ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு! – அருண் நெடுஞ்செழியன்

03 Sep 2020

பாராளுமன்ற மைய மண்டபத்திலே ஜூலை -1,2017 நள்ளிரவு 12 மணிக்கு “ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை” என்ற முழக்கத்துடன் மிகவும் ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட சரக்கு மற்று சேவை வரி விதிப்பு முறையானது தற்போது அதனது குழப்பமான அமலாக்க முறையாலும் மைய பாஜக அரசின் தன்னிச்சையான அராஜக  போக்காலும் நாட்டின் வரி விதிப்பு முறையையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்துவிட்டது. தற்போது  ஜி எஸ் எடி சட்டம் 2017  இன் படி, மாநிலங்களுக்கு தரவேண்டிய இழப்பீட்டு நிதியை வழங்காமல் மாநில அரசுகளை திவால் நிலைமைக்கு தள்ளிவிட்டுள்ளது.

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் வருமானம் பெருகும் என்றும் ஒரே குரலில் நாட்டின் சூறையாடும் முதலாளித்தவ சக்திகள் முதலாக ஆளும் கட்சி வரையிலும் ஒரே பல்லவியை பாடிய கும்பல்கள் தற்போது சிக்கலுக்கு கொரோன வைரசை பொறுப்பாக்குகின்றனர்.

கடவுளின் செயலால் நாட்டில் கொரோனா வைரஸ் வந்துவிட்டதாக மண்ணுலக பிரச்சனையை முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியை  விண்ணுலகத்திற்கு மாற்றிவிட்டார் நிதி அமைச்சர். ஆனால் “கடவுளின் செயல்” தொடங்குவதற்கு முன்பான முதல் பத்து காலாண்டில் நாட்டின் வளர்ச்சி வீதம் வீழ்ச்சிப் பாதையில் சென்றதையும் சிறு குறு தொழில் நசிந்ததையும்,வேலை வாய்ப்பின்மை பெருகியதும் நாட்டின் நிதி அமைச்சருக்கு தெரியாமல் போய்விட்டது பாவம்! கடவுள் செய்தியாளர் சந்திப்பை நடத்தி நிதி அமைச்சருக்கு மறுப்பு வழங்க மாட்டார் என்ற ஒரே தைரியத்தில் நிதி அமைச்சர் அப்பாவியான கடவுள் மேல் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப் பாளியாக்கிவிட்டார்!

தற்போது கடந்த நாற்பது ஆண்டுகால வரலாற்றில் இல்லாதவாறு நடப்பாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி வீதம் -23 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. கடவுளில் செயலால் இந்தியாவில் கொரோனா வந்துவிட்டதால், கடவுளின் செயலால் தொழில் முடக்கம் ஏற்பட்டு விட்டதால், வரி வருவாய் குறைந்ததால், கடவுளின் செயலால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 2.35 லட்சம் கோடி ரூபாய் தர இயலாது, கடவுளின் செயலால் ஜி எஸ் டி சட்டத்தை மதிக்க மாட்டோம், ஆகவே கடவுளின் செயலால் மாநிலங்கள் திவால் ஆக்குவோம்!

தற்போதைய சிக்கலுக்கு காரணம் என்ன?

கடந்த ஆகஸ்ட் 29 அன்று  ஜி எஸ் டி கவுன்சிலின் 41 ஆவது கூட்டம் நடைபெற்றது.நாட்டின் நிதி அமைச்சர், ஜி எஸ்டி கவுன்சில் செயலாளர், மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் முதன்மை விஷயமாக வரி இழப்பீட்டு தொகை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.நடப்பு காலாண்டில்  ஜிஎஸ்டி வருவாய்க்கும் வசூலுக்குமான வித்யாசத் தொகை ரூ 2.35 லட்சம் கோடி எனக் கூறியுள்ளது. இந்த வித்யாசத் தொகையை தம்மால் வழங்க இயலாது எனவும் மாநிலங்களே இத்தொகையை கடனாக வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் கூறிய நிதி அமைச்சர் மாநில அரசுகளுக்கு இரண்டு வாய்ப்புகளை முன்மொழிந்துள்ளது.

முதல் வாய்ப்பு ஒரே  சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ 97,000 கோடி ரூபாயை, சலுகை வட்டியின் கீழ் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம். மேலும்,எதிர்காலத்தில் வசூலாகிற  செஸ் வரியிலிருந்து இத்தொகைக்கான அசலையும் வட்டியையும் கழித்துக் கொள்ளலாம். கூடுதல் தொகை வேண்டுமானால் அத்தொகைக்கான வட்டியை கட்ட வேண்டும். இரண்டாவது வாய்ப்பு, மொத்த 2.35 லட்சம் கோடியையும் கடன் வாங்கிக் கொள்ளலாம். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பு ஜி எஸ் டி சட்டத்தை மீறுவதோடு கூட்டாட்சி தத்துவத்துவதற்கும் வேட்டு வைத்துவிட்டது. மாநில அரசுகளை நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டது.

முன்னதாக ஜி எஸ் டி வரி முறையின் கீழ், உற்பத்தி பொருளை நுகர்கிற மாநிலங்களுக்கு வரி வருவாய் செல்வதால், தொழில்துறை மாநிலங்கள் ஜிஎஸ்டி வரி முறையை எதிர்த்தன. உதாரணமாக தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிற பொருள் மேற்கு வங்கத்தில் நுகரப்படுகிறது என்றால், இதன் வரி வருவாய் மேற்கு வங்கத்திற்கு செல்லும்.இம்முறையால் தொழில் வளர்ச்சியில் முன்னேறிய தமிழகம்,மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட தொழில்துறை மாநிலங்கள் இழப்பை எதிர்கொள்கின்றன. இதை சரிக்கட்டும் விதமாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு(2017-2022) மாநில அரசுகளுக்கு மைய அரசு இழப்பீடு தருவதாக கூறியது. இந்த இழப்பீட்டு உறுதிமொழியை  ஜி எஸ் டி சட்டத்திலும் சேர்த்தது. (GST CESS COMPENSATION). இதன் பிறகே அனைத்து மாநிலங்களும் ஒரே நாடு ஒரே வரிமுறையை ஒப்புக்கொண்டன. இதுவரை தாமதமாகவேனும் வழங்கி வந்த இந்த இழப்பீட்டுத் தொகையை இனி வழங்கவே முடியாது என தற்போதைய கூட்டத்தில் நிதி அமைச்சர் ஏகபோகமாக அறிவித்துள்ளார். மாநிலங்களின் 60 விழுக்காட்டு நிதியை  சட்டப்பூர்வமாக அபரித்துக் கொண்ட மத்திய அரசு,தற்போது தனது சொந்த சட்டத்தையே மீறியுள்ளது. ஜி எஸ் தி இழப்பீட்டு தொகையையும் வளர்ச்சியையும் இதுவரை இணைத்திடாத அரசு,தற்போது தனது நெருக்கடிக்கு  மாநில அரசுகளை பொறுப்பாளியாக்கிவிட்டது.

கொரோனா பேரிடர் காலத்திலே மாநில சுகாதார கட்டமைப்பிறகு  போதிய நிதி ஒதீக்கீடு செய்ய வழிவகை தெரியாத மாநில அரசுகளோ மத்திய அரசின் இந்த ஒற்றை மையவாத நிலைப்பாட்டை  கடுமையாக சாடத் தொடங்கியுள்ளன. பாஜக ஆள்கின்ற மாநிலங்கள் கோவா,அசாம் தவிர பிற அனைத்து மாநிலங்களும் இந்த முடிவை எதிர்த்துள்ளன. குறிப்பாக கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, பஞ்சாப், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் மைய அரசுகளுக்கு மாநில வரி நிலுவையை விடுவிக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளன. தனியாக கூட்டமும் நடத்தியுள்ளன.

மைய அரசு கடன் வாங்கி மாநில அரசுகளுக்கு இழப்பீட்டுத் தொகையை தரவேண்டுமே தவிர மாநில அரசு வாங்கச் சொல்லக் கூடாது என கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார். போலவே ஏதோ ஒரு முறையில் ஒப்புக்கொண்டவாறு மைய அரசு இழப்பீட்டை வழங்க வேண்டும் என மேற்கு வங்க மாநில நிதி அமைச்சர் அமித் மித்ரா கூறியுள்ளார்.

மாநில அரசுக்கு தரவேண்டிய தொகையை மறுத்துவிட்டு மாநில அரசை கடன் வாங்க கூறி அதற்கு வட்டியை போடுகிற ஒரு  அரசை இந்தியா இதற்கு முன் கண்டிருக்காது! பொருளாதார அதிகாரத்தை மைய அரசிடம் இழந்துவிட்டு மாநில நலத் திட்டங்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பிற்கும் செலவு செய்திட இயலாத அவல நிலைக்கு மாநில அரசுகளை மத்திய அரசு தள்ளி விட்டுள்ளது.

தாராளமய பொருளாதார கொள்கையின் முரண்பாடுகள் பொருளாதார நெருக்கடிகளாக, வளர்ச்சி குறியீட்டின் வீழ்ச்சியாக இந்தியாவில் வெளிப்பட்டு வருகிறது. இந்த நெருக்கடியை மோடி அரசு தனது தவறான கொள்கை முடிவுகளால் துரிதப்படுத்திவருகிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியும், ஜிஎஸ் டி வரி முறையின் தோல்வியும் நாட்டின் தாராளமய கொள்கையை நடைமுறைப்படுத்திய ஆளும்கட்சிகளின் தோல்வியை வெளிப்படுத்திவிட்டது.

-அருண் நெடுஞ்செழியன்

ஆதாரம்:

https://theprint.in/india/governance/at-least-10-states-to-reject-modi-govts-borrowing-options-say-gst-compensation-their-right/492981/

https://scroll.in/article/971657/with-the-centre-refusing-to-pay-compensation-to-states-is-gst-nearing-an-end

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW