எசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி! – நமது இழிநிலை

22 Feb 2021

காரப்பரேட்களுக்கு ஆதரவான மூன்று வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி கடந்த 87     நாட்களாக தில்லி எல்லையையில் நின்றபடி உழவர்கள் வரலாற்றுப் புகழ்மிக்க போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள், கடுங்குளிரையும் உறைபணியையும் பொருட்படுத்தாது களங்கண்டு வருகிறார்கள். இதுவரை தற்கொலை செய்து கொண்டும் நோய் வாய்ப்பட்டும் போராட்டக் களத்தில் இன்னுயிர் நீத்த ஈக மறவர்கள் 283 பேர். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் என உழுகுடி காத்திருக்கிறது களத்தில். மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த ஆட்சியாளர்கள் மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இயற்கைதரும் வேதனைகளுக்கு அப்பால் பணக்கார உழவர்கள், காலிஸ்தானிகள், நக்சல்கள், அந்தோலன் ஜீவிகள்(போராட்ட பித்தர்கள்), முட்டாள்கள், வன்முறையாளர்கள், அனைத்துலக சதியால் தூண்டப்பட்டவர்கள், எதிர்க்கட்சிகளால் தூண்டிவிடப்பட்டவர்கள் என அன்றாடம் தங்களுக்கு சுமத்தப்படும் பட்டங்கள் அவர்கள் நெஞ்சையை ஈட்டியாய் துளைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த பொய்ப்புரட்டுகளை தவிடுபொடியாக்கி நாட்டு மக்களின் நல்லாதரவை இந்த நிமிடம் வரை தக்க வைத்துக் கொண்டிருப்பதில் மாபெரும் வெற்றிக் கண்டிருக்கிறது போராட்டக் குழு.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு உழவர் சங்கத்தின் பொறுப்பாளர்களும் தமிழ்த்தேச மக்கள் முன்னனியினரும் தில்லி செல்ல எண்ணியிருந்தனர். நேற்று(பிப் 21) இரவு 10 மணிக்கு தமிழ்நாடு விரைவு தொடர் வண்டி. தாம் செல்லவேண்டிய தொடர் வண்டியின் பெட்டியில் அமர்ந்திருக்கிறார்கள் தோழர்கள். சில க்யூ பிரிவு அதிகாரிகள், சில காக்கி உடை அணிந்த காவலர்கள் பெட்டியின் முன்பு நிற்கிறார்கள். உள்ளே வந்து, ”நீங்கள் தானே தெய்வம்மாள், அய்யா, இருக்கை 21 இல் அமர்ந்திருக்கும் நீங்கள்தானே தங்கபாண்டி நீங்கள் பெட்டியில் இருந்து இறங்குங்கள்” என்கின்றார்கள். ’என்ன காரணம்? ஏன்?’ என்று கேட்டால் பதில் இல்லை.

பைகளை காவலரே எடுக்கின்றனர். நான்கு தோழர்களும் பெட்டியில் இருந்து கீழே இறக்கப்படுகின்றனர். ’பை திருட வந்தவர்கள்’ என்று பயணிகளிடம் சொல்கின்றனர் காக்கிச் சட்டைக்காரர்கள். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மோடியை சாடி, எடப்பாடியை அம்பலப்படுத்தி தோழர்கள் முழக்கமிடத் தொடங்குகின்றனர். அப்போதுகூட எந்தளவுக்கு பயணிகளுக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. இழுத்துவரப்பட்ட தோழர்கள் சற்று நேரம் பயணிகள் தங்குமிடத்தில் அடைக்கப்பட்டு அவர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு தமிழ்நாடு விரைவு தொடர் வண்டி புறப்பட்ட பிறகு, ”நீங்கள் செல்லலாம்” என்று சொல்லியுள்ளனர். இதுமட்டுமல்ல, ”தமிழ்நாட்டில் இருந்து போகாமல் ஆந்திராவில் இருந்து அல்லது கேரளாவில் இருந்து நீங்கள் போகலாமே” என்று சொல்லியுள்ளார்கள் காவலர்கள். அநேகமாக, இது பூக்கடை காவல் நிலைய காவலர்களாக இருக்க வேண்டும். க்யூ பிரிவின் கட்டளைக்கு இணங்க செயலாற்றியுள்ளனர். தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து தில்லிக்கு செல்ல விசா எடுக்க வேண்டுமா?

இன்னொரு காட்சி. இதே உழவர் போராட்டத்தை ஆதரித்து பெங்களூரில் இருந்து தில்லிக்குப் புறப்படும் தோழர்கள்! அவர்கள் தொடர் வண்டி நிலையத்தில் முழக்கிடுகிறார்கள். பதாகையைக் காட்டுகிறார்கள். புகைப்படம் எடுக்கிறார்கள். காவல்துறை தடுக்கவில்லை. கைது செய்யவில்லை. ஆனால், கர்நாடகத்தில் யார் ஆட்சி நடக்கிறது? காங்கிரசு ஆட்சி நடக்கிறதா? இல்லை. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பது பாசக. அதன் முதல்வர் எடியூரப்பா. வேளாண் சட்டத்தைக் கொண்டு வந்த கட்சிதான் அங்கே ஆட்சி செய்கிறது. ஆனாலும்கூட தன் மாநில மக்கள் போராடுவதற்கு இருக்கும் உரிமையையும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் உரிமையையும் மதிக்க வேண்டிய ஒர் அரசியல் யதார்த்தம் அங்கே இருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு போலிஸ் அரசு(Police State) நிலைப்பெற்றுள்ளது. இங்கே உளவுத் துறை, நகர்ப்புற காவல்துறை ஆகியவற்றில் கட்டமைப்புரீதியாக சனநாயக விரோதம் குடிகொண்டுவிட்டது. மூச்சுவிடுவதற்குகூட ஆட்சியாளர்களின் ஆசியும் காவல்துறையின் கண்ணசைவும் தேவை என்று சொல்லக் கூடிய நிலை இருக்கிறது.

இது ஒருபுறம் என்றால், எசமான விசுவாசத்தில் எடப்பாடி எடியூரப்பாவை மிஞ்சி விட்டார். ஏனெனில் எடியூரப்பா மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதல்வர். ஆனால், தமிழகத்திற்கு யார் முதல்வர் – பன்னீர் செல்வமா? பழனிச்சாமியா? சசிகலாவா? என்று மோடியல்லவா தெரிவு செய்கிறார்? எனவே, வாங்கியப் பணத்திற்கு அதிகமாக நடிப்பவர்கள் போல் எடப்பாடி தன்னை தெரிவு செய்த தன் எசமானன் மோடிக்கு தன் பற்றை அளவுக்கு அதிகமாகவே காட்டிக் கொண்டிருக்கிறார்.

வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு ஆதரவளித்ததன் மூலம் இந்தியாவின் உழவர் பெருமக்களுக்கு இழைத்த துரோகத்தை, கூட்டுற்வு வங்கியில் பெற்ற கடனை ரத்து செய்வதாக அறிவித்து சரிகட்டிக் கொள்ளப் பார்க்கிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியப் பெருங்குடி மக்களுக்கு இழைத்த துரோகத்தை சரிகட்ட குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிரானப் போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் மக்கள் தாம் செய்த தீமைகளை மறந்துவிடுவர் என்று எதிர்பார்க்கிறார்.

தான் கொண்ட கொள்கையால் ’கொடியவர்’ என்று அழைக்கப்பட முழுத் தகுதியுடையவர் மோடி. ஆனால், கொள்கை என்றெதுவும் இன்றி கோமாளித்தனமும் கூஜா தூக்கித்தனமும் கொண்டிருப்பவர்கள் எடப்பாடிப் பழனிச்சாமியைப் போன்றவர்கள். இவர்கள் அரசியலில் இருந்து ஓடஓட விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள்; மிகத் தவறான முன்னுதாரணம். இவர்களுக்கு மொழிப்பற்று, இனப்பற்று, சமயப்பற்று, மக்கள் பற்று, நாட்டுப்பற்று என்றெதுவும் கிடையாது. ஒரே ஒரு பற்று – அது பணப்பற்று.  அதற்கு தேவையான பதவிப்பற்று மட்டுமே கொண்ட குறுகிய தன்னலமிகள்; பகுத்தறிவு ஏதுமற்று அரசியல் துறையில் உலாவரும் அஃறிணைகள்.  இட்லரோ முசோலினியோ சர்ச்சிலோ ஸ்டாலினோ இவர்களில் எந்த வேறுபாடும் பார்க்க முடியாதவர்கள். அதிகாரத்தின் கால்பிடித்து காலந்தள்ளி கொள்ளையடிப்பதே இவர்தம் கொள்கை.

ஜெயலலிதாவோ, மோடியோ, இராசபக்சேவோ யார் கையில் அதிகாரம் இருக்கிறதோ அவர்கள் காலடியில் கிடப்பார்கள் இவர்கள். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடந்தபொழுது ஒரு துளியளவு கூச்சமுமின்றி தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்த கொண்டதாக சொன்னவர்தான் ’வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்று அரசு செலவில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்.

தமிழ் மக்களாகிய நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் தமிழ்மக்கள் மீது ஒரு துளியளவு அன்புகூட இல்லாதவர்கள். ஈழத்தில் தமிழர்கள் தலையில் இராசபக்சே வீசியது போல், தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் தலையில் கொத்துக் குண்டுகளை மோடி வீசினால்கூட அதை எதிர்த்துப் பேச துப்பின்றி மோடியின் காலடியில் கிடப்பார்கள் இவர்கள். ஆனால், இவர்தான் இன்று தமிழ்நாட்டின் முதல்வர், வரும் 2021 சட்டப்ப்ரேவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர்.

 

-செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW