கொரோனா காலத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்ட ஆசிரியர்கள்

05 Jul 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 7)

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள், ஆட்டோ / கால் டாக்ஸி ஒட்டுநர்கள்,  தேநீர் கடைக்காரர்கள், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற ஜவுளி கடை ஊழியர்கள்  என்ற பல்வேறு தரப்பட்ட மக்களை இதுவரை சந்தித்து வந்தோம். இந்த வரிசையில் இதேபோன்று மிகவும் பாதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள். கடந்த இரு ஆண்டுகளாக போதிய வருமானமில்லாத காரணத்தால் மிக மோசமான வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட சில தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் உரையாடினோம்.

“எனது பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியர் தற்போது வருமானம் இல்லாத காரணத்தால் 100 நாள் வேலைக்கு செல்வதாக” வருத்தத்துடன் தெரிவித்தார். கரூரை சேர்ந்த தனியார் பள்ளி  ஆசிரியர். (பெயர் மாற்றி வெளியிட்டாலும் அந்த பெயரிலும் வேறு யாரேனும் இருப்பார்கள் என்ற காரணத்தினால் பெயர் வெளியிடவில்லை) ”எங்கள் ஊரில் பெரும்பாலான தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் 75% கட்டணம் என்ற அரசின் ஆணைப்படி வாங்கிகொண்டு ஆசிரியர்களுக்கு அரசின் உத்தரவை (50%) மீறி மூன்றில் ஒரு பங்கு ஊதியம் மட்டுமே தருகின்றனர் (1/3) அதாவது ரூ. 10000 ஊதியத்தில் வெறும் ரூ3500 மட்டுமே தருகின்றனர். சில பள்ளிகள் அதுகூட தருவதில்லை. எவ்வித முன்னறிவுப்புமின்றி  கைப்பேசியில் அழைத்து, ‘நாளை முதல் நீங்கள் வேலைக்கு வரவேண்டாம், வேறு வேலை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறார்கள். என்னுடன் வேலை பார்த்த தமிழ் ஆசிரியர் (MA, M.Phil)  ஒருவர் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் தற்போது அரசின் 100 நாள் வேலைக்கு செல்கிறார்,  மற்றொருவர் கட்டிட வேலைக்கு செல்கிறார் , சில நேரங்களில் சந்தையில் மூட்டை தூக்குகிறார்” என்று அவர் வருத்தத்துடன் சொன்னார்.

இரு குழந்தைகளுக்கு தாயான இந்த ஆசிரியை கடந்த கொரோனா காலத்தில் (2020 மார்ச் மாதம்) அவரது பள்ளி நிர்வாகத்தால் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.  இன்றுவரை அவர் வேறு வேலை கிடைக்காமல் இருக்கிறார். அவரது கணவர் வாகனம் பழுது நீக்கும் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். மேலும், பள்ளி நிர்வாகம் தரும் 3500 ரூ சம்பளத்திற்கு ஆன்லைன் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள், ஒரு மாதத்தில் பத்து நாட்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பேருந்து வசதி இல்லாத காரணத்தால் அவ்வாறு செல்லும் ஒவ்வொரு முறையும் தாங்கள் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு செல்வதாகவும் மாதம் 2000ரூபாய் அதற்கே செலவாகிறதாகவும் தெரிவித்தார். மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்கு அந்தந்த வகுப்பு ஆசிரியர் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும், இதற்கே மாதத்திற்கு 200ரூ – 300 ரூ வரை செலவாகிவிடும். வாங்கும் சம்பளம் 3500 ரூபாய் ரீசார்ஜ் மற்றும் பெட்ரோல் செலவுக்கே சரியாய் போய்விடுகிறது பின்னர் குடும்பத்தை எப்படி ஓட்டுவது என்று வருத்ததுடன் தெரிவித்தார்.

“ஆன்லைன் வகுப்பெடுக்கும் போது சில நேரங்களில் நீங்கள் கல்விக் கட்டணம் கட்டவிலை ஆதலால் உங்கள் குழந்தைக்கு நாளை முதல் வகுப்புகள் இல்லை என்று ஆசிரியர்களாகிய நாங்கள்தான் சொல்ல வேண்டியுள்ளது இதனால் பெற்றோர்களுக்கும் எங்களுக்கும் சண்டை ஏற்படுகிறது.” என்று சொல்கிறார்.  மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு அரசு உதவித்தோகை வழங்குவதுபோல வருமானமின்றி தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் உதவ அரசு முன்வர வேண்டும் என்றார்.

தர்மபுரியை சேர்ந்த ஆசிரியை ஒருவரிடம் பேசினோம். தான் இந்தி மொழிப் பாடம் எடுப்பதாகவும் தனது ஊதியம் 6000 ரூ தான் என்றும் ’இனி உங்களுக்கு இப்பள்ளியில் வேலையில்லை’ என்று போனில் அழைத்து சொன்னதாகவும் அவர் சொன்னார். மேலும் அவரைப் போன்று உள்ள பிற மொழிப் பாடங்கள் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் பலர் வேலையில்லாமல் வீட்டில் இருப்பதாகவும் சொன்னார்.

தமிழகத்தில் உள்ள 12,300 தனியார் பள்ளிகளில் யாருமே 100% ஊதியம்  தந்ததாக தெரியவில்லை. சில பள்ளிகள் 50% வழங்குகின்றன. ஆனால் பல பள்ளிகளில் அதுகூட தருவதில்லை. சில பள்ளிகளில் கட்டணத்தை 80-90% வரை உயர்த்தி வாங்கிகொண்டு, ’75% தான் கட்டணம் வாங்குகிறோம்’ என்று வெளியில் சொல்லிகொண்டு ஆசிரியர்களுக்கோ பாதி சம்பளம் அல்லது மூன்றில் ஒரு பங்கு என விருப்போம்போல் தருகிறார்கள். ஆசியர்களின் குடும்பம் என்னவாகும் என்பதைப் பற்றி நினைத்துப் பார்ப்பதே இல்லை.

இதை பற்றி மதுரையிலிருந்து நம்மிடம் பேசிய பள்ளி ஆசிரியர் ஒருவர், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் தவிர மாணவர்களிடம் 75% கட்டணம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களுக்கு 50% ஊதியம் தரும் பள்ளிகள், ஊதியமே தராத பள்ளிகள் மற்றும் கல்வி கட்டணம் வாங்காத, ஆசிரியர்களுக்கு ஊதியம் தர சிரமப்படும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் போன்று பலவாறாக இப்பிரச்சனையை வகைப்படுத்தலாம். போதிய வருவாய் இல்லை என்ற காரணத்தினால் சில பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.  இதில் வேலை பார்த்த ஆசிரியர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை. தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு அன்றாட பராமரிப்பு (Maintanance) தேவைப்படவில்லை ஆய்வுகூடங்களை(LAB) பயன்படுத்துவதே இல்லை,  சீருடை (UNIFORM) தேவைப்படுவதில்லை. பள்ளிப் பேருந்துகளைப் பயன்படுத்துவதில்லை. மிக குறைவான மின்கட்டணம் போன்ற சலுகைகளைப் பெறும் போதும் ’ஆசிரியர்களுக்கு ஊதியம் தரவேண்டும்’ என்ற காரணத்தைச் சொல்லித்தான் பெற்றோர்களிடம் இருந்து 75% கட்டணம் வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் அப்படி வாங்கியப் பணத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு உரிய ஊதியத்தைக் கொடுப்பதில்லை என்றார் அவர்.

மேலும், அறக்கட்டளை என்ற பெயரில் பள்ளிகள் முதல் மருத்துவக் கல்லூரிகள்வரை நடத்தும்  கல்வி தந்தைகள் (?) தங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்களை நடத்தும்விதம் மிக மோசம். இதனால் பல ஆசிரியர்கள் வருமானமின்றி வீட்டில் இருக்கின்றனர். சிலர் காய்கறி விற்பதற்கும், பூ பொம்மை விற்றும் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். குடும்ப சூழ்நிலை காரணமாக தற்போது ஓர் ஆசிரியர் இரவு காவலாளி வேலைக்கு செல்கிறார்.

பள்ளி ஆசிரியர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் 50 வயதுக்கு மேற்பட்டோர் ஆவர். அவர்களுக்கு எப்பொதுமே தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல, எப்பொது வேலையை விட்டு அனுப்புவார்கள் என்றே தெரியாது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு பள்ளி நிர்வாகம் அவர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி, ’நீங்கள் வேலைக்கு வரவேண்டாம்’ என்று சொல்கின்றது. இந்த வயதுக்கு பின்னர் அவர்கள் எந்த வேலைக்கு செல்ல முடியும் ? கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை பற்றி ஆய்வு செய்ய வேண்டும். கல்வி தந்தைகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர் என்ன கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா ? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

மழலையர் பள்ளி வகுப்புக்கு (எல்.கே.ஜி. யூ.கே.ஜி.)  ஒரு இலட்சம் கட்டணம் வாங்குவது, நாராயணா கல்வி குழுமம், வேலம்மாள் கல்விக் குழுமம் என்று பள்ளிக்கூடம் நடத்துவதையே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் நடத்துவது, உண்டு உறைவிடப் பள்ளிகள் என்ற பெயரில் கொள்ளையடிப்பது போண்ற பல காரணங்களால் இந்த பெருந்தொற்றுக் காலத்தில் அரசு பள்ளியை நோக்கி பெற்றோர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் தனியார் பள்ளிகள் மூட நேர்ந்து, அங்கு வேலை பார்த்த ஆசிரியர்களின் வாழ்நிலை கேள்விக்குறியாகும்

நர்சரி பள்ளிகள் கூட்டமைப்பு, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் கூட்டமைப்பு, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் கூட்டமைப்பு என தங்கள் சொத்துகளை பாதுகாக்க, தங்கள் கல்வி வணிக உரிமைகளைப் பேச, பள்ளி கல்வி துறையில் லாபி செய்ய என்று கல்வி முதலாளிகள் சங்கமாக இணைந்திருக்கின்றனர். காவல்துறையில் எப்படி  ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகள் தங்களுக்கென்று ஒரு சங்கம் வைத்துக்கொண்டு, அடிப்படை காவலர்கள் சங்கம் வைக்க அனுமதிக்கபடவில்லையோ அதே போல், தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்களுக்கென்று சங்கம் வைத்துகொண்டு அதில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்கள் சங்கமாக இணைவதைத் தடுக்கின்றன. பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய, உரிமைகளைப் பேச, இது போன்ற பேரிடர் காலத்தைப் பயன்படுத்தியாவது தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கமாக இணைவது அவசியம். 75% கட்டணம் வசூலிக்கலாம் என்று உத்தரவிடும் உயர் நீதி மன்றம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என்று ஏன் உத்தரவிடுவதில்லை என்ற கேள்வி எழுகிறது.

 

சோசலிச தொழிலாளர் மையம் SWC – தமிழ்த்தேச மக்கள் முன்னணி

சென்னை மாவட்டம்

9500056554, 9787430065

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW