ஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன?

24 Feb 2021

2021 – மீண்டுமொரு மார்ச் மாதத்தின் வருகையால் ஐ.நா. மனித உரிமைப் பேரவை இருக்கும் ஜெனிவாவை நோக்கி ஈழ ஆதரவாளர்கள் கண்ணிமைக்காமல் பார்த்து வருகின்றனர். ஐநா மனிதவுரிமை ஆணையர் மிசேல் பசலேவின் அறிக்கைக்கும் இப்போது வெளிவந்திருக்கும் வரைவுத் தீர்மானத்திற்கும் திட்டவட்டமான இடைவெளி இருக்கிறது. முன்னது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்தச் சொல்கிறது. பின்னது சிறிலங்காவை மனிதவுரிமை ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறது.

ஏன் இந்த முரண்பாடு? ஐ.நா. என்றால் என்ன? அதன் வேர்கள் வரலாற்றில் எங்கிருந்து தொடங்குகின்றன? இதைப் புரிந்து கொண்டு உட்செறித்து வினையாற்றினால் விடிவை நோக்கிச் செல்ல முடியும். இப்பொருளில் இரு முனையைச் சேர்ந்தோர் தமிழ்த் தரப்பில் உள்ளனர்.

இரு முனையைச் சேர்ந்தோர் உள்ளனர் –

  1. ஐ.நா. மன்றம் அரசுகளின் மன்றம், நமக்கு ஆதரவாக எந்த அரசும் இல்லை. ஐ.நா. வை நம்பக் கூடாது.
  2. ஐ.நா. மன்றத்திற்கென்று  தனி மூளை, தீர்மானம் எடுக்கும் வாய்ப்பு உண்டு. சர்வதேச சமூகத்திற்கென்று மனசாட்சி உண்டு. ஐ.நா.வை நம்பியே முன்னேறிவிட முடியும்

ஆனால், இவ்விரண்டு இடது – வலது விலகல்களுக்கு அப்பால், ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான பல்வேறு களங்களில் ஒன்றாக ஐ.நா.வை பாவிப்பது எப்படி என்பதுதான் நம்முன் உள்ள இடர்பாடு..

ஐ.நா. வின் வேர்கள், கிபி 1648 இல் இன்றைய ஜெர்மனியில் உள்ள வெஸ்ட்பாலியா நகரில் போடப்பட்ட அமைதி உடன்படிக்கையில் ( Treaty of Westphalia)  உள்ளன. 30 ஆண்டுகாலப் போரை முடிவுக்கு கொண்டுவந்த உடன்படிக்கை அது. புனித ரோமானியப் பேரரசும் ஜெர்மன், ஸ்பெயின், நெதர்லாந்தில் உள்ள பற்பல சிற்றரசுகளும் போர் நிறுத்தத்திற்காக தம்மிடையே போட்டுக்கொண்ட உடன்படிக்கை.

அதுவரை காலமும் தர்மமாகவும் வீரமாகவும் வெற்றி வாகையாகவும் பார்க்கப்பட்ட நாடுபிடித்தல் வரலாற்றில் முதல் முறையாக ‘ஆக்கிரமிப்பு’’ என்று பார்க்கப்பட்டது. ஓர் அரசை இன்னொரு அரசு ஆக்கிரமிப்பது கூடாது. சிறியது – பெரியது என்ற வேறுபாடின்றி ஒவ்வோர் அரசுக்கும் இறைமை உண்டு. ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்கிரமிப்பது என்பது அந்நாட்டரசின் இறைமை மீறல் என்று முடிவுசெய்யப்பட்டது. இறைமை கொண்ட ஓர் அரசின் உள்நாட்டு விவகாரங்களில் வெளி சக்திகள் தலையிட முடியாது. மனித குல வரலாற்றில் ஆக்கிரப்பு, சுரண்டல், போர் வெறி ஆகியவற்றிற்கு எதிரான முக்கியமானப் பாய்ச்சல் இது. அமைதிக்கும் பெரியது சிறியது வேறுபாடின்றி நாடுகளுக்கு இடையேயான சக வாழ்வுக்குமான அடிப்படைகளைக் கொண்டுள்ளது என்பதும் மெய்தான்.

புதுமக் காலப் பன்னாட்டு உறவுகளுக்கான அடிப்படைகளை வெஸ்ட்பாலியன் அமைதி உடன்படிக்கையே வழங்கியுள்ளது. இதுவே இன்றைய அரசுகளுக்கு உரிய இறைமை, அரசுகளை மையமிட்ட உலக ஒழுங்கு ஆகியவற்றுக்கான கோட்பாட்டு அடித்தளமாகும்.

பின்னர், முதலாம் நெப்போலியன் போனபர்ட்டு தலைமையில் பிரெஞ்சு படை நடத்திய வாட்டர்லூ போரில் அவர் தோற்கடிக்கப்பட்ட பின் ஐரோப்பா அளவில் உள்ள நாடுகள் ஒன்றுகூடி அதிகாரச் சமவலுநிலையைப் பேணுவதன் மூலம் போர் நிறுத்தக் காலத்தை நீட்டிக்கும் இலக்குடன் 1814 இல் ஓர் உடன்படிக்கையை எட்டினர். அதுதான் வியன்னா மாநாட்டு உடன்படிக்கை( Vienna Convention). இதுவே ஐரோப்பிய கண்டம் தழுவிய அளவில் அரசுகளுக்கு இடையே எட்டப்பட்ட முதலாவது உடன்படிக்கையாகும். முன்பே குறிப்பிட்டது போல், வெஸ்ட்பாலியா உடன்படிக்கை உலக ஒழுங்குக்கான அடித்தளமென்றால் வியன்னா உடன்படிக்கை அந்த அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்ட தூண்களாகும்.

கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு ஐரோப்பா தழுவிய அளவில் போர் வெடிப்பதை இந்த ஒப்பந்தத்தால் தடுக்க முடிந்தது என்பதைக் கொண்டு இதன் பெறுமதியைப் புரிந்து கொள்ளலாம்.

1914 இல் முதலாம் உலகப் போர் வெடித்தது. அதன் முடிவில், 1919 இல் பாரீசில் உலக நாடுகள் சங்கம்(League of Nations) உருவாக்கப்பட்டது. உலகளாவிய அளவில் அரசுகள் ஒன்றுகூடி இப்படியொரு ஏற்பாட்டை செய்து கொள்வதற்கு வியன்னா மாநாட்டு உடன்படிக்கையே அடிப்படைகளை வழங்கியது. வெஸ்ட்பாலிய உடன்படிக்கையை அடித்தளமாக கொண்டு வியன்னா மாநாட்டு உடன்படிக்கையைத் தூண்களாக கொண்டு உலக நாடுகள் சங்கம்(League of Nations) உருவாக்கப்பட்ட போது இன்றைய உலக ஒழுங்குக்கான உத்திரங்கள் எழுப்பப்பட்டுவிட்டன.

பின்னர் 1939 இல் வெடித்த இரண்டாம் உலகப் போர் 1945 இல் முடிவுக்கு வந்தது. அதன் முடிவில் உலக நாடுகள் சங்கம் தன் பொருத்தப்பாட்டை இழந்து இன்றைய ஐக்கிய நாடுகள் சபைத் தோன்றியது. இப்படியாக, வெஸ்ட்பாலிய உடன்படிக்கையை அடித்தளமாக கொண்டு, வியன்னா மாநாட்டு உடன்படிக்கையைத் தூண்களாக கொண்டு, உலக நாடுகள் சங்கத்தின் அடிப்படைகளை உத்திரங்களாக கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றத்துடன் இன்றைய உலக ஒழுங்குக்கான மேற்கூரை வேயப்பட்டுவிட்டது.

வரலாற்றின் குகைக்குள் சென்று ஐ.நா. வின் வேர்களைத் தேடிப் பார்த்தவிடத்து புலப்படும் இருபெரும் உண்மைகள்

முதலாவது ஐக்கிய நாடுகள் சபை ஆங்கிலத்தில் United Nations என்ற சொற்றொடராய் இருப்பினும் அது அரசுகளை மையமிட்டது.  அரசுகளுக்கு இருக்கும் இறையாண்மையைப் புனித போப்பரசரும் மீறவியலாது என்பதை உள்ளடக்கமாக கொண்ட வெஸ்ட்பாலிய உடன்படிக்கையை அடிப்படையாக கொண்டது.

இரண்டாவது, சனநாயக நிறுவனங்கள், தேசியம், சோசலிசம் போன்றவை மட்டுமின்றி இன்றைய உலக ஒழுங்கை கட்டிப்போட்டுள்ள பன்னாட்டு உறவுகள், நெறிகளுக்கான மூலங்களும் ஐரோப்பாவிலேயே தங்கியுள்ளன. இன்றைய உலக வரலாற்றுப் பெரும்போக்கில் பன்னாட்டு உறவுகள் சார்ந்த நெடுஞ்சாலைகள் அனைத்தும் மேற்குலத்தினால் போடப்பட்டவையே ஆகும்.

ஐ.நா. தோன்றிய போது வெறும் 51 உறுப்பரசுகள் இருந்தன. இன்றைக்கும் 193 அரசுகள் உள்ளன. இவ்வுலகில் 2000 த்திற்கும் குறையாத பண்பாட்டு இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இறைமை மக்களுக்கு உரியது என்ற வகையில் இறைமை மேலே குறிப்பிட்ட பண்பாட்டு இனங்களுக்கு உரியது. இந்த 2000 த்திற்கும் மேற்பட்ட பண்பாட்டு இனங்களைப் பிரதிநிதித்துப்படுத்தி இருக்க வேண்டும் ஐ.நா.வில். அங்கம் வகிக்கும் 193 அரசுகள். ஆனால், அவை அப்படி பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. தேசிய இனங்களுக்கு உள்ள இறைமை அரசுகளுக்கு உள்ள இறைமை என்பதன் பெயரால் மீறப்படும் ஓர் உலக யதார்த்ததில் நாம் சிக்குண்டுள்ளோம்.

இறைமை தமக்கு வானத்தில் இருந்த் வந்ததாக கருதிக் கொண்டு அரசுகளை தம் வசமாக்கிக் கொண்டுள்ள ஆளும் வகுப்புகள் இறைமை என்ற கோட்பாட்டை எவ்வளவுக்கு தவறாகப் பயன்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு தவறாகப் பயன்படுத்துகின்றன.

அரசுகளின் இறைமைக் கோட்பாட்டை இன அழிப்பை நடத்துவதற்கு வழங்கப்பட்ட உரிமமாகப் பாவித்து, அந்த இறைமைக் கோட்பாட்டையே அந்த இன அழிப்புக் குற்றத்திலிருந்து தப்பித்து கொள்வதற்கான கவசமாக இலங்கை அரசு பாவித்துக் கொண்டிருப்பது எந்தளவுக்கு இறைமை கோட்பாட்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஐக்கிய நாடுகள் சபை அதன் உடனடிப் பொருளில் அரசுகளின் சபை. மெய்யான பொருளில் பாதுகாப்பு அவையில் வெட்டு அதிகாரத்துடன் ( Veto Power) கூடிய நிரந்தர உறுப்பு நாடுகளாய் இருக்கும் ஐந்து பேரரசுகளின் சபை. இவ்வைந்து பேரரசுகளில் ஒன்று முன்னெடுக்காமல் ஐ.நா.வில் எதுவும் உண்மையானப் பொருளில் தொடங்கப் போவதில்லை. ஐந்து அரசுகளும் உடன்படாமல் ஐநாவில் இருந்து எதுவும் செயலுக்கான தீர்மானமாக வெளிவரப்  போவதில்லை.

தெற்காசிய அளவில் எடுக்கப்படும் ஐ.நா. வின் முடிவுகளில் இந்திய அரசு ஒரு நிழல் பேரரசைப் போன்றது. 138 கோடி மக்கள் தொகையைக் கொண்ட மாபெரும் சந்தை, இந்திய பெருங்கடலில் உள்ள மிகப் பெரிய நாடு, இந்தியப் பெருங்கடலின் மையத்தில் இருக்கும் நாடு மற்றும் 4600 மைலுக்கு அதிகமான கடல் எல்லை ஆகிய காரணங்களுக்காக  இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் மறைமுக வெட்டு அதிகாரம் கொண்ட நாட்டைப் போன்றது.

1974 இல் சைப்ரசில் துருக்கியர்கள் இருப்பதன் பெயரால் துருக்கி தன் படையை இறக்கியது; 2015 இல் உக்ரைனின் பகுதியாக இருந்த கிரிமியாவில் ரசியர்கள் இருந்தன் பெயரால் ரசியா தன் படையை இறக்கி பொதுவாக்கெடுப்பு நடத்தி தன்னோடு இணைத்துக் கொண்டது. அதுபோல் இலங்கை தீவில் உள்ள ஈழத்தில் தமிழர்கள் இருப்பதால் எட்டு கோடித் தமிழர்களைக் கொண்ட நாடு இந்தியா என்ற வகையில் ஈழத் தமிழர் சிக்கலில் தலையிடுவதற்கும் தீர்மானிப்பதற்குமான புவிசார் அரசியல் யதார்த்தம் இன்றைக்கு உள்ளது. கூடவே இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஈழ ஏதிலியரையும் தன் தலையீட்டுக்கான தார்மீக காரணமாக பன்னாட்டரங்கில் சொல்ல முடியும். இந்திய அரசின் நிலைப்பாட்டை ஒட்டியே இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் குறைந்தது நூறு நாடுகள் தனது நிலைப்பாட்டினை எடுக்கும்.

ஐ.நா. வை அணுகுவதில் எப்படி இடது – வலது விலகல் காணப்படுகின்றதோ அது போலவே இந்திய அரசை அணுகுவதிலும் ஈழ விடுதலை ஆற்றல்களிடம் இடது – வலது விலகல்கள் காணப்படுகின்றன. ஒன்று, தானொரு அரசியல் அனாதை தம்மை தத்தெடுத்துக் கொள்ளுமாறு இந்திய அரசிடம் மன்றாடுவது என்ற  சரணாகதி நிலை. மற்றது,  இந்திய அரசுடனான முரண்பாட்டை சிங்கள பெளத்தப் பேரினவாத அரசுடனான முரண்பாட்டுடன் சமப்படுத்தி உடனடி பொருளில் இந்திய அரசைப்  பகை சக்தியாகப் பாவிப்பது என்ற இடது தீவிர நிலை.

இந்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நிலையெடுக்க வைப்பதில், தமிழ்நாட்டு தமிழர்கள் நீதியின் பாற்பட்டு முன்னெடுக்கும் போராட்டத்தின் அளவே ஈழத் தமிழ்த் தரப்பு இந்திய அரசிடம் மேற்கொள்ளும் உடன்படிக்கையில் விட்டுக்கொடுப்பின் அளவைத் தீர்மானிக்கக் கூடிய காரணியாக அமையும்.

ஐ.நா. அரசுகளின் பேரவை. இன்றைய உலகம் அரசுகளின் உலகம்.  ஏதாவது ஓர் அரசை ஈழத் தமிழரின் பக்கம் நிலையெடுக்க வைப்பதே பன்னாட்டு அரங்கில் தீர்மானகரமான முதல் அடியாகும். அதில் முதன்மையான அரசு இந்தியா. பின்னர், இங்கிலாந்து, பிரான்சு, கனடாவின்வழி அமெரிக்கா போன்ற அரசுகளையும் சாதகமான நிலையெடுக்க வைப்பதில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தம்மை ஓர் அரசியல் திரளாக்கிக் கொள்ள முயல வேண்டும்.

தாயகத்தில் வாழும் ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஏதிலியரும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஈழ விடுதலையின் பொருட்டான தமது ஆற்றல், வளங்கள், நகர்வுகள், போராட்டங்கள் அனைத்தும் இந்திய அரசை தமக்கு ஆதரவாகப் பன்னாட்டரங்கில் நிலையெடுக்க வைப்பதை நோக்கியே இருக்க வேண்டும்.

ஒற்றை வரியில் சொல்வதானால், இன்றைய அரசுகளின் உலகில் ஈழத்திற்கு வழித்தடம் யாதெனில் அது கிளிநொச்சி – சென்னை – புதுதில்லி – ஜெனிவா.

காலம் கருதி இடத்தாற் செயின், ஞாலம் கருதினுங் கைக்கூடும். – குறள் 484

 

-செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW