மெட்ரோ, பேருந்துகள், பேரங்காடிகள் என எதற்கும் இல்லாத கட்டுப்பாடுகள் புறநகர் இரயிலுக்கு மட்டும் ஏன்?

27 Dec 2020

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அன்னக்கிளி என்ற  40 வயது மதிக்கத்தக்க பெண்மணி கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். 10 ஆண்டுகளுக்கு மேலாக புறநகர் இரயிலில்தான் தினமும் பயணம் செய்து வருகிறார். கொரோனா முடக்கத்திற்கு பின் அலுவலகம் திறந்தும் மூன்று மாதங்கள் மின்சார இரயில் இன்றி தினமும் 3 கி.மீ நடந்தே  அலுவலகம் சென்றுவந்தார். பின்பு தளர்வுகளுடன் இரயில்கள் இயக்கப்பட்டன. அப்போதும் அரசு ஊழியர்கள், E-பாஸ், அடையாள அட்டை, அனுமதி கடிதம் வைத்துள்ளவர்கள் மட்டும் பயணிக்கலாம் என்ற தென்னக இரயில்வேயின் அறிவிப்பால்  மேலும் ஒரு மாதம் அன்னக்கிளி போன்றோர் அலுவலகம் நடந்து செல்ல வேண்டியிருந்தது.  இதில் சோகம் என்னவென்றால் அன்னக்கிளி 40% மாற்றுதிறனாளி.  மாதம் 7000 ரூபாய் சம்பளம் வாங்கும் தொழிலாளி.  தினமும் 200ரூபாய் செலவு செய்து ஆட்டோவில் போய் வரமுடியாது. வேலையை நம்பித்தான் வாழ்க்கை,  வேலையைப் பாதுக்காத்துக் கொள்ள வேண்டும். மின்சார இரயிலை மட்டுமே நம்பியிருக்கு  அன்னக்கிளியை போன்ற இலட்சக்கணக்கான மக்களின் நிலைமையும் இதுதான்.

ஒரு மாதத்திற்கு பிறகு  பெண்கள் மட்டும் பயணிக்கலாம் ஆனால் மாதாந்திர பாஸ் கிடையாது என்கிறது  தென்னக இரயில்வே. இரயில்வே மக்கள் சேவைக்கானது தானே?

தமிழக முதல்வர்  தென்னக இரயில்வேக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதிவிட்டு,  இரயில் ஒடாதவரைதான் இலாபம் என பேருந்துகளை இயக்குகிறார் போலும். சாதாரண கட்டணம் வசூலிக்கும் பேருந்தில்  வடபழனியிலிருந்து பல்லாவரத்திற்கு 25 ரூபாய் வாங்கப்படுகிறது.  டாஸ்மார்க் கடையை திறக்க பல தடைகளை தாண்டி நீதிமன்றம் வரை சென்ற முதல்வர், தென்னக இரயில்வேவை  மறந்ததில் தெரிகிறது இந்த அரசின் மக்கள் மீது உள்ள அக்கறை.

மத்திய, மாநில அரசுகள் கொரோனா ஊரடங்கு தொடங்கிய முதல் நாளிலிருந்தே ஏழைகளை, தொழிலாளர்களைக் கைவிட்டுவிட்டனர். அவர்களுக்கு எதிரானவர்கள் என்பதற்கு சாட்சிகளாக புலம்பெர்ந்த தொழிலாளியின் கால் தடங்களும், 1000ரூபாய் நிவாரணத் தொகையைக் கொடுத்து மக்களை வெளியே வரவிடாமல் காவல்துறையை வைத்து அடித்தது, அபராதம் போட்டது, நல்லது கெட்டதற்கு கூட  E -pass வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கியது என்று ஆட்சியாளர்களின் பணக்கார சார்ப்பு அப்பட்டமாக தெரிகிறது

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது ஈ-பாஸ் கட்டாயம் வேண்டும். சாவுக்கு சென்றால்கூட மாவட்ட ஆட்சியர் அதை சரிபார்த்து அனுமதி வழங்குவார் என்று சொன்ன அரசாங்கள் ஈ-பாஸ் பெறுபவர்கள் பயணிக்க மாவட்டத்திற்கு தலா ஐந்து பேருந்துகளாவது தினமும் இயக்கி இருக்கலாம். அப்படியொரு கோரிக்கையை எதிர்க்கட்சிகள் கூட எழுப்பவில்லை. மாறாக ஈ-பாஸ் நடைமுறையை இலகுவாக்கச் சொன்னார்கள். சொந்த வண்டி வாகனம் இல்லாத ஏழைகள் பற்றிய கவலை கொள்கை வகுப்பாளர்களுக்கு இல்லை.

50% ஆட்களுடன் ஆலைகள் இயங்கலாம் என அறிவித்துவிட்டு கூட பேருந்தை அரசு இயக்கவில்லை. வேலையை பாதுக்காத்துக் கொள்வதற்காக E -pass விண்ணப்பித்து பெற்றுக் கொண்டு, குடும்பம்  குடும்பமாக  குழந்தைகளுடனும் மோட்டார் பைக்கிலும், பால்வண்டியிலும், காய்கறி வண்டியிலும், 3 மற்றும் 4 பேர் சேர்ந்து சொந்தமாக வாடகைக்கு வண்டி எடுத்துக் கொண்டும் 400 மைல், 500மைல் என சவாலானப் பயணத்தை மேற்க்கொண்டனர்.

ஈ-பாஸ், வருமான வரிச் சலுகை, கடன் சலுகை எனப்  பணக்கார பிரிவினருக்கும், உயர் நடுத்தர வர்க்கப் பிரிவினருக்கும் பார்த்து பார்த்து அறிவிப்பு செய்த அரசாங்கம், ஏழைகளுக்கு நியாய விலைக் கடையில் சுண்டல் தருகிறோம் என்று அல்வா கொடுத்ததுதான் உண்மை.

அரசு அலுவலகங்கள், தனியார் தொழிற்சாலைகள், பேருந்து, மெட்ரோ, பேரங்காடிகள், சினிமா, கல்லூரி, பூங்காக்கள், சுற்றுலாதலங்கள், ஆலயங்கள், டாஸ்மாக் என எல்லாம் இயங்குகின்றபோது, ஏன் சென்னை புறநகர மின்சார இரயில் மட்டும் இயக்கப்படவில்லை? கூட்ட நெரிசல், கொரோனா தொற்றி விடும்    அதனால் மின்சார இரயில்கள் இயக்கப்படவில்லை என்கிறது இரயில்வே நிர்வாகம். ஆனால் பேருந்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது பெரிய நுழைவு வாயில், குளிர் சாதனங்கள் இல்லை, நிற்பதற்கு  இடைவெளி உண்டு , அமர்வதற்கும் நிறைய இருக்கை வசதிகள் உண்டு, காற்றோட்டம் உண்டு, அதே போல  அன்றாடம் பராமரிப்பு என்பதும் எளிது. அதாவது கடற்கரை – செங்கல்பட்டு,  கடற்கரை – எண்ணூர்,  சென்ட்ரல் – வேளச்சேரி , சென்ட்ரல் – திருவள்ளூர் , சென்ட்ரல் – கும்மிடிபூண்டி  என்ற ஆறு மார்க்கமாக  செல்லும் மொத்த மின்சார இரயில்கள் எண்ணிக்கை என்பது தி.நகர் பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையைவிடவும்   குறைவு.  அதே போல் இரயில் நிலையத்தை பொருத்த வரை நுழைவு வாயில் என்பது  2 வழிகள் மட்டுமே. எனவே நுழைவு வாயில் மற்றும் பயணச்சீட்டு பெறும் இடம் ஆகிய இடங்களில் சானிட்டைசர், உடல் வெப்ப சோதனைகள் செய்ய முடியும். இதை தான் மெட்ரோ நிர்வாகம் காவல்துறையின் உதவியுடன் செய்து வருகிறது.  இதற்கான எந்த முயற்சியிலும் தென்னக இரயில்வே நிர்வாக ஈடுபடவில்லை.

ஈ-பாஸ் முறையை நீக்குவதற்கு நடந்த விவாதம்  மின்சார இரயில் முழுமையாக இயக்கப்பட்ட வேண்டும் என்பதற்கு ஏன்  எழவில்லை?  ஏனெனில் மின்சார இரயில் ஏழை எளியோர் பயணம் செய்ய கூடியது எனவே அதற்குரிய மதிப்பையும் முக்கியத்துவத்தையும் அரசும், இரயில்வே நிர்வாகமும், ஊடகங்களும் காட்டவில்லை என்பதே உண்மை.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மோடி இலட்சக்கணக்கானோர் பங்குபெற இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பீகார், கேரளா, ஐதராபாத் என தேர்தல் கூட்டங்கள், வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அரசியல்  கட்சிகள் பரப்புரை, பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகள் நடத்தலாம்  என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது என்பதுதான் 18 திசம்பர் அன்று தொலைக்காட்சிகளில்  முதல் தலைப்பு செய்தி. அதை தொடர்ந்து இரண்டாவது செய்தியாக, முதல்வர் எடப்பாடி இன்று தனது சொந்த தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். திமுக தலைவர் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை நாளை தொடங்குகிறார். ஆனால், மின்சார இரயிலுக்கு மட்டுமே கொரோனா கால தடுப்பு விதிகள்!

 

மெட்ரோ இரயில் இயக்க தொடங்கிய செப்-7 அன்று சென்னையில் கொரோனா நோயாளி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 949

மால்கள் திறக்கப்பட்ட செப்-1 அன்று சென்னையில் கொரோனா நோயாளி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1084

மாநகர பேருந்துகள் இயக்க தொடங்கிய செப்-2 அன்று சென்னையில் கொரோனா நோயாளி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1025

உள்நாட்டு விமானங்கள்  இயக்க தொடங்கிய மே-23 அன்று  சென்னையில் கொரோனா நோயாளி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 625

மின்சார இரயிலில் அனைத்து பெண்களும் பயணிக்கலாம் என்று நவ23  அன்று  அறிவித்த போது  சென்னையில் கொரோனா நோயாளி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 483

நெரிசல் மிகுந்த நேரத்தை தவிர பிற நேரங்களில் மட்டும்தான் ஆண்கள் பயணிக்கலாம் என்றொரு விதி மின்சார இரயிலைத் தவிர வேறெதற்காவது இன்றைக்கு இருக்கிறதா?

தென்னக இரயில்வே நிர்வாகத்தை பொருத்தவரை சென்னை மின்சார இரயில் இலாபம் இல்லாத ஒன்றாக இருக்கலாம். ஆனால்  மின்சார இரயில் முழுமையாக இயக்க வேண்டும் என்பது ஏழை,எளிய மக்கள் பயணிப்பதற்காக மட்டும்  அல்ல.  இரயில்வே பகுதிகளில் இருக்கிற ஆயிரக்கணக்கான தெருவோர வியாபாரிகள், ஆட்டோ ஒட்டுநர்கள், வாடகை வாகனங்கள் ஒட்டுநர், உணவு விடுதிகள், கடைகள் என இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் மின்சார இரயிலையே மையமிட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கி 10 மாதங்கள் ஆக போகிறது. மீண்டும் புதியவகை உருமாறிய கொரோனா என பீதி கிளப்புகிறார்கள். குறிப்பாக தெருவோர வியாபாரிகள் இரயில் முழுமையாக இயக்கப்படாததால்  பல்வேறு தொழில்களுக்கும்,  கிடைக்கின்ற வேலைக்கும் சென்று வருவதை அறியமுடிகிறது.  அரசிடமிருந்து போதிய  நிவாரணமும் கிடைக்கவில்லை,  ஏற்கெனவே செய்த தொழிலை செய்து பிழைக்கவும் வழியில்லை.  துயரப்படும் ஏழைகளின் கண்ணீரில் அரசு  உப்பு எடுக்க முயற்சிக்க கூடாது .

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர்

செல்வம் தேய்க்கும் படை

மின்சார இரயிலுக்கு விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளைத் தென்னக இரயில்வே நீக்க வேண்டும்.

-அமுது,

சோசலிச தொழிலாளர் மையம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW