மே 26 கருப்பு தினம் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டத்திற்கு எதிராக 6 மாதங்களாக போராடும் விவசாயிகள் – தீர்த்து வைக்க இயலாத மோடி ஆட்சியின் 7 ஆண்டு நிறைவு நாள்

25 May 2021

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண்மைத் திருத்த சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி டில்லியை முற்றுகையிட்டு ஆறுமாத காலமாக இந்தியா முழுமைக்கும் இருக்கும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பில் லட்சக்கணக்கான விவசாயிகள் அன்றாடம் பசி, பட்டினி, மழை, மரணத்தோடு தங்களின் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் தொடங்கப்பட்டு மே 26ஆம் தேதியுடன் ஆறு மாதம் நிறைவு பெறுகிறது. அதேபோல், மோடி பிரதமராக பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த ஏழு ஆண்டுகளில் மோடி அரசானது தொழில்துறை வணிகம் அரசின் பொதுத் துறைகள் ரயில்வே எல்ஐசி வங்கிகள் மற்றும் ராணுவம்,சுரங்கம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் பெரும் முதலாளிகளுக்கும் அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் தாரைவார்த்து வருகிறது. இந்திய மக்களின் உழைப்பில் உருவான சொத்துக்களை அம்பானி அதானி கும்பலுக்கு கைமாற்றி மாற்றி வருகின்றது.

ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே ரேஷன் கார்டு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒற்றை மதம் என்று ஒற்றை இந்தியாவை உருவாக்கும் நோக்கில் பன்முக இந்தியாவின் பண்பாடு கலாச்சாரங்களை அழித்து வருகின்றது மோடி அரசு. காவி கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கான இந்து ராஜ்ஜியத்தை அமைக்க நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இந்திய மக்கள் போராடிப் பெற்ற தொழிலாளர் சட்டங்களையும் மத சிறுபான்மையினருக்கான சட்டங்களையும் மாநில உரிமைகளுக்கான சட்டங்களையும் சமூகநீதி சார்ந்த சட்டங்களையும் கல்வி உரிமை சார்ந்த சட்டங்களையும் காலில் போட்டு மிதித்து ஒற்றை இந்தியாவை கட்டியமைக்க தனது இந்துத்துவ பாசிச சங்பரிவார் அரசியலை இந்தியா முழுக்க திணித்து வருகிறது மோடி அரசு.

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவளித்து வரும், வேலை வாய்ப்புகளை அளித்துவரும், பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்துவரும் விவசாயத்தை இந்திய விவசாயிகளின் கையிலிருந்து பிடுங்கி தனியார் பெரும்முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்கு தாரை வார்க்கும் சட்டத்தை உருவாக்கியுள்ளனர். அந்த சட்டம்தான் மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண்மை திருத்தச் சட்டங்கள் ஆகும். இந்த சட்டம் பல ஆண்டுகளாக பல விவசாயிகளின் உயிரைக்கொடுத்து போராடி பெற்ற இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான முனைப்பில் மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது. விவசாயிகள் போராடிப்பெற்ற அத்தியாவசிய விலைவாசி தடுப்புச்சட்டம் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் பதுக்கல் தடுப்புச் சட்டம் போன்றவற்றையும் முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றி வருகின்றது.

இந்த சட்டங்களுக்கு எதிராக, இந்தியா முழுமைக்கும் உள்ள விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து 6 மாதகாலமாக தில்லியை முற்றுகையிட்டு உயிரைப் பணையம் வைத்து நூற்றுக்கணக்கான விவசாயிகளின் உயிர்த் தியாகத்தில் அறவழியில் போராட்டம் நடைபெற்று வருகிறது

விவசாயிகள் பிரதிநிதிகளோடு மத்திய அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பதற்கு மாறாக அரசு எடுத்த முடிவை விவசாயிகள் மீது நிர்ப்பந்தமாக திணிப்பதற்கும் விவசாயிகள் சங்கங்களை பிரித்து எட்டப்பன் வேலை பார்ப்பதற்கும் பேச்சுவார்த்தைகளை பயன்படுத்தி மோசடியான உத்திகளை மோடி அரசு கையாண்டது.

இறுதியில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்காத காரணத்தால் இன்று வரை போராட்டம் நடைபெற்று வருகிறது.

மோடி பிரதமராக பதவியேற்று மே 26ஆம் தேதியுடன் ஏழு ஆண்டு நிறைவு பெறுகிறது. விவசாயிகள் போராட்டமும் மே 26ஆம் தேதியுடன் 6 மாதம் நிறைவு பெறுகிறது. எனவே மே 26ஆம் தேதியை கருப்பு நாளாக அறிவித்து அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை ஏற்று விவசாயிகளும் தொழிலாளர்களும் வணிகர்களும் பொதுமக்களும் இந்திய நாட்டின் மீதும் விவசாயத்தின் மீதும் அக்கறை கொண்ட அனைவரும் மே 26-ஆம் தேதி கருப்பு நாளாக கடைபிடிக்க தமிழ்நாடு உழவர் சங்கம் அறைகூவல் விடுக்கின்றது. கொரானா நோய்த்தொற்று கடுமையாக உள்ள காரணத்தால் மக்கள் திரளாக ஒன்றுகூடி அரசுக்கு தங்கள் எதிர்ப்பைக் காட்ட முடியாத ஒரு அவலமான சூழல் நிலவுகிறது. எனவே, மக்கள் தங்களின் வீடு, கடை இதர கட்டிடங்கள், வாகனங்கள் அனைத்திலும் கருப்புக்கொடி ஏற்றி மோடி அரசுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பைக் காட்டவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும் முழுவதுமாக திரும்பப் பெறும்வரை விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு தமிழ்நாடு உழவர் சங்கம் அனைத்து தரப்பு மக்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறது.

 

-விநாயகம், தமிழ்நாடு உழவர் சங்கம்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW