The Family man 2 -அரசியல் வன்மத்தையும் இன வெறுப்பையும் விதைக்கிற சினிமா தொடர்

07 Jun 2021

”பேமிலி மேன்’’ தொடரின்  இரண்டாவது சீசனின் டீசர் நெட்பிலிக்ஸில் வெளிவந்தபோதே இப்படத்திற்கு எதிராக தமிழ்நாட்டிலிருந்து பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. இப்படத்தை தடை செய்யவேண்டுமென ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்டவாறு கடந்த ஜூன் 4 அன்று நெட்பிலிக்ஸில் படம் வெளியானது.

சென்னையில் நடக்கிற  இந்தியப் பிரதமர் -இலங்கை அதிபர் சந்திப்பின் போது, இந்தியப் பிரதமரை கொல்வதற்கு ஈழப் போராளி அமைப்பு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் துணையோடு மேற்கொள்கிற படுகொலை சதித்திட்டத்தை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளை முறியடிக்கிறதுதான் கதைக் கரு.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் கால் நூற்றாண்டு காலமாக சிறையில் அடைபட்டுக் கிடக்கிற ஏழு தமிழர்களின் விடுதலைக் கோரிக்கை உச்சம் பெறுகிற இந்நிலையிலே, பெரும் இனப்படுகொலை வன்முறையை எதிர்கொண்ட ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டமாக சித்தரிக்கிற இப்படம் மிக மோசமான பிற்போக்கு அரசியலை முன்வைத்து ஆளும் வர்க்கத்தின் போலீஸ் வன்முறையையும் ஒடுக்குமுறையை தேச பக்தியின் பெயரால் நியாயப் படுத்துகிறது.

பேமிலி  மேன் – ஒரு நகல் போலி

FAMILY MAN சீசன் 1 பார்த்தபோது அதற்குமுன் அமேசான் பிரைமில் BOSCH சீரியஸ் தான் நியாபகத்திற்கு வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் போலீஸ் துறையில் கொலைக்குற்ற பிரிவில் பாஷ்க் என்ற கதாபாத்திரமாக வருகிற போலீஸ் அதிகாரி தனது துறைசார்ந்த கொலைக் குற்ற துப்பறியும் சாகசங்களையும் தனது குடும்ப சிக்கல்களை கையாள்கிற விதத்தை மையமாக கொண்டு வந்த தொடர் அது. இதுவரை இந்தியாவில் வந்துள்ள ஐந்து சீரியசையும் அடுத்தடுத்த நாட்களில் பார்த்துள்ளேன். சலிப்பு தட்டாத வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். இப்படத்தை இந்தியப் பாணியில் மோசமாக பிரதியெடுத்த படைப்பாகவே FAMILY MAN  படம் தோன்றுகிறது.

முதல் பாகத்தை சற்று சுருக்கமாக பாப்போம். நாட்டை இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிற தேசிய புலனாய்வு துறையில் கமுக்க அதிகாரியாக வருகிற ஸ்ரீகாந்த் திவாரிதான் படத்தின் சாகச நாயகன்.ஜேம்ஸ் பாண்ட், ராம்போ போல தீவிரவாத தாக்குதலை முறியடிக்கிற ஹீரோயிச கதை நாயகன்பாணி. ஒரே வித்தியாசம் இப்படத்தில் ஸ்ரீகாந்த் திவாரி சாமானிய நடுத்தர குடும்ப பின்புலத்தில் இருந்து வருகிறார். உடல் வலுவுக்கு மாறாக மூளையை உபயோகிப்பவர். தனது உயிரை பணயமாக வைத்து நாட்டைக் காக்கிற பணியிலே குறைவான சம்பளம் வாங்குபவர். லோன் கட்டுவதற்கும் ஹோட்டல் சாப்பாட்டிற்கும் சிக்கனமாக செலவு செய்கிறவன். தனது  துறைசாரந்த துப்பறியும் சாகசங்களை குடும்பத்தினர் அறியா வண்ணம் அவர்களிடம் பொய் சொல்லி மாட்டிக் கொள்கிற அப்பாவி. சாமானிய நடுத்தர வர்க்க பெற்றோர் போல குழந்தைகளை கண்டித்து பொறுப்புடன் வளர்க்க முயல்கிறவன். தனது காதல் மனைவிக்கு வேறொரு ஆணுடன் நட்புணர்வு கொள்வதில் அதிகம் சந்தேகம் கொள்கிறவன். வேலைப் பளு, மனைவியுடன் சண்டையிடுகிற சூழ்நிலையில் ஸ்ரீகாந்த் திவாரி தனது அலுவலக நண்பன் ஜேகே உடன் சிகெரட் பிடித்துக் கொண்டும் குடித்துக் கொண்டு இருக்கிறான். BOSCH சீரியசிலும் பாஸ்கின் அலுவலக நண்பனாக ஜெரி எட்கர் என்ற கதாபாத்திரம் வரும். இருவரும் ஆழமான நட்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.

வழக்கமான துப்பறியும் பணிகளை மேற்கொண்டுள்ள ஸ்ரீகாந்திடன் தீவிரவாத தாக்குதல் சதியை முறியடிக்கிற பணியை முடிக்க ஸ்ரீகாந்த் அமர்த்தப்படுகிறான். கேரளாவில் மூளை சலவை செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த மூஸா, அவனுடன் நண்பன் சஜித்(இருவரும் தீவிரவாதிகள் எனக் கூறத் தேவையில்லை!) மற்றும் ஸ்ரீகாந்த் திவாரி ஆகியோர்களுக்கு இடையிலான பூனை எலி விரட்டல் கதைதான் மீதி.பாகிஸ்தான்,காஷ்மீர் இல்லாமல் ஒரு  தீவிரவாத படமா? ஆகவே காஷ்மீரும் பாகிஸ்தானும் படத்தில் வருகிறது. இறுதியில் தீவிரவாத தாக்குதலில் இருந்து ஸ்ரீகாந்த் திவாரி நாட்டைக் காப்பாற்றுகிறான் என்பதுதான் முடிவு. படம் ஒருதலைபட்சமாக இஸ்லாமோபோபியாகவாக  இருந்துவிடக் கூடாது என்ற இயக்குனரின் “மையவாத’ சிந்தனையால் கரீம் என்ற கதாபாத்திரம் வருகிறது. இந்துத்துவ அரசியல்வாதிகளின் மதச்சிறுபான்மை விரோத அரசியலுக்கு எதிர்வினையாற்றுகிற விதமாக மாட்டுக்கறி அனுப்பி(இந்துத்துவ அரசியல்வாதியின் வீட்டு நிகழ்சிக்கு) எதிர்ப்பை பதிவு செய்ய முயல்கிற கரீமை தவறுதலாக ஸ்ரீகாந்த் திவாரி டீம் சுட்டுக் கொன்றுவிடுகிறது.கரீம் தீவிரவாதி அல்ல என ஸ்ரீகாந்த் திவாரி குற்றவுணர்வு கொள்கிறான். ஆக, நாட்டுப்பற்று ஒரு ஸ்பூன், நடுத்தர வர்க்க சந்தேக ஆண்புத்தி  ஒரு ஸ்பூன், தீவிரவாத அச்சுறுத்தல் ஒரு ஸ்பூன் என ஒரு நகர்ப்புற நடுத்தர வர்க்க மசாலா படமாக FAMILY MAN சீசன் 1. வெளிவந்தது.

மொத்தத்தில் பேமிலி மேன் முதல் சீசன் எந்த விதத்திலும் ஒரு அசலான நல்லபடமாக எனக்குத் தோன்றவில்லை. இப்படத்திற்கு அப்போது வெளிவந்த “பாதாள லோக்” சீரியஸ் எவ்வளவு தேவலாம் என்றிருந்தது. இந்த நிலையில் பேமிலி  மேன் இரண்டாம் சீசனின் கதைக் களம் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து தற்காலிகமாக விடைபெற்று ஈழப் போராளிகளை பயங்கரவாதிகளாக மாற்றியுள்ளதை  இரண்டாம் சீசனின் டீசரே வெளிப்படுத்தியது..

பேமிலி மேன்–இரண்டாவது தொடர்

தொடர்  இரண்டில் புலம் பெயர்ந்த ஈழப் போராளியாக ராஜி கதாபாத்திரத்தில் வருகிற சமந்தாவின் கருப்பு மேக்கப் என்னவோ ஆயிரத்தில் ஒருவன் படத்தில்  கார்த்திக்கு கருப்பு மேக்கப் போட்ட மாதிரி அன்னியமாக தோன்றுகிறது. தமிழர்கள் என்றால் கன்னங்கரேல் என்றிருப்பார்கள் என்ற வட இந்தியர்களின் பொது புத்தி ராஜி கதாபாத்திர கருப்பு நிற ஒப்பனையில் மட்டுமல்ல,ஈழ விடுதலைப் படையின் தலைவராக வருகிற பாஸ்கரன்,சென்னையில் துப்பறியும் அதிகாரியாக வருகிற முத்து,தமிழக கிராம மக்கள் என அனைத்து தமிழ் கதாபாத்திரமும் கறுப்பர்களாக வருகிறார்கள்.இதைப் பார்க்கும்போது தென்னிந்திய மக்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா? எங்களைபோய் நிறவெறியர்கள் என்கிறீர்களே என்ற பாஜக தலைவர் தருண் விஜய்யின் பேட்டிதான் நினைவுக்கு வந்தது.

போலவே தமிழ்நாடு என்றால் இட்லி வடைக்கும் பில்டர் காபிக்கும்  பிரசித்தம்,இந்தியை கண்மூடித்தனமாக எதிர்ப்பார்கள்,பிரதமருக்கு எதிராக கோ பேக் சொல்வார்கள் என்ற வட இந்தியர்களின் பொது புத்தி பல்வேறு கதாபாத்திர உரையாடலில் வசனமாக வருகிறது.

தென்னிந்திய சமூகத்தின்  இனவரைவியல் அறிச்சுவடி அறியாத முட்டாள்கள் படம் எடுத்தால் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டே மேல படம் பார்த்தால் ஒவ்வொரு எபிசோடிலும் அரசியல் குழப்பமும் வக்கிரமும் வெளிப்படுகிறது.புனைவையும் அபுனைவையும் மனம்போல போக்கில் குழப்பியடித்து எடுத்தான் விளைவே இது.

படத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பாஸ்கரனாக வருகிறார்,ராஜபக்சே ரணதுங்காவாக வருகிறார்.வேதாரண்யம் வேராரண்யம் ஆக வருகிறது,வட இலங்கையில் சீனா துறைமுகம் கட்ட முயற்சிக்கிறது.இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, இலங்கையில் சீனாவை நுழையவிடக் கூடாது என இந்திய அரசு முயற்சிக்கிறது.இதில் இந்தியாவுடன் பேரம் பேச ஈழப் போராளிகளை மீண்டும் இலங்கையிடம் ஒப்படைப்பது என்ற ரணதுங்கவின் பேரத்திற்கு இந்திய அரசு ஒப்புகிறது.

படத்தில் பிரதான சிக்கலே இதுதான். அதாவது இடங்களையும் கதாபாத்திரங்களும்,கொலை சம்பவங்களையும், தேசிய இன போராட்ட அரசியலையும்  வரலாற்றில் இருந்து அபுனைவாக எடுத்துக் கொள்கிறார்கள். அதே வேளையில் இந்தியப் பிரதமரை பாசு என்ற பெண் கதாபாத்திரமாக மாற்றியும், ராஜி என முன்னால் ஈழப் போராளி மூலமாக இந்தியப் பிரதமரை தற்கொலைபாணி  தாக்குதல் நடத்தி கொல்கிற ஒன்லைன் கதையையும்,புலம் பெயர்ந்த ஈழ அரசியல் தலைவர் தீபன் விடுதலைப் படையின் தலைவர் பாஸ்கரனை இந்திய அரசுக்கு காட்டிக் கொடுப்பதும்,தங்களது நோக்கத்திற்காக(பிரதமரைக் கொல்வதற்கு)தீவிரவாத இயக்கங்களுடன் கை கோர்ப்பது என இந்திய பெருமித கதைக்கு ஏற்ற புனைவாக மாற்றப்படுகிறது.கொலை சதியை நிறைவேற்ற ராஜி, சோதனை சாவடி அதிகாரியோடு உடல் உறவு கொள்வது போலவும்,ஈழ விடுதலை அமைப்பின் தலைவர் பாஸ்கரன் எப்போதும் ஒரு கோப்பை மதுவோடு இருப்பது போலவும் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றையும் புனைவையும் இணைக்கும் போது ஒரு படைப்பாளிக்கு தேவைப்படுகிற வரலாற்று பொறுப்புணர்வு பேமிலி மேன் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் அறவே இல்லை என்பதே படத்தின் பிரதானமான பிரச்சனை. தென்னிந்திய மக்கள் மீதான வட இந்தியர்களின் நிறவெறிக் கண்ணோட்டமும் இதோடு சேர்ந்துகொள்கிறது.

படத்தில் ராஜி கதாபத்திரத்தை மனச்சிதைவு கொண்ட ஒரு பெண்ணின் பழிவாங்கல் செயல்பாடாகவும், விடுதலை அமைப்பின் தலைவர், தங்களது நோக்கங்களுக்கு இளைஞர்களை மூளை சலவை செய்துவிட்டதாகவும்  வெளிப்படுத்துகிறார்கள்.சிங்கள ராணுவத்தால் தான் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதிற்கு எதிராக தனது தந்தையையும் சகோதரனையும் இலங்கை ராணுவம் படுகொலை செய்ததற்கான பழிதீர்த்தலே ஈழ விடுதலைப்  போராளிகளின் அரசியலாக இப்படத்தில் காட்டப்படுகிறது.

இந்த இடமானது தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை பின்னுக்கு தள்ளி போராளிகளின் சொந்த வாழ்க்கை மீதான கழிவிரக்கமாக மாற்றப்படுகிறது.இதுவே இப்படம் நெடுக செய்யப்படுகிற அயோக்கியத்தன அரசியல் ஆகும்.போலவே புலம் பெயர்ந்த ஈழ அரசியல் தலைவராக வருகிற  தீபனுக்கும் அவருடன் முரண்பட்ட போராளிகளின் தலைவர் பாஸ்கரனுக்கும் இடையிலான உரையாடல்கள் விடுதலைப் போராளிகளை  போர் வெறி பிடித்தவராக சித்தரிப்பவர்களாக காட்சிப்படுத்துகிறது.

The wind that shakes the barely என்ற கென் லோன்சின் படத்தை பேமிலி மேன் இயக்குனர் பார்க்க வேண்டும். இங்கிலாந்து ஆட்சியாளர்களுக்கு எதிரான அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பக்கங்களை அசலாக பதிவு செய்த படம் அது. அல்லது BATTEL OF ALGIERS ஆவது பார்க்க வேண்டும்.இது போல எண்ணற்ற வரலாற்றுப் படங்கள் வரலாற்று உண்மைகளை திரிக்காமல் மறைக்காமல் ஒடுக்கப்பட்ட இன மக்களின் நியாயங்களைப் பேசியது.

வரலாற்று அறிவு இல்லாமல் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் போலியான தேசிய பெருமிதத்திற்கு தீனி போடுகிற படைப்பாக தமிழ் ஈழ தேசிய இன விடுதலைப் போராட்டத்தைத் திரித்தும் மறைத்தும் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கிற படைப்பாக பேமிலி மேன் சீசன் உள்ளது. இதனது அடுத்து சீசனும் வடகிழக்கு மக்களின் அரசியல் பண்பாடு மொழி இன வேற்றுமைகளை இந்திய பெரியண்ணன் மனோபாவத்தில் வரவுள்ளதை மூன்றாம் சீசனுக்கான டீசரே கூறுகிறது.

-அருண் நெடுஞ்செழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW