பெட்ரோல் விலையேற்றம், OLA – Uber பகல் கொள்ளை, அதிகரித்த இன்சூரன்ஸ் கட்டணம் – ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு என்ன செய்யப் போகிறது ?

26 Jun 2021

(கொரோனாபொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும்-களஆய்வு-பதிவு 5)

பெட்ரோல், கேஸ் விலையேற்றம், ஆண்டுதோறும் உயரும் இன்சூரன்ஸ், FC தொகை, OLA, UBER களின் உழைப்புச் சுரண்டல், அட்டைப் பூச்சியாய் இரத்தம் குடிக்கும் நிதிநிறுவனங்கள் என அனைத்தையும் தாங்கி திணறி  ஓடிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்நிலையில் கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து களஆய்வு செய்வதற்காக சோசலிசத் தொழிலாளர் மையம் மற்றும் தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர்கள் எழும்பூர் இரயில் நிலையத்திற்குச் சென்றோம்.

சாமானியர்களுக்கு பயன்படுமா இ-பாஸ் முறை ?

22 ஆண்டுகள் எழும்பூர் இரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் திரு. இரமேஷ் என்பவரிடம் பேசினோம். “ஊரடங்கு அறிவிக்கும்போது இ-பாஸ் முறையை அறிமுகப்படுத்துகிறார்கள். அப்போது ஆட்டோ ஓட்டுநர்கள் இ-பாஸ் விண்ணப்பிக்க முடியாமல் இருந்தது. சாமானிய மக்கள் மருத்துவமனை செல்ல, இரயில் பயணத்திற்காக நாங்கள் ஆட்டோ ஓட்டினோம். வழி நெடுக அபராதம் கட்டுவது, கெஞ்சி மன்றாடித்தான் வண்டிகளை இயக்கினோம்“ என்று தெரிவித்தார்.

“மேலும் ஊரடங்கு தளர்விற்குப் பிறகு நாங்களும் இ-பாஸ் பெற்று வாகனங்களை இயக்கலாம் என்று அறிவித்தனர். எதற்காக இந்த முறை என்று தெரியவில்லை. ஆட்டோவிலா மக்கள் ஊர் சுற்றுவார்கள்? அதனால் எங்களைப் போன்ற ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரும் ரூபாய் 200 செலவு செய்து இணையதள சேவை வழங்கும் கடைகளுக்குச் சென்று இ-பாஸ் எடுத்து வாகனத்தின் முன்புறம் ஒட்டினோம். இதையே தான் 3 வாரங்களுக்கும் செலவு செய்து  E-Pass எடுத்தோம்” என்றார்.

“ஒருநாள் எனது ஆட்டோவில் கணவன் மனைவி மற்றும் அவர்களின் இரு  குழந்தைகளை அழைத்துச் சென்றபோது காவல்துறையினர் ஆட்டோவை மறித்து 200 ரூபாய் அபதாரம் விதித்தார்கள். ஒருஆட்டோவில் 2 பேர் மட்டும் தான் பயணம் செய்ய வேண்டும், கொரோனா சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என்றார்கள். குழந்தைகள் ஒரு வண்டியிலும், அப்பா அம்மா ஒரு வண்டியிலுமா வருவார்கள்? என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

“Ola, Uber பகல் கொள்ளையா இருக்கு, படம் மாதிரி இருக்கு sir கடைசில கார்ப்பரேட் கம்பெனிதான் ஜெய்க்குது…”  எனத் தொடங்கினார் எழும்பூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திரு.பழனி

ஒரு முறை எனது OLA  வாடிக்கையாளரை அழைத்துச் சென்றபோது வண்டியில் புகைக்கத் தொடங்கினார். என்னுடைய வண்டியில் ஏற்கனவே எரிவாயு சிலிண்டர் உள்ளது எனவே புகைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டேன். அவர் உடனே OLA வில் பயணிக்கும்போது புகைக்கக் கூடாது என்று எதுவும் சொல்லவில்லை என்றார். வண்டி என்னுடையதா இல்லை OLA காரன் உடையதா என தெரியவில்லை, ஆனால் அப்போது நான்  அவரை இறக்கிவிட்டிருந்தால் உடனே OLAவிற்கு புகார் தெரிவித்திருப்பார். உடனே எனக்கு வழங்குகின்ற சேவையை OLA நிறுவனம் நிறுத்திவிடும். ஒரு வாடிக்கையாளரின் சேவையை நான் ரத்து செய்தால் அடுத்த சவாரி தர மாட்டார்கள். அப்போது நான் 56 ரூபாய்க்கு சவாரி சென்று வந்தேன் அதில் 25 ரூபாய் பிடித்துவிட்டார்கள். OLA நிறுவனத்தில் ஏன் என்று கேட்கவும் முடியவில்லை” என்று வருத்தத்துடன் கூறினார்.

“OLA வைப் போல ஒரு சேவையை அரசு தொடங்க முடியாதா?  இ-பாஸ் முதல் நலவாரியம் வரை எழுத படிக்க தெரியாத  அமைப்பு சாராத் தொழிலாளர்களைக் கூட இணையத்தில் விண்ணப்பிக்க சொல்லும் அரசு OLA வைப் போல ஒரு செயலிலை ஏன் தொடங்க முடியாது?“ எனக் கேள்வி எழுப்பினார்.

“ஆட்டோவைப் போல் இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு இயக்கும் Rapido, OLA ,UBER நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது யார்? ஏன் அவர்களை  அரசு FC எடுக்க சொல்லவில்லை?

ஒவ்வொரு ஆண்டும் FC  எடுப்பதின் நோக்கம் என்பது பொதுமக்களை ஏற்றிச் செல்கிறோம் எனவே வாகனம் சிறந்த முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும் என்று அரசால் கொண்டுவரப்பட்டது தான் .ஒருமுறை ஆட்டோ FC க்கு செல்கிறது என்றால் 20-25 ஆயிரம் வரை செலவு செய்து வண்டியை ஏற்பாடு செய்கிறோம். காப்பீட்டுத் தொகைக்கு 8000 வரை செலவு செய்கிறோம். எங்களுக்கு Batch Licence எடுக்கிறோம் என்று கூறினார்.

BIKE Rapido OLA, UBER நிறுவனத்தின் வழியாக சவாரி எடுக்கும் இரு சக்கர வாகனங்களுக்கு ஏன் அரசு FC எடுக்க சொல்லவில்லை? அவர்களும் பொதுமக்களைத்தானே ஏற்றிச் செல்கிறார்கள்? என்றார்.

‘மேலும், கொரோனா காலத்தில் வாகனங்கள் இயக்கப்படவில்லை, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் எங்களுக்கு குறைந்தது FC, Insurance, Batch Licence பெறுவதற்கான காலக்கெடுவை அதிகரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

ஆட்டோத் தொழிலாளர்களை நசுக்கும் நிதிநிறுவனங்கள்

‘ஆட்டோ வாங்குவதற்காக மார்வாடியிடம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தேன். அதற்கு 20 மாதங்களுக்கு 1 பைசா வட்டி என்றால் 20 ஆயிரம் ரூபாய். அதாவது 1,20,000 ரூபாய் தொகையை 20 மாதங்களில் கட்ட வேண்டும். அதாவது மாதம் 6000 ரூபாய் செலுத்த வேண்டும். தண்டல்காரர்கள் முதலில் வட்டித் தொகையை பிடித்துக் கொண்டுதான் பணம் தருவார்கள். அது ஒன்றுதான் இதில் வித்தியாசம்’ என்று வடபழனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திரு.இரமேஷ் அவர்கள் தெரிவித்தார்.

‘ஆனால் விவசாயிகளுக்கு பயிர்க் கடன், மாணவர்களுக்கு கல்விக் கடன், மகளிர்க்கான சுயஉதவிக் கடன் என அரசு வழங்கி வருகிறது.  நாடு முழுவதும் உள்ள எங்களை போன்ற ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் தண்டல்காரரிடமும், தனியார் நிதி நிறுவனங்களிடமும் கூடுதல் வட்டிக்கு கடன்பட்டு, சுயமரியாதையை இழக்கின்றோம். அரசு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எனத் தனி இணையதளம் தொடங்கி அதன் வழியாக விண்ணப்பித்து குறைந்த வட்டிக்கு கடன் உதவியைப் பெற வழிவகை செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டும் ஆட்டோ ஓட்டுநர்களின் நிலை குறித்து சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திரு.ராஜாவிடம் பேசினோம்,

‘ஒரு நாளைக்கு ஆட்டோ வாடகை 200ரூபாய். ஒரு லிட்டர் 95 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோல் விலைக்கு, 20 கிலோ மீட்டர் வரை ஓட்டலாம், இடையில் தேநீர், உணவுக்கு என 50 ரூபாய் என கணக்கிட்டால் ஒரு நாளைக்கு 1000ரூபாய்க்கு சவாரி ஓட்டினால் எனக்கு வெறும் 200 ரூபாய் தான் மிஞ்சும். பெட்ரோல் விலை குறைத்தால் தான் வாடகைக்கு வண்டி எடுத்து ஓட்டும் எங்களுக்கு கட்டுபடியாகும் என்று தெரிவித்தார்.

பொதுவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளி, கல்லூரி வரை படிக்க வைக்கிறார்கள். அவர்கள் அமைப்புச் சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுசெய்யவில்லை, பதிவு செய்தவர்களும் புதுப்பிக்கப்படவில்லை என்பதைக் கூறினார்கள்.

தமிழக நிதி அமைச்சர் சொல்வதைப்போல் செஸ் வரி ஒன்றியரசு எடுத்துக் கொள்கிறது, மாநில பொருளாதாரம் சீரடைந்த பின்பு பெட்ரோல் டீசல், கேஸ் மீதான வாட் வரியை குறைப்பதாக இருந்தால், இப்போது ஆட்டோ தொழில் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள் பயனடைய இத்தொழிலில் இருக்கமாட்டர்கள் என்று தெரிகிறது. அவர்களுடைய வாழ்நிலை கேள்விக்குறியாகும்.


சோசலிச தொழிலாளர் மையம் SWC – தமிழ்த்தேச மக்கள் முன்னணி

சென்னை மாவட்டம்

9500056554, 9787430065

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW