மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள்! சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி!

14 Sep 2020

கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத மீனவர்கள் 9 பேர் 53 நாட்களுக்குப் பின்பு மியானமர் கடற்படையால் நேற்றிரவு மீட்கப்பட்டனர் என்ற செய்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு கிடைக்கப்பெற்றது. 53 நாட்கள் காத்திருப்புக்குப் பின்பு கரை திரும்பாத மீனவர்கள் உயிருடன் மீட்கப் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்திருக்கிறது.

10 நாட்களுக்கான உணவையும் தண்ணீரையும் கொண்டு 50 நாட்களுக்கு மேலாக சமாளித்து தாக்குப் பிடித்திருக்கிறார்கள். நேற்றுதான் மியான்மர் கடற்படை அவர்களைக் கண்டுபிடித்ததாக தெரியவருகிறது. சென்னையில் இருந்து 1145 கடல் நாட்டிக்கல் மைல் அதாவது 2125 கிமீ தூரம் தத்தளித்து பயணம் செய்திருக்கிறார்கள். முதல் நாளிலேயே அவர்களது படகு பழுதடைந்திருக்கிறது. கடலோரக் காவல்படை, கடற்படை, செயற்கோள்கள் இருப்பதாகவும் அது நம்மைக் காப்பதாகவும் நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இம்மீனவர்களைக் காப்பதில் இவையாற்றிய பங்கென்ன? என்பது யாருக்கும் தெரியவில்லை. மியான்மர் கடற்படைதான் இப்போது நம் மீனவர்களை மீட்டுத் தந்துள்ளது.

மீன் துறை அதிகாரிகள் சிலர் அக்கறையோடு முயற்சி எடுக்க நினைத்தும் போதிய அதிகாரமோ வசதிகளோ இல்லை என்பதை நம்மால் அறிய முடிகிறது. காணாமல் போனவர்களைத் தேடுவதற்கான அதிகாரம் மீன் துறைக்கு இல்லை. மீனவர்களைப் போர்க்கால அடிப்படையில் தேடி மீட்பதற்கு வழிகாட்டத்தக்க கொள்கை திட்டமொன்றும் அரசிடம் இல்லை. மீனவர்கள் காணாமற் போன செய்தி அறிந்தால் மீன்துறை அதிகாரிகள் கடலோரக் காவற்படையிடம்தான் உதவிக் கோரமுடியும். கடலோரக் காவல் படை எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பதைக் கண்காணிப்பதற்கோ கேள்விகேட்பதற்கோ மீன் துறைக்கு அதிகாரமில்லை. ஆகவே, கொள்கை திட்டமோ அதை அமலாக்குவதற்கான அதிகாரமோ அதற்கு தேவையான வளங்களோ என எதுவுமே இல்லாத துறையாக மீன் துறை இருந்து வருகிறது. அந்த துறையின் உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில்தான் கடந்த 50 நாட்களாக காணாமற்போனோர் உறவுகள் கண்ணீரோடு காத்துக் கிடப்பது நடந்தது. முதல் நாளில் இருந்து 10 பேர் காணாமல் போனதாக ஒரு செய்தி உலவியது. 9 பேரின் பெயர் மற்றும் குடும்பத்தார் விவரம் மட்டுமே உறுதியான நிலையில் பத்தாவது நபர் யார் என்பதை அடையாளம் காண முடியாத நிலைமை இருந்தது. இப்போதுவரை கடலுக்குப் போனது 9 பேரா? 10 பேரா? என்பதை உறுதிசெய்ய முடியாத அளவில்தான் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அரசின் கண்காணிப்புப் பொறிமுறை உள்ளது.

40 நாட்களாகியும் மீனவர் கரை திரும்பவில்லை என்ற செய்திகூட சமவெளி வாழ் மக்களிடம் தெரியாத வண்ணம் மீனவ மக்களின் துயரத்தையும் கோபத்தையும் தமிழக ஆட்சியாளர்கள் மறைத்து வைத்திருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று ‘தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்க’த்தால் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை ஊடகங்களில் வெளிவந்து காசிமேடு மீனவர்கள் கரை திரும்பாத செய்தியை வெகுமக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்த்தது. கிழக்கு நோக்கிச் சென்ற படகு வங்கதேசம், மியான்மரை ஒட்டிய கடற் பகுதிக்கு சென்றிருக்க வாய்ப்புண்டு என்பதால் தூதரக உறவைப் பயன்படுத்தி அப்பகுதிகளில் தேடவேண்டும் என்பதை அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டினோம்.

அதை தொடர்ந்து திருவொற்றியூர் பகுதியில் உள்ள சனநாயக இயக்கங்களை உள்ளடக்கிய தமிழ்மக்கள் உரிமைக் கூட்டியக்கத்தின் சார்பில் செப் 8 அன்று காசிமேடு மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்திலும் தூதரக உறவைப் பயன்படுத்தி வங்கதேசம், மியான்மரில் தேட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மேலும், கூட்டமைப்பினர் சார்பாக ஒரு குழுவாக சென்று உதவி இயக்குநர் திரு வேலன் அவர்களை சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தினோம்.

இந்நிலையில் இன்று செப்டம்பர் 14 அதிகாலையில் இருந்து மீனவர் அனைவரும் மியான்மர் கடற் பகுதியில் நல்ல உடல் நிலையோடு மீட்கப்பட்டிருக்கும் செய்தி எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது. மீனவர்களின் குடும்பத்தார் அவர்களின் வரவை எதிர்ப்பார்த்து கண்ணீர் மல்க காத்திருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு மீனவர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வரும் நடவடிக்கையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் கரை திரும்பாத மீனவர்களை மீட்பதற்கான கொள்கை திட்டம் ஒன்றை வகுத்திட வேண்டும். இதுவே பல்லாயிரம் கோடி அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் தமிழக மீனவர்கள் கடலில் தத்தளித்து கரை திரும்பாமலே போகும் துயரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க உதவும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

 

தோழமையுடன்

ஆ.சதிஸ்குமார்

கெளரவத் தலைவர்,

தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கம்

9940963131

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW