக்கில் ஸ்டேன் சுவாமியும் இணைக்கப்பட்டார். இந்தியாவில் ஊபாவில் கைது செய்யப்பட்டவர்களில்  ஸ்டேன் சுவாமிதான் அகவையில் மூத்தவர்(84)  ஆவார்.  அவரது கணிணியில் இருந்து மாவோயிஸ்ட்களோடு தொடர்புடைய ஆவனங்கள் கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. சொன்னது. தன் மீதான குற்றச்சாட்டை உறுதியாக அவர் மறுத்தார்.

ஊபா என்ற கொடுஞ்சட்டத்தின் நோக்கம் பிணையின்றி, விசாரணையின்றி சிறையில் வதைப்பதே ஆகும். இச்சட்டத்தின்படி, எவரையும் ’பயங்கரவாதி’ என்று முத்திரையிடலாம். தான் பயங்கரவாதி இல்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்தான் மெய்ப்பிக்க வேண்டும்.

அருட்தந்தை ஸ்டேன் சுவாமிக்கும் பிணை மறுக்கப்பட்டது. அவரது தள்ளாத அகவையையும் முற்றிய நோயையும்கூட நீதிமன்றம் பொருட்படுத்தவில்லை. அவருக்கு கைநடுக்கம் இருப்பதால் உறிஞ்சுக் குழல் கொண்ட குவளைக் கேட்டார். சிறை நிர்வாகம் கொடுக்க மறுத்தது. நீதிமன்றத்தில் முறையிட்டார்.  தேசிய புலனாய்வு முகமை தம்மிடம் ’உறிஞ்சுக் குழல் இல்லை’ என்று பதிலளித்தது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைக் கணக்கில் கொண்டுகூட அவருக்கு பிணை கொடுக்கவில்லை. கொரோனா தொற்றுக்கு ஆளானார். மருத்துவ சிகிச்சைக்கு நீதிமன்றப்படி ஏற வேண்டியிருந்தது. ’நான் வெகுநாட்கள் வாழப் போவதில்லை. என்னுடைய கடைசி நாட்களை என் மக்களுடன் வாழ அனுமதியுங்கள்’ என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், அவை நீதிமன்றங்களாக இல்லாமல் காவிப் பாசிச மன்றங்களாக மாறிப்போனதால் அருட்தந்தை அணுஅணுவாய்க் கொல்லப்பட்டார்.

எல்லோரும் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும். ஆனால், ஒரு மனிதனின் வாழ்வு மட்டுமின்றி அவனது சாவும்கூட மனித மாண்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். தன் வாழ்நாள் எல்லாம் பழங்குடி  மக்களின் கண்ணியமான வாழ்வுக்காகப் பாடுபட்ட ஒரு மனிதர் இப்படி கண்ணியமற்ற வகையில் இந்த அரசால் சாகடிக்கப்பட்டுள்ளார். இது தாங்க முடியாத துயரத்தைக் கொடுக்கிறது. காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் நிறுவனங்களான தேசிய புலனாய்வு முகமை(NIA), சிறை நிர்வாகம், நீதிமன்றம் என எல்லாம் சேர்ந்து நிகழ்த்திய பச்சைப் படுகொலை இது.

தான் கைது செய்யப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் அவர் நமக்கெல்லாம் ஒரு செய்தியைச் சொல்லிச் சென்றார்.

“இப்போது எனக்கு நடந்து கொண்டிருப்பது தனித்துவமானதோ அல்லது எனக்கு மட்டும் நடக்கும் நிகழ்ச்சியோ அல்ல, இது நாடு முழுவதும் நடந்துவரும் ஒரு பரந்த நிகழ்ச்சியாகும். இந்தியாவை ஆளும் சக்திகளை நோக்கி கேள்வி எழுப்பியதற்காகவும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதற்காகவும் நாடறிந்த அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், செயற்பாட்டாளர்கள், மாணவத் தலைவர்கள் என எல்லோரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.  நானும் இந்நிகழ்ச்சியின் பகுதியாக இருக்கிறேன். ஒருவகையில் அவ்வாறு இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் நான் மெளனமான பார்வையாளராக இல்லாமல் ஆட்டத்தில் பங்கேற்பாளராக இருக்கிறேன். நான் விலைக் கொடுக்க அணியமாய் இருக்கிறேன், அது எதுவானாலும் சரி.”

காந்தியாரை ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைக் கொண்ட கோட்சே சுட்டுக்கொன்றார். தமது சித்தாந்த எதிரிகளைக் கொல்வது ஆர்.எஸ்.எஸ். இன் வழமையான உத்தி. கல்புர்கி, தபோல்கர், பன்சாரே, கெளரி லங்கேஷ் போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். இன் துணை அமைப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்போது துப்பாக்கிக் குண்டுகளைப் பயன்படுத்தாமல் நீதிமன்றத்தையும் என்.ஐ.ஏ. வையும் தன்னுடைய துணை அமைப்பாகப் பயன்படுத்தி மக்களுக்கு அரணாக உழைத்த அறிஞர் பெருமக்களை சிறையில் அடைத்து மெல்ல மெல்ல சாகடித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

பீமா கோரேகான் வழக்கு ஒரு பொய் வழக்கு. அதில் சிக்க விடப்பட்ட அருட்தந்தை ஸ்டேன் சுவாமியே இதற்கு சான்று. அதில் கைது செய்யப்பட்டது 16 பேர். சுதா பரத் வாஜ், கெளதம் நவ்லாகா, வரவர ராவ், சோமா சென், ஆனந்த டெல்டும்டே, சுரேஷ் காட்லிங், ரோனா வில்சன் என நாடறிந்த அறிஞர் பெருமக்கள் இதில் அடங்குவர். பிரதமரைக் கொல்ல திட்டமிட்டதாக இவர்களது கணிணியில் இருந்து பெறப்பட்ட மின்னஞ்சல்கள் அவர்களுக்கே தெரியாமல், உளவு நிறுவனங்கள் செயலியின் மூலம் இவர்களது கணிணியில் திணித்தவை என்பதை ஆர்செனல் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்து அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால், இந்த உண்மையைப் பரிசீலித்து நீதிமன்றம் இவர்களுக்கு பிணை கொடுக்கக்கூட மறுக்கிறது.  2 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்போரும்  உண்டு. இதில் ஸ்டேன் சுவாமி கொல்லப்பட்டுவிட்டார். கவிஞர் வரவர ராவ் நடைபிணமாக்கப்பட்டார். எஞ்சிய 14 பேராவது உடனடியாக விடுதலை செய்யப்பட்டு காப்பாற்றப்பட வேண்டும்.

ஊபா சட்டத்தில்  கைது செய்யப்பட்டிருக்கும் இந்த 16 பேர் ஒரு குறியீடுதான், கடந்த 2016 – 2018 க்கும் இடைப்பட்ட இந்த இரண்டு ஆண்டுகளில்மட்டும் சுமார் 4000 பேர் நாடெங்கும் இந்த ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பகுதியினர் இஸ்லாமியர்கள். காவி – கார்ப்பரேட் பாசிச நிகழ்ச்சி நிரலுக்கு குறுக்கே வருவோரையும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் ஒடுக்குவதற்கான அடக்குமுறைக் கருவியாக மோடி அரசு ஊபா எனும் சட்டத்தைப் பயன்படுத்துகிறது.

தான் பார்வையாளராக வாழ்வதைவிட பங்கேற்பாளராக சாவதே மேல் என துணிந்து நின்ற அருட்தந்தை ஸ்டேன் சுவாமி, பாசிச மோடி – அமித் ஷா சிறுகும்பலால் படுகொலை செய்யப்பட்ட பின்பும் நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? இனியும் மெளனம் காக்கப் போகிறோமா?

  • அருட்தந்தை ஸ்டேன் சுவாமியின் கொலைக்கு நீதி விசாரணை செய்!
  • பீமா கோரேகான் வழக்கைத் திரும்பப் பெறு! சிறையில் இருக்கும் 14 பேரையும் விடுதலை செய்!
  • ஊபா சட்டத்தை திரும்பப் பெறு! தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) யைக் கலைத்திடு!

                                                                                       தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW