இனி சுயமரியாதையுடன் வாழமுடியுமா ? – சிறு குறு வியாபாரிகளின் நிலை

24 Jun 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 4)

ஆள் நடமாட்டம் இல்லாத இரங்கநாதன் சாலையில் சைக்கிளில் துணிகளை வைத்துக் கொண்டு சாலையோரத்தில் திரு.சையது நின்று கொண்டிருந்தார். அவரிடம் பேசியபோது, இந்த இடத்தில் 30 வருடங்களாக வியாபாரம் செய்வதாகவும், மக்கள் கூட்டம்  எதுவுமில்லாததால் கொஞ்சம் துணிகளை மட்டும் சைக்கிளில் எடுத்து வந்து ஒன்று இரண்டு விற்பனையாகும் என காத்திருப்பதாகத் தெரிவித்தார்.  ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்பட்டு, பேருந்து, இரயில்கள் முழுமையாக இயக்கப்பட்டு, பெரிய கடைகள் திறக்கப்பட்டு, பின் மக்கள் பயமின்றி வெளியே வர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக,  மக்களிடம் பொருட்களை வாங்க பணமிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். சென்ற முறை, முதல் கொரோனா ஊரடங்கின்போது 6 மாதங்களுக்கு மேலாக பேருந்துகள் இயக்கப்படவில்லை, 9 மாதங்களுக்கும் மேலாக புற நகர் இரயில்களை இயக்காமல் இருந்ததன் காரணமாக வியாபாரமே இல்லை என்றார்.

மேலும் மத்திய அரசு, சாலையோர வியாபாரிகளுக்கு முதல் முறையாக 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கியது. ஆனால், அடையாள அட்டை வைத்துள்ள  பல வியாபாரிகள் விண்ணப்பித்தும், அலைந்தபின்பும்கூட, கடனைப் பெற முடியவில்லை. எல்லாம் பெயர் அளவில் தான் என்று வருத்தமாகத் தெரிவித்தார். மேலும் 3ஆவது அலை என்று  பேசத் தொடங்கிவிட்டார்கள். மீண்டும் இயல்புநிலை திரும்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ  என ஆதங்கமாகப் பேசினார். தி,நகர் சந்தைப் பகுதியை மையமிட்டு தோராயமாக 1500க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். முதல் அலைக்குப்பின் சொற்பமான அளவில் வியாபாரம் நடந்ததாகவும், கடந்த தீபாவளி, பொங்கலைப்போல மிகக் குறைந்த வியாபாரத்தை நாங்கள் எங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை என தெரிவித்தனர்.

மேலும் சாலையோர வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய அரசு அனுமதி அளித்தும் பயனில்லை. ஆனால், பூ, பழம், காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு மட்டும் தான் அனுமதி உண்டு என்றும் எங்களைப் போன்று துணிக்கடை, செருப்பு, தின்பண்டங்கள், தள்ளுவண்டி உணவுக் கடைகளுக்கு அனுமதியில்லை என்று அதிகாரிகள் அனுமதி மறுக்கிறார்கள் என வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. நயினார் முகமது  அவர்கள் வருத்தப்பட்டார்.

தி.நகர் பேருந்து நிலையத்திற்கு வெளியே 40 வருடங்களாக வியாபாரம் செய்யும் தமிழ்ச்செல்வி அம்மாவிடம் பேசினோம். கொரோனா தொடங்குவதற்கு முன்பு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால்  மக்கள் பேருந்துக்கு பதிலாக இரயில், இரு சக்கர வாகனங்களில் செல்லத்தொடங்கினர்.  மாலை நேரங்களில் கூட தி.நகர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படும். பேருந்து நிலையத்திற்குள்ளும் 20 வியாபாரிகளும், வெளியில் 30 க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளும் இருந்தோம். இப்போது15 பேர் மட்டுமே வியாபாரம் செய்கிறோம். எங்கோ ஒரு விபத்து நிகழ்ந்தால் போக்குவரத்து அதிகாரிகள் எங்களை வியாபாரம் செய்ய அனுமதிக்கமாட்டார்கள். உயர் அதிகாரிகள் வருகை, திருட்டு, பயணிகளுக்கு மது போதையில் பிரச்சனை என்றால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து முதலில் வெளியேற்றப்படுபவர்கள் நாங்கள் தான் என தெரிவித்தார். அவ்வப்போது அனுமதி மறுக்கும்போது பெட்டி கேஸ் ரூபாய் 300 கட்டுகிறோம். smart city  என்ற பெயரில் பேருந்து நிலையம் மாற்றப்போவதாக பல ஆண்டுகளாக வியாபாரிகளை அச்சத்தில் வைத்துள்ளது தமிழக அரசு.  மேலும், அரசு வழங்கிய சாலையோர  வியாபாரிகளுக்கான அடையாள அட்டை வைத்துள்ளோம்.  ஆனால், எந்த உரிமையும், சுயமரியாதையும் இல்லை என சோகமாகத் தெரிவித்தார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக சூளைமேடு பகுதியில் வியாபாரம் செய்யும் திருமதி கோவிந்தம்மாளுடன் உரையாடியபோது, கொரோனாவிற்கு முன் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மற்றும் இரயில் நிலையத்தை மையமிட்டு 100க்கும் மேற்பட்டோர் சாலையோர வியாபாரிகள் பாரம்பரியமாக வியாபாரம் செய்து வந்தனர். கடந்த ஓர் ஆண்டுக்குமேலாக கல்லூரி முழுமையாக செயல்படவில்லை. மேலும் கல்லூரியில் கருத்தரங்கம்,  விழாக்கள், அரசு தகுதி தேர்வுகள் என வாரத்தின் எல்லா நாளும் மக்கள் கூட்டமிருக்கும். ஆனால், இப்போது எதிரில் இருக்கும் மயானத்தில் தான் கூட்டமாக இருக்கு. வியாபாரம் என்பதே இல்லை. எவ்வளவு நாள் தான் காத்திருப்பது. மக்கள் பல்வேறு பகுதிக்கு வேலைக்குச் செல்ல தொடங்கிவிட்டதாகவும் தான் கூடுதலாக கூடை பின்னும் வேலை செய்வதாகவும் தெரிவித்தார்.  இங்கு வியாபாரம் செய்யும் மக்கள் பெரும்பாலானோர் சூளைமேடு குடிசைப் பகுதியை சேர்ந்த மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும், பலரை ஆற்றோர ஆக்கிரமிப்பாளர்கள் என்று அகற்றியப்பின் இன்றுவரை ரேசன் கார்டுகள் இல்லாமல் மக்கள் இருப்பதாகக் கூறினர். அடித்தட்டு மக்களின் ஒரே நம்பிக்கை ரேசன் பொருட்கள் மட்டுமே. அதை அனைவருக்கும் சென்று சேர்வதில் அரசு முனைப்புக் காட்டவில்லை. ஆனால், இந்தப் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் பல ஆண்டுகளாக  செயல்படுகின்றன.

அதே பகுதியை சேர்ந்த திரு. உசைன் என்பவரிடம் பேசியபோது, முதல் அலைக்குப் பின் எல்லாம் இயல்பாக செயல்பட தொடங்கிய பின்னரும் . எங்களுக்கு வியாபாரம் இல்லை.  இந்தப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் புற நகர் இரயிலை நம்பிதான் வியாபாரம் செய்கிறோம். வெளிநாட்டு விமானம் தொடங்கி விசேச கால சிறப்புப் பேருந்துகள் வரை இயங்கிட அனுமதிக்கப்பட்டது. ஆனால்,  9 மாதங்களுக்குப் பின் தான் அனைத்து மக்களும் புற நகர இரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். புறநகர இரயில்கள் மட்டும் ஐந்து வழித்தடங்களில்  இயங்குகிறது. அதாவது  கடற்கரை – செங்கல்பட்டு, சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் – எண்ணூர் சென்ட்ரல் – ஆவடி, அரக்கோணம் வேளச்சேரி – சென்ட்ரல்  என தொடர்ந்து  அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை இயங்குகிறது. உதாரணமாக கடற்கரை – தாம்பரம் செல்லும் வழியில் 18 நிறுத்தங்கள் உள்ளன. இப்படி ஒவ்வொரு வழித் தடங்களின் நிறுத்தங்களைக் கணக்கிட்டால் 150 க்கும் மேல் தாண்டும். ஒவ்வொரு நிறுத்தத்தின் இருபுறமும் சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், வண்டி நிறுத்தும் இடம், சிறு கடைகள், சிறு உணவுக் கடைகள், தேநீர் கடை என குறைந்தது 150க்கும் மேற்பட்டோர் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏழை , எளிய, நடுத்தர மக்களின்  அன்றாட பயணத்திற்கு இன்றியமையாத ஒன்று புறநகர  இரயில்.  எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக இரயிலை இயக்க தென்னக இரயில்வேக்கு அழுத்தம் தர வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசு முதலில் இரயில்,  மற்றும் பேருந்தை முழுமையாக இயக்கினால் தான் மக்கள் அச்சத்திலிருந்து விடுபடுவார்கள்.  பயணம் செய்ய தொடங்குவார்கள் . மக்கள் நடமாட்டம், வியாபாரம் மெதுவாக உயரும் என்று உஸ்மான் சாலையில் கடை வைத்திருந்த திரு . காசிம் என்பவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாகப் போராடி பெற்ற சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச்  சட்டத்தை கடந்த அதிமுக அரசு முறையின்றி தங்கள் ஆட்களை தலைவர்களாக்கி வியாபாரிகளிடம் சட்டப்படி பணம் வாங்கதான் பயன்படுகிறது. இந்த வியாபாரிகள் குழு கலைக்கப்பட வேண்டும் என்று சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதாக தெரிவித்தார்.

இவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது  நல்லி சில்க்ஸ் கடை மூடியிருந்தது. ஆனால் பின்புறமாக இணையவழி விற்பனை நடந்து கொண்டுதான் இருந்தது. அப்போது, ஒருவர் DUNZO உடையணிந்து கொண்டு வெளியே வந்தார். அவரும்  சாலையோர வியாபாரிதான்  சுயமரியாதையோடு வாழ்ந்தவர்கள் இப்போது உணவுக்காக, பிள்ளைகளின் படிப்புடக்காக, தண்டல் கட்ட இப்படி ஓடுகிறோம் என்று திரு. காசிம் அவர்கள் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறை ஊரடங்கு தொடர்பாக அரசு ஆணை வெளியிடும் போதும் வித விதமான கட்டுப்பாடுகளை தேநீர் கடைகளுக்கு  விதித்தது.  திரு. மனோகரிடம் உரையாடினோம். மாடியின் படிக்கட்டு இடத்துக்குள் கடை நடத்தும் இவர் கடைக்கான முன்பணம் மற்றும் பொருட்கள் என 1 இலட்சம் முதலீட்டு செய்திருப்பதாக காண்பித்தார்.

முதல் கொரோனா  அலையின் போது தைராய்டு நோயாளியாக பல ஆண்டுகள் சிகிச்சை  பெற்று  வந்த அவரது மனைவி காலமானார். ‘மொத்த குடும்பமும்  பல ஆண்டுகள் அவரை பாதுகாத்தோம்,  ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று மருந்துகளை பெற முடியாமல்  வெளியிலும் காசு கொடுத்து மருத்துவம்  பார்க்கமுடியாமல் நோயாலும் வேதனையாலும்  மனைவி இறந்ததாக தெரிவித்தார்.

‘கொரோனாவிற்கு முன் கேஸ் சிலிண்டர், பருப்பு , எண்ணெய் போன்றவற்றின் விலையேற்றம் எங்களை போன்றவர்கள் தொழில் செய்ய முடியாமல் இருந்தது’ என தெரிவித்தார்.  உதாரணமாக தனது கடைக்கு அருகில் சாலையோரத்தில்  3 ரூபாய்க்கு வடை விற்கும் பாட்டி,  இப்போது பருப்பு , எண்ணெய்க்கு நிகராக வடையின் விலையை உயர்த்தினால் சாலையோரத்தில் விற்பனையாகாது என்பதால் தொழிலை கைவிட்டு , சுயமரியாதையுடன் வாழ முடியாத நிலைக்கு  தள்ளப்பட்டார்.

எப்போது கடையை  திறப்பேன் என்று வாடகைக்காரர், தண்டல்காரர் மற்றும் அரசும் மின்சார கட்டணத்திற்காக  காத்திருக்கின்றனர்.  மேலும் இந்த பகுதியில் Tea Time , chai kings, போன்ற குழுமங்களின் உரிமம் பெற்ற கடைகள் பெருக தொடங்கிவிட்டன. எங்களுக்கு எந்த சலுகையும் அரசிடமிருந்து இல்லை. ‘வெறும் எனது உழைப்பிற்கான கூலியை தான் லாபமாக பெறுகிறேன், இனி எங்களை போன்றோர் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலை தான் இப்போது ஏற்பட்டுள்ளது’ என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

 

சோசலிச தொழிலாளர் மையம் SWC – தமிழ்த்தேச மக்கள் முன்னணி

சென்னை மாவட்டம்

9500056554, 9787430065

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW