அமெரிக்க தேர்தல் – தாராளவாதத்தின் நெருக்கடியும் வலதுசாரி எழுச்சியும்.

15 Nov 2020

நவம்பர் 3 அன்று நடைபெற்ற அமெரிக்காவின் 46வது அதிபர் தேர்தலுக்கான வாக்குகள்  எண்ணப்பட்டு, 290 வாக்காளர் தொகுதி வாக்குகள்  பெற்ற ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க தேர்தல் நிர்வாக முறைப்படி, ஜனவரி முதல் வாரத்தில்தான் முறையே காங்கிரஸ் சபையாலும் செனட் சபையாலும், வெற்றி பெற்ற அதிபர் மற்றும் துணை அதிபர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு  பதவி ஏற்றுக் கொள்வார்கள். அதற்கு இடைப்பட்ட காலத்தில், வெற்றி பெற்றவர்கள் அதிகாரபூர்வமாக வெள்ளை மாளிகை ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்ற வகையில், நிர்வாக மாற்றத்திற்கான தயாரிப்புகள் நடைபெறும், அதில்தான் இப்பொழுது பெரும் குழப்பமும் நெருக்கடியும் தோன்றியுள்ளது .

ஜோ பைடன் வெற்றியை, அதிபர் ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், தன்னிடமிருந்து வெற்றியை திருடி விட்டதாகவும் தேர்தலில் தில்லுமுல்லுகள் நடந்துள்ளதாகவும் சட்டவிரோதமாக வாக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன அதை தான் ஏற்கப்போவதில்லை எனவும், வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் விஸ்கான்சின், மிக்சிகன், ஜார்ஜியா, அரிசோனா, நெவாடா, பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும் எனவும் கோரியுள்ளார். மேலும் மேற்கண்ட மாகாணங்களில் ட்ரம்பின் பிரச்சாரக் குழு வழக்கறிஞர்கள், மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட நீதிமன்றங்களை நாடி உள்ளார்கள்,  மாகாண நீதிமன்றங்கள் வழக்குகளை ஏற்காமல் தள்ளுபடி செய்துள்ளன. ட்ரம்பின் குற்றச்சாட்டை அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள், பெரும்பாலான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி தலைவர்கள், சர்வதேச தேர்தல் பார்வையாளர் கண்காணிப்புக் குழுக்கள் என யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை, தேர்தலில், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாக சொல்லப்படுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என மறுத்துள்ளனர். ஆனால், ட்ரம்பும் வெள்ளை மாளிகை அதிகாரத்தை கைமாற்றித் தரவேண்டிய நிர்வாகமும் அரசு செயலர்  மைக் பாம்பியோவும் திரும்பத் திரும்ப வாக்கு எண்ணிக்கை என்பது மோசடி எனவும், ட்ரம்பின் வெற்றி அறிவிக்கப்படும் என கூறி தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து, அமெரிக்க தேர்தல் ஜனநாயகத்தில் ஒரு நெருக்கடியை தோற்றுவித்துள்ளனர், ட்ரம்புக்கு நெருக்கமானவர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், சமாதானபூர்வமாக அதிகாரத்தை கைமாற்றி தர வலியுறுத்தி வருவதாகவும், இதுவரை அதை டிரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் ஊடக செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன.

ஏறக்குறைய 300 ஆண்டுகால குடியரசு, நாடாளுமன்ற அரசியல் ஜனநாயகம், அமெரிக்க கூட்டாட்சி தேச அரசை உருவாக்குவதற்கான உள்நாட்டு யுத்தங்கள் என பலவற்றையும் சந்தித்து, கடந்து வந்திருக்கிற அமெரிக்க தேர்தல் ஜனநாயக அமைப்பு, இன்றைக்கு ஒரு நெருக்கடியை சந்தித்து இருக்கிறது, ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து, அமெரிக்க ஜனநாயகத்தை, அதையொட்டி மேற்கின் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் கூட கேலிக்கூத்தாக மாற்றி வருகிறாரோ என அச்சமுற்ற, மேற்கு ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் ஒவ்வொருவராக தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்க வேண்டும் ஜனநாயகத்திற்கு அபாயம் என அறிக்கை கொடுத்து வருகிறார்கள். இறுதியில் ட்ரம்பின் நண்பரும் அவரை ஒத்த வலதுசாரி பிரிட்டன் பிரதமருமான போரிஸ் ஜான்சனும் கூட தேர்தல் ஜனநாயகத்தின் முடிவுகளுக்கு ட்ரம்ப் மதிப்பளிக்க வேண்டும் என அறிக்கை கொடுத்துவிட்டார். ஆனால், அதிபர் ட்ரம்ப்போ இதை எதையும் காதில் போட்டுக்கொள்ள தயாராக இல்லை, நெருக்கடியை அதன் இறுதி எல்லைக்கு எடுத்துச் சென்றுதான் முடித்து வைப்பார் என்பது  போல் தெரிகிறது.

அமெரிக்க உள்நாட்டு தேசப் பாதுகாப்புத் துறை அலுவலில் பணியாற்றிய, 150க்கு மேற்பட்ட முன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதிகார மாற்றத்தை கைமாற்றும், அமெரிக்க பொது சேவை துறை நிர்வாகத்திற்கு அதிபர் அதிகாரத்தை கைமாற்றி தரும் அமெரிக்க சட்டத்தின் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடிதம் எழுதி உள்ளார்கள். அக்கடிதத்தில் குழப்பத்தை நீடிக்க அனுமதிப்பது உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எனவும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தேர்ந்தெடுக்கப்பட்ட  2000 ஆம் ஆண்டு தேர்தலில்  ஏற்பட்ட இதேபோன்ற ஒரு குழப்பம் தான், 2001  இரட்டை கோபுர தாக்குதல்  நடைபெறுவதற்கு வழிவகுத்தது என எச்சரித்துள்ளார்கள். முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஒபாமா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாகாண கவர்னர்கள், அதிகார மாற்றம் சமாதான பூர்வமாக நடைபெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்கள். இவ்வாறாக, நவம்பர் மூன்றாம் தேதி தொடங்கிய குழப்பம் இதுநாள் வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.

ஆட்சி நெருக்கடியும் பிளவுபட்ட சமுதாயமும்

ஜூனியர் ஜார்ஜ் புஷ், மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தேர்வு செய்யப்பட்ட 2000ஆம் ஆண்டு தேர்தல் தொடங்கி, நடப்பு தேர்தல் வரை, பல அமெரிக்க தேர்தல் முடிவுகள் அமெரிக்க சமுதாயம் மிகப்பெருமளவில் இரண்டாக பிளவுபட்டு இருப்பதை தெட்டத்தெளிவாக காட்டி வருகின்றன, தீர்க்கப்படாத இந்த பிளவுதான் 300 ஆண்டுகால பழமையான ஜனநாயகத்தில் ட்ரம்ப் என்ற கோமாளியை கொண்டுவந்து அமர்த்தியது. அந்தப் பிளவின் மேல் அமர்ந்திருக்கிற முரட்டு கோமாளி, அமெரிக்க மக்களின் ஒரு தரப்பின் பிரதிநிதியாய் அமெரிக்க தேர்தல் ஜனநாயகத்தின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை, தான் தோல்வி அடைந்ததையும் நம்பத் தயாராக இல்லை. ஆயுதமேந்திய அவரது ஆதரவாளர்கள் அரிசோனா மாகாணத்தில் பலாத்காரமாக வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முற்பட்டிருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாட்களில், ‘இந்நாட்டில் வெள்ளையர்களின் எதிர்காலம் என் வெற்றியோடு சம்பந்தப்பட்டது, நான் தோல்வியுற்றால் அடுத்த தேர்தலில் கமலா ஹாரிஸ் போன்ற கறுப்பினப் பெண்மணி இந்த நாட்டை  ஆள்வார்கள்’ என தீவிர இனவெறி பிரச்சாரத்தை அதிபர் ட்ரம்ப் கிளறிவிட்டு இருக்கிறார். முன்னாள் அதிபர் ஒபாமா தனது நூலில் குறிப்பிடுவது போல, கருப்பன் ஒருவன் வெள்ளை மாளிகையில் உட்கார்ந்துகொண்டு  உங்களை ஆட்சி செய்து கொண்டிருக்கிறான் என 2016 தேர்தல் பிரச்சாரத்திலே ட்ரம்ப் இனவெறி பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார், நவம்பர் 3 தேர்தல் நாளில் நூறாண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு வாக்களிப்பதற்காக பெருமளவில் கூட்டம் திரண்டு இருக்கிறது. அந்தக் கூட்டம் பெரும்பாலும் வஞ்சிக்கப்பட்டதாக கருதும் இனவெறி பிரச்சாரத்திற்கு ஆட்பட்ட ட்ரம்பின் ஆதரவாளர்கள். அந்த இறுதி நாள் வாக்களிப்பு தான் அதுநாள் வரை வந்த தேர்தல் கருத்துகணிப்புகளுக்கு மாற்றாக , ஐந்து முக்கிய மாகாணங்களில் ஜோ பைடனின் முன்னிலையை குறைத்து, வாக்கு எண்ணிக்கையில் முதலாவதாக ட்ரம்ப் முன்னிலை வருகின்ற நிலைமையை, எளிதில் முடிவு காண முடியாத கடும் போட்டியை உருவாக்கியது. பிறகு கொரானா தொற்று தவிர்ப்பு, சமூக விலக்கம் காரணமாக மெயிலில் அளிக்கப்பட்ட 10 கோடி வாக்குகள் எண்ணிக்கை தொடங்கிய பிறகுதான்  பைடனுக்கு முன்னிலை மாறியது. இப்பொழுது அமெரிக்க தேர்தல் முறையில் அங்கீகரிக்கப்பட்ட அந்த மெயில் வாக்குகளைத் தான் ட்ரம்ப் தரப்பு சர்ச்சைக்குரியதாக சட்டவிரோதமானதாக மாற்றி பைடனின் வெற்றியை ஏற்க மறுக்கிறது.

 

அமெரிக்கக் கூட்டாட்சி முறையில் மத்திய தேர்தல் ஆணையம் என்ற அதிகாரம் குவிக்கப்பட்ட அமைப்பை அவர்கள் உருவாக்கவில்லை. மாகாண அரசுகள்தான் தேர்தலை நடத்துகின்றன. அதன் செயலர்தான் தேர்தல் முடிவுகளை இறுதிப்படுத்தி அறிவிக்கிறார். 50 மாகாணங்களுக்கும் வேறுபட்ட தேர்தல் அமைப்பும் தேர்தல் முறையும் நிலவுகிறது. அதில் சில மாகாணங்கள் தேர்தல் நாளுக்கு பின்பும் ஒரு வாரத்திற்கு மேலாக வாக்களிப்பதற்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடத்துவதற்கு தேர்தல் விதிமுறைகளை வைத்திருக்கின்றன. ஆனால், ட்ரம்ப் தரப்பு இதையெல்லாம் ஏற்க மறுத்து தங்களுக்கு முன்னிலை குறைய தொடங்கியவுடன், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரியும் தேர்தல்  நடத்தையை குற்றம்சாட்டியும் வன்முறை மிரட்டல் விடுக்க தொடங்கின. தேர்தல் அலுவலர்களான மாகாண அரசு செயலர்கள், அந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் நிராகரித்துவிட்டனர், ஆனாலும் அமெரிக்க நாடு தங்களுடையது மட்டுமே என்று நம்புகிற, அமெரிக்காவுக்கே முதலிடம் என்ற வெள்ளை இனவாத பாசிச கருத்தியலால் திரட்டப்பட்ட, ட்ரம்ப் ஆதரவு பழமைவாத வெகுஜன திரள், தேர்தல் ஜனநாயகத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் அதை தூக்கி போட்டுவிட்டு, தெருவில் இறங்கி ‘வாக்கு எண்ணிக்கையை நிறுத்து, வெற்றியை திருடாதே‘ என பலாத்காரத்தின் மூலம் முடிவுகளை தீர்மானிக்க விரும்பினர். தெருக்களில் கலகம் நடக்கவேண்டும் என விரும்பிய ட்ரம்பும், அது போன்ற நடவடிக்கைகளை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் உசுப்பேற்றினார். இந்த சூழலில்தான், பைடனின் சனநாயகக் கட்சி ஆதரவாளர்களும், ட்ரம்ப் அகற்றப்பட வேண்டும் என விரும்பிய தாராளவாதிகளும், சோஷலிஸ்டுகளும் பிற ஜனநாயக சக்திகளும் பைடனின் வார்த்தையான ‘ஒவ்வொரு ஓட்டும் எண்ணப்படவேண்டும்’ என்ற முழக்கத்தை எழுப்பி, அமெரிக்க நகரங்களில் பேரணிகளை நடத்தினர். அமெரிக்க சமூகத்தின் பிளவுபட்ட இரண்டு தரப்பும் ஒரு உள்நாட்டு யுத்தத்தை போல தேர்தலை நடத்தி முடித்து உள்ளனர். ஜனநாயகக் கட்சியின் வேண்டுகோளை ஏற்ற அதன் ஆதரவாளர்கள், தேர்தல் நாளுக்கு முன்பாகவே மொத்தமாக திரண்டு 10கோடி வாக்குகளை மெயிலில் போட்டு வெற்றியை உறுதி செய்ய முயற்சித்துள்ளனர், நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்து தாமதமாக விழித்துக் கொண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், தேர்தல் நாளில் பெருந்திரளாக வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்துள்ளார்கள், இப்பொழுது வாக்கு எண்ணிக்கையில் கடும் போட்டி நிலவுவதால்,  தெருவில் கலகத்தை நிகழ்த்துவதன் மூலம் முடிவைத் தீர்மானிக்கலாம் என நினைக்கிறார்கள்.  ஆனால், பழுத்த நிர்வாக அனுபவமும் சாதுரியமும் கொண்ட பைடன் தரப்பு, ஒவ்வொரு ஓட்டும் எண்ணப்பட வேண்டும் என நிதானமாக திட்டமிட்ட வகையில் வெற்றிக் கோட்டை வரைந்திருக்கிறார்கள்.

தாராளவாதத்தின் நெருக்கடியும், வலதுசாரி எழுச்சியும்-

வெகுசன வாக்கில் ட்ரம்ப் மற்றும் பைடன் இருவரும் தலா ஏழு கோடிக்கு மேலான வாக்குகளை பெற்றுள்ளார்கள். கூடுதலாக சில  10 லட்சம் வாக்குகளை பைடன் பெற்றுள்ளார். ட்ரம்ப் தேர்தலில் தோற்றாலும் அவருக்கான செல்வாக்கும் அவரது கருத்தும் தோற்கடிக்கப்படவில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ட்ரம்ப் நிர்வாகம் கொரானா பெரும் தொற்று தடுப்பு பணியை மோசமாக கையாண்டு அதிகமான உயிரிழப்பு நிகழ்ந்தபோதும், ஜார்ஜ் ஃபிளாய்ட் படுகொலையை ஒட்டி மக்களின் ஜனநாயக எழுச்சி எழுந்தபோதிலும், ட்ரம்பின் செல்வாக்கு குறையவில்லை என்பது, அமெரிக்க சமூகத்தில் நிலவும் ஆழமான முரண்பாட்டைதான் வெளிப்படுத்துகின்றன.

ஜோ பைடனுக்கு பல்லின கலாச்சாரம் நிலவும் வளர்ச்சியடைந்த மாநிலங்களான, கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட பெருநகரங்களிலும், படித்த மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்க வெள்ளையர்கள் மத்தியிலும், ஆசியா ஆப்பிரிக்கா லத்தீன் அமெரிக்க மற்றும் பூர்வகுடி அமெரிக்கர்கள் மத்தியிலும், வாக்கு சதவீதம் அதிகமாக விழுந்திருக்கிறது. ட்ரம்புக்கு உட்புற மாகாணங்களான மத்திய மேற்கு பகுதியிலும், குறைவாக படித்த வெள்ளையின தொழிலாளர்கள் மத்தியிலும்,  கிராமப்புற கவுண்டிகளிலும் அதிகமான வாக்கு பதிவாகி இருக்கிறது. இரண்டு தரப்பு வாக்காளர்களுடைய பிரதேச இன வர்க்கம் சார்ந்த வேறுபாடு, இருதரப்பு கோரிக்கைகளின் நலன்கள் வெவ்வேறானவை என்பதை காட்டுகின்றன. பைடன் தரப்பு ஆதரவு வாக்குகளின் கோரிக்கை, இனப்பாகுபாட்டுக்கெதிராக பல்லினக் கலாச்சாரத்தை வலியுறுத்துவதாகவும், பழமைவாதத்திற்கு எதிராக தாராளவாத அரசியல் சுதந்திரத்திற்கு அறைகூவல் விடுப்பதாகவும், குடியேற்றக் கொள்கையில் தாராளம் காட்டுவதாகவும், அரசியல் சுதந்திரத்தை, குடியாட்சி ஜனநாயகத்தை காப்பதாகவும் உருவகபடுத்திக் கொண்டது, ட்ரம்ப் தரப்பு உலகமய, தாராளமய, குடியேற்ற கொள்கையினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, பிறநாட்டு தொழிலாளர் குடியேற்றம், சமூகப் பாதுகாப்பற்ற நிலை போன்றவற்றால் நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட, வெள்ளையின தொழிலாளர்கள், ஊரகப் பகுதியை சார்ந்தவர்களின் கோரிக்கையாக சமூக பதற்றத்தின் வடிகாலாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

ட்ரம்ப் உலகமய தாராளமய கொள்கைகளுக்கு மாற்றாக, சீன நிறுவனங்களுக்கு தடை விதித்து, வர்த்தக பாதுகாப்பு வாதத்திற்குள் நுழைந்து, சீனாவுடன் வர்த்தக போரைத் தொடங்கினார். இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எச்1பி விசாவை குறைத்து, அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என நிர்பந்தம் கொடுத்தார், பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்களில்  இருந்தும், சர்வதேச பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றிலிருந்தும் வெளியேறினார். பல நாடுகளுக்கு வர்த்தக நிபந்தனைகளை கடுமை ஆக்கினார், பல முஸ்லீம் நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறுவதற்கு தடைகளை பிறப்பித்தார் என ட்ரம்பின் பல நடவடிக்கைகள், தாராளவாதம் கொண்டுவந்த நெருக்கடிகளுக்கு மாற்றான மருந்தாக, வெள்ளையின தொழிலாளர்களுக்கும், இன நிறப்பாகுபாடுகள் கொண்ட வெள்ளை மேலாதிக்க ஆளும் தேசியவாதிகளுக்கும்,  ஒருசேர ஆறுதல் அளித்திருக்கலாம்.

இரண்டு தரப்பிலும் வாக்களிக்க கூடிய பெரும்பான்மையான மக்கள் தொழிலாளி மற்றும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள் தான். ஆனாலும், தத்தமது சமூக அடையாளங்களோடு ஒரு தரப்பு வர்த்தக சுதந்திரத்தோடு, தனிநபர் அரசியல் சுதந்திரத்தையும் ஆதரிக்கும் தாராளவாத முதலாளிகளோடு சேர்ந்து, தேர்தல் சண்டையை நிகழ்த்தியிருக்கிறது. இன்னொரு தரப்பு தனது பொருளாதார நெருக்கடியோடு சேர்த்து, வர்த்தக பாதுகாப்பு வாதத்தையும், வெள்ளை தேசிய வாதத்தையும் பேசுகிற வலதுசாரி முதலாளிகளோடு சேர்ந்து, எதிர்த்தரப்பில் மூர்க்கமான ஆக்ரோஷத்துடன் அதிகார சண்டையை நிகழ்த்தி இருக்கிறது. இரண்டு தரப்பில் வலதுசாரி தரப்புதான் விடாப்பிடியான தாக்குதல் நிலையில் இருந்துகொண்டிருக்கிறது. தாராளவாத தரப்பு தற்காப்பு நிலையைதான் பேணிக் கொண்டு இருக்கிறது. இது அமெரிக்காவிற்கு மட்டும் தனி குறிப்பான பண்பாக இல்லை, பிரிட்டனில் பிரக்சிட் வழியாக வெற்றிபெற்ற போரிஸ் ஜான்சன், இந்தியாவில் மோடி, என வலதுசாரி எதிர்ப் புரட்சிகர எழுச்சி, இன்றைய தோல்வியடைந்த தாராளமய உலகின் பொதுபோக்காகவும் இருக்கிறது.

ட்ரம்ப் மற்றும் வலதுசாரிகளை பொருத்தவரை, உலகமய தாராளமய கொள்கைகளை பயன்படுத்திக்கொண்டே, அதற்கு எதிராக வருகிற சமூக நெருக்கடிகளை, செக்குலர் தாராளவாத தேசியத்திற்கு எதிராக நிறுத்தி, தனது வர்த்தக பாதுகாப்பு வாதத்திற்கும் இனவாத தேசியத்திற்கும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  தாராளவாதிகளை பொறுத்தவரை, தாங்கள் அமுல்படுத்திய தாராளவாத வர்த்தக கொள்கையும், அரசியல் கொள்கையும், மக்களுக்கு பொருளாதார விடுதலையை தராமல், சமூக அரசியல் நெருக்கடியைத் தோற்றுவிக்கும் போது, அதற்கு மாற்று தீர்வுகளை கொள்கைகளை முன்வைக்க முடியாமல், மக்களாட்சி, அரசியல் சுதந்திரம், அரசமைப்பு சட்டத்தின் மகத்துவங்களை உச்சஸ்தாயியில் பேசிவிட்டு, எழுந்துவரும் வலதுசாரி தேசிய அலை முன் ஒடுங்கிப் போய் நிற்கிறார்கள், அப்போதும்கூட இடதுசாரிகள் சோஷலிஸ்டுகள் முன் களத்திற்கு வந்தால், அதைக் கண்டும் அச்சம் கொண்டு,  அவர்களை களத்தில் இருந்து அகற்றுவதற்கு தான் முதல் முயற்சி எடுக்கிறார்கள், அமெரிக்க தேர்தலில் சோஷலிச கொள்கைகளோடு , அனைவருக்கும் அடிப்படை ஊதியம், கல்வி, மருத்துவம் அரசின் பொறுப்பு, பசுமைப் பொருளாதாரம் என்ற சமூக நல தேர்தல் அறிக்கையை முன்வைத்த பெர்னி சாண்டரை, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்தலில், அதீத கொள்கை என முத்திரை குத்தி அவரை களத்தில் இருந்து அகற்றிவிட்டு, ஏகபோக மூலதனங்களின் மிதவாத கணவான் ஜோ பைடனை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்தனர்.

அமெரிக்க ஏகபோக முதலாளிகளைப் பொறுத்தவரை, அதிலும் புதிதாக வளர்ந்திருக்கிற தகவல் தொழில்நுட்ப சென்டி பில்லியனர்களை பொருத்தவரை, ட்ரம்பின் கோமாளித்தனங்கள் அமெரிக்க நாகரிகத்திற்கு உவப்பானதாக இல்லை என்பதைத் தவிர, அவர்களுக்கு வேறு ஒரு சிக்கலும் இல்லை. வர்த்தகப் போர் மற்றும் விசா கட்டுப்பாடுகள் குறித்து சில நேரம் பேசியதைத்தவிர வேறு எந்த பெரிய அரசியல் விமர்சனங்களையும் ட்ரம்ப் ஆட்சியின் மீது அவர்கள் முன்வைக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, தாராளவாதிகள் வலதுசாரிகள் என 15 கோடி மக்கள் இரு தரப்பாக பிரிந்து அரசியல் மேடையில் மோதிக்கொள்வது என்பது, அவர்களின் ஏகபோகத்திற்கு எந்த இழப்பையும் ஏற்படுத்தவில்லை, அவர்களை கட்டுப்படுத்த  எந்தத் தேர்தல் கோரிக்கையும் எழுப்பப்படவில்லை. அவ்வாறு, கொள்ளைநோய் காலத்திலும் அபரிமிதமான மூலதனக் குவிப்பில் ஈடுபட்டிருக்கிற ஏகபோக சக்திகளுக்கு, வரி விதிக்க வேண்டும் என பேசிய, தேர்தல் கோரிக்கை விடுத்த பெர்னி சாண்டரும் களத்திலிருந்து  அகற்றப்பட்டுவிட்டார்.  ஒருவேளை ஏகபோக சக்திகளுக்கு இடையில் நடைபெறுகிற அரசியல் சண்டை நெருக்கடி எல்லாம், சமூகத்தில் அரசியலமைப்பில் ஒரு சமன்பாட்டை பேணுவதற்கும், சில சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்வதற்கும், அவர்களுக்கு எதிரான பெரும் வெடிப்பை தவிர்க்கிற அதிர்வு தாங்கியாகவும் பயன்படக்கூடும் என நினைக்கலாம்.

இடதுசாரிகள் கம்யூனிஸ அமைப்புகளைப் பொறுத்தவரை, ஒரு பிரிவினர் சுயேச்சையான பாசிச எதிர்ப்பு வேலைத்திட்டம் ஏதுமின்றி, பாசிச எதிர்ப்பு நடவடிக்கைக்காக முதலில்  பெர்னி சாண்டரையும், பிறகு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனையும் ஆதரித்து நின்றார்கள். இன்னொரு பிரிவு, பெர்னி சாண்டர் உள்பட எல்லோரையும் விமர்சித்துவிட்டு, பாசிச எதிர்ப்புக்கான குறைந்தபட்ச நடைமுறை அரசியல் வேலைத்திட்டம் ஏதுமின்றி, பாசிஸ்டுகள், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர் என எவ்வித அரசியல் வேறுபடுத்துதல், வகைப்படுத்துதல் ஏதுமின்றி, ‘அனைவரும் மக்கள் விரோதிகள், ஏகாதிபத்தியவாதிகள், போர் வெறியர்கள்‘ என விமர்சித்து தேர்தல் போராட்டத்தில் சம்பந்தப்படுத்தி கொள்ளாமல், சமூகத்தின் அடிப்படை மாற்றத்திற்காக மக்கள் போராட வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அண்மையில் நடந்த மக்கள் எழுச்சியில் பணியாற்றிய, பல்வேறு பாசிச எதிர்ப்புக் குழுக்கள், செயல்பாட்டாளர்கள், கலைஞர்களும் கூட மேற்குறிப்பிட்டது போன்ற அராஜக நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தனர். இடதுசாரிகள் இரண்டு தரப்பும், நாடு தழுவிய உடனடி அரசியல் நெருக்கடிகளுக்கு, அரசியல் அரங்க போராட்டங்களுக்கு, உடனடி வேலைத்திட்டம் ஒன்றை கொண்டிருக்கவில்லை என்பதில் மட்டும்தான் ஒற்றுமையாக இருந்தனர். மற்ற எல்லாவற்றிலும் அவர்கள் மத்தியில் ஒற்றுமையின்மைதான் நிலவியது. ஒருபுறம் ஜனநாயக இயக்கத்திற்கு வாலாயிருப்பதும், மறுபுறம் ஜனநாயக இயக்கத்தில் பங்கு பெறாமல் இருப்பதுமான போக்கு, இடதுசாரிகளின் அரசியல் அணி சேர்க்கையை சிதறடித்ததோடு, நாடு தழுவிய ஜனநாயக இயக்கத்தில் திட்டவட்டமான கோரிக்கைகள் வளர்ச்சி பெறுவதற்கும், சோஷலிச சக்திகள் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெறுவதற்கும், ஜனநாயக இயக்கத்தில் தீர்மானகரமான தலையீடு செய்வதற்கும் தடையாக இருந்தது. இந்த பலவீனம்தான் பெர்னி சாண்டர் போன்றவர்களை கூட, சில சுற்றுகளிலேயே தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறுவதற்கு வழிவகுத்தது. இது, அமெரிக்க இடதுசாரிகளின் தனி குறிப்பான பண்பாக மட்டுமில்லை, உலக இடதுசாரி இயக்கத்தின் தற்கால பொது போக்காக இந்தத் துன்ப நாடகம் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருகிறது.

அமெரிக்க தேர்தல், பாசிசக் கோமாளி ட்ரம்பை உடனடியாக ஆட்சியிலிருந்து அகற்றி இருக்கிறது. ஆனால், ட்ரம்பை உருவாக்கிய சமுதாய நெருக்கடி இன்னும் தீர்க்கப்படாமல் தான் இருக்கிறது. தாராளவாதத்தின் நெருக்கடியையும், வலதுசாரி எழுச்சியையும் முடிவுக்குக் கொண்டுவரும் ஜனநாயக இயக்கம்தான் பிளவுண்ட சமூகத்தின் நெருக்கடியை தீர்க்க முடியும்.

-பாலன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW