காவி – கார்ப்பரேட் அரசை நெருக்கும் பஞ்சாப் விவசாயிகளின் வர்க்க போராட்டம் – சமூக பொருளாதார காரணிகள் என்ன ?

07 Dec 2020

வேளாண்மை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இந்திய வேளாண் துறை வரலாற்றில் திருப்புமுனை தருணம்” என பிரதமரால் மொழியப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி இந்தியத் தலைநகரை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மூழ்கியிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விவசாயிகளின் தெருப் போராட்டம் திக்குமுக்காடச் செய்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டம், தடுப்பு மருந்து உறுதிமொழிகள் என பம்மாத்து காட்டிக்கொண்டிருந்த பிரதமரின் வழக்கமான சுய விளம்பர செய்திகளை, தில்லி போராட்ட அலை பின்னுக்கு தள்ளிவிட்டது. மாநிலங்களவையில் வேளாண் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்த “நானும் விவசாயிதான்’ எனக்கூறி வரும் எடப்பாடி, தற்போது மழை வெள்ளம் நிவாரணம் என, வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டத்திற்கும் தனக்கும் தொடர்பில்லாததுபோல பம்முகிறார்.

வேளாண் சீர்திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்ட சூழலில் தனது தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற கூட்டமொன்றில்  பேசிய பிரதமர் மோடி “புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் சட்டப் பாதுகாப்பையும் அளித்துள்ளன” எனக் கூறுகிறார். மேலும் இந்த சட்டங்களை இடைத்தரகர்கள் மட்டுமே எதிர்ப்பதாகவும் சிறு குறு விவசாயிகள் இச்சட்டத்தால் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறுகிறார்.

தற்போது தில்லிக் குளிரில் போராடுகிற விவசாயிகளில் பெரும்பாலானோர் சிறு குறு விவசாயிகள்தான் என்பதை போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகளின் பேட்டிகளே உரைக்கின்றன. மேலும் “மோடி அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கவில்லை. முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி நினைக்கிறார் என ராகுல் காந்தி விமர்சிக்கிறார்.

முன்னதாக, தில்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் முள்வேலி அரண் அமைத்தும் அகழி வெட்டியும் பல்வேறு வழிகளில் தடுத்து நிறுத்த முயற்சித்த பாஜக அரசு, இறுதியாக போராட இடம் மறுத்தும் அராஜகம் செய்தது. அனைத்து தடைகளையும் வெற்றிகரமாக கடந்து முன்னேறிய விவசாயிகளிடம் இறுதியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது அரசு.

தற்போதுவரை விவசாயப் பிரதிநிதிகளுடன் நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகளிலும் வெற்று உறுதிமொழிகளை மட்டுமே வழங்கிவருகிற  மத்திய அரசைக் கண்டித்து வருகிற 8ஆம் தேதி நாடு தழுவிய பந்தை விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

விவசாயிகள் போராட்டமானது நடுத்தர வர்க்கத்தின் ஆதரவை பெற்றுவிட்டதாலும், விளையாட்டு வீரர்கள், எதிர்கட்சிகள், நடிகர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள், தொழிலாளர்கள் என சமூகத்தின் முக்கியப்  பிரிவினரின் ஆதரவைப் பெற்றுள்ளதாலும் பாஜக கும்பலாட்சியாளர்கள் வழக்கமாக மேற்கொள்கிற ஒடுக்குமுறைகளையும் ஏமாற்று வித்தைகளையும் செய்ய முடியாமல் திணறி வருகிறது.

காவி-கார்ப்பரேட் மோடி அரசுக்கெதிரான இத்தனை உறுதியோடு விவசாயிகள் ஏன் வர்க்கப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்? குறிப்பாக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் வேளாண் சீர்திருத்த சட்டத்தை ஏன் தீவிரமாக எதிர்க்கிறார்கள்? சற்று சுருக்கமாக பார்ப்போம்.

பஞ்சாப் மாநிலமும் விவசாயப் பொருளாதாரமும்

பசுமைப் புரட்சிக்கு பிந்தைய காலத்தில் இந்திய வேளாண் துறையில் ஏற்பட்ட பல்வேறு சமூகப் பொருளாதார விளைவுகளே தற்போதைய விவசாயப் போராட்டத்திற்கு காரணமாக உள்ளன.

இந்தியாவில் 1960 களில் வீரிய ஒட்டுரக விதைகள், பூச்சிமருந்துகள், உரங்கள் களைக்கொல்லிகள் ஆகியவை “பசுமைப்புரட்சி” என்ற பெயரில் விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தபட்டன. வேளாண்மையில் ஏற்படுத்தப்பட்ட இம்மாற்றங்களால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் அதிக நெல் விளைச்சலையும் கோதுமை விளைச்சலையும் பெற்றனர். மேலும் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் போன்ற விவசாய பாதுகாப்பு சட்டங்கள் வேளாண் துறையில் விவசாயிகளின் வெளியேற்றத்தைத் தற்காலிகமாக தடுத்தன.

அதிக விளைச்சலைப் பெற்ற விவாசாயிகள் தங்களது விளை பொருளை குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் வேளாண் விலைபொருள் சந்தைக் கழகத்தில்(APMC) நேரடியாக விற்பனை செய்து, போதிய வருமானத்தை பெற்றனர். வேளாண் விளைபொருள் சந்தைக் கழகத்திடம் இருந்து நெல் மற்றும் கோதுமை தானியத்தை இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்து கொள்கின்றன. அரிசி மற்றும் கோதுமை தானியத்தை குறைந்தபட்ச ஆதார விலை மூலமாக நேரடியாக மண்டியில் போடுவதால் விவசாயிகள் போதிய லாபம் பெற்றனர். இந்த வருமானத்தைக் கொண்டு உரம், களைக்கொல்லி உள்ளிட்ட இடுபொருள் செலவை செய்ய முடிந்தது.

இந்தியாவிலே மண்டி கட்டமைப்பு வலுவாக உள்ள மாநிலங்களில் பஞ்சாபும்  ஹரியானாவும் முதன்மையாக உள்ளது. கடந்த 2019-20 ஆம் ஆண்டில் மட்டும் பஞ்சாபில் மொத்த அரிசி உற்பத்தியான 118 லட்சம் டன்னில் 108 லட்சம் டன் அரசியை மண்டி மூலமாக இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்துகொண்டது. அதேவேளையில் மேற்குவங்காளத்தில் மொத்த அரிசி உற்பத்தியான 153 லட்சம் டன் உற்பத்தியில் வெறும் 16 லட்சம் டன் அரிசிதான் கொள்முதல் செய்யப்பட்டது. நாட்டின் பொது விநியோக அமைப்பில் பஞ்சாப் மாநிலத்தில் விளையும் அரிசியைத்தான் அரசு அதிகம் கொள்முதல் செய்கிறது என்பது தெளிவாகிறது.

ஆகவே நடைமுறையில் மண்டி அமைப்பும் குறைந்தபட்ச ஆதார விலையும், அர்டியக்கலும் பஞ்சாப் மாநில வேளாண் பொருளாதாரத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கின்ற நிலையில் புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்கள் மண்டிக்கு வெளியே விற்பதற்கு நிர்பந்தம்  செய்வதாக பஞ்சாப் விவசாயிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு ஆதாரமாக இருந்த சாந்தகுமார் அறிக்கையானது, மண்டி அமைப்பு முறையால் பணக்கார விவசாயிகள் மட்டுமே பலன் அடைவதாக கூறியது. பணக்கார விவசாயிகள் அதிகமான நிலத்தில் சாகுபடி செய்வதாலும் அதிக நெல் விளைச்சலாலும் மண்டி முறையால் பலன் அடைவது உண்மைதான் என்றாலும் சிறு குறு விவசாயிகளும் பலன் பெறுவதை மறுக்க முடியாது.

பஞ்சாப்பில் மண்டிக்கும் விவசாயிகளுக்கும் இடையே இணைப்புக் கண்ணிகளாக கமிஷன் ஏஜண்ட்கள் அல்லது அர்டியாக்கள் (Arhtia) செயல்படுகின்றனர். அரசின் கொள்முதல் நிலையங்களிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் விவசாயிகளுக்கு பணம் கிடைக்கவில்லையென்றாலும் அடுத்து சாகுபடிக்கான செலவை கடனாக விவசாயிகளுக்கு அர்டியாக்கள் வழங்குகிறார்கள். இடையே திருமண தேவை, குடும்பத் தேவை போன்ற விவசாயிகளின் அத்தியாவசிய செலவுகளுக்கும் வட்டிக்கு கடன் கொடுக்கின்றனர். சிறு குறு விவசாயிகளின் கடன் பொருளாதார வாழ்வில் அர்டியாக்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பஞ்சாபில் வணிக சமூகத்தை சேர்த்த மகாஜன்களாக உள்ளனர். சிறு குறு விவசாயிகளான சீக்கிய ஜாட் சமூகத்திடம் இவர்கள் வர்த்தகம் செய்கிறார்கள். ஓரளவிற்கு வசதி படைத்த சீக்கிய ஜாட்களும் அர்டியாவாக உள்ளனர்.

இந்திய கிராமங்களின் வேளாண் வணிக உறவுகளை அறியாத மோடி அரசு இடைத்தரகர்களை தவிர்ப்பது என்ற பெயரில் இவர்களை வில்லனாக காட்ட முயற்சிக்கிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டில் பிஹார் அரசு மண்டி முறையை ஒழித்து தனியார் மண்டிகளிடம் வேளாண் பொருட்களை விற்க வற்புறுத்தியது. இன்று, பிஹார் தனியார் மண்டிகளில் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு மிகக்குறைந்த விலையே கொடுக்கப்படுகிறது. பருவத்திற்கு பருவம் இந்த விலை சரிந்து வருகிறது. தற்போது பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பீஹாரில் மீண்டும் அரசு மண்டிகளை திறக்க வேண்டுமென எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவர் தேஜஸ்வி போராட்டம் நடத்தி வருகிறார்.

ஒரு விவசாயி தனது விளைபொருட்களை சிறந்த விலையையும் வசதிகளையும் கொடுப்பவர்களுக்கு நேரடியாக விற்க சுதந்திரம் பெற வேண்டும்” என பேசுகிற பிரதமர் மோடி, மண்டிகளை ஒழித்து விவசாயிகளுக்கு நேரடியாக “விற்க சுதந்தரம்” வழங்கிய பிஹார் மாநில அனுபவத்தை வசதியாக மறந்துவிடுகிறார். பிஹாரின் மண்டி ஒழிப்பு முடிவானது மாநில விவசாயிகளை முழுவதுமாக இடைத்தரகர்களின் கையில் விட்டுவிட்டதோடு குறைந்தபட்ச ஆதார விலைகயையும் பொருளற்றதாக்கிவிடுகிறது.

ஆகவே நடைமுறையில் மண்டி அமைப்பும் குறைந்தபட்ச ஆதார விலையும், அர்டியக்கலும் பஞ்சாப் மாநில வேளாண் பொருளாதாரத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கின்ற நிலையில் புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்கள் மண்டிக்கு வெளியே விவசாய விற்பனைப் பொருளை விற்பதற்கு ஏது செய்வதாக பஞ்சாப் விவசாயிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

தற்காலிக ஏற்பாடாக ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு தனியார் மண்டிகளில் விலை கிடைக்க செய்துவிட்டது பின்னர் எங்களை பிஹார் போல மத்திய அரசு கைகழுவி விடும் என பஞ்சாப் ஹரியான விவசாயிகள் அச்சப்படுகிறார்கள். மேலும் பசுமைப்புரட்சி உருவாக்கிய மண் வள இழப்பும், அதிக நீர் உறிஞ்சும் பயிர்களால் நிலத்தடி நீர் மட்ட சரிவும், அதிகரிக்கிற இடு பொருட் செலவுகளும் இந்திய வேளாண் பொருளாதாரத்தில் திவால் நிலையை நெருக்கடியை உருவாக்கியுள்ள சூழலில், இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு பேரிடியாக உள்ளன.

விவசாயிகளும் கார்ப்பரேட் அரசும்

அம்பானியிடமும் அதானியிடமும்  வேளாண் துறையை ஒப்படைப்பதற்காகவே இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற கார்ப்பரேட் எதிர்ப்பு அரசியல் விவசாயிகள் மத்தியில் ஆழமாக இறங்கிவிட்டது. அதன் வெளிப்பாடாகத்தான் அம்பானியின் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்குகளை விவசாயிகள் முற்றுகையிடுகிறார்கள்.

2014 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற  அமெரிக்க இந்திய வணிக அவை கூட்டமொன்றில் பேசியபோது, ‘அரசுக்கு தொழிலில் எந்த தொழிலும் இருக்கப்போவதில்லை’ என்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் நோக்கம் எனவும் உத்தரவாதமளித்தார்.

2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய பொருளாதார மாநாட்டு கூட்டத்தில் பேசிய வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் அகர்வால், அரசுக்கு தொழிலில் எந்த தொழிலும் இருக்கக் கூடாதென்றார்.

இந்தியப் பிரதமரின் மொழியும் இந்திய கார்ப்பரேட்களின் மொழியும் ஒத்திசைந்து இருப்பது தற்செயலானது அல்ல என்பதை மோடி அரசு மேற்கொண்ட தனியார்மய நடவடிக்கைகளையும் கார்ப்பரேட் அவைகளில் அவர் பேசியதையும்  எண்ணிபார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.

விமான நிலையங்கள், பாரத் பெட்ரோலியம், என்எம்டிசி, ஏர் இந்திய, ரயில்வே துறை இவை போக 23 அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் என தனியார் மயத்தை தொடர்ந்த மோடி அமித்ஷா கும்பலாட்சியாளர்கள் தற்போது நாட்டு மக்கள் தொகையில் சுமார் 55 விழுக்காடு மக்கள் நம்பியுள்ள வேளாண் துறையில் கைவைக்க துணிந்ததுதான் மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்கள்.

வேளாண் துறையில் அரசின் பங்களிப்பை படிப்படியாக விலக்கிக் கொண்டு விதை காப்புரிமை சட்டம் ,பண்ணை ஒப்பந்த சட்டம், மண்டி ஒழிப்பு, குறைந்த பட்ச ஆதார விலை ஒழிப்பு என  இந்திய வேளாண் பொருளாதாரத்தை அம்பானி அதானி கைகளிடம் தாரை வார்க்கிற திட்டமின்றி வேறொன்றுமில்லை.

அண்மைக்காலங்களில் மத்திய அரசிற்கெதிரான பல்வேறு போராட்டங்களையும்  ஏதோவொரு அடையாளத்தின் பெயரில் நீர்த்துபோகச் செய்து தற்காலிக வெற்றி பெற்று வந்த பாஜகவிற்கு தற்போதைய விவசாயிகளின் போராட்டம் இடி மின்னல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. ஆனாலும் நாடாளுமன்ற பெரும்பான்மை பலம், பலவீனமான எதிர்க்கட்சி போன்ற சாதகமான சூழலால் வழக்கமான அரசியல் அதிகார ஆணவத்தோடு விவசாய போராட்டத்தை பாஜக அணுகி வருகிறது. இந்த சட்டங்களில் இருந்து பாஜக அவ்வளவு எளிதாக பின்வாங்கப் போவதில்லை என தெரிந்தாலும் தில்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்று முன்னதாகவே வெற்றி பெற்றுவிட்டனர்.

 

-அருண் நெடுஞ்செழியன்

 

21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்

ஆதாரம்:

https://www.theindiaforum.in/article/agrarian-crisis-punjab-and-making-anti-farm-law-protests

https://scroll.in/article/975416/the-uneven-pattern-of-farm-protests-across-india-reflects-flawed-food-corporation-procurement

https://thewire.in/agriculture/nitish-kumar-apmc-act-farmers-protest

https://www.ndtv.com/business/government-has-no-business-being-in-business-pm-modi-tells-us-investors-673411

https://timesofindia.indiatimes.com/business/india-business/govt-has-no-business-to-be-in-business-agarwal/articleshow/72748775.cms

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW