கொரோனா ஏற்படுத்திய வாழ்க்கை காயங்களில் இருந்து மீண்டெழுவோம்! பாசிச அபாயத்தை முறியடிக்க உறுதியேற்போம்! – பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்!

15 Jan 2021

உழவர் திருநாள்! நாம் உவகையோடு புத்தாண்டை வரவேற்கும் நாள்! கடந்த ஆண்டின் கவலைகள் பறந்தோடும், தைப் பிறந்தால் வழிப்பிறக்கும் என்று  நம்புவது நம் மரபு!

சுழன்றும் ஏர்ப்பின்னதே உலகம் என்பது குறள்நெறி. ஆனால், உழவர்கள் 50 நாட்களைக் கடந்து தில்லியின் எல்லையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடுங்குளிர்! மழை ! தொற்று நோய் அச்சம் ! பாசக அன்றாடம் பரப்பும் நச்சுப் பொய்கள்! இத்தனைக்கு இடையே போராட்டம் தொடர்கிறது.

தமிழகத்திலோ, வடகிழக்கு பருவ மழைக்கானக் காலம் முடிந்தும் பருவம் தப்பிய மழைப்பெய்து கொண்டிருக்கிறது. கடலூர், நாகை, விழுப்புரம், திருச்சி, கரூர் என மாவட்டங்கள் பலவற்றிலும் பயிர்செய்து காத்திருந்த உழவரெல்லாம் உயிர் பதைக்க நிற்கிறார். கண்ணில் நீர் மல்க உழவர் நின்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில்தான் புத்தாண்டு பூத்திருக்கிறது.

கடந்துபோன ஆண்டில் கொரோனா பெருந்தொற்று பெருஞ்சேதிகளை சொல்லிவிட்டிருக்கிறது. எது வாழ்வுக்கு இன்றியமையாதது? யாரெல்லாம் இன்றியமையாதவர்கள்? நாட்டின் வரவுசெலவு திட்டத்தில் எதற்கு அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும்? என்ற கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது கொரோனா.

கண்ணுக்கு தெரியாத கொரோனாவிடம் வல்லரசுகள் மண்டியிடக் கண்டோம்! பங்கு சந்தைக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் நூறில் ஒரு பங்குகூட உயிர்க்காக்கும் உயிர்வளியூட்டிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட வில்லை என்பதை அம்பலப்படுத்தியது. கொரோனா. உலகம், இயற்கை, மாந்தர், அரசியல், பொருளியல், பண்பாடு, வாழ்க்கை இவைக் குறித்தெல்லாம் மக்கள் கொண்டிருக்கும் உலக கண்ணோட்டத்தில் மாற்றம் வேண்டும் என்று சொல்லியது கொரோனா.

மோடியின் புதிய இந்தியாவில் நடந்தது என்ன? கண்மூடித்தனமான ஊரடங்கு! நெடுஞ்சாலையில் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள்! உற்றோரின் திடீர் மரணங்கள்! சென்னை, கோவை போன்ற நகரங்களில் இருந்து வெளியேறி சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றவர்கள்! வேலையிழந்து வாடிக் கொண்டிருப்போர்! படிப்பைப் பாதியில் நிறுத்தியோர்! பாதியில் நிறுத்தி வேலைக்குப்போனோர்! திருமணம் செய்து வைக்கப்பட்ட பள்ளிச் சிறுமிகள்! தாங்க முடியாத கடன் சுமை! புதுப்புது செலவுகளுக்கு புதுப்புது கடன்கள்! பாதி சம்பளம் மட்டுமே பெற்றவர்கள் ! அதுகூட கொடுக்காமல் வீட்டுக்கு அனுப்பப்பட்டோர்! இலட்சக்கணக்கானோருக்கு ஐ.டி. வேலை வழங்கி அதை சார்ந்து பல இலட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரம் வழங்கி வானுயர ஓங்கி நின்ற கண்ணாடிக் கட்டிடங்கள் களையிழந்து நிற்கின்றன. ஓ.எம்.ஆர். சாலை வெறிச்சோடிக் கிடக்கின்றது.

மீளத் திரும்பாத இயல்வு வாழ்க்கை!

இன்னும் 20 ஆண்டுகளுக்கு பேசித் தீர்ப்பதற்கான துயரக் கதைகளை ஒவ்வொருவர் வாழ்விலும் உருவாக்கிவிட்டிருக்கிறது கொரோனா. ஆனாலும், இத்தகைய நெருக்கடி காலகட்டத்திலும் நம் ஆட்சியாளர்கள் தம்மை மாற்றிக் கொள்ளவில்லை. அவர்கள் எத்தனை கல்நெஞ்சக்காரர்கள் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது கொரோனா.

தப்லீக் ஜமாத்தைக் காட்டி ’கொரோனா ஜிகாத்’ என்று விசம் பரப்பினார்கள். கொரோனா – இஸ்லாமியர்களின் திட்டமிட்ட சதியென்றார்கள். அமெரிக்க அதிபர் டிரம்போ சீன வைரஸ் என்று சொன்னார். கொரோனா பாதிப்புற்றோர் வீட்டில் தகரம் அடிப்பது தொடங்கி நோயாளிகளுக்கு உணவு கொடுக்கும் வரை எடப்பாடி அரசுக்கு கொரோனா காலம் கொண்டாட்டக் காலமானது, கொள்ளையடித்துக் குதூகலம் அடையும் காலமாக அமைந்தது. ஆயிரம் ஆயிரம் வலிகளை சுமக்கும் மக்கள், தமது தலைவர்களாக வலம்வரும் கோமாளிகளையும் பொய்யர்களையும் பித்தலாட்டக்காரர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கண்டிப்பாக மக்கள் ஒருநாள் தீர்ப்பெழுதுவார்கள்.

இரண்டாம் முறை ஆட்சிக் கட்டிலில் ஏறிய பாசக, காசுமீர் உடைப்பு, அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல், குடியுரிமை சட்டத் திருத்தம் என இந்துராஷ்டிர திசையில் பேய் வேகம் காட்டியதோடு நிதிமூலதன சக்திகளை வீங்கிப் பெருக்க வைப்பதற்கான பொருளியல் சீர்திருத்தக்களை செய்த வண்ணம் உள்ளது. வேளாண் சட்டத் திருத்தங்கள், தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், இராணுவ தளவாட தயாரிப்பு தொடங்கி விமானம், துறைமுகம் தொலைதொடர்பு, சில்லறை வர்த்தகம் என அத்தனையையும் ஏகபோகங்கள் கைப்பற்றும் கொள்கை முடிவுகள்!

ஒரே தேசியம், ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்விக்கொள்கை, ஒரே தேர்வு, ஒரே வேளாண் கொள்கை என நாட்டை வேகமாக இழுத்துச் செல்கிறது பாசக அரசு. ஒரே தேர்தல் என்பது விவாதத்திற்குரிய விசயம் அல்ல, அமலாக்க வேண்டியது என்று சாட்டையை சுழற்றுகிறார் மோடி. வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டம் இது.

பாசக ஒரு பாசிச கட்சி. அது இன்று அரசை கைப்பற்றியுள்ளது. அரசமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்து வருகிறது. ஓரிரு மாநிலங்களில் சமூகத்தையும் பாசிசமயமாக்கியுள்ளது. ஒவ்வொரு தேர்தல் அரசியல் வெற்றியையும் சமுதாய வெற்றியாக மாற்றக் கடும்முயற்சி செய்கிறது.

பாசக தீண்டத்தகாத கட்சி அல்ல என்று சொல்லிக் கொண்டு அதை மற்றுமொரு கட்சியாக பார்க்கும் போக்கு இங்கே உண்டு. இதுவும் கடந்து போகும் என்று இக்காலகட்டத்தை அலட்சியமாகப் பார்க்கும் போக்கும் உண்டு. நாம் அப்படி கருதவில்லை.

பாசிச அபாயம் என்று அறைகூவல் விடுக்கிறோம்! இதை சந்திக்க அணியமாக வேண்டும் என்று சொல்கிறோம். அரைகுறை சனநாயகத்தோடு மதச்சார்பின்மை, மாநில உரிமை என்று சொல்லிக் கொண்டல்ல, இந்தியாவில் வாழும் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சுயநிர்ணய உரிமை உண்டு, ஏகாதிபத்திய சந்தைப் பொருளியலின் புதிய தாராளியம், தனியார்மயம், உலகமயத்திற்கு மாற்று சோசலிசமே ஆகிய  முழக்கங்களோடு நிற்கிறோம். இந்துராஷ்டிரக் கொடுங்கனவைத் தூள்தூளாக்க, , காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிக்க சாதி ஒழிந்த, சமதர்ம்  தமிழ்த்தேசக் குடியரசே தீர்வென்கிறோம்.

எடுத்துக்காட்டாக, ’காசுமீருக்கு 370’ என்று பித்தலாட்டம் செய்யவில்லை நாம், இந்திய இராணுவத்தைக் காசுமீரில் இருந்து வெளியேற்ற வேண்டும். காசுமீரிகளிடையே பொதுவாக்கெடுப்பு  நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும், அவர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு இந்துராஷ்டிரக் கொடுங்கனவுக்கு எதிராய், காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்திற்கு எதிராய் களத்தில் நிற்கிறோம்..

அதேநேரத்தில் பாசிச சக்திகளுக்கு எதிராகப் பரந்துபட்ட அணி சேர்க்கைக்கு அணியமாய் இருக்க வேண்டிய தேவையுள்ளது. தமிழகத்திலும் சரி இந்திய அளவிலும் சரி பாசிச பாசகவுக்கு எதிராய் பல்வேறு போக்குகள் இருந்து கொண்டுள்ளன. பாசகவின் பார்ப்பனிய மேலாண்மைக்கு மட்டுமே அழுத்தம் கொடுத்து பாசிசத்தின் பொருளியல் அடித்தளமாக இருக்கும் நிதிமூலதனத்தையும், ஏகாதிபத்திய உலக ஒழுங்கையும்  எதிர்க்காத போக்கு இருக்கிறது. மதச்சார்பின்மை பற்றிய பிரச்சனை என சுருக்கிக் கத்திரித்துப் பார்க்கும் போக்கும் இருக்கிறது. இந்துத்துவ தேசியத்தைப் புரிந்து கொள்ளாமல் அல்லது கண்டுங்காணாமல் விட்டுவிட்டு, நிதி மூலதன, கார்ப்பரேட் எதிர்ப்பை மட்டும் முன்னிறுத்தும் போக்கும் இருக்கிறது.. இந்த போக்குகள் கண் முன் எழுந்துள்ள சிக்கலை துல்லியப்படுத்துகிறதா? அல்லது அவற்றில் போதாமை இருக்கிறதா? என்பதல்ல கேள்வி. பாசிச பாஜகவிற்கு எதிரானப் பல்வேறு போக்குகளுக்கு இடையிலான ஐக்கியத்தை எப்படி சாத்தியமாக்குவது என்பதே கேள்வி.

எதிர்வரும் 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் பாசிச எதிர்ப்பு என்னும் நெருப்பை பற்ற வைத்து சூடேற்றுவோம். படையெடுத்து வருவோரை ஓடஓட விரட்டியடிப்போம். அவர்களுக்கு பட்டுக்கம்பளம் விரித்து தமிழ்த்நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்! அன்னை நிலத்தில் காலை ஊன்றி நின்று எதிரியை விரட்டியடிப்போம். தமிழ் நிலமே வடக்கில் இருக்கும் கர்நாடகா, ஆந்திராவுக்கு பின் தளமாகும். தமிழக அரசியலைக் குழப்பி அதில் மீன் பிடிக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாசகவை தேர்தல் களத்தில் பந்தாடுவோம்!

சங்பரிவார பாசிசப் படையெடுப்பை தடுத்து நிறுத்துவோம்!

உறுதிமிக்க சனநாயக இயக்கத்தை கட்டியெழுப்போம்!

தமிழகத்தைக் காப்போம்!

 

-செந்தில், இளந்தமிழகம்

9941931499

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW