ஜோ பைடன் ஏமன் போரை நிறுத்துவாரா?

25 Jan 2021

ஒரு வழியாக டிரம்ப் தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டு அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிவிட்டார்.  அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். முதல் நாள் முதல் கையெழுத்து பாணியில் டிரம்ப் ஆட்சியில் மேற்கொண்ட முக்கிய முடிவுகளை திரும்பப் பெறுகிற உத்தரவுகளில் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பில் மீண்டும் அமெரிக்கா இணைவது, ஐநாவின் பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைவது உள்ளிட்ட 15 நிர்வாக ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.

ஜோ பைடன் மீதான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ள சூழலில் அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கைகளில் என்ன மாற்றங்களை மேற்கொள்ளப் போகிறார் என்பதை அறிய பெரும்பாலான  ஜனநாயக சக்திகள் ஆர்வமாக உள்ளார்கள். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா நடத்திவருகிற பதிலிப் போரை (PROXY WAR) ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவாரா என்கிற  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா காலத்தில் ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா,ஏமன் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க போரை நடத்தியது. இப்போரால் கடந்த பத்தாண்டுகளில்  மட்டும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். லட்சோப லட்ச மக்கள் அகதிகளாக புலம் பெயர்ந்தனர். பின்னர் வந்த டிரம்ப் ஆட்சி மத்திய கிழக்கு நிலைமையை இன்னும் மோசமாக்கியது.

டிரம்ப் நிர்வாகம், சிரியா மீதான இஸ்ரேல் படையெடுப்பிற்கும் ஏமன் மீதான சவுதி போருக்கும் வித்திட்டார். ஈரான் உடனான அணு சக்தி ஒப்பந்தத்தை திரும்பப் பெற்று அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தார். இஸ்ரேலின்  ஆக்கிரமிப்பை  நியாயப்படுத்தி அமெரிக்க தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றினார்.

இந்நிலையில்தான் டிரம்பின் அயலுறவுக் கொள்கையின் மீது  புதிய அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் நிர்வாகம் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

.ஏமனில் அமெரிக்கா- சவுதி அரசின் போர்

ஏமனில் சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் கூட்டு சேர்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் 2015 ஆம் ஆண்டு முதலாக ஒரு உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. அமெரிக்கா சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், ஏமன் அரசுப் படை ஒரு முகாமாகவும் ஈரான் ஆதரவு அன்சர் அல்லாஹ் அமைப்பு மற்றொரு முகாமிலும் சண்டை போட்டு வருகின்றது.

கலகக் குழுவை அடக்குவதாக கூறி சவுதி  ராணுவம் ஏமனின் மருத்துவமனை, பள்ளி வளாகங்கள், பொதுமக்கள் குடியிருப்புகளில் விமானத்திலிருந்து குண்டுகளை வீசுகிறது. இப்போரில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டுமே சுமார் இரண்டு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐநா அறிக்கை கூறுகிறது. மேலும் காலரா நோய் மற்றும் கொரோனா நோய்த்தொற்றால் மரண எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்கிறது.

ஏமனின் உள்நாட்டு போரால் அந்நாடு கடந்த நாற்பது ஆண்டுகாலத்தில் இல்லாத பஞ்சத்தை எதிர்கொண்டு வருகிறது. போரால், உணவு, மருந்து  உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் முடக்கப்பட்டுள்ளனர். 2.75  கோடி மக்கள் தொகையில் சுமார் 2.22 கோடி மக்கள் மனிதாபிமான உதவிகளை எதிர்ப்பார்த்திருக்கிறார்கள் என ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கூறுகிறது.

அமெரிக்கா நினைத்தால் ஏமனில் ஒரே இரவில் போரை நிறுத்த முடியும். ஏமனில் சவுதி அரேபிய அரசு நடத்துகிற இராணுவ தாக்குதல்களுக்கு அமெரிக்க அரசுதான் ஆயுதங்களை  ஏற்றுமதி செய்கிறது. கடந்த 2013-2019 ஆண்டில் மட்டுமே சுமார் 34 பில்லியன்  டாலர் மதிப்பிலான ஆயுதங்களையும் உதிரி பாகங்களையும் சவுதி அரேபிய அரசிற்கு அமெரிக்க ஏற்றுமதி செய்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏமன் மிகவும் பின்தங்கிய ஏழை நாடு. கடந்த காலத்தில் அரபு தேசத்தை ஆட்சி செய்த ஓட்டோமான் சுல்தானின் ஆட்சியிலும் பின்னர் இங்கிலாந்து, அமெரிக்காவின் காலனியாக இருந்தது.

அந்நிய ஆதிக்கங்களுக்கு எதிரான பிற அரபு தேசிய போராட்டங்கள் போலவே ஏமனிலும் அந்நிய காலனியாதிக்க ஆட்சிக்கு எதிராக காலனிய எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. 1960 களில் நடைபெற்ற காலனிய எதிர்ப்பு போராட்டங்களுக்கு மார்க்சிய கட்சிகள்  தலைமை தாங்கின, பின்னர் நிலைமை மாறியது. சாலே என்ற அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி கையில் ஆட்சி விழுந்தது.

2011 ஆம் ஆண்டில் துனிசியா,எகிப்து, சிரியா, லெபனான், சவுதி அரேபியா, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் எழுச்சி பெற்ற அரபு வசந்தம், ஏமனிலும் பரவியது. அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி சாலே பதவி விலக வேண்டுமென லட்சகணக்கான ஏமன் மக்கள்  வீதியில் போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அமெரிக்காவும் சவுதி அரசும் இணைந்து சாலேவை பதவியிறக்கம் செய்து துணை ஜனாதிபதியாக இருந்த மன்சூர் ஹதியை  ஜனாதிபதியாக்கியது. ராணுவத்தின் ஆதரவும் அரசியல் சக்திகளின் ஆதரவும் மக்கள் ஆதரவும் கிடைக்காத ஹதி நாட்டை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தடுமாறிய நிலையில்தான் கிழக்கு ஏமன் முழுவதையும்  அரசியல் இஸ்லாம் (Political Islam) குழுவான அன்சர் அல்லாஹ் (ஹௌதி Houthi Movement) கைப்பற்றியது.

அன்சர் அல்லாஹ் குழுவை 90 களில் ஹூசேன் ஹௌதி தொடங்கினார். ஈரானிய புரட்சியாலும்  லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பினாலும்  ஈர்க்கப்பட்ட ஹூசைன் ஹௌதி கிழக்கு ஏமனின் பெரும்பான்மையாக உள்ள சாயத்தி (Zaydi) பிரிவு  மக்களை சமூக அடித்தளமாக கொண்டு இயங்கியது (ஐந்து ஷியா பிரிவில் சாயத்தி ஒன்று). 2000 த்தின் தொடக்கத்தில் அமெரிக்கா மேற்கொண்ட தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு அப்போதைய ஏமன் சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் சாலே ஆதரவளித்ததால் அன்சார் அல்லாஹ், சாலேவுக்கு எதிராகவும் அமெரிக்காவிற்கு எதிரகாவும் ஆயுத போராட்டத்தை தொடுத்தது. 2004 இல் அரசால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஹூசைன் பின்னர் அரசப் படையால் கொல்லப்பட்டார். அதன் பிறகு தொடர்ச்சியாக அரசிற்கும் ஹௌதி குழுவிற்கும் ஆயுத மோதல் நீடித்தது.பின்னர் 2010 ஆம் ஆண்டில் இரு தரப்பிலும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டன.

ஹௌதி  அமைப்பு, பொதுமக்கள் மீதான வன்முறை தாக்குதல், கொலை, துன்புறுத்தல் உள்ளிட்ட மனித உரிமை மீறலை மேற்கொண்டதாக மனித உரிமை கண்காணிப்பக அறிக்கை தெரிவிக்கிறது. ஹௌதி அமைப்பு அல் கைதா போலல்லாமல் ஒரு தேசியவாத அரசியலை பேசுகிறது. அல் கைதாவோ இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கான ஒரு சர்வதேச இலக்குடன் உள்ளது. நாம் மேற்கூறியது போல லெபனானின் ஹிஸ்புலாஹ் அமைப்பு போல அரசியல் பங்கேற்போடு ஆயுத போராட்டத்திலும் ஈடுபடுகிறது. தேவைப்பட்டால் ஹிஸ்புல்லாஹ் போல அரசுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுகிறது. அல் கைதாவோ ஒருபோதும் பேச்சுவாரத்தையில் ஈடுபடாது.

அரபு வசந்தம் ஏமனில் எழுச்சி பெற்ற சூழலில் ஹௌதி அமைப்பு மீண்டும் தீவிரமாக தலை தூக்கத் தொடங்கியது. கலக்கக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய புதிய சர்வாதிகாரி ஹதி, ஹௌதி கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ஏமனை இரு மாகாணமாக பிரித்து ஹௌதி இயக்கத்தின் சமூக அடித்தளத்தை பிரிக்க முயற்சித்த காரணத்தால் சண்டை மீண்டும் தொடங்கியது.

2015 ஆம் ஆண்டில் சவூதி அரசின் இளம் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த தற்போதைய சவூதி மன்னர் பின் சுலைமான் ஏமன் மீது ராணுவ வான் தாக்குதலை தொடுத்தார்.போர் தீவிரமடையத் தொடங்கியது.தரைப்படை இல்லாத நிலையில் வானிலிருந்து மட்டுமே அரசு ஆதரவு படைகள் குண்டு போடுவதால் சவுதியால் போரில் மேலாதிக்கம் பெற இயலாமல் போனது.சவுதி பின்னர் ஐக்கிய அமீரக அரசை துணைக்கு அழைத்துக் கொண்டது.தெற்கு ஏமன் தனியாக ஐக்கிய அமீரக அரசின் ஆதரவுடன் சுதந்திர அரசாகவும் கிழக்கு ஏமன் ஹைதி கட்டுப்பாட்டிலும்  நாடு பிளவுபட்டது.போரில் எளிதில் வெற்றி பெறலாம் என்றெண்ணிய சவுதி மென் மேலும் பின்னடைவையே சந்தித்தது.2019 ஆம் ஆண்டில் சவுதியின் மொத்த எண்ணெய் உற்பத்தியில்  சரி பாதி உற்பத்தியை மேற்கொள்கிற இரு பெரும்எண்ணெய் நிறுவனங்கள் மீது ஹௌதி தாக்குதல் நடத்தி அழித்தது.

முந்தைய டிரம்ப் அரசு,ஈரான் மீது அதிக அழுத்தத்தை தருவதன் மூலமாக ஹௌதி அமைப்பு தனிமைப்படுத்த முயற்சித்தது.அதில் ட்ரம்ப் அரசு வெற்றி பெற முடியவில்லை.ஏனெனில் ஈரானின் கைப்பாவை அமைப்பாக ஹௌதிஒருபோதும் இருந்தததில்லை.ஈரான் உதவி இல்லாமலும் ஹௌதி செயல்பட முடியும் என்பதை ட்ரம்ப் அரசாங்கம் புரிந்துகொண்டதாக தெரியவில்லை.

ஜோ பைடன் போரை நிறுத்துவாரா?

ஜோ பைடன் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்னதாக ஹௌதி இயக்கத்தை  தீவிரவாத அமைப்பாக அறிவித்தார் டிரம்ப். தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் ஏமன் போரை நிறுத்துவதாக ஜோ பைடன் வழங்கிய உறுதிமொழிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே கடைசி நேரத்தில் ட்ரம்ப் இப்படி செய்தார் என பத்திரிக்கையாளர் ரீஸ் எர்லிச் விமர்சிக்கிறார்.

வியட்நாம் போருக்கு பிறகு மத்திய கிழக்கு நாடுகளில் மீதான போர்களில் அமெரிக்கா பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்க அரசு கூறி வருகிற “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” என்பது வெறும் காகிதப் புலியாகிவிட்டது. நடைமுறையில் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் குழப்பத்தையும் அரசியல் நிச்சயமின்மையும் அப்பாவி மக்களின் உயிர் இழப்புகளையுமே அமெரிக்காவின்  “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” கொண்டு வந்துள்ளது.

தற்போது இந்தப் போரை அமெரிக்கா நினைத்தால் நிறுத்த இயலும். ஏமன் மீது குண்டுகளை போடுகிற சவுதி ராணுவ விமானங்களுக்கு  அமெரிக்க நிறுவனங்களே தொழில்நுட்ப வசதிகளை செய்து தருகிறது, ஆயுதங்களை வழங்குகிறது. சவுதி அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தாலே போரை முடிவுக்கு கொண்டு வர இயலும். மேலும் ஈரானுடன் மீண்டும் அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடங்கும் பட்சத்தில் பதட்டத்தை தணிக்க  முடியும்.

ஜோ பைடன் நிர்வாகத்தின் அரசுத்துறை செயலாளர் அந்தோணி ப்ளின்கேன் கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்தில் கூறியதுபோல  நாங்கள் விரைவிலே போரை நிறுத்துவோம் எனவும் சவுதி அரசிற்கு வழங்கி வருகிற ராணுவ உதவிகள் விரைவிலே நிறுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

பொறுத்துப் பார்ப்போம்.

 

-அருண்  நெடுஞ்செழியன்

ஆதாரம்:

https://www.commondreams.org/views/2021/01/22/battle-lines-drawn-ending-yemen-war

https://original.antiwar.com/reese_erlich/2018/03/28/inside-the-us-war-in-yemen/

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW