தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக!

26 Feb 2021

நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் அவ்வாறே தீர்மானம் நிறைவேற்ற வழிவகுத்திடுக!

தமிழக, இந்திய அரசுகளுக்கு ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கோரிக்கை

ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் பிப்ரவரி 22 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. மார்ச் 23இல் கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

சிறிலங்காவில் அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகள், சமய அமைப்புகள், சிவில் சமூகம், குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் ஆகியவை இணைந்து சனவரி 15ஆம் நாள் உறுப்பரசுகளுக்கு எழுதிய கூட்டு மடலில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. சிறிலங்கா செய்த இன அழிப்புக் குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், போர்க்குற்றங்கள் மீதான புலனாய்வு செய்வதற்கு உள்நாட்டுப் புலனாய்வை ஏற்க முடியாதென்று அறிவித்து, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்ய புதிய தீர்மானமொன்றை உறுப்பரசுகள் நிறைவேற்ற  வேண்டும் என்று முன்வைத்துள்ள கோரிக்கை முதன்மையானது.

சிறிலங்கா அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரி பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 7 வரை ஈழத்தில் நடந்த, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் பெருந்திரளாய்த் தமிழர்கள் கலந்துகொண்டனர். கடும் மழையும் படையினரின் கொடும் அச்சுறுத்தலும் பேரணியில் மக்கள் பங்கேற்பதைத் தடுத்து நிறுத்த இயலவில்லை. வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்பதையும் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையின் இன்றியமையாமையையும் மலையகத் தமிழரோடு தோழமை கொள்ளும் கடப்பாட்டையும் எடுத்தியம்புவது போன்று மக்களது பங்கேற்பும் எழுச்சியும் அமைந்திருந்தன.

2015ஆம் ஆண்டு உலகமெங்கும் 15 இலட்சத்துக்கு மேற்பட்டோர் (சிறிலங்காவில் 70 ஆயிரம் பேர்) ’சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புக!’ என்னும் விண்ணப்பத்தில் கையொப்பமிட்டனர். இப்போது கனடாவிலும் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி ஒரு இலட்சம் தமிழரின் கையொப்பம் பெறும் இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஈழத்தில் வெடித்த தமிழர் எழுச்சி புலத்திலும் பரவத் தொடங்கியுள்ளது. இவை மட்டுமின்றி, இனவழிப்புக்கு நீதி பெற பன்னாட்டுப் புலனாய்வு நடத்த வேண்டும் என்று 8 கோடித் தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழக சட்டப்பேரவையில் 2013ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான இந்த 12 ஆண்டுகளில் முதல்முறையாக, மாந்தவுரிமைகளுக்கான ஐநா உயராணையர் ஒருவர் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்துவதை தவிர பொறுப்புக் கூறலுக்கு வேறு வழியில்லை என்ற முடிவை வந்தடைந்துள்ளார். இப்போதைய ஆணையர் மிசேல் பசலே 2021 சனவரி 27 நாளிட்ட A/HRC/46/20 அறிக்கையில்  சிறிலங்கா நிலைமை குறித்து வெளியிட்ட அழுத்தந் திருத்தமான அறிக்கையில் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் என்ற பகுதியில், ”இருமுறை உள்நாட்டுப் பொறுப்புக்கூறலுக்கும் மீளிணக்க முன்முயற்சிகளுக்கும் மாந்தவுரிமைப் பேரவை இசைவு தெரிவித்திருந்த போதும், பன்னாட்டுக் குற்றங்களுக்கும் மோசமான மாந்தவுரிமை மீறல்களுக்கும் பொறுப்புக்கூறுவதற்கான பொருள்பொதிந்த பாதையில் செல்வதில் தம்முடைய இயலாமையையும் விருப்பமின்மையையும் காட்டிக்கொண்டது சிறிலங்கா. மூன்று முக்கியக் காரணங்களுக்காக மாந்தவுரிமைப் பேரவை மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முக்கியமாகும். இப்போது சிறிலங்காவில் நிலவிவரும் போக்குகள் பாதிக்கப்பட்டோருக்குப் பேரழிவு ஏற்படுத்தி வருகின்றன; பொறுப்புக்கூறலிலும் மீளிணக்கத்திலும் முன்னேற்றம் காண்பதில் தோல்வியானது, மாந்தவுரிமை மீறல்களுக்கும் எதிர்காலப் பூசல்களுக்குமான. விதைகளைக் கொண்டுள்ளது;  இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போக்குகள் மாந்தவுரிமைப் பேரவை உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகளுக்கு பன்னாட்டுச் சட்டமீறல்கள் நேராமல் தடுக்கும் தம் கடமையை நிறைவேற்றுவதில்  மீண்டுமொரு முக்கியமான இடர்ப்பாட்டை ஏற்படுத்தியுள்ளன. பன்னாட்டுக் குமுகம் விட்ட பிழைகளை மீண்டும் விடக் கூடாது என்று மிசேல் கவலை தெரிவிக்கிறார். மேலும், 59ஆவது பத்தியில், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா நிலைமையைப் பரிந்துரைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு சேர்த்து, அனைத்தளாவிய அல்லது எல்லைக்கடந்த மேலுரிமை அல்லது அதிகார வரம்புக்கான (extraterritorial or Universal Jurisdiction) கோட்பாடுகளின் அடிப்படையில், உறுப்பரசுகள் தமது நாட்டில் சிறிலங்காவில் பன்னாட்டுக் குற்றங்கள் செய்த அனைத்துத் தரப்பினர் மீதும் உள்நாட்டுப் புலனாய்வு செய்ய முடியும்  என்றும் மோசமான மாந்தவுரிமை மீறல்களைச் செய்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிரான பயணத் தடைகள், சொத்து முடக்கம் குறித்து பரிசீலிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவை மட்டுமின்றி, குறிப்பாகக் கடந்த ஓராண்டில் மீளிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும், மாந்த உரிமைகளையும் பாதிக்கக்கூடிய போக்குகளான குடியியல், அரசுப் பணிகளைப் படைமயமாக்குவது, மாந்தவுரிமை மீறல்களுக்கும் குற்றங்களுக்கும் பொறுப்புக்கூறுவதற்கு ஏற்படுத்தப்படும் அரசியல் தடை, பெரும்பான்மைவாத மற்றும் ஒதுக்கி வைக்கும் சொல்லாட்சிகள் உள்ளிட்ட ஆறு போக்குகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

”உயராணையர் மிசேல் பசலேவின் இவ்வறிக்கை முக்கியத்துவமுடையது. ஏனெனில், மிசேலின் பின்புலம் அத்தகையது. அவர் இராணுவ ஆட்சியின் ஆய்வுக்கூடமாய்த் திகழ்ந்த சிலியின் முன்னாள் அதிபர், இலத்தீன் அமெரிக்கர், சனநாயகவாதி, சோசலிஸ்ட், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், முன்னாள் சிறைக்கைதி, சித்திரைவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இராணுவ தளபதியின் மகள், பெண். அவர், தான் எதைப் பற்றி பேசுகிறேன் என்பதை அறிந்து அதை உள்ளபடியே சொல்பவர்.” என்று சிங்களப் பெளத்தப் பேரினவாத ஆதரவு இராஜதந்திரி தயன் ஜெயதிலக கூறியிருப்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

அந்த அறிக்கையின் முடிவுகளுக்கும் பரிந்துரைகளுக்கும் சற்றும் தொடர்பில்லாத வகையில் கூட்டத் தொடரில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்திற்கான முதல் வரைவு பிப்ரவரி 19 அன்று வெளிவந்திருக்கிறது. ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையில் தாமே முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1, 40/1 தீர்மானங்களிலிருந்து பின்வாங்கிய சிறிலங்காவுக்கு ஒரு சிறிய கண்டனம்கூட இல்லை. உள்நாட்டுப் புலனாய்வுக்கு மறுப்பில்லை, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு பரிந்துரைக்கவில்லை. வடக்குகிழக்கில் உள்ள சாட்சியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அறிந்தேற்றிருப்பதற்கு அப்பால் இவ்வரைவுத் தீர்மானம் என்பது 2015இல் முன்வைக்கப்பட்ட 30/1 தீர்மானத்தைவிடவும் பின்தங்கியுள்ளது!

நெருப்பின் மீதமர்ந்திருப்பது போன்ற வலிமிகு 5 ஆண்டுகளை ஈழத் தமிழினம் கடந்து வந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விழைகிறோம். ஆணையரின் முடிவுகளையும் தமிழ்ப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளையும் ஈழத்திலும் அதற்கு வெளியேயும் வாழும் தமிழர்களின் விருப்பத்தையும் எழுச்சியையும் வரைவுத் தீர்மானம் புறந்தள்ளியிருப்பது புவிசார் அரசியலின் வழக்கமான அறம்சாராச் செயலே ஆகும்.  இந்த வரைவைக்கூட ஏற்க மறுப்பதன் மூலம் எவ்வித பொறுப்புக்கூறலுக்கும் சிறிலங்கா அணியமாயில்லை என்று அறிவித்துக்கொண்டிருப்பது வேறு கதை. ஆனால், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு சிறிலங்காவை நிறுத்தச் சொல்லாத எந்தத் தீர்மானத்தையும் தமிழர்கள் ஏற்க இயலவே இயலாது.

ஐ.நா. உயராணையர் சிறிலங்கா தொடர்பில் வந்தடைந்துள்ள முடிவுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு சிறிலங்காவை நிறுத்த வேண்டும். தமிழக அரசுக்கும் நடுவண் அரசுக்கும் தமிழீழ ஆதரவு ஆற்றல்களுக்கும் பின்வரும் கோரிக்கைகளை ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக முன்வைக்கிறோம்.

தமிழக அரசே!

அமைச்சரவையின் வழியாகவோ அன்றி சட்டப்பேரவையைக் கூட்டியோ அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா விவகாரத்தைக் கொண்டு செல்வது, இன அழிப்புக்கு ஈடுசெய் நீதியை உறுதிசெய்யும் நோக்கத்தில் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண்பது ஆகியவற்றை வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானம் இயற்ற இந்திய அரசு செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுக!.

மேற்படித் தீர்மானத்தை தமிழக அரசே! ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் உறுப்பரசுகளுக்கும் அனுப்பி வைத்திடுக!.

இந்திய அரசே!

இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது இன அழிப்பு என்றும் குற்றவியல் நீதிக்கு அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்தவும் ஈடுசெய் நீதிக்குப் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானம் ஒன்றை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிடுக!

இந்தத் தீர்மானத்தை இந்திய அரசே! ஐ.நா.வுக்குக்  கொண்டுசெல்க!

தமிழீழ ஆதரவு ஆற்றல்களே!

இராசபக்சேக்கள் ஆட்சியில் இருக்கும் நிலையில் அங்கே தமிழர்கள் மீண்டும் கொலை நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். மீண்டுமொரு பேரழிவு நேராமல் ஈழத் தமிழரைப் பாதுகாக்கும் கடப்பாடு ஐ.நா.வுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் உண்டென்று அறிந்தேற்று தமிழீழ ஆதரவு ஆற்றல்கள் போராட முன்வர வேண்டும்.

 தோழமையுடன்,

 

கொளத்தூர் தா.செ.மணி,   ஒருங்கிணைப்பாளர், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

கு.இராமகிருஷ்ணன், பொதுச்செயலாலர், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்.

பெ.மணியரசன், தலைவர், தமிழ்த்தேசிய பேரியக்கம்.

தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

தொடர்புக்கு: 99433 59666

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW