கொரோனா தடுப்பூசி நிறுவனங்களின் வணிகக் கொள்ளையும் மோடியால் நட்டாற்றில் விடப்பட்ட நாட்டு மக்களும்

27 Apr 2021

கொரோனா தடுப்பூசி போட்டோருக்கான டிஜிடல் ஒப்புகைச் சீட்டில் தனது படத்தை அச்சிடக் காட்டுகிற ஆர்வத்தையும் அக்கறையையும் நாட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதில் காட்டவில்லை என்பதே பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கிற விமர்சனமாக உள்ளது.

ஆனால் பிரதமர் மோடியோ செவிடன் காதில் ஊதிய சங்கு போல இதைப் பற்றியெல்லாம் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் மங்கி பாத்தில், மூச்சி பயிற்சி மேற்கொள்ள வேண்டுமென நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறுகிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ மேற்கு வங்காள தேர்தல் கவலையில் அமைச்சர் பொறுப்பை கைகழுவிவிட்டார். கொரோனா  வைரசுக்கான தடுப்பூசி திட்டத்தை தொடக்கம் முதலே தனது சொந்த சுய மோக பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வந்த பிரதமர் மோடி உள்நாட்டு தேவையை பொருட்படுத்தாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சொந்த நாட்டு மக்களை நோய்த் தொற்றுக்கு பலி கொடுத்தார். தற்போது தடுப்பூசி மருந்து நிறுவனங்கள், இஷ்டம் போல விலை வைத்து கொள்ளை லாபம் பெற  அனுமதி வழங்கி மக்களுக்கு சவப்பெட்டி அடிக்கிறார்.

மோடி அரசின் மோசமான தடுப்பூசி கொள்கை

அண்மையில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட  மூன்றாம் கட்ட தடுப்பூசி கொள்கையின்படி 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடலாம் என அறிவித்தது. ஆனால் இந்த மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை  மாநில அரசுகளே தங்களது சொந்த செலவில் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ள வேண்டுமென்றும் தடுப்பூசி நிறுவன முதலாளிகளின் குரல்களில் மத்திய அரசு பேசுகிறது. ஒரே நாடு ஒரே வரி என்ற பெயரில் மாநில வரி வருவாயையும் அபகரித்துக் கொண்டு மாநிலங்களுக்கு நிதி பற்றாக்குறையை ஏற்படுத்திய மத்திய அரசு தற்போது மாநில அரசுகள் சொந்தமாக விலை கொடுத்து தடுப்பூசி வாங்க வேண்டும் எனவும் அதுவும் தடுப்பூசி நிறுவனங்கள் விற்கிற விலையில் வாங்க வேண்டும் என ஆணையிடுகிறது.

ஏற்றத்தாழ்வு மிக்க இந்திய மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாடுகிற நாட்டில் தடுப்பூசி தயாரிக்கிற இரு கார்பரேட் நிறுவனங்களிடம் நாட்டு மக்களின் சுகாதார நலனை அடமானம் வைக்கிற கேடுகட்ட அரசு இதுவரை நாடு பார்த்திருக்காது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கு தடுபூச்சி செலுத்துகிற கடமையும் பொறுப்பும் அரசின் பொதுத்துறை சுகாதார கட்டமைப்பிற்கு உண்டு. மாறாக கார்பரேட் மருந்து நிறுவனங்களை சார்ந்து மாநில அரசுகள் இயங்க வேண்டிய கட்டாயத்திற்கு மோடி அரசு தள்ளுவது என்பது கார்பரேட் நலனுக்கு நாட்டு மக்களை அடமானம் வைப்பதற்கு சமமான தடுப்பூசி கொள்கை முடிவாகும்.

இதுவரை தடுப்பூசி வழங்கலை தனது சொந்த சுய மோக அரசியல் பிரச்சாரத்திற்கும் வெற்று விளம்பரத்திற்கும்  பயன்படுத்தி வந்த மோடி அரசு தற்போது இக்கட்டான இரண்டாம் அலை பேரிடர் காலத்திலும் இதயமற்ற அரசாக தடுப்பூசி விநியோகத்தை முற்றிலும் தனியார் கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டது.

தடுப்பூசி ஏற்றுமதி:

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் , பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிக்கும் வர்த்தக ரீதியாக உற்பத்தி தொடங்க  இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கரோனா வைரஸ் முதல்கட்ட தடுப்பூசி திட்டத்தில்  சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டத்தில்  60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 45 வயதுக்கு உட்பட்டோர்,நாள்பட்ட நோயாளிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி நிறுவனங்களின் ஒன்றான சீரம் நிறுவனம் மாதத்திற்கு நூறு மில்லியன் டோஸ்கள் தடுப்பூசி உற்பத்தி செய்ய உள்ளதாக உத்தரவாதம் கொடுத்தது.ஆனால் நடைமுறையில் ஐம்பது முதல் அறுபது மில்லியன் டோஸ்களே உற்பத்தி செய்தது.

இந்த நிலையில்தான் மத்திய மோடி அரசு வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. குறிப்பாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு பல லட்சம் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி முடிய இந்தியா 95 நாடுகளுக்கு 66.4 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டிலோ இரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 2 விழுக்காடுதான். 9 விழுக்காட்டினருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்தியாவின் மக்கள் தொகை எண்ணிக்கையை ஒப்பிடுகையில் தடுப்பூசி பயனாளர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பமாக உள்ளது.

தடுப்பூசி மருந்து உற்பத்திக்கும் தடுப்பூசி தேவைக்குமான இடைவெளி மிக அதிகமாக உள்ளதே தற்போதைய தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம்.தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களோ அமெரிக்க அரசு விதித்துள்ள புதிய பாதுகாப்பு சட்டத்தால் அமெரிக்காவில் இருந்து தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய இயலவில்லை எனவும் உற்பத்தியை பெருக்க நிதி வசதி இல்லை எனவும் காரணம் கூறுகிறது.  மோடி அரசோ மாநில அரசுகளை மருந்து நிறுவனங்களின் வாசற்படியில் தேவுடு காக்க வைக்கிறது.

ஒரு மக்கள் நல அரசாங்மானது  இந்நேரத்தில் என்னே செய்திருக்கு வேண்டும்.உள்நாட்டு தேவைக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசிகளை விநியோகத்திருக்க வேண்டும்.இரண்டாவது தடுப்பூசி நிறுவனங்களை உற்பத்தி செய்கிற பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி தொகுப்பை வழங்கி உற்பத்தியை முடிக்கிவிட்டிருக்க வேண்டும்.உதாரணமாக தடுப்பூசி தயாரிப்பிற்காக செங்கல்பட்டில் 100 ஏக்கர் பரப்பளவில், 350 கோடி ரூபாய் செலவில் இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் (ஹெச்.பி.எல்) தொடங்கப்பட்டது. ஆனால் இன்றுவரை இந்நிறுவனம் செயல்படாமல் உள்ளது.கார்பரேட் மருந்து நிறுவனங்களுக்கு வெண்ணையையும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுண்ணாம்பையுமே மோடி அரசு தடவுகிறது.தற்சார்பு இந்தியா என்ற ஏமாற்று பித்தலாட்ட  முழக்கம் வேறு!

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேசன்- தடுப்பூசி மட்டும் மூன்று விலையில்

தற்போது அறிவித்துள்ள மூன்றாம் கட்ட தடுப்பூசி கொள்கையின்படி கரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் 50 சதவீத உற்பத்தியை மத்திய அரசுக்கும், மீதமுள்ள 50 சதவீதத்தை மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கும் வழங்குமாறு கூறியுள்ளது.எந்த விலையில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க வேண்டும் என மத்திய அரசு கூறவில்லை.அல்லது முதலிரண்டு கட்டத்தில் மத்திய அரசுக்கு வழங்கிய 150 ரூபாய்க்கே தற்போது மாநில அரசுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு தடுப்பூசி வழங்கவேண்டும் என அறிவிறுத்தாமல் கள்ள மௌனம் காத்தது.

மத்திய அரசின் அறிவிப்பையும் மௌனத்தையும் முன்னரே எதிர்ப்பார்த்திருந்த மருந்து உற்பத்தியாளர்கள், இஷ்டம்போல தடுப்பூசி மருந்தின் விலையை ஏற்றி அறிவித்தன. கோவேக்சின் தடுப்பூசி ஒரு டோஸ், மத்திய அரசிற்கு ரூ.150 க்கும் மாநிலங்களுக்கு ரூ.600க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் ரூ.1,200 க்கும் வழங்கப்படும் என்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசிற்கு ரூ.150 க்கும் மாநிலங்களுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 விலையில் வழங்கப்படும் என மருந்து நிறுவனங்கள் விலைகளை அறிவித்தன. பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி மருந்து நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதற்கு துணை போகிற மத்திய அரசுதான் தற்போது  மக்கள் வரிப்பணத்தில் இருந்து  ரூ.4,500 கோடி ரூபாயை உற்பத்தி பெருக்குவதற்காக தடுப்பூசி நிறுவனங்களுக்கு வாரி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது

சந்தையின் கோரப் பிடியில் உயிர்காக்கும் தடுப்பூசிகள், செய்வதறியாத மாநில அரசுகள்

உயிர்காக்கும் தடுப்பூசி  இன்று கார்பரேட் நிறுவனங்களின் ஊக வணிக சரக்காக மாறிவிட்டது.சந்தையே இன்று தடுப்பூசி பயனீட்டாளர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது.அரசுக்கு தடுப்பூசி செலுத்துவதில் எந்த இலக்கும் இல்லை.விருப்பம் இருந்தால் காசு கொடுத்து ஊசி போட்டுக்கொள்ளுங்கள் இல்லையா தொற்று வந்து சாவுங்கள் என்பதுதான் இதன் அர்த்தம்.

தடுப்பூசி தட்டுப்பாட்டையும் விநியோகத்தையும் இனி மருந்து சந்தையே தீர்மானித்துக் கொள்ளும் என மோடி அரசு மக்களை நட்டாற்றில் விட்டு விட்டது. சந்தையின் கட்டுப்பாட்டில் தடுப்பூசி சென்றுவிட்டதால் மாநில அரசுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி பிரதமர் மோடிக்குக் எழுதியுள்ள கடிதத்தில் “தடுப்பூசிகள், உற்பத்தியாளர்கள் முன்கூட்டியே நிர்ணயித்த விலையில்தான் மாநில அரசுகளால் வாங்கப்படுகின்றன. இந்த விலையானது மத்திய அரசால் தடுப்பூசி விநியோகத்துக்கு வழங்கப்பட்டுள்ள விலையில் இருந்து மாறுபட்டதாக உள்ளது.சில தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மாநில அரசுகளுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. மாநில அரசுகள் கடும் நிதிச்சுமையை சந்தித்து வரும் சூழலில், இந்த மாறுபட்ட விலை முறையானது முற்றிலும் நியாயமற்றதாகும். மத்திய அரசைவிட மாநில அரசுகளின் நிதி ஆதாரம் குறைவாக உள்ள நிலையில் இது அநீதியானதாகும்”எனக் கூறியுள்ளார்.

இதைபோல பல மாநிலங்களும் கடும் நிதிச்சுமையால் அதிக விலை கொடுத்து தடுப்பூசி வாங்க இயலாத நிலை உள்ளது. பிரதமர் மோடியோ இதுகுறித்தெல்லாம் கொஞ்சம் அக்கறை கொள்ளாமல் எழவு வீட்டிலும் பிணமாக இருக்க வேண்டும் என்பதுபோல தனது புகைப்படத்தை மருந்து ஒப்புகைசீட்டில் அடிப்பதிலேயே குறியாக உள்ளார்.

புதிய இந்தியாவில் சுடுகாடுகள் ஓயாமால் இரவு பகலாக எரிகிறது.

நவீன நீரோ மன்னன் வெண்தாடியோடு பிடில் வாசிக்கிறான்.

 

-அருண் நெடுஞ்செழியன்

ஆதாரம்:

  1. Undermining “vaccination for all”-Biswajit dhar& K.M Gopakumar
  2. https://www.vikatan.com/government-and-politics/politics/corona-vaccine-modi-government-aide-to-rob-private-companies-is-thirumavalavans-accusation-correct
  3. https://www.hindutamil.in/news/tamilnadu/663811-i-request-the-government-of-india-to-kindly-procure-and-supply-the-entire-required-quantity-of-vaccine-for-administering-all-groups-including-those-in-the-age-group-of-18-45.html

 

 

RELATED POST
1 comments
  1. மத்திய அரசு பன்னாட்டு சந்தையில் போட்டி போடக்கூடிய இந்தியாவில் உள்ள இரண்டு மருந்து கம்பெனிகளுக்கு மட்டும் தடுப்பூசி மருந்து செய்ய அனுமதித்துள்ளது
    குறிப்பாக தமிழகத்தில் கோத்தகிரியில் 1907 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தடுப்பூசி தயாரிப்பு அரசுக்கான நிறுவனம் இதை தயாரிக்க தயாராக உள்ளது அதற்கு மைய அரசு அனுமதி அளிக்கவில்லை இதிலிருந்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மோடி அரசு முழு கையாளாக செயல்படுகிறது என்பது தெரிகிறது

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW