தனி நபர் வழிபாட்டு அரசியல், இந்தியாவை வாழும் நரகமாக மாற்றியது எப்படி?

30 Apr 2021

“வலிமையான பிரதமர்” மோடி என்ற பிம்பத்தை கரோனா இரண்டாம் அலை தாக்குதல் அம்பலப்படுத்திவிட்டது. இந்தியாவில் தொற்று பாதிப்பு நான்கு லட்சத்தை தொடுகிற நிலையில் ஆளும் அரசு செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. தேசமே ஆக்சிஜன் பற்றாகுறையாலும் தடுப்பூசி பற்றாக்குறையாலும் தவிப்பதற்கு யார் பொறுப்பாளிகள்?தேசத்தின் தலைநகரில் இரவுபகலாக பிணங்கள் எரிந்துவருகிற நிலையில் நாட்டின் தேசிய பேரிடர் ஆணையமும் அமைச்சகமும் எங்கே போய்த் தொலைந்தது?காலனிய ஆட்சி காலத்திலயே இந்தியாவில் நிறுவப்பட்ட அரசு நிர்வாக கட்டமைப்பு எங்கே போனது?

2014 இல் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவிலே அரசு இயந்திரக் கட்டமைப்பு பிரதமர் அலுவலகத்திடம் அடமானம் வைக்கப்பட்டதிலிருந்து இந்த சிக்கல் தொடங்குகிறது.பிரதமர் அலுவலகத்தை மையமிட்ட அதிகார குவிப்பும் முடிவுகளும் பிற துறை ரீதியான அமைச்சக நிர்வாக செயல்பாடுகள் அனைத்தையும் முடக்கி அமைச்சகத்தை பல் பிடுங்கிய பாம்பாக்கின.

“வலிமையான பிரதமர்” எனும் பிம்பத்தை உருவாக்குவதன் பொருட்டு பிரதமரை மையப்படுத்திய முடிவெடுக்கிற அதிகார குவிப்பு முறையானது  சட்டப் படியான ஆட்சியும் நிர்வாக கட்டமைப்பு ரீதியான ஆட்சியையும் சீரழித்தது.இதன் விளைவாக ஓவ்வொரு முடிவுக்கும் பிரதமர் அலுவலகத்தை சார்ந்து கிடக்கிற அவல நிலைக்கு அமைச்சககங்களின் கரங்கள் வெட்டப்பட்டன.

தற்போதைய இரண்டாம் அலை தாக்குதலில் கூட அமைச்சகத்தின் செயல்பாடுகளை பின்னுக்குத் தள்ளி பிரதமரை முன்னிலைப்படுத்துகிற பிரதமர் மையவாத செயல்பாடுகளே தொடர்கின்றன.மோடி மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்,துறைச் செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்,மோடி தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களை சந்தித்து உற்பத்தியை பெருக்கச் சொன்னார்,மோடி ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களிடம் உற்பத்தி பெருக்கச் சொன்னார்,மாநில முதல்வர்களிடம் கரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூறுகிறார் என தனி ஒரு நபராக தேசத்தை பேரிடரலிருந்து காக்கிற போராளி சகிதத்திற்கு ஆளும் மோடி அரசு செத்த வீட்டிலும் பிணமாகிற இழி அரசியலை செய்து நாட்டு மக்களை ஏமாற்றுவதையே முழு நேர அரசியலாக செய்து வருகிறது.

துறைகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்கள், நீண்ட கால இலக்கின் அடிப்படையில் செயலாற்றுதல், துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளுடன் இணைந்த செயல்பாடுகள் இல்லாமல் போனால் பெரும் குழுப்பமும் பேரழிவுமே மிஞ்சும். தற்போது இதுதான் நடந்துகொண்டுள்ளது. தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு வெற்று ஆலோசனைகளை வழங்குவதிலும் மாநில முதல்வர்களுக்கு வெற்று அறிவுரைகள் வழங்குவதையுமே கடமையாக கருதிக் கொள்கிற பிரதமர் நாட்டின் குடிமக்களை காப்பதற்கு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை செய்ய விழைவதில்லை. இதையே, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில்  “பிரதமர் மோடி, நீங்கள் எந்த நோக்கமும் இல்லாமல் வேறுமென டிவியில் தோன்றுவதால் மட்டுமே வைரஸ் ஓடிவிடாது. அதுவுமில்லாமல் மாநில முதல்வர்களுக்குப் பாடம் எடுக்க நீங்கள் ஒன்றும் தலைமை ஆசிரியர் இல்லை. முதலில் மாநில அரசின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் பொறுப்புடன் செயல்படுங்கள்”என காட்டமாக விமர்சிக்கிறார்.

இந்திய குடியரசு வரலாற்றில் இதுவரை கண்டிராத பேரிடர் சூழலில் மோடியை மையப்படுத்திய தனி நபர் வழிபாட்டு ஆட்சி முறையானது கரோனா பேரிடர் இரண்டாம் கட்டப் பரவலில் இந்தியாவை வாழும் நரகமாக்கிவிட்டது.

  • கடந்த மார்ச் 24 ,2020  அன்று தொலைக்காட்சியில் தோன்றி ஊரடங்கை அறிவித்ததிலிருந்து பேரிடர் காலத்தில் தனது தனி நபர் ஆவர்த்தன நடனத்தை தொடங்கினார் மோடி. ஊரடங்கிற்கு அரசு இயந்திரம் தயாராவதற்கு வெறும் இரண்டு மணி நேரமே ஒதுக்கப்பட்டது.மோசமான திட்டமிடலுடன் அறிவிக்கப்பட இந்த ஊரடங்கு அறிவிப்பால் லட்ச்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளிகள் வரலாறு கண்டிராத நடை பயணத்தை தொடங்கினார்கள்.வழியிலேயே செத்து மடிந்தார்கள்.துறை சார்ந்த அதிகாரிகளின் அனுபவ அறிவின் ஆலோசனைகளைப் பெறாமல் வெற்று முட்டாள்தன அறிவிப்பை மேற்கொண்டு மக்களை சாகடிப்பதே பிரதமர் அலுவலகத்தின் பாணியாக இருந்தது. கடந்த நவம்பர் 8,2018 இல் செல்லாப்பணம் அறிவிப்பின் போதும் இப்படித்தான் தொலைக்காட்சியில் தோன்றி இரவுமுதல் 500,1000 செல்லாது என அறிவித்தார். அதன் பின் நடந்த கொடுமைகளை நாடறியும்.
  • அடுத்து ஏப்ரல் 3, 2020 இல் தொலைக்கட்சியில் தோன்றி கரோனாவை வெல்ல விளக்கணைத்து சத்தம் எழுப்பவேண்டும் என நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.இதன்பின் நடந்த கோமாளிக் கூத்துகளை இங்கே விவரிக்கப்போவதில்லை!கோ கொரொனோ கோ முழக்கம் பிரபலமானது!
  • மார்ச் 23 இல் ,மாஹபாரத போரில் வெல்வதற்கு பாண்டவர்களுக்கு பதினெட்டு நாட்கள் தேவைப்பட்டது நானோ கரோனா எனும் அரக்கனை வெல்வதற்கு வெறும் 21  நாட்களே எடுத்துக் கொண்டேன் என்றார் பிரதமர் மோடி.
  • இந்தாண்டு தொடக்கத்தில் தொற்று பரவல் வீதம் குறைந்திருந்த நிலையில், ஜனவரி 17,2021 அன்று பெரும் பேரழிவிலிருந்து மக்களை மோடி காப்பாற்றி விட்டார் என புகழ்ந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா .
  • பிப்ரவரி 16, 2021 அன்று “கரோனாவிற்கு எதிரான போரில் இந்தியாவின் வெற்றிகாரமான போராட்டமானது ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது” என மோடி வெற்றி அறிவிப்பு விடுக்கிறார்.
  • மோடிஜியின் ஆட்சியிலே புதிய இந்தியாவானது பேரிடரையும்  பொருளாதார வாய்ப்புகளாக மாற்றுமென்றும்  தடங்கல்களையும் வாய்ப்புகளாக மாற்றும் வல்லமை கொண்டது என மோடியை மீண்டும் உச்சி முகர்ந்தார் அமித்ஷா.

கரோனா இரண்டாம் கட்ட அலை வாய்ப்பை முற்றிலும் மறக்கும் படியான வகையில் இயல்பு நிலை திரும்பியதாக ஆட்சியாளர்கள் மேற்கொண்ட இந்த அறிவிப்புகள் இன்றைய நிலைமைக்கு  போட்ட வித்தாகும். ஆட்சியாளர்களின் இந்த அதீத வெற்றிக் களிப்புவாதம்,பெரும் மக்கள் கூடுகை நிகழ்வுகளுக்கு கதவை திறந்தது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்ட தேர்தல் உட்பட ஆறு மாநில சட்டமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தற்போது இரண்டாம் அலை தாக்குதலில் மேற்கு வங்கம்,தமிழகம்,கேரளா பாதிப்பை எதிர்கொள்வதற்கு தேர்தல் பிரச்சாரமும் முக்கிய காரணியாகிவிட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது பேசிய நீதிபதிகள் “தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது போதுமான கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் தவறி விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை” என கடுமையாக விமர்சித்தனர்.

  • மேற்கு வங்க பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியோ “என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கூட்டத்தை எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் பார்த்ததில்லை” என்றார்.
  • நாட்டின் சுகாதார வல்லுனர்களின் எச்சரிக்கைகளை புறம்தள்ளிய மோடி,ஏப்ரல் 5 முடிய 23 பேரணி பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசியுள்ளார்.
  • நாட்டின் இரண்டாம் அலை வாய்ப்புள்ளது எனவும் உயிர் காக்கும் உபகரணங்களின் இருப்பை அதிகரித்து வைத்துக் கொள்ளவேண்டும்,தடுப்பூசி திட்டத்தை இன்னும் வேகமாக விரிவாக நடைமுறைப் படுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரி 17 இல் பராளுமன்ற குழு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
  • இதுபோதாததற்கு கடந்த ஜனவரி 14 இல் தொடங்கி மூன்று மாதத்திற்கு நடைபெற்ற கும்பமேளாவில் 5 கோடி பேர் பங்கேற்ற நிகழ்வும் நடைபெற்றன.

கரோனா தொற்றுப் பிடியில் இருந்து முழுவதும் வெளிவருவதற்கு முன்பாகவே வெற்றி பெற்றதாக ஆட்சியாளர்கள் அறிவித்ததும் ஒரு அரசு நிர்வாகத்தை/இயந்திரத்தை, தனி மனித வழிப்பாட்டு அரசாக, பிரதமர் அலுவலகத்தில் அதிகாரத்தை குவித்தது போன்றவற்றின் விளைவுதான்  தற்போது தேசமே சுடுகாடாக மாறியதற்கு காரணமாக மாறியுள்ளது.

கரோனோ தொற்றால் மரணமுற்ற பிணக்குவியல் மத்தியிலே தற்போது பிரதமர் மீண்டும் தொலைகாட்சியில் தோன்றுகிறார். கரோனாவின் இரண்டாவது அலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஆவேசாமாக முதல்வரிடத்தில் உரையாற்றத் தொடங்குகிறார்.தேவைப்பட்டால் மட்டும் ஊரடங்கு போடுங்கள் என கரிசனமுடன் ஆலோசனை வழங்குகிறார்!தடுப்பூசி நிறுவனங்களிடம் தடுப்பூசி திட்டத்தையும் மாநில அரசுகளிடம் கரோனா கட்டுப்பாடு பொறுப்புகளையும் விட்டு விட்டு மருந்து சந்தையும் அதிகாரமற்ற மாநில அரசும் மக்களை தொற்றிலிருந்து காத்து விடும் என்றெண்ணி  மோடி நாட்டு மக்களுக்கு சவக்குழி வெட்டி விட்டார்.

-அருண் நெடுஞ்செழியன்

குறிப்பு: THE WIRE இல் வெளிவந்த “How Cult Worship Drove Us Into Crisis” என்ற தலைப்பிலான கட்டுரையின் சாரம் இக்கட்டுரையில் பயன்படுத்துப்பட்டுள்ளது.

https://thewire.in/government/how-cult-worship-drove-us-into-crisis

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW