நடுத்தரக் குடும்பங்களை ஏழைகளாக்கி, ஏழைகளை ஏதுமற்றவர்களாக்கிய பொதுமுடக்கம்

18 Jun 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 2)

கொரோனா பொதுமுடக்கம்  அதனை தொடர்ந்த பொருளாதார நெருக்கடி தற்போது ஒரு பேரிடராகவே கருதவேண்டியுள்ளது. பெரும்பாலான மக்கள் சிறு – குறு தொழில்கள் சார்ந்த வேலைவாய்ப்பில் உள்ள நிலையில் ஓராண்டாக தொழில் நசிவடைந்து, தொழிலாளர் வேலை-வருமானம் இழந்து வர்க்க படிநிலையில் கீழிறக்கப்பட்டு வாழ்நிலையே கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது குடும்ப அட்டை தாரர்களுக்கு ஒரு முறை நிவாரணமாக கொடுக்கப்படும் 4000 ரூ நிதி உதவிக்கு அப்பால் அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்கள், தொழிலாளர் நலவாரிய திட்டங்கள் அனைத்தும் தற்போதைய சூழலை கணக்கில்கொண்டு மறுபரிசீலனை  செய்யவேண்டியுள்ளது. மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு சிறப்பு நலத்திட்டங்களை வகுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வந்தாரை வாழவைத்த சென்னை, ‘இனி இங்கு வாழமுடியாது-‘ ஊருக்கே திரும்பும் – சுபிக்‌ஷாவின் குடும்பம்:

சுபிக்‌ஷாவின் அப்பா பாண்டிபஜாரில் தெருவோர காலணிக் கடையில் தினக் கூலியாக வேலை செய்துவந்தார்.  விற்பனையாகும் அளவைப் பொறுத்தே அவரின் சம்பளம். அதிகபட்சமாக ரூபாய் 600/- ஒரு நாள் சம்பளம் கிடைக்கும்.  கடையில்  7000 ரூயாய்க்கு கீழ் விற்பனையானால் உணவுமட்டும் வழங்கப்படும், சம்பளம் இல்லை. இப்போது கொரோனா பொது முடக்கத்தால் நடைபாதைக் கடைகள் செயல்பட  அனுமதியில்லாததால்  ஒரு பிரியாணி கடையில் 300 ரூபாய் தினக் கூலிக்காக வேலை செய்கிறார். 20 வருடங்களுக்கு மேலாக தினக் கூலியாக கிடைக்கிற வேலையை செய்து வருகிறார்.

சென்னைக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வேலைக்கு செல்லாமல் இருந்த சுபிக்‌ஷாவின் அம்மா தற்போது கணவனின் கடும் எதிர்ப்பினை மீறி ஓராண்டாக வீட்டு வேலைக்குச் செல்கிறார். மூன்று வீட்டில் வேலைசெய்து அவர் பெறுகிற கூலி  மாதம் ரூ5200/-  மட்டுமே.

அதாவது நாள் ஒன்றுக்கு  சுபிக்‌ஷா குடும்ப வருமானம் ரூ 473.3 மட்டுமே. அவர்களின் வீட்டு வாடகை ரூ 7500/- . அதாவது ஒரு நாள் ஒன்றுக்கு 250 ரூ வாடகைக்காக செலவு செய்ய வேண்டியுள்ளது.

கருவாடு அதிகம் விற்பனையானால்  நாட்டில் பஞ்சம் வரப் போகிறது என்று பொருள் கொள்வார்களாம். இப்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கிறது என்ற செய்தியும்  நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

சுபிக்‌ஷா ஐந்தாம் வகுப்பு மாணவி, அவரின் தங்கை மூன்றாம் வகுப்பு  மாணவி  முறையே சாரதா வித்யாலயாவிலும், அகஸ்டின் பள்ளியிலும் படிக்கிறார்கள்.  ஐந்தாம் வகுப்பிற்கு 21,000/-  ரூ , மூன்றாம் வகுப்பிற்கு  18,000 ரூ கட்டணம்  செலுத்த வேண்டும்.  ஒரு குழந்தைக்கு காது குத்த வைத்திருந்த பணத்தையும். மற்றொரு குழந்தைக்கு தண்டல் (கந்து) வட்டிக்கும்   வாங்கியும் கட்டியுள்ளனர். மகளிர் சுய உதவி குழு, வங்கிக் கடன், அரசு வழங்குகின்ற எந்த கடன் உதவி எதையும் இதுவரை  பெறவில்லை. எந்த பணமும் கேட்காமல்  TC தந்தால் போதும்,  நாங்கள் அரசு பள்ளியில் சேர்த்துவிடுவோம் என்கிறார் சுபிக்‌ஷாவின் அம்மா. இப்போது அவர்களின் ஒரே வேண்டுகோள் இதுதான்.

புதியதாக பாத்திரம் தேய்க்க  வீட்டு வேலைக்கு அம்மா செல்வதும்,கட்டணம் செலுத்த முடியாமல் மகள்கள் அரசு பள்ளிக்கு மாறுவதும், அப்பா கிடைத்த வேலைக்கு செல்வதுமாக வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டது கொரோனா பொதுமுடக்கம்.

வந்தாரை வாழவைத்த சென்னை, ”இனி இங்கு வாழமுடியாது’ என்று முடிவுசெய்து சுபிக்‌ஷாயின் குடும்பம்  சொந்த ஊரான கும்பகோணத்திற்கு செல்வதாக திட்டமிட்டு வருகின்றனர் .

இப்போதைக்கு வேலை செய்யும் வீட்டில் கொடுக்கிற மிச்ச மீதி உணவும், திண்பண்டங்கள், கூலி மட்டும்தான் வாழ்க்கைக்கான ஒரே உத்தரவாதமாக இருக்கிறது என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் சுபிக்‌ஷாயின் அம்மா.

 

நடுத்தர குடும்பங்கள் நடுத் தெருவிற்கு வரும் நிலையில் – ரத்னாவின் குடும்பமே சாட்சி.

தி.நகர் பகுதியில் வாழும் ரத்னாவின் குடும்பம் கொரோனா வருவதற்கு முன்னால் 2 படுக்கை அறை கொண்ட வீட்டில் வசித்து வந்தனர். ரத்னா பொருளாதார  நெருக்கடியின் காரணமாக கொரானா முதல் அலைக்கே அரசு பள்ளிக்கு மாறிவிட்டார். இப்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும்  அவரின் தம்பியும்  கொரானா இரண்டாவது அலைக்கு அரசு பள்ளிக்கு  மாறியிருக்கிறார். ரத்னா அப்பா ஒரு கார் ஓட்டுநர். எச்.டி.எப்.சி யில் கடன் வாங்கி சொந்தமாக கார்வைத்துள்ளார். அவர் சுற்றுலா, வெளிநாட்டுப் பயணிகளை நம்பி இயக்கக் கூடிய கார் டிராவல்ஸ்லில் பதிவு செய்து வாடகைக்கு வண்டி ஓட்டி வந்தார். கொரோனாவிற்குப் பின் வெளிநாட்டுப் பயணிகள் வரவு இல்லாததால் 15 மாதங்களாகவே வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

கொரானாவிற்குப்பிறகு ரத்னாவின் அம்மா  இட்லிக்கான தோசை மாவு தயாரித்து விற்பனை செய்து  அதில் வாழ்க்கையை ஓட்டி வருகின்றார்.  2ஆம் அலை தொடங்குவதற்கு முன்னால்  35 கிலோ வரை விற்பனை ஆகும். இப்போது 15 கிலோ வரைதான் விற்பனை நடக்கின்றது. அவர்களிடம்  ரூபாய் 10, 20  பொட்டலங்களாக விற்பனை செய்வதாகவும் பெரும்பாலும் குளிர்சாதனம் வசதியில்லாதவர்கள் தான் எங்களிடம் வாங்குவதாகவும் தெரிவித்தார்.  தற்போது, வாடகை கட்டமுடியாமல் வீடு மாறினார்கள். இஎம்ஐ கட்டமுடியாமல் வண்டியையும் ஓட்ட முடியாமலும் மகனின் பள்ளிக்கட்டணத்தையும் கட்ட முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்.

இரு குடும்பங்களின்  எதிர்பார்ப்பும்  ஒன்றுதான் . எந்தவித நிபந்தனையும் இன்றி பள்ளிகள் TC  தர வேண்டும், கொரோனா முடியும் வரையாவது வீட்டு வாடகை தொகையைக் குறைக்க வேண்டும், வங்கிக் கடன் தவணைகள் செலுத்த 6 மாதங்களுக்கு கால அவகாசம் தர வேண்டும்.

உழைக்கக் காத்திருக்கும் மாயக்கண்ணன் – வேலை எங்கே?

இவரை அறிமுகம் செய்து வைத்த நண்பர், மாயக்கண்ணன் மிக கடுமையாக உழைக்கக் கூடியவர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். என்ன தொழில்  என்று கேட்டப்பொழுது எந்த வேலை கிடைக்கிறதோ அதற்கு செல்வேன். ஒரு நாள் கட்டட வேலை, பெயிண்ட் வேலை, சில மாதங்கள் செக்யூரிட்டி வேலை, சாக்கடை அடைப்பு சரி செய்வது என கிடைத்த வேலைக்குச் செல்வதாக கூறினார். 8000 ரூபாய் சம்பளத்தை 15ம் தேதி  தருவதால் செக்யூரிட்டி வேலைக்கு போகவில்லை என்றார். அவரின் மனைவி வீட்டு வேலை செய்துவருவதாகவும் தெரிவித்தார். படிப்பறிவில்லாதநிலையில் சென்னையில் 30 வருடமாக கூலி வேலை மட்டுமே செய்து தனது மூன்று மகள்களையும் அரசு பள்ளியில் படிக்கவைத்து, பின்  கல்லூரி வரை படித்துள்ளனர். இப்போது மூன்று மகள்களும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வாழ்கின்றனர். பெரும் முயற்சி செய்தும் எந்த மகளுக்கும் அரசு வழங்குகின்ற திருமண உதவித் தொகையை பெற முடியவில்லை என்றார்.

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேட்டபோது கொரோனாவிற்கு முன்பே, தினமும் வேலை கிடைப்பதற்கு உத்தரவாதம் இல்லை. இப்போது ஒரு நாள் வேலை கிடைப்பதே பெரிய விசயம் என்று தெரிவித்தார். 

இதுவரை வங்கிக் கடன், நலவாரிய பதிவு , மகளிர் சுய உதவிக் குழு என எந்த பலனையும்  இவர் பெறவில்லை. வீட்டு வாடகை கட்டுவதற்காக, மகள்களின் திருமணத்திற்கு  வாங்கிய கடனை கட்ட மிச்சமிருக்கும் காலமும் உழைக்கப் போகிறார்.

தற்போது தமிழக அரசு மாயக்கண்ணன் போன்றோருக்கு  வைத்துள்ள திட்டங்களில் ரேசன் மற்றும் முதியோர் ஓய்வூதியம் ரூ 1000/-மட்டுமே. ”வேலை எதுவானாலும்  சொல்லுங்க ”என்று தனது 55வது வயதில் மீண்டும்  வேலைதேடுகிறார்.

சலுகைகள், இலவசங்கள், நிவாரணமும் கூட வேண்டாம்  சாராயக் கடையை மூடுங்கள் – அம்பிகாவின்  வேண்டுகோள்.

அம்பிகாவின் அக்காவிற்கு 10 வயது இருக்கும் போது அவரின் அப்பா குடிக்க தொடங்கினார். பொருட்களை ஏற்றும் (TATA ACE) வாகனம் ஓட்டுபவர். 20 ஆண்டுகளாக  குடும்பத்திற்கு பணம் எதுவும் கொடுப்பதில்லை. குடும்ப நிலையை உணர்ந்து அம்பிகா அம்மாவின் பொறுப்பையும், அவர் அம்மா அப்பாவின் பொறுப்பையும் சுமக்க தொடங்கினார்கள்.

அம்பிகாவின் அம்மா காலை முதல் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீட்டு வேலை செய்து மாதம் ரூபாய் 10,000/- ஈட்டி வந்தார். அம்மாவைப் போல் அம்பிகா வீட்டில் சமைப்பது, துணி துவைப்பது, தம்பியை பள்ளிக்கு அழைத்துச் செல்வது மீண்டும் அழைத்து வருவது என வேலை பளுவால் படிக்க முடியாமலும் பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்துக் கொண்டார் அம்பிகா. அம்மாவின் வருமானத்தில் வாடகை, பள்ளிப் படிப்பு, உணவு என வாழ்க்கை நகர்ந்தது.

அம்பிகாவின் அம்மா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இறக்கும் தருவாய் வரை சென்று மீண்டு வந்துள்ளார். இப்போது பொறுப்புகள் கைமாற்றப்பட்டுள்ளது. அம்பிகாவின் அம்மா வீட்டை கவனிக்க , அம்பிகா தனியார் கடைக்கு வேலைக்கு செல்வது  என மாறியது.  கொரோனா ஊரடங்களால் அம்பிகாவிற்கு சம்பளம் பாதியாக  குறைப்பட்டுள்ளது.

இப்போது வாடகை கட்டுவதா, அக்காவின் திருமணத்திற்கு வாங்கிய தண்டல் கடன் 1.5 இலட்சத்திற்கு வட்டிக் கட்டுவதா? அசலை கொடு அல்லது வட்டியை கொடு என்று தண்டல் காரன் கேட்கிறான். ஏதோ ஒரு ஆசிரியர் அம்பிகாவின் தம்பிக்கு  நோட்டும், புத்தகமும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஒரு செலவை குறைப்பதற்காக இப்பொழுது தம்பியை அரசு பள்ளிக்கு மாற்றிவிட்டனர் கடனைக், கட்ட தம்பியின் படிப்புக்காக,  என அம்பிகா சில வருடம் தனது திருமணத்தை தள்ளிவைத்துள்ளார்.

சில நிமிடங்களுக்கு முன் அறிமுகமான எங்களிடம் மகளின் சுமையை, குடியில் மயங்கி கிடக்கும் கணவனை, தண்டல் காரனின் நெருக்கடியை, வாடகை தொகையை, மகனின் படிப்பை , தான் நோயால் அவதியுறுவதை சொல்லி தாரை தாரையாக கண்ணீர் சிந்துகிறார் அம்பிகாவின் அம்மா.

வீட்டுக்குள் வாங்கி வைத்த பாட்டிலை காணவில்லை என்று பாதி போதையில் சத்தமிட தொடங்கிவிட்டார் அம்பிகாவின் அப்பா.  சலுகைகள், இலவசங்கள், நிவாரணமும் கூட வேண்டாம்  சாராயக் கடையை மூடுங்கள்  என்று சொல்லிவிட்டு வேகமாக விடைபெறுகிறார் அம்பிகாவும், அவரின் அம்மாவும்.

ரேசன் பொருட்களை தவிர  அரசால் எந்த உதவியும் இல்லை- மல்லிகாவின் அனுபவங்கள்

மல்லிகாவிற்கு இப்போது 55 வயது. பூர்வீகம் திண்டிவனம் 20 வருடங்களுக்கு முன் மூன்று மகள், ஒரு மகன் மற்றும் குடிகார கணவனுடன் தி.நகர் பகுதியில் குடியேறியுள்ளனர். பள்ளிக்கூடமே பார்த்திராத மல்லிகா தன்னால் தன் பிள்ளைகளுக்கு 3வது,5வது 8வது முறையே  3 மகள்களையும் , 10வது வரை மகனையும் படிக்கவைத்துள்ளார்.  வீட்டு வேலைக்கு செல்வது அதில் ஈட்டும் வருமானத்தில் தான்  நான்கு பிள்ளைகளுக்கும்  திருமணம் செய்து வைத்துள்ளார். கொரோனா ஊரடங்கால்  தனது வருமானம் ரூபாய் 4,000 மாக குறைந்துவிட்டது . தற்போது வாடகை மட்டும் ரூபாய் 5000 கட்ட வேண்டியுள்ளது. மகன் தி.நகரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்வதாகவும் , அவருக்கும் கொரோனாவால் சம்பளமில்லாமல் இருப்பதாக தெரிவித்தார்.  திருமணத்திற்காக வாங்கிய தண்டல்  2இலட்சம்   இருப்பதாகவும் தெரிவித்தார்.

ரேசன் பொருட்களை தவிர இந்த அரசால் எந்த உதவியும் அவர் குடும்பம் பெற்றதில்லை. மல்லிகாவின் கணவர் நான்கு ஆண்டுகளுக்குமுன்பு இறந்துவிட்டார். இறப்புச்சானறிதழ் வாங்க முடியாமல் விதவைப் பென்ஷன் வாங்க முடியாமல் தான் இருக்கிறார்

ஒரு சலுகைய வாங்கவே நடையா நடக்கவேண்டியிருக்கு – விஜயாவின் அனுபவங்கள்.

விதவை ஊக்கத்தொகை விண்ணப்பிக்கச்சென்ற  விஜயாவிடம் நல்லா தான இருக்க திருமணம் செய்ய வேண்டியது தானே?  உனக்கு கல்யாணம் ஆயிடுச்சாமே? என்று தரமற்ற வகையில்  ஒரு அதிகாரி கேட்டு வாக்குவாதமாகியதில் விண்ணப்பம் 6 மாதம் நிலுவையில் இருந்தது. பல முயற்சிக்கு பின் மாதம் ரூ1000 விதவை ஊக்கத்தொகையை பெற்றார் விஜயா. அடுத்த சில மாதங்களில் பணம் வழங்கப்பட வில்லை. பல முறை வட்டாட்சியர் அலுவலகம்  சென்று ரூ 3000 லஞ்சம் கொடுத்து மீண்டும் புதுப்பித்துள்ளார்.

தமிழக  அரசு, குடும்ப தலைவர் திடீர் என்று மரணமடைந்தால் ரூபாய் 10,000/- நிவாரணம் தருவதாக தெரிந்து நாங்கள் விண்ணப்பித்திருந்தோம். 10 ஆண்டுகள் கடந்துவிட்டது இதுவரை கிடைக்கவில்லை.

“விதவைகளுக்கான கோட்டாவில் சத்துணவு வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்த எனக்கு எந்த கடிதமும் வரவில்லை. நேரில் சென்று விசாரித்த போது நீங்கள் விருப்பமில்லை என்று தெரிவித்ததால் வேறு ஒருவருக்கு வழங்கிவிட்டோம் என்று பொய்யாக பதில் கூறினார் அதிகாரி. இதுக்குமேல் என்ன செய்யமுடியும் நான்“ என்றார்.

இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் ரூபாய் 12,000 மாத சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். PF, ESI என எந்த பலனும் இல்லை.  கொரோனாவால்  சம்பளமில்லை. வாடகை கட்டவும் முடியாமல் திணறி வருகிறார்.  தமிழக  அரசால் வழங்கப்படும்  உதவித்தொகை , வேலைவாய்ப்பை விஜயா போன்றவர்களால் பெறமுடியவில்லை. இப்போது விஜயாவிடம் மிச்சமிருக்கும்  ஒரே கனவு மகளின் படிப்பு மட்டுமே.

 

சோசலிச தொழிலாளர் மையம் SWC – தமிழ்த்தேச மக்கள் முன்னணி

சென்னை மாவட்டம்

9500056554, 9787430065

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW