கொரோனா காலத்தில் டாஸ்மாக்கை மூடுங்கள்! படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள்!

15 Jun 2021

முதல்வர் முக ஸ்டாலினுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன்  விடுக்கும் கோரிக்கை

முழுமுடக்கத் தளர்வுடன் சேர்த்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுவிட்டன. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் முழுமுடக்கக் காலத்தில் டாஸ்மாக்கைத் திறக்கக் கூடாது என்று சொல்லி நீங்கள் நடத்திய போராட்டத்தில் கோரிக்கை கொண்ட பதாகைகளை ஏந்தும் புகைப்படங்கள் சமூக ஊடஙக்ளில் நிறைந்துகிடக்கின்றன. தங்கள் கோரிக்கையையே தங்களுக்கு நினைவூட்டி, சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களை ஆதரித்தோர், எதிர்த்தோர் என்ற பாகுபாடின்றி  பலரும் ’டாஸ்மாக்கை திறக்காதீர்கள்’ என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.

கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்பதால் திறந்தோம்’ என்றும்  ’கொரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனில்  மூடிவிடுவோம்’ என்றும் டாஸ்மாக் திறப்பதற்கான நியாயமாக சொல்லி இருக்கிறீகள். தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கள்ளச்சாராய வழக்குகள், பாதிப்புகள், சாவுகள்  அதிகமாக  நடந்திருக்கின்றன என்று சொல்லி உங்கள் கருத்தை நிறுவுவதற்கான  விவரங்கள் எதுவும் உங்கள் அறிக்கையில் இல்லை. டாஸ்மாக்கைத் திறக்கும்பொழுது குறுகியகாலம் நீடிக்கக்கூடிய எதிர்ப்பு வருமெனத் தெரிந்துதான் இந்த சம்பிரதாயமான விளக்கத்தை அளித்துள்ளீர்கள்.

நடந்து முடிந்த தேர்தலின் போது,  தேர்தல் அறிக்கையில் திமுகவும் சரி அதிமுகவும் சரி மதுவிலக்கு குறித்த கோரிக்கையை வைக்கவே இல்லை. கடந்த காலத்தில் காந்தியவாதியும் மது ஒழிப்புப் போராளியுமான சசிபெருமாளின் ஈகத்தையும், டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களையும்  அதிமுக ஆட்சி எதிர்ப்புக்காக தாங்களும் தங்கள் கூட்டணிக் கட்சிகளும் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள் ஏதோவொரு வகையில் தங்கள் தேர்தல் வெற்றிக்கு பயனளித்திருக்கும். ஆகவே, மக்களுடைய நலனில் இருந்து, குடிப்பழக்கத்தால் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் தாய்மார்கள், குழந்தைகளின் துயரத்தில் இருந்து இச்சிக்கலைப் பரிசீலியுங்கள்.

தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் இருக்கும் காரணத்தினால் இன்றைக்குப் பள்ளி, கல்லூரி மாணவர்கள்கூட குடிப்பழக்கத்திற்கு ஆளாகி ஒரு சமூகமே குடிநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்திற்கு பெருங்கேடு விளைப்பதாகும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாக குறைத்து, நாளடையில் முழு மதுவிலக்கை நோக்கிச் செல்லவிருப்பதாக சொன்னது. ஆனால், தன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தாங்களேனும் இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு பெருந்தொற்றுக்கான முழுமுடக்கக் காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையாமல் இருப்பதற்காகவும் நோய்த் தொற்றுப் பரவாமல் இருப்பதற்காகவும்  டாஸ்மாக்கை மூடுவதென்று முடிவெடுங்கள்.

டாஸ்மாக் திறப்பதற்கு நீங்கள் சொல்வது சம்பிரதாயமான காரணம். உண்மையான காரணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று, தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலமாக கிடைக்கும் வருவாய். இரண்டாவது, திமுக மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் மதுபான உற்பத்தி ஆலைகள் நடத்துவதால் கிடைக்கும் வருவாய். மது விலக்கு என்று முடிவெடுத்தால் இவை இரண்டும் அடிபட்டுப் போகும்.

கடந்த ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் சுமார் 40,000 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை இருந்தது.  கொரோனாவுக்கு பின்னர், அது 80,000 கோடியாக மாறியது.   இப்போது டாஸ்மாக்கை முழுவதும் மூடினால், அதிலிருந்து பெறக்கூடிய வருவாயான சுமார் 30,000 கோடி ரூபாய் அடிபட்டுப் போகும். ஆனால், அதை ஈடு செய்வதற்கு இருக்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதுதான் மக்கள் நலனுக்குப் பொருத்தமாக இருக்கும். ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்திற்கு வரக்கூடிய இழப்பீட்டிற்காகவும் வரிவிதிப்பு முறையை மாற்றியமைப்பதற்காகவும் நடத்தும் போராட்டத்தை தீவிரப்படுத்தி, தமிழகத்திலிருந்து உறிஞ்சப்படும் பணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கச் சொன்னால் மாநில அரசுகள்தான் வரியைக் குறைப்பது பற்றி சிந்திக்க வேண்டும் என்று அந்த கோரிக்கையை மாநில அரசுகளின் தலையில் சுமத்தி மாநில அரசுகளைத் திவால் ஆக்கப் பார்க்கிறார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.  பெட்ரோல், டீசல் வரி விதிப்பில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 3.5 இலட்சம் கோடி ரூபாயை சுருட்டுகிறது ஒன்றிய அரசு.  இந்தப் பகல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்து நமக்குரிய தொகை தில்லிக்குப் போகாமல் தடுப்பது பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும். மேலும் நம்முடைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்வதுபோல் தொழில்துறைகளில் வரிவிதித்து அரசுக்கு வருவாயைத் திரட்டுவது பற்றி யோசிக்க வேண்டும். இப்படியாக வருவாய்ப் பெருக்க வழிகளுக்கு திட்டமிட்டுக் கொண்டு, டாஸ்மாக்கைப் படிப்படியாக குறைப்பது பற்றி யோசிக்க வேண்டும். மாறாக, வருவாய்க்காக மதுபானக் கடை நடத்துவதென்ற திசையில் காலை ஊன்றிக் கொண்டிருந்தால், அது இத்துடன் நின்றுவிடப் போவதில்லை.  இந்த கொள்கைவழி என்பது அடுத்து லாட்டரியைத் திறந்துவிடுதல், பல சிறிய தீவு நாடுகளைப் போல கேளிக்கைகளை மையப்படுத்திய கேசினோ பொருளாதாரத்திற்கு நகருதல் என்ற திசையில்தான் இழுத்துச்செல்லும்.

இரண்டாவது, திமுக மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் நடத்தும் மதுபான உற்பத்தி ஆலைகள். கோல்டன் வாட்ஸ், எலைட், எஸ்என்ஜே, கால்ஸ, இம்பீரியல் ஆகிய திமுக ஆதரவாளர்கள் நடத்தும் ஆலைகளில் இருந்து மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில்(2018 – 2021) சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சாராயம் உற்பத்தி செய்யபப்ட்டுள்ளது. அப்படியென்றால் இதில் இருந்து அவர்கள் அடைந்த இலாபத்தைப்பற்றி சொல்லத் தேவையில்லை. தங்கள் கட்சி ஆதரவாளர்கள் மதுபான உற்பத்தி ஆலை நடத்திக்கொண்டிருக்குபொழுது மது விலக்குக்கு தடையாய் இருப்பது கள்ளச்சாராயம் என்று பழிபோடுவது ஏற்புடையதன்று.  தனியார் மது ஆலை முதலாளிகளின் இலாபி மதுவிலக்கை நோக்கிச் செல்லத் தடையாக இருக்கும். இவர்களால் திமுக மறைமுகமாகப் பலன் பெற்றிருக்கும் என்பதையும் சொல்லத் தேவையில்லை. டாஸ்மாக் மூடல் என்பது விரல்விட்ட எண்ணக்கூடிய மதுபான உற்பத்தியாளர்கள் பக்கம் நிற்பதா? அல்லது ஏழைக் குடும்பங்களின் தாய்மார்களின் பக்கம் நிற்பதா? என்பதோடு தொடர்புடைய கேள்வியே தவிர கள்ளச்சாராயத்தை அனுமதிப்பதுப் பற்றிய கேள்வியல்ல.

பாமக, பாஜக, புதிய தமிழ்கம் போல் சம்பிரதாயமாகவும் திமுக எதிர்ப்பு அரசியலுக்காகவும் இந்தக் கோரிக்கையை நாங்கள் முன்வைக்கவில்லை. தமிழக அடித்தட்டு உழைக்கும் மக்களின் நலனிலிருந்தும் தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால நலனிலிருந்தும் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு மதுவிலக்கை அமலாக்க வேண்டும் என்று தங்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW