பீகார் 2020 தேர்தல் முடிவுகள் சொல்லும் ஆகப்பெரும் நம்பிக்கையூட்டும் செய்தி என்ன?

18 Nov 2020

பீகார் தேர்தல்தான் கொரோனா தொற்றுநோயின் காலத்தில் இந்தியாவில் நடந்த முதல் தேர்தலாகும். இந்தியாவில் பீகார் மாநிலம்தான்  மோசமான மருத்துவர்-மக்கள்தொகை விகிதத்தைக் கொண்டுள்ளது, 28,391 பேருக்கு ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்ந்தெடுக்கப்பட்டால் பீகாரில் உள்ள அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்குவதாக பாசக உறுதியளித்தது. கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது, இந்த உறுதிமொழி இந்தியாவின் பொதுசுகாதார அமைப்பை அரசியலாக்கியது.

2018-19 கணக்கெடுப்பின்படி  பீகாரில் வேலையின்மை விகிதம் 10.2%, இது இந்திய சராசரியான 5.8% ஐ விட அதிகம். 2004-05 இல் 1.9 % இருந்த வேலையின்மை விகிதம் 2011-12 3.6% மற்றும் 2017-18 7.2%  இருந்தது.

கொரோனா தொற்றுநோய்க் காலத்தில் இந்தியாவின்  பொருளாதார வீழ்ச்சி 23.9%. மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையிலான மூன்று மாத நாடு தழுவிய ஊரடங்கு, மார்ச் மாதத்தில் பிரதமர் மோடியால் நான்கு மணி நேரத்திற்கும் குறைவான எச்சரிக்கையுடன் அறிவிக்கப்பட்டது.  பீகாரில் இருந்து 32.3 % (53 லட்சம் ) தொழிலாளர்கள் வேலைக்காக பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் தொழில்நகரங்களிலும், பெருநகரங்களிலும் குறைவான ஊதியத்திற்கு  அடிப்படை தொழிலாளர்களாக வேலை செய்துவருகின்றனர். கொரோனா ஊரடங்கிற்குப்பின் தங்கள் வேலை இழந்து தம் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கான வழியேதும் இல்லாமல் ஆயிரக்கணக்கான  மைல்கள் நடந்தே ஊர் திரும்பினர்.

இந்த தேர்தல், கொரோனா வைரஸ் பெருந்தொற்றில்  உலகஅளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் காலத்திலும்   மற்றும் பொருளாதார வீழ்ச்சி பெருகிக்கொண்டு இருக்கும் நேரத்திலும்  நடந்தது.

பீகார் அரசியல் களப் பின்னணி:

பீகாரில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகின்றது, அதில் மாநிலத்தின்  முக்கிய தலைவர்களில் ஒருவர் லாலு பிரசாத் யாதவ். 72 வயதான அவர்  உடல்நிலை சரியில்லாமல் சிறையில் இருக்கிறார். ராம்விலாஸ் பாஸ்வான் தேர்தலுக்கு மத்தியில் 74 வயதில் இறந்தார். தற்போதைய முதலமைச்சரான நிதீஷ் குமார் (69), தன் அரசியல் வீழ்ச்சியைக் குறைக்க கடுமையாக போராடுகிறார். அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னது, ”இந்த தேர்தலில் வெற்றியோ தோல்வியோ இதுவே எனது கடைசி தேர்தல்” என்பதாகும்.

பீகார் அரசியலில் 1990 களின் மண்டல் இடஒதுக்கீடு எழுச்சி பெரிய மாற்றத்தை உண்டாகியது, அதுவரை ஆட்சி செய்த காங்கிரசு அதன்பின் பெரிதாக வளர முடியவில்லை. மாநிலக் கட்சியின் எழுச்சிக்கு மக்கள் ஆதரவு பெரிதும் இருந்தது . உயர்சாதியினரின் கட்சியான  பாசகவிற்கு இந்த அணிதிரட்டலை உடைப்பதற்கு பெரும் சவாலாக இருந்தது. மூன்று தலைவர்களும், 1990 களில் மண்டல் இயக்கத்தின் சமூகநீதி அரசியல் கோட்பாட்டை அவர்களுக்கு தகுந்த வழியில் முன் நிறுத்திக் கொண்டவர்கள்..

30 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் அக்டோபர் 23, 1990 அன்று, பாசக தலைவர் எல்.கே. அத்வானியின் ராம் ரத யாத்திரையை சமஸ்திபூரில் தடுத்து நிறுத்தி அவரைக் கைது செய்தார்.  அத்வானியின் கைது சமூகநீதி மற்றும் இந்துத்துவாவின் குறிக்கோள்களுக்கு இடையிலான மோதலை முன்னணியில் கொண்டுவந்தது.

லாலு பிரசாத் யாதவ் ஒருபோதும் பாசகவுடன் கூட்டணி வைக்கவில்லை, இந்துத்துவாவைப் பற்றி மிகவும் உறுதியான விமர்சகராக இருந்தார். 2005 வரை 15 ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), தலித் மக்கள் மற்றும் முஸ்லிம்களின் சமூக கூட்டணியை அவர் கட்டினார். அவர் வகுப்புவாதத்திற்கு சமரசமற்ற எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மதநல்லிணக்கத்தைப் பாதுகாக்க முயன்றார்.  அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் இந்தியாவின் அணுசக்திக் கொள்கையை  விமர்சித்தார், இந்த கொள்கைகள் அனைத்தையும் மாநில கிராமப்புற வாக்காளர்களுக்கு கொண்டு சென்றார். சமபங்கு மற்றும் பிரதிநிதித்துவம் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் கண்ணோட்டத்தில், மாநில மற்றும் சந்தையின் வளர்ச்சியை அவர் விமர்சித்தார். அவரது தலைமையின் கீழான பிற்படுத்தப்பட்டோர் அரசியலின் எழுச்சி உயர்சாதியினரால் எதிர்க்கப்பட்டது. அவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். தலித் மக்கள் மற்றும் அதீத பிற்படுத்தப்பட்டோர்(EBC) குழுக்கள் யாதவர்களின் முன்னுரிமையை எதிர்த்து கிளர்ந்தெழுந்ததால் அவரது சமூக கூட்டணி நொறுங்கியது.

நிதிஷ் குமார் 1994 ஆம் ஆண்டில் லல்லு பிரசாத் யாதவிடமிருந்து விலகினார், மேலும் அவரது சமூகநீதி மாதிரிக்கு மாற்றாக உயர்ந்தார். அவர் தன்னை மாண்டலைட் என்று அழைத்தார்.

தாராளமயமாக்கலுக்குப் பிறகு மூலதன குவிப்பு மூலமாக, இயல்பாக நிகழக்கூடிய பொருளாதார வளர்ச்சியான தொழில் நகரங்களின் உருவாதல். ஆனால்  பீகாரின் புதிய வளர்ச்சி மையங்கள், மாநிலத்திற்குள் அதிகரித்துவரும் முதலீடுகள் அல்லது நகரமயமாக்கல் மூலம் வரவில்லை, மேற்கு மற்றும் தெற்கு இந்தியவில் உள்ள நகர்ப்புற மையங்களுக்கு தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்வதன் மூலம் உருவானவை.

லல்லு பிரசாத் யாதவ் மற்றும் பாஸ்வானின் அரசியலில் இருந்து வெளியேறிய அதீத பிற்படுத்தப்பட்டோர் (ஈபிசி) மற்றும் மகா தலித்துகள், நிதிஷ்குமாரில் ஒரு புதிய நம்பிக்கையைக் கண்டனர். அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவக் குறைகளை முன்னிறுத்தினார். சந்தைக்கு இணக்கமான வளர்ச்சி மாதிரியின் மொழியையும் பேசினார். உயர்சாதி வாக்குகளைப் பெற பாசகவுடன் கூட்டணி வைத்து, 2005 இல் லல்லு பிரசாத் யாதவ் மாதிரியைக் கவிழ்த்தார். பாசகவுடனான அவரது உறவுகள் எல்லா நேரத்திலும் உறுதியாக இல்லை. 2015 ஆம் ஆண்டில், மீண்டும் லல்லுபிரசாத் யாதவுடன் கூட்டணி வைத்து  மூன்றாவது முறையாக  முதலமைச்சராகும் கனவை நிறைவேற்றிக் கொண்டார். மேலும் 2017 ஆம் ஆண்டில் பாசகவின் அரவணைப்புக்குத் திரும்பினார். இம்முறை பாசகவுக்கு அடக்கமாகவும் பணிவாகவும். நிதிஷ் குமாரின் ஆளுகை மற்றும் சமூகநீதி பற்றிய கூற்றுகள் இப்போது சுக்குநூறாக்கப்பட்டன.

பீகார் ஒரு நூற்றாண்டு காலமாக இந்திய அரசியலின் மையமாக இருந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில், ‘மண்டல், மந்திர் மற்றும் சந்தை’ ஆகியவற்றால் முன்னேறிய சக்திகளின் குறுக்கு நீரோட்டங்களில்,பீகார் மற்றும் இந்தியாவின் அரசியல் போக்கை கணிசமாக வடிவமைத்தது. 2020 பீகார்  தேர்தல்  அந்த சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.

பீகார் சட்டமன்ற தேர்தல்

பீகாரில்  மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.  ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 115 இடங்களிலும், பாஜக 110 இடங்களிலும், விகாசுஷீல் இன்ஸான் கட்சி 11 இடங்களிலும், ஹிந்துஸ்தானி அவம் மோர்ச்சா 7 இடங்களிலும் போட்டியிட்டன.. மேல்சொன்ன கடைசி 2 கட்சிகள் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணியில் இடம்பெற்றிருந்தன.

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியில் ஆர்.ஜே. டி144 இடங்களிலும்,  காங்கிரஸ் 70 இடங்களிலும், சிபிஐ(மா-லெ) விடுதலை 19 இடங்களிலும், சிபிஐ 6 இடங்களிலும், சிபிஐ(எம்) 4  இடங்களிலும் போட்டியிட்டன.

மூன்றாவது அணியான கிராண்ட் டெமோகிராடிக் செகுலர் ஃப்ரண்ட் (GDSF) யில் ராஷ்ட்ரிய லோக் சமேத கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் (AIMIM )  ஆகிய கட்சிகள் பங்குபெற்றன.

மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின்  லோக் ஜனசக்தி கட்சி (LJP) 134 இடங்களில்  சிராஜ் பஸ்வான் தலைமையில் போட்டியிட்டன. இவர்கள் சென்ற முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றனர். 2020 சட்டமன்ற தொகுதி பங்கீட்டு பிரச்சனையில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். இந்த  தேர்தலில்  ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில்தான் தங்கள் வேட்பாளர்களைப் பிரதானமாக நிறுத்தினார்கள், பாசக போட்டியிடும் தொகுதிகளில் பாஜகவுக்கு முழுஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

தேர்தல் மூன்று கட்டமாக நடைபெற்றது. அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை. சராசரியாக 56% வாக்குப்பதிவு மூன்று கட்ட தேர்தலிலும் பதிவானது.

தேர்தல் முடிவுகள்:

பாசக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 125  இடங்களில்  வென்று ஆட்சி அமைக்க தேவையான  பெரும்பான்மையைப் பெற்றது. எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் 110 இடங்களை வென்றிருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மகாகத்பந்தன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வென்றது. தேசிய ஜனநாயக கூட்டணி வெறும் 58 இடங்களாகக் குறைக்கப்பட்டது. ஐக்கிய ஜனதா தள தலைவரான முதலமைச்சர் நிதீஷ்குமார், ஜூலை 2017 இல் மகாகத்பந்தனில் இருந்து வெளியேறி, தேசிய ஜனநாயக கூட்டணி முகாமுக்கு சென்றார். 

2017 சட்டமன்ற கூட்டணி இடங்கள் (தேசிய ஜனநாயகக் கூட்டணி 127, மகாகத்பந்தன்  108 )மற்றும் 2020 சட்டமன்ற கூட்டணி  இடங்கள்(தேசிய ஜனநாயகக் கூட்டணி 125, மகாகத்பந்தன்  110 ) இடையான வித்தியாசம் 2 இடங்கள்தான். ஆனால் இந்த தேர்தல் பீகார் அரசியல் வரைபடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகாகத்பந்தன் புதிதாக 53 இடங்களை கைப்பற்றியுள்ளனர் இந்த தொகுதிகள் சென்ற முறை அந்தக் கூட்டணி இடம் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி சென்ற முறை வென்ற இடத்தில் 57% இந்த முறையும் வெற்றி பெற்றது(71 தொகுதிகள்). அதேபோல் மகாகத்பந்தன் கூட்டணி 51% மீண்டும் வெற்றி பெற்றது(56 தொகுதிகள்)

 

தேசிய ஜனநாயக கூட்டணி:

தேசிய ஜனநாயக கூட்டணியில், பாசக போட்டியிட்ட தொகுதிகளில் 67 சதவீத இடங்களைக் கைப்பற்றினர், இது போட்டியிட்ட 110 தொகுதிகளில் 74 ஆகும். ஐக்கிய ஜனதாதளம் வெறும் 37 சதவீத தொகுதியில்தான் வெற்றி பெற்றிருக்கின்றது, இது 115 இல் 43 ஆகும். ஹிந்துஸ்தான் அவம் மோர்ச்சா போட்டியிட்ட 7 தொகுதிகளில் 4 இல் வெற்றி பெற்றது . விகாசுஷீல் இன்ஸான் பார்ட்டி 11 இல்  4

மகாகத்பந்தன் கூட்டணி

ராஷ்ட்ரீய ஜனதா தளம் போட்டியிட்ட இடங்களில் 52 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது , இது 144 இல் 75 இடங்கள்  ஆகும். சென்ற முறை வெற்றி பெற்ற 26 தொகுதிகளில்   தோல்வி.  காங்கிரஸ் 27 சதவீத தொகுதிகளில் தான் வெற்றி பெற்றனர், இது 70 இல் 19 இடங்கள் ஆகும். சென்ற முறை வென்ற 15 இடங்களை இழந்தனர். மகாகத்பந்தன் கூட்டணியில் வெற்றி எண்ணிக்கைக்கு மிகப்பெரும் பலம் மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகும் .  போட்டியிட்ட இடங்களில் 52 சதவீதத்தை வென்றுள்ளனர், இது 29 இல் 15 ஆகும்.

இந்த முறை 23 இடங்களில் 2000 க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. 2015 இல் இதுபோன்று 9 இடங்கள் மட்டுமே இருந்தன. மேலும், இரு கூட்டணிகளுக்கும் இடையிலான வாக்கு சதவீத வேறுபாடு 0.02%. மகாகத்பந்தன் தேசிய ஜனநாயக கூட்டணியைவிட அதிக வாக்குகளை பெற்று இருக்கிறது. இந்த முறை வெற்றியாளருக்கும் தோல்வியுற்ற கூட்டணிக்கும் இடையே 15 இடங்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இது உண்மையில் மிக நெருக்கமான தேர்தலாகும், மிகச்சிறிய வாக்கு வித்தியாசத்தில் முடிவாகி இருக்கிறது.

முஸ்லீம்-யாதவ்(M-Y) பீகாரின் வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு, ஆர்.ஜே.டி இந்த பிரிவின் பெரும்பான்மை ஆதரவைக் கட்டி எழுப்பியுள்ளது. ஆர்.ஜே.டி இன் வாக்கு சதவீதம் கடந்த 5 தேர்தல்களில் 18% ஆக இருந்தது . இந்த ஆண்டு 23 சதவீதத்தை அது அடைந்தது என்றால் குறிப்பிட்ட அளவு அதீத பிற்படுத்தப்பட்டோர்(ஈபிசி) மற்றும் மகாதலித் வாக்குகளை கவர்ந்திருக்கிறது என்று அர்த்தம். இதில் இடதுசாரிகளின் பங்களிப்பை மறுக்கவியலாது.

இந்தத் தேர்தலின் ஒரு பெரிய திருப்புமுனை, பிரச்சாரத்தின் போது தேஜஸ்வி கொண்டு வந்த புத்துணர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. ஜூன் மாதங்களின்  நிலவரப்படி இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு சுமூகமான வெற்றியைத் தரக்கூடிய தேர்தலாக இருக்கும் என்று கருதப்பட்டது, தேஜஸ்வி இந்தத் தேர்தலை இருதுருவப் போட்டியாக மாற்றினார்.

வேலை, கல்வி, மருத்துவப் பராமரிப்பு மற்றும் நீர்ப்பாசனம்” மற்றும்  “சமூக நீதி மற்றும் பொருளாதார நீதிதான் பீகாரை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றும்” என்பதை தேர்தல் முழக்கமாக மாற்றினார். அவர் பிரச்சாரத்திற்கு கொண்டு வந்த ஆற்றலும் அர்ப்பணிப்பும் பீகார் அரசியலில் பாசக கூட்டணிக்கு எதிரான ஒரு மாநிலக் கட்சியின் எழுச்சியாகப் பார்க்கப்பட்டது.“ஆர்ஜே டி வெறும் M-Y (முஸ்லீம் – யாதவ்)  கட்சி அல்ல, இது A -Z (அனைவருக்குமான ) கட்சி” என்று அனைத்து மேடைகளிலும் முழங்கினார் .  இதுதான் ஆர்ஜேடி யை அதிக பெரும்பான்மை இடங்களைக் கொண்ட கட்சியாக தற்போது பீகாரில் நிலைநிறுத்தியுள்ளது.

காங்கிரஸ் தோல்விதான் மகாகத்பந்தன் தோல்விக்கு முக்கியமான காரணம், போட்டியிட்ட தொகுதிகளில் 27% வெற்றி பெற்றனர். காங்கிரசுக்கு  வழங்கப்பட்ட 70 இடங்களில் 30-35 இடங்களில்  காங்கிரசுக்கு அடித்தளம் இல்லை. தேஜஸ்வி யாதவ் பீகாரின் வேலைகள், பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பற்றி பேசியபோது, ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரசு தலைவர்கள் சீனாவைப் பற்றி பேசினர், பிரதமர் நரேந்திர மோடியைத்  பிரச்சினைகளை எழுப்பினர். ராகுல் காந்தியின் பிரச்சாரமும், ஆர்.ஜே.டி யின் தேஜஸ்வியின் பிரச்சாரமும் ஒரே குரலாக ஒலிக்கவில்லை.

ஐக்கிய ஜனதா தளம் தேர்தலில் ஒரு பலத்த பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இந்தக் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்று மொத்த  வாக்கு சதவீதத்தில் 15.39% பெற்றது . 2015இல் வாக்கு 16.83% 71 இடங்களை  கைப்பற்றியது.  2010இல் 22 % 115 இடங்கள்  ஆகும்.  2020 தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் இந்த சரிவுக்கு,  முதல்வர் நிதீஷ்குமாரின் வாக்கு வங்கியாகக் கருதப்படும் அதீத பிற்படுத்தப்பட்டோர் (ஈபிசி) மற்றும் மகாதலித் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியாதது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

பாசக வாக்கு வங்கியாகக் கருதப்படும் உயர்சாதியினரை மட்டும் வைத்துக்கொண்டு பாசக  இந்த முறை 74 இடங்களில் வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இது உணர்த்துவது , பாசக  போட்டியிட்ட தொகுதிகளில் நிதிஷ்குமாரின் வாக்குகள் பாசக வாக்குகளாக மாறியிருக்கிறது. ஆனால் பாசகவின் வாக்குகள் ஐக்கிய ஜனதா தளம் வாக்குகளாக மாறவில்லை.

இதற்கு காரணம் லோக் ஜன சக்தி கட்சி பெரும்பாலும் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிட்ட தொகுதிகளில் உயர் சாதியினரை தங்கள் வேட்பாளராக நிறுத்தியது, அதில் 25 வேட்பாளர்கள் பாசகவின் மேலிருந்த அதிருப்தியில் லோக் ஜனசக்தியில் யில் இணைந்தனர். 27 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம் மகாகத்பந்தன் கூட்டணியுடன் தோற்ற வாக்கு வித்தியாசமும், லோக் ஜனசக்தி அந்த தொகுதிகளில்  பெற்ற வாக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவாகும். லோக் ஜனசக்தி  மற்றும் பாசக இடையே இரகசிய ஒப்பந்தம் இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. ராம் விலாஸ் பஸ்வான் வகித்த மாநிலங்களவை நாடாளுமன்றப் பதவிக்கு சிராஜ்  பஸ்வான் பெயர் பரிந்துரை செய்யப்படும், ஆனால் மந்திரி பதவி தரப்படுமா என்பது கேள்விக்குறி.  நிதிஷ் குமாரை ஓரம் கட்டுவதன்மூலம்  மண்டல் அரசியல் எச்சங்களை  முடிவுக்கு கொண்டு வருவது என்ற  சித்தாந்த வெற்றியும் பாசகவின் முக்கிய குறிக்கோளாக பார்க்கப்பட வேண்டும்.

பாசக தனக்கு  பலமில்லாத மாநிலங்களில் பயன்படுத்தும் ஒரு முக்கிய  உத்தியான, கூட்டணிக் கட்சிகளின் முதுகில் சிறிது காலம் சவாரி செய்து ஒரு குறிப்பிட்ட தூரத்தை அடைந்தபிறகு கூட்டணி கட்சி முதுகில் குத்தி கீழே தள்ளிவிடுவது. 2017 ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி ஆட்சியை தொடங்கிய பாசக, தனது கட்சியின் அடித்தளத்தை பீகார் மாநிலம் முழுவதும் பலப்படுத்திக் கொண்டு தற்போது ஜே.டி.யு முதுகில் குத்தி   இருக்கிறது. பாசக 2005இல் இருந்து ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து தன் வாக்கு சதவீதத்தையும் வாக்குகளையும்  உயர்த்திக் கொண்டது .

பீகாரில் நடந்த பேரணிகளில், பாசக,  பிற மாநிலங்களில் சோதனை செய்யப்பட்டு பலன்தரக்கூடிய தேர்தல் உத்தியான இந்துத்துவப் பரப்புரையைப் பின்பற்றியது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டியது, காசுமீர் சிறப்பு உரிமையை நீக்கியது.

மத்திய அரசு  கொரோனா பருவ காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான  புதிய திட்டங்களை பாஐக தேர்தல்  பிரச்சாரமாக மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதன் மூலம் மக்கள் மனதில் மத்திய அரசின் அதிகாரப்பலத்தை நிலைநாட்டியது. பிற  மாநிலங்களில் இருந்து தங்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு சென்ற தொழிலாளர்கள், பீகாரில் வேலையின்மைக்கு நிதிஷ் குமாரை மட்டும் குறைகூறினர்.

பாசகவின் ஒருங்கிணைக்கும் திறன் மற்றும் பரப்புரை செயல்திட்டம், ஒரு தேசிய நெருக்கடியான  காலத்திலும் தங்கள் மீது மக்கள் அதிருப்தியைத் தவிர்க்க பெரிதும் உதவியது. மொத்தம் 72,000 வாட்சப் குழுக்கள் என்ற வகையில் ஒவ்வொன்றிலும் 256 பேர் எனக் கணக்கிட்டாலும்கூட தங்களது கருத்துக்களை சுமார் 2 கோடி பேருக்கு கொண்டு சேர்க்க முடியும். கடந்த மே மாதத்திலேயே 243 தொகுதிகளுக்குமான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டது. 9500 சக்தி கேந்திரங்கள், ஒவ்வொரு சக்தி கேந்திரத் தலைவருக்கும் கீழ் 6 முதல் 7 வாக்குச் சாவடிகள் ஒதுக்கப்படும். பாசக வின் தேர்தல் பிரச்சாரத்தில் 72,000 வாக்குச் சாவடிகளிலும் மின்னணு திரைகள் வைத்து மாநிலம் முழுவதும் பாசக தலைவர்களின் பேச்சு ஒளிபரப்பப்பட்டது.  அரசியல் கட்சிகளிலேயே அதிகமாக செலவுசெய்து விளம்பரம் செய்துகொண்டது .பாசகதான். இது பாசகவின் அசாதாரண அரசியல் இயந்திரங்களைப் பற்றி தெளிவுபடுத்துகிறது. இந்தப் பெருந்தொற்று காலத்தில்கூட வாக்காளருக்கு நேரடியாக செய்தி அனுப்புவதை உறுதிப்படுத்தியது.

அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன்  (ஏ.ஐ.எம்.ஐ.எம் )

ஏ.ஐ.எம்.ஐ.எம் போட்டியிட்ட 24 தொகுதிகள், 5 இல் வெற்றி பெற்றது. இந்த 5 தொகுதிகளும்  சீமாஞ்சல் பகுதியில் இருக்கிறது, இங்கே 14 தொகுதிகளில் போட்டியிட்டது. 2015 இல்தான் ஏ.ஐ.எம்.ஐ.எம் பீகார் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டது. 2019 இடைக்கால தேர்தலில்  கிஷன்கஞ் தொகுதியில் முதல்முறையாக வென்றது.  சீமாஞ்சல் பகுதியில் இஸ்லாமியர்கள்தான்  பெரும்பான்மையினர், பிகாரிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டம் இது. பீகாரில் கல்வியறிவு விகிதம் 52 %, ஆனால் சீமாஞ்சலில்  35% சதவீதம்தான். மகாராஷ்டிராவை அடுத்து பீகாரில்தான் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்கள் அதிக எண்ணிக்கையில் நடந்தது. ஆளும் நிதிஷ்குமார் அரசு வெறும் பெயரளவில்தான் சி.ஏ.ஏ வை விமர்சித்தது. காங்கிரஸ் மற்றும் ஆர் ஜே டி பெரிய அளவில் சி.ஏ.ஏ போராட்டங்களை  முன்னெடுக்கவில்லை. இதனால் அங்குள்ள இஸ்லாமிய மக்களுக்கு இந்தக் கட்சிகளின் மேல் அதிருப்தி பெருகியது. ஓவைசி தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களில் இதை கேள்விக்குள்ளாக்கியதால்தான் மக்கள் ஏ.ஐ.எம்.ஐ.எம் பின் அணிதிரண்டனர். ஏ.ஐ.எம்.ஐ.எம்தான்  மகாகத்பந்தன் கூட்டணி சில இடங்களில் தோற்றதற்கு காரணம் என்றும்  தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற முடிந்தது என்றும் பலரால்  விமர்சிக்கப்படுகிறது. ஆனால் தேர்தல் புள்ளிவிவரங்கள் இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தவில்லை. ஏ.ஐ.எம்.ஐ.எம் போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது அதில் 5 தொகுதிகளில் வெற்றி வாக்கு வித்தியாசம் ஏ.ஐ.எம்.ஐ.எம் பெற்ற வாக்குகளைவிடவும் அதிகம்.

இடதுசாரிகளின் அரசியல் எழுச்சி

ஆர்.ஜே.டி அதன் வெற்றியை அதிகரிக்க முஸ்லிம் – யாதவ் அல்லாத  பிரிவுகளுக்குள் நுழைவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. காங்கிரசுக்கு தலித்துகள் மற்றும் உயர் சாதியினரிடையே ஆதரவு கணிசமாக குறைந்திருக்கிறது.  பீகாரில் அதீத பிற்படுத்தப்பட்டோர்(ஈபிசி) மற்றும் மகாதலித்களிடையே ஆதரவைக் கொண்ட அரசியல் சக்தி இடதுசாரிகள். இது இடதுசாரி  கட்சிகள் மீதான ஆர்ஜேடி யின் புதிய அன்பை விளக்குகிறது.

சிபிஐ (எம்எல்) விடுதலைக் கட்சியின் செல்வாக்கின் காரணம், மத்திய மற்றும் மேற்கு பீகாரில் 1970 களில் நக்சல்பாரி எழுச்சியின் வழியாக வந்தது, நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு  எதிரான  நீதியைக் கோருவதற்கும் ஆயுதப் போராட்டம் ஊடகமாக மாறியது. அப்போதிருந்து, ஆரா மற்றும் சிவான் மாவட்டங்களை உள்ளடக்கிய போஜ்புரி பேசும் பிராந்தியத்தில் தலித்துகள், எம்.எல்.  ஐ  விட்டு ஒருபோதும் விலகவில்லை. இந்த பகுதி வாக்குகள்  மிகவும் கடினமான காலங்களில்கூட எம்.எல் வசமே இருந்தன. சிபிஐ (எம்-எல்) வேலையின்மை, விவசாய சட்டங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெருக்கடி போன்ற பிரச்சினைகளைக் கையில் எடுத்தனர் . மண்டல்  சமூக நீதிக்கான பிந்தைய அரசியல் களத்தில் , சிபிஐ (எம்-எல்) சாதி, நிலவுடைமை மற்றும் பொருள் வள அடிப்படையிலான பிரச்சனைகள் ஆகியவற்றுடன் தனியார்மயமாக்கலின் தொடர்புகள் பற்றிய உரையாடல்களை நிகழ்த்தி கொண்டே இருந்தது.

புதிய இளைஞர்களின் வருகை இடதுசாரிகள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை உண்டாக்கி இருக்கிறது. ராஜுயாதவ் சிபிஐ (எம்எல்) மாணவர் அமைப்பு தலைவர் மற்றும் கன்ஹையா குமார்  சிபிஐ மாணவர் அமைப்பு தலைவர் மற்றும் பல புதிய இளைஞர்கள் இடதுசாரி கட்சிகளுக்கு வந்திருக்கின்றனர். இந்தத் தேர்தலின் வெற்றிக்கான காரணங்கள் இடதுசாரிகளின் மரபு மற்றும் அதன் மறுமலர்ச்சி மட்டுமல்ல, அரசின் சிக்கலான சமூக-அரசியல் இயக்கவியலிலும் உள்ளது. ஊழல், வேலையின்மை, கல்வி போன்ற பல்வேறு விசயங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஒருவகையான மாணவர் இளைஞர்களின் எழுச்சியைக் கண்டது, இந்த இயக்கங்கள் அரசாங்கத்தின் மக்கள் விரோத முயற்சிகளை எதிர்த்தன, அவை எழுப்பிய போராட்டங்கள் மாணவர்களுக்கு  பரந்த சமுதாயத்துடன் ஒரு தொடர்பைக் உண்டாக்கியது. இது கல்லூரி வளாக எல்லைகளை மீறுவதற்கு உதவியது, இந்தியா முழுவதற்குமான வெளிச்சத்தைத் தரத் தொடங்கியுள்ளது.

‘நக்சலைட்டுகள்’, ‘பயங்கரவாத அனுதாபிகள்’, ‘சீனா நிதியளிக்கும் மாவோயிஸ்டுகள்’, ‘துக்டே-துக்டே கும்பல்’ போன்ற சொற்களின் மூலம் பல மாதங்கள் பாசக இடைவிடாமல் பிரச்சாரம் செய்த போதிலும் இடதுசாரிகளின் வெற்றியைத்  தடுத்து நிறுத்த முடியவில்லை.

பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதி கொள்கை அரசியலை கடந்த காலத்தில் பேசினார், அவர்தான் இன்றைய இந்துத்துவாவின் முகமாக  மாறியுள்ளார், இதேபோல் பல அடுத்தகட்ட  தலைவர்களைப் பீகாரில் பாசக வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலின் படிப்பினை என்னவென்றால், பாசக நிறைவேற்றிய மக்கள் விரோத சட்டங்கள் மற்றும் அதன் தீங்கு விளைவிக்கும் கொள்கைகளுக்கு இந்த வெற்றி போலி அங்கீகாரத்தை அளித்துள்ளது. இந்த சட்டங்களின்கீழ், பாஜக-ஆர்எஸ்எஸ் செய்த அட்டூழியங்கள் முன்புபோலவே செழிக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகப்பெரிய கட்சியாக பாசக உருவெடுத்துள்ளது, இது தொழிலாளர் விரோத சட்டங்களை, புதிய விவசாய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை அதிகரிக்கும். அதாவது பீகாரில் 90% கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் இருக்கும். பாசக அரசு எங்கு அமைந்தாலும், இந்துத்துவா பயங்கரவாதம் வீறுகொண்டு வளரும்.  உ.பி யை போலவே “லவ் ஜிஹாத்” என்று புனையப்படும் வழக்குகள்மீது எந்த கட்டுப்பாடும் இருக்காது, மதத்தின் பெயரில் கும்பல் கொலை, மற்றும் ராம் மந்திர் முழக்கம் தலைதூக்கும். இவை மட்டுமின்றி, சிஏஏ என்.ஆர்.சி. யை செயல்படுத்த பாசக எதையும் செய்யும்.

1990 மண்டல் அரசியலுக்குப்பின் பிற்படுத்தப்பட்ட, அதீதி பிற்படுத்தப்பட்ட(ஈபிசி), தலித் மக்களின் அரசியல் அதிகாரத்தை முன்நிறுத்தி ஆர்ஜேடி, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிகள் ஜனதாதளம் கட்சியில் இருந்து உருவாயின.  இந்த 30 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி  மக்களின் வாக்குகளை சாதிரீதியாக மிக துல்லியமாக இந்த கட்சிகளிடையே பிரித்துள்ளது. மேற்சொன்ன எந்த கட்சியும் அது செல்வாக்கு செலுத்தும் பிரிவினரை தான்டி வளர்ச்சி அடைய முடியவில்லை. காங்கிரசின் விழ்ச்சியும் இதே காலத்தில் தொடங்கி தற்போது அது முடியும் தருவாயில் உள்ளது.

பாசக இந்தி பேசும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா ஆகியவற்றில் பின்பற்றியே உத்தியான சாதி ரீதியான சமூக பொறியமைவைக் கட்டியுள்ளனர். அதாவது பாசகவின் விசுவாசமுள்ள வாக்காளர்களான மேல்சாதி பிரிவு + பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட/ தலித் மக்கள் இடையே செல்வாக்கு இருக்கும் கட்சிகளின் கூட்டணி. பீகாரில் இது  ஐக்கிய ஜனதா தளம். அதுவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாசகவை பெரும்பான்மை இடங்களைக் கொண்ட கட்சியாக உருவாக்கியுள்ளது.

பாசக  போன்ற மதவாத பாசிச சக்திகள் மக்களை ராம் மந்திர்  முழக்கத்திற்கு பலியாக்கலாம், ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என்று கூச்சல் போட வைக்கலாம், பாகிஸ்தான் மேல் போர் முழக்கம் செய்ய வைக்கலாம். ஆனால் பீகாரில் இடதுசாரிகளின் வெற்றி தெரிவிப்பது, பாசகவின் இந்துத்துவ முழக்கங்களை மக்களிடம் வெளிச்சம்போட்டு காட்டி மக்களை வென்றெடுக்க முடியும், அனைத்து சனநாயக, இடதுசாரி சக்திகளும் ஓர் அணியில் ஒன்று சேர்ந்தால் பாசக வை தேர்தல் களத்திலும் மக்கள் மத்தியிலும் சித்தாந்த ரீதியாக வெற்றி பெறமுடியும். இதுதான் பீகார் தேர்தல் முடிவுகளில் இருந்து தமிழ்நாடு பெற்றுக்கொள்ளக்கூடிய ஆகப்பெரும் நம்பிக்கை ஊட்டும் செய்தியாகும்.

 

– சரவணன்

saranzzworld@gmail.com

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW