காவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க!

23 Sep 2020

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு – பத்திரிக்கைச் செய்தி

தூத்துக்குடி  மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் காவல் படுகொலைகள் ஏற்படுத்திய அதிர்வலைகள்  இனிமேல் காவல் வன்முறையை மட்டுப்படுத்தும்  என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இயல்பாய் எழுந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக காவல் சித்திரவதைகளும், காவல் படுகொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பது குடிமைச் சமூகத்தினிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

மார்ட்டின் என்பவர் மீதான கொடுக்கல் வாங்கல் புகார் குறித்து விசாரணை செய்ய சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லாமல் காவலர் குடியிருப்பிற்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை விலங்கினைப் போல் இரும்புச் சங்கிலியில் பிணைத்துக் கொடூரமாகப் போலீசார் சித்திரவதை செய்துள்ளனர். இதையறிந்த சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் அவர்கள் நேரில் சாத்தான்குளம் காவல்நிலையம்  சென்று ஆய்வு செய்தபோது மார்ட்டினைக் கைது செய்யவில்லை என்று காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். மார்ட்டினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பு மருத்துவச் சிகிச்சைக்கு, சாத்தான்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி கொண்டு செல்லப்பட்டு 28.08.2020 அன்று குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் குற்றவியல் நடுவரின் உடனடி தலையீடு இல்லையென்றால் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவருக்கும் ஏற்பட்ட கதிதான்  மார்ட்டினுக்கும் ஏற்பட்டிருக்கும்.

இதற்கிடையே, சாத்தான்குளம் துணைக் கண்காணிப்பாளர் சரகத்திற்குட்பட்ட  தட்டார்மடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட  சொக்கன் குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் அதிமுகவைச் சேர்ந்த திருமணவேல் என்பவருக்கும் இடையே எழுந்த நிலத் தகராறு மீதான புகாரில் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஒருதலைப்பட்சமாக திருமணவேலுவிற்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளார். எனவே காவல் ஆய்வாளர் மீது மதுரைக் கிளைச் சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வம் குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் தலையீட்டில் செல்வம்  காரில் கடத்திச்  செல்லப்பட்டுக்  கொலையுண்ட சம்பவம் மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதே போன்று மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், வண்டாரி ஊராட்சி, அணைக்கரைபட்டிக்  கிராமத்தைச் சேர்ந்த இதயக்கனி என்பவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவுக்காரப் பெண் புனிதாவும் ஒருவரையொருவர் விரும்பிக்  காதலித்துள்ளனர். திருமண வயதை எட்டாத புனிதாவிற்கு அவரது பெற்றோர் வேறொருவர்க்கு அவரைத் திருமணம் செய்ய முயற்சித்துள்ளனர். இதை விரும்பாத புனிதா கடந்த 21.8.2020 அன்று     இதயக்கனியுடன் ஊரைவிட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார். இது குறித்து இதயக்கனி மீது புனிதாவின் தந்தை பாண்டி கொடுத்த புகாரின் பேரில்  சாப்டூர் போலீசார் இதயக்கனியின் தம்பி ரமேஷ் என்பவரைப் போலீசார் விசாரணை என்ற பெயரில் கொடுமையான சித்திரவதைகளைச் செய்துள்ளனர். நாகர்கோவில் அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக்கில் மூன்றாமாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் ரமேஷைப் போலீசார் கடந்த 16.9.2020 அன்று இரவு சுமார் 9.30 மணிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இரவு முழுவதும் சித்திரவதை செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுச் செல்லாமல் மற்றொரு இடத்தில் தொடர் சித்திரவதை செய்யப்பட்டு 17.09.2020 அன்று 6.50 மணியளவில்  இதயக்கனி இருக்குமிடத்தைச் சொல்லாவிட்டால் உயிர் இருக்காது என்று எஸ்.ஐ.ஜெயக்கண்ணன் அவரை  மிரட்டி அழைத்துச் சென்றுள்ளனர். இதனைத் தொடார்ந்து மறுநாள்  சதுரகிரி மலையடிவாரத்தில் உள்ள சிறிய மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார். இதுபோன்று அடுக்கடுக்காக தமிழகத்தில் நடைபெறும் காவல் சித்திரவதைகள், காவல் படுகொலைகளால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனா்.

தமிழக அரசே !

  • காவல் சித்திரவதையால் பாதிப்புற்றோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்பெற வேண்டும்.
  • குடும்ப உறுப்பினர் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கபெற வேண்டும்.
  • பொறுப்பான அதிகாரிகள் மீது உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பெற்று, 302 இ.த.பி.வின் கீழ் கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்து காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.
  • இடமாற்றம் போதாது, பணியிடை நீக்கம் போதாது; அனைத்து வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உடனே மாற்றப்பெற வேண்டும்.
Sd/-ஒருங்கிணைப்பாளர்: தோழர் தியாகு Sd/-செயலாளர்: மீ.த. பாண்டியன்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW