ஆளும் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நடத்தும் பேரத்தை, பட்ஜெட் சட்டப்பூர்வமாக்கியுள்ளது

04 Feb 2021

உலகமயம் தனியார்மயம் தாராளமயம் சகாப்தத்தில் ஆளும்கட்சி அறிவிக்கிற நிதிநிலை அறிக்கைகளுக்கு எந்த பொருளும் இருப்பதில்லை. “பொருளாதார சீர்திருத்தம்” என்ற மூடு திரைக்குப் பின்னால் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆளும் கட்சியும்  நடத்துகிற பேரத்தை, நிதிநிலை அறிக்கைகள் சட்டப்பூர்மாக்குகிறது”. பொய் பிரச்சாரத்திற்கும் வாக்குறுதிகளுக்கு பெயர் போன பாஜக, 2021-22  நிலை அறிக்கையை காகிதமில்லா நிதி நிலை அறிக்கை, நூற்றாண்டு நிதி அறிக்கை, உட்கட்டுமான ஊக்குவிப்பு பட்ஜெட்  என விதந்தோதியது. ஆனால் எதார்த்தத்தில் இந்திய முதலாளித்துவ பெருங்குழமங்களின் லாப நலன் சார்ந்த பொருளாதார கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குகிற அறிக்கையாக உள்ளது.

நூற்றாண்டு கால நிதி நிலை அறிக்கையின் சில முக்கிய அறிவிப்புகளை பார்ப்போம்.

“பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, துறைமுகக் கழகம், ஐ.டி.பி.ஐ. வங்கி, பவன் ஹன்ஸ் (ஹெலிகாப்டர் நிறுவனம்), கண்டெய்னர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும். எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்கும் திட்டம் அமலாக்கப்படும். பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும். இந்தப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் – அரசு கூட்டுப்பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாக இருக்கும். பல துறைகளில் தனியாரின் பங்களிப்பின் மூலம் நாடு பயன்பெறமுடியும். அந்த வகையில் நாட்டில் உள்ள துறைமுகங்களில் தனியார்பங்களிப்பு அவசியம்” என்றார்.

பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய துறைகள் மற்றும் முக்கியமற்ற துறைகள் என பிரிக்கப்பட்டு விற்கப்படவுள்ளன. முக்கியத் துறைகள் முறையே அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு, மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இதர கனிம வளங்கள்,வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் இனி தனியார் மயமாகும்.

அரசின் பொத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, பின்னர் தனியார் முதலாளிகளுக்கு வங்கிகளின் மூலம் கடன் கொடுப்பது, பிறகு வாராக் கடனால் வங்கி திவால் ஆகத் தொடங்கினால் வங்கிகளை இணைப்பது அல்லது மக்கள் வரிப்பணத்தை மறு மூலதனமாக வங்கிகளுக்கு வழங்குவது. இதுவே  பாஜகவின் நூற்றாண்டு நிதி நிலை கொள்கை.  2021-22 நிதி நிலை அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளுக்கு மறு மூலதனமாக 20,000 கோடி ரூபாய் நிதியளிக்கப்படும் என்ற அறிவிப்பு இதைத்தான் எடுத்துக் கூறுகிறது.

கொரோனா பரவல் காலத்திற்கு முன்பே நாட்டிலே உற்பத்தி சரிவு, உற்பத்தி சரிவால் வரி வருவாய் இலக்கை எட்ட முடியாத சிக்கல், வருவாய்க்கும் செலவுக்குமான பற்றாக்குறையை ஈடுகட்ட முடியாமல் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துச் செல்கிற சிக்கலால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையிலே சென்றது. மத்திய அரசோ இந்த  சிக்கலை தேவையின் (DEMAND) பிரச்சனையாக அளிப்பின் (SUPPLY) பிரச்சனையாக கருதி கார்ப்பரேட் வரி சலுகைகளை வாரி வழங்கியது. கார்பரேட் வரிச் சதவீதம் 32லிருந்து 22ஆக குறைக்கப்பட்டது, ஆனாலும் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக அரசின் வரி வருவாயில் 1.55 லட்சம் கோடி குறைந்தது.

தற்போது மோடி அரசு, வரி வருவாயை பெருக்க என்ன செய்திருக்க வேண்டும்? கார்பரேட்களுக்கு வரி போட்டிருக்க வேண்டும். மாறாக என்ன செய்தார்கள்? அரசின் சுமையை மீண்டும் சாமானிய மக்களின் தோள்களின் மேல் ஏற்றியுள்ளார்கள். 2021-22 நிதி நிலை அறிக்கையில் பெட்ரோல் மீதும் டீசல் மீதும் சிறப்பு வரி – செஸ் போடப்படும் என அறிவித்துள்ளனர். ஒருபக்கம் ஆடம்பரமாக 20,000 கோடி செலவில் புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு செலவு செய்கிற அரசு நாட்டின் அறுபது விழுக்காட்டு மக்கள் சார்ந்துள்ள வேளாண்துறையில் உர மானியத்தை தேவையற்ற செலவாக வெட்டியுள்ளது. கடந்த ஆண்டில் உர மானியத்திற்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கிய பாஜக அரசு தற்போது வெறும் 29,000 கோடி ரூபாய் தான் ஒதுக்கியுள்ளது. நாட்டின் கிராமப்புற விவசாய மக்களுக்கு வருவாய் அளிக்கிற ஊரக வேலை வாய்ப்புத் உறுதி திட்டத்திற்கும் சென்ற ஆண்டை விட 38,500  கோடி ரூ குறைத்துள்ளது.

ஆக தொகுத்துப் பார்த்தால், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண வக்கற்ற அரசு, ஒட்டுமொத்த சுமையையும் நாட்டு மக்களின் தலையில் ஏற்றியுள்ளது தெளிவாகிறது.

இந்த நிதி நிலை அறிக்கையைத்தான் அனைத்து தரப்பு மக்களின் நலம் பேணி, அவர்களது தேவைகளை நிறைவேற்றிடும் பட்ஜெட் என தமிழக துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வமும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நானும் விவசாயிதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ  ‘இந்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், குறிப்பாக தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன’ என்கிறார்.

பட்ஜெட் அறிவிப்பிற்கு ஒரு நாள் முன்னதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் இணைந்து தி இந்துவில் “A Budget blueprint for difficult times” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் வெளியிட்டனர். அதில் நிதி நிலை அறிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என சில ஆலோசனைகளை முன்வைத்தனர். மேலும் சில விஷயங்களை உடனடியாக செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அவை வருமாறு

சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தல்:

  • நாட்டில் பெருந்தொற்று காலத்தில் நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துகிற வகையிலே சுகாதாரதுறைக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவேண்டும். கடந்த நிதியாண்டில் சுகாதாரத்துறைக்கு 70,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.மாறாக இந்த ஆண்டில் இந்த நிதியை ஒரு லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும். அதாவது 2021-22 நிதியாண்டின் அரசின் செலவீனத்தில் 2 விழுக்காடு ஒதுக்க வேண்டும்.
  • பெரும் கார்பரேட் நிறுவனங்கள் புதிய முதலீடுகள் செய்வதற்கு தயங்குகின்றன. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் சந்தையில் தேவை குறைந்துள்ளது. வங்கிகளும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் கடன் சுமையால் சிக்கித் தவிக்கின்றன. இந்நிலையில் தேவையை தூண்டுகிற வகையிலே, மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிற வகையிலே மத்திய அரசு பொது முதலீடுகளை அதிகரித்திட வேண்டும். சென்ற நிதியாண்டில் அரசின் செலவீனத்தில பொது முதலீட்டிற்கு அரசு 14 விழுக்காடு செலவு செய்தது (சுமார் 4 லட்சம் கோடி). இந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 20 விழுக்காடு –25 விழுக்காடு செலவு செய்ய வேண்டும்.
  • அரசின் பொது முதலீடுகளின் பயன்கள் மக்களுக்கு சென்று சேர்வதற்கு சில காலம் எடுக்கும். அதுவரை உடனடியாக மக்கள் பயனடைகிற வகையிலே அரசு மக்களுக்கு நேரடியாக பணப் பட்டுவாடா செய்ய வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த மேற்கூறிய எந்த முக்கிய முடிவுகளையும் மத்திய மோடி அரசு எடுக்கவில்லை என்பதை இந்த நிதி நிலை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு (நிதி நிலை அறிக்கையில் ரூ 2,23, 846 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால்  கொரோனா தடுப்பு மருந்து செலவையும் , நிதி ஆணையக்குழு நிதி மற்றும் குடிநீர்வழங்கல் துறையின் நிதியை லாவகமாக இதில் சேர்த்துவிட்டார் என    ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளதை கணக்கில் எடுத்துக் கொண்டு)  79,602 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது முதலீட்டைப் பொருத்தவரைக்கும் தமிழகம்,கேரளா, அசாம், மேற்குவங்க மாநில தேர்தல்களை கணக்கில் கொண்டு இம்மாநிலங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு  அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் பாஜக கைதேர்ந்தவர்கள்  என்பதை மதுரையில் எய்ம்ஸ் அறிவிப்பே ஒரு உதாரணம். மேலும் அடிப்படைக் கட்டுமானத் திட்டங்களில் 100 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்வோம் என பிரதமர் அறிவித்ததையும் தற்போது நடைமுறையில் அதன் நிலைமை என்ன என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

தொகுத்துப் பார்த்தால்

  • கார்பரேட்களுக்கு கூடுதல் வரி இல்லை.
  • மக்களுக்கு கூடுதல் வரிச் சுமை
  • பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் சூறையாடும் முதலாளிகளுக்கு தாரை வார்த்தல்
  • சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு சந்தர்ப்பவாத வெற்று வாய்ச்சவடால் உட்கட்டுமான திட்ட அறிவிப்புகள்
  • நாட்டின் அத்தியாவசியத் துறையான சுகாதரத் துறை, வேளாண் துறை புறக்கணிப்பு

என மொத்தத்தில் 2021-22  பட்ஜெட்டானது ராகுல் காந்தி கூறுவது போல

இந்தியாவின் சொத்துக்களை பிரதமரின் செல்வந்த நண்பர்களுக்கு விற்கும் பட்ஜெட்” ஆக உள்ளது. இதை அதானியும் “இந்த நூற்றாண்டின் சிறந்த பட்ஜெட்” எனப் பாராட்டி உறுதிப் படுத்திவிட்டார்.

 

-அருண்  நெடுஞ்செழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW