EIA 2020 – சூழலியல் பாதுகாப்பு அல்ல தாரைவார்ப்பு

31 Jul 2020

கடந்த இரண்டு மாதங்களாக சிலர் மட்டுமே பேசிவந்த சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவுச் சட்டம் 2020 மீதான விவாதம் தற்போது பரவலான விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து பத்மப்ரியா என்பவர் வெளியிட்ட விளக்கக் காணொளியானது ஒரு சில நாளிலேயே பல்லாயிரம் மக்களை சென்றடைந்திருக்கிறது. இன்று, சூழலியல் தாக்க வரைவு குறித்த வாதப் பிரதிவாதம் தீவிரமாகிவருகிற நிலையில், மத்திய பாஜக அரசின் மிரட்டல் காரணமாக பத்மப்ரியா தனது காணொளியை நீக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

மக்களின் கருத்துகேட்பிற்காக வெளிப்படையாக வெளியிடப்படுகிற வரைவின் மேல் கருத்து கூறுவதற்கு நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், வரைவிற்கு எதிராக கருத்து கூறிய காரணத்தாலும், கமுக்கமாக இருந்த விஷயத்தை பட்டிதொட்டி எங்கிலும் கொண்டுசென்ற காரணத்தாலும் பத்மப்ரியா மீது பாஜக இயல்பாகவே கோபம் கொள்கிறது. அக்கட்சியின் கல்யாண் ராம் என்பவர், பத்மப்ரியா வின் முகவரி மற்றும் எண் வேண்டுமென்று மிரட்டல் விடுக்கும் தொனியில் ட்விட்டரில் பதிவிடுகிறார். இதையடுத்து, சில நாட்களில் காணொளி நீக்கப்படுகிறது. தற்போது, இந்த பாஜக பிரமுகர், சூழலியல் தாக்க வரைவு குறித்து விமர்சனம் செய்த நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யா மீது அருவருப்பான வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

ஒரு பாசிஸ்ட் கட்சியின் அடிப்படையான பண்பு என்பது, சாமானிய மக்களின்மீது அதிகாரத்தைப் பிரயோகித்து மிரட்டிப் பணியவைப்பது. இப்படித்தான், கந்த சஷ்டி  காணொளி வெளியிட்ட கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் உள்ளிட்ட மூவர்மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. சாமானிய மக்களின் குரல்வளையை அதிகாரத்தின் துணைக்கொண்டு ஒடுக்கியவர்கள் எப்போதுமே வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்படுவார்கள் என்பதை மட்டுமே கூறிக்கொண்டு நமது மைய விவாதத்திற்கு வருவோம்.

சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டத்தின் உருவாக்கமும் நோக்கமும்

சூழலியல் பாதுகாப்பு குறித்த அரசியல் சமூகத்தின் அக்கறையானது 1970களில் மைய விவாதமாக மாறத்தொடங்கிய நிலையில், 1972 ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோல்ம் நகரில் சூழலியல் பாதுகாப்பு மாநாட்டை ஐநா நடத்துகிறது. அதில் பங்கேற்றுப் பேசிய இந்தியாவின் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, சூழலியல் பாதுகாப்பு குறித்த அக்கறையை தனது உரையில் வெளிப்படுத்தினார். (http://lasulawsenvironmental.blogspot.com/2012/07/indira-gandhis-speech-at-stockholm.html)

அதனைத்தொடர்ந்து 1972 ஆம் ஆண்டிலே இந்தியாவில் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது, பின்னர் நீர் பாதுகாப்பு சட்டத்தை 1974 ஆம் ஆண்டிலும் காற்று மாசை தடுக்கிற சட்டத்தை 1981 ஆம் ஆண்டிலும் மத்திய அரசு இயற்றியது. பிறகு 1984 இல் போபால் யூனியன் கார்பைடு விஷவாயுக் கசிவு விபத்தில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்த பேரிடர் நிகழ்விற்கு பின்னர் சூழலியல் பாதுகாப்பு சட்டம் 1986  ஐ மத்திய அரசு கொண்டு வந்தது.

பின்னர், சூழலியல் பாதுகாப்புச் சட்டம் 1986 இன் சட்டப்பிரிவு மூன்றின்கீழ் சூழலியல் தாக்க சட்டத்திற்கான வழிகாட்டுதல்களை 1994 இல் உருவாக்கியது. இதன்படி, இயற்கை வளத்தை நுகர்கிற வகையிலோ, இயற்கை சூழல் அமைவின் மீது விளைவை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு வர்த்தக செயல்பாடுகளும் சூழலியல் தாக்க சட்டம் 1994 இன் வழிகாட்டுதலை ஏற்று சூழலியல் அனுமதி ஒப்புதல் வாங்கவேண்டும் என்ற கொள்கை உருவாக்கப்பட்டது. தொழில்நிறுவனங்கள் மீதான அரசின் கண்காணிப்பை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும். இதன் மூலமாக நாட்டின் நீர்மின் திட்டங்கள் அனல்மின் மற்றும் அணுமின் திட்டங்கள், சுரங்கத்திட்டங்கள், சாலை மற்றும் கட்டுமானம் திட்டங்கள், சிமெண்ட் ஆலைகள், வேதியியல் ஆலைகள் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் மத்திய அரசின் சூழலியல் பாதுகாப்பு கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டது.

சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டத் திருத்தங்கள்

சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டத்தின் வழிக்காட்டுதல்கள் 2006 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டன. இந்த இடைப்பட்ட காலங்களில் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் இணைப்புகள் யாவற்றையும் கணக்கிலெடுத்துக்கொண்டு EIA 2006 இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு விளக்கமளித்தது. ஆனால், நடைமுறையில் சூழலியல் பாதுகாப்பை EIA 2006 திருத்தம் மென்மேலும் நீர்த்துப் போகச் செய்தது. அதாவது பதினோரு ஆண்டுகளில் 12  முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொழில் நிறுவனங்கள் சூழலியல் தடையில்லா சான்றிதலை எளிதாக பெறுகிறவகையில், இந்த திருத்தங்கள் செய்யப்பட்டன. உதாரணமாக சிலவற்றைப் பார்ப்போம்.

ஜூன் 13,2002 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது, முதலீட்டின் அடிப்படையில் சூழலியல் தடையில்லா சான்றிதல் பெறுவதிலிருந்தும், மக்களின் கருத்து கேட்பிற்கும் சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கை அளிப்பதிலிருந்தும் விலக்களித்தது.

  • குழாய் பதிப்பு மற்றும் அதிவிரைவு சாலை திட்டங்களுக்கு சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கை வழங்கவேண்டும் என்ற விதிமுறையில் விலக்களிக்கப்பட்டது.
  • நூறு கோடிக்கும் குறைவான முதலீட்டில் புதிதாக தொடங்குகிற தொழிலுக்கு முழு விலக்களிக்கப்பட்டது.

இதில் சிக்கல் என்னவென்றால், நூறு கோடிக்கும் குறைவான முதலீட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிற நீர்மின் திட்டங்கள், அப்பகுதியின் சூழலியல் அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சுற்றுப்புற நிலங்கள் நீரில் மூழ்கலாம். இவ்வாறான நிலையில் நூறு கோடி என மதிப்பின் அடிப்படையில் விலக்கு அளிக்கிற அபாயகரமான நிலையை உருவாக்கியதுபோலவே, EIA 2006 வரைவறிக்கையில் பல திருத்தங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டன.

ஜனவரி, 16,2020 இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது, வேதாந்தா மற்றும் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப எண்ணெய் எரிவாயு திட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டன.

எண்ணெய் எரிவாயு கண்டறிகிற பணிகளை மேற்கொள்கிற அனைத்து நிறுவனங்களுக்கும் சூழலியல் முன் அனுமதி பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டது.

அதன்படி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 314 இடங்களில் இனி வேதாந்தாவும் ONGC யும் வேலையை தொடங்கலாம்.

மொத்தத்தில் இந்தியாவில் உலகமய, தனியார்மயம் தீவிரம் பெற்ற 29 ஆண்டுகளில் கார்ப்பரேட்களின் வேலையை சுலபமாக்குவதற்கு, சுரண்டலை சட்டப்பூர்வமாக்குவதற்கு மக்கள் கருத்து கேட்பு நடைமுறைகளை குறைத்தும் திரித்தும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

சூழலியல் பாதுகாப்பு சட்டங்களின் நடைமுறையாக்கம்

சூழலியல் பாதுகாப்புச் சட்டகத்தை இந்திய அரசியல் அமைப்பு பலமாக உருவாக்கியிருந்தாலும் அதன் நடைமுறையாக்கத்தில் பலவீனமாக இருந்தது. நிலச் சீர்திருத்த சட்டம் எவ்வாறு நடைமுறையாக்கத்தில் தோல்வியில் முடிந்ததோ அதுபோன்றே, இந்தியாவில் சூழலியல் பாதுகாப்பு விதிகளும் பெரும்பாலும் தொய்வாகவே அமலாக்கப்படுகிறது. இந்தியாவில் பல நீர்மின் திட்டங்கள், சாலை கட்டமைப்புகள், அணுமின் நிலையங்கள், எண்ணெய் எரிவாயு எடுப்புத் திட்டங்கள், சிமெண்ட் ஆலைகள், சுரங்கப் பணிகள், வேதியியல் நிறுவனங்கள் ஆகியவை பெரும்பாலும் விதிகளை மீறியே இயங்கி வருகின்றன. கண்காணிப்பும் தண்டனைகளும் பெயரளவிற்கே இருந்தன. கடந்த பத்தாண்டுகளாக சூழலியல் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், இந்த  சூழலியல் பாதுகாப்பு விதிமீறல்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் அம்பலப்படுத்தப்பட்டன. போலவே கருத்துக்கேட்புக் கூட்டங்களில் வெகுஜன மக்களின் பங்கேற்பு மற்றும் சூழலியல் தாக்க அறிக்கை குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

ONGC தகவலின்படி, காவிரிப்படுகையில் மொத்தம் 700 எண்ணெய்க் கிணறுகள் உள்ளதென்றும், அதில், 183 கிணறுகள் பயன்பாட்டில் உள்ளதென்றும் தெரிவிக்கின்றது. ஆனால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆவணத்திலோ  219 எண்ணெய்க் கிணறுகள் உள்ளதென்றும், அதில் 71 கிணறுகள் பயன்பாட்டில் உள்ளதென்றும் கூறுகிறது. அதாவது, பயன்பாட்டிலுள்ள 112 கிணறுகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பில் இருந்து விடுபட்டுள்ளது. மேலும், மாசுக் கட்டுப்பாட்டின் ஆவணப்படி பயன்பாட்டிலுள்ள 71 கிணறுகளும் போதிய சூழலியல் அனுமதி இல்லாமல் இயங்குகிறது. முன்னதாக கதிராமங்கலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு விபத்தின்போது இந்த உண்மையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளிக்கொணர்ந்தது. அதாவது. ONGC தங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்றது. உலகத் தரத்திலான பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறுகிற ONGC நிறுவனமானது, தொடர்ச்சியாக ஏற்படுகிற விபத்துக் குறித்தும் சூழலியல் அனுமதி குறித்தும் முன்னுக்கு பின் முரணாக பேசிவருகிறது.

கடந்த மே 7 அன்று, விசாகப்பட்டினம் எல்ஜி பாலிமர் தொழிற்சாலையில் ஏற்பட்ட  விஷவாயுக் கசிவு விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த பேரிடருக்கு பிந்தைய ஆய்வின்போது, இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிற்சாலை சூழலியல் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது.

கடந்த மே 27 அன்று, கிழக்கு அசாமின் டின்சுகா மாவட்டத்தில் இயங்கிவந்த ஆயில் இந்தியாவின் (OIL INDIA) எரிவாயுக் கிணற்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 1300 குடும்பங்கள் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டனர். இவ்விபத்து குறித்து ஆய்வு செய்ததில் ஆயில் இந்தியா நிறுவனமானது, போதிய சூழலியல் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காதது தெரியவந்தது. கடந்த 15  ஆண்டுகளாக அசாம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் போதிய அனுமதி வாங்காமல் இயங்கி வந்ததும் அறியப்பட்டது. இந்த விபத்தால் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதி நாசமாகியது.

இதுபோல் கடலூர் சிப்காட்டில் இயங்குகிற ஆபத்தான வேதியியல் தொழிற்சாலைகள், சிமெண்ட் சுரங்கத் தொழில்கள் யாவுமே முறையான சூழலியல் பாதுகாப்புச் சட்டத்தை கடைபிடிப்பதில்லை.

தற்போதைய திருத்தம் குறித்த விமர்சனம்

சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020 ஆனது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டம்- 2006 ஐ நீர்த்துப்போகச் செய்வதோடு, சூழலியல் பாதுகாப்பு சட்டம் 1986 ஐ கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மேலும் கடந்தகாலத்தில் பசுமை தீர்ப்பாயத்தால் பெறப்பட்ட முக்கியத் தீர்ப்புகள் மற்றும் திருத்தங்கள் யாவற்றையும் பழைய நிலைக்கே மீண்டும் தள்ளி விடுகிறது. பாஜக அரசானது, கொரோனா பேரிடர் கால சூழலை பயன்படுத்தி வரைவு மீதான கருத்துக்கேட்பு கால வரம்பை குறைத்து அறிவித்தது. இதை எதிர்த்து சூழலியல் செயல்பாட்டாளர்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மேலும் அறுபது நாளைக்கு காலக் கெடுவை நீட்டித்து  (ஆகஸ்ட் 11 ) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நாடு முழுவதும் சூழலியல் சீர்கேடுகள்  அதிகரித்துவருகிற நிலையில், சூழலியல் பாதுகாப்பை உறுதிசெய்கிற வகையிலே சட்டங்களை கடுமையாக்குவதற்கு பதிலாக, சுற்றுசூழல்மாசை அதிகரிக்கிற வகையிலே, இயற்கை வளத்தை கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக நாட்டிலே சட்டங்களை திருத்தத்தான் இவ்வளவு அவசரம் காட்டப்படுகிறது.

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் யாவுமே சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கையை வழங்குவது, கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்துவது மற்றும் சூழலியல் தடையில்லா சான்றிதழை மத்திய மாநில அரசிடம் பெறுவது ஆகிய முக்கிய மூன்று சூழலியல் பாதுகாப்பு நடைமுறையில் இருந்து விலக்களிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. தற்போதைய திருத்தமும் அவற்றையே வலியுறுத்துகிறது. அதை மூன்று வழிகளில் செய்கிறது. முதலாவதாக, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்ற பெயரில் திட்டங்களை எதிர்ப்பில்லாமல் அமலாக்குவது, இரண்டாவது, திட்ட வரையறைகளை மாற்றி விலக்களிப்பது, இறுதியாக கருத்துக்கேட்பு கூட்டம் மற்றும் புகார்கள் மூலமான மக்களின் பங்கேற்பை அகற்றுவது ஆகும். இந்த வரைவு முழுவதுமே இந்த மூன்று நோக்கத்தை சாரமாகக் கொண்டுள்ளன.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்

தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வரைவு அறிக்கையானது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கவேண்டிய அவசியமில்லை என்கிறது. (Draft_EIA-2020,பக்கம்-9) இந்த திருத்தமானது, திட்டம் குறித்த பொதுமக்களின் கரிசனங்களை கவலைகளை அறவே ஒழித்துக்கட்டுகிறது. பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டங்கள் அவசியமில்லை என்கிறது. பொதுமக்களை முற்றிலுமாக புறக்கணிக்கிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்ற பெயரில் மண்ணுக்கும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய ஆபத்தான திட்டங்களை கேள்விகேட்பாரின்றி கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளலாம் என்றாகிவிடுகிறது. திட்டத்தின் “வெளிப்படைத்தன்மை”  அம்சத்தை  “தேசிய முக்கியத்துவத்தால் அரசு மாற்றீடு செய்கிறது.

இனி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என சேலம்–சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டு, விளை நிலங்களை பிளந்துகொண்டு சாலை போடலாம். ஏனெனில், இந்த திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே பசுமை வழி சாலைத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று, இதற்கு சூழலியல் முன் அனுமதியொன்றும் தேவையில்லை என மத்திய அரசின் தேசிய சாலை போக்குவரத்துத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. சுற்றுச்சூழல் அமைச்சகமும் இதற்கு ஒத்தூதியது. இனி திருத்த சட்டம் வந்துவிட்டால் போதும் யாரையும் கேட்காமலே நமது வீட்டுக் கூரையின் மீதே சாலை போட்டுவிடுவார்கள். எதிர்த்துக் கேட்டால் தேசத் துரோகி பட்டம் கிடைக்கலாம் அல்லது குண்டர் சட்டம் போடப்படலாம்.

இதைப்போலவே, தேனியில் அமையுள்ள நியூட்ரினோ ஆய்வுத் திட்டமும் கூட தேசிய முக்கியத்துவம் வாய்ந்து திட்டம் என்ற பெயரில், சூழலியல் தடையில்லா சான்றிதல் தேவையில்லை என்கிற அறிவிப்பு வரலாம். முன்னதாக நியூட்ரினோ ஆய்வுக் கூடத் திட்டத்தை, திட்ட வகையினம்  A இல் கொண்டு வராமல், திட்ட வகையினம்  B இல் கொண்டுவந்து தடையில்லா சான்றிதழ் அவசியமில்லை என மத்திய அரசு பசுமை தீர்ப்பாயத்தில் வாதிட்டது. ஆனால், திட்டமானது (கேரள மாநிலம்) இடுக்கியில் உள்ள மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவில் இருந்து 4.9 கிமீ தொலைவில் வருவதை சுட்டிக்காட்டி இத்திட்டத்தை வகையினம் A இல் கொண்டுவந்தது பசுமைத் தீர்ப்பாயம். மேலும், திட்டம் A வகையில் வந்ததால் சூழலியல் தடையில்லா சான்றிதல் பெறுவது கட்டாயமாகிவிட்டது. தற்போது இந்த திட்டம், சூழலியல் அனுமதி பெறுவதற்கான நடைமுறையால் முடங்கியுள்ளது. ஆக, இனி புதிய வரைவு சட்டமாகிவிட்டால், இத்திட்டம் நிச்சயமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக மாற்றப்பட்டு சூழலியல் தடை நீக்கப்பட்டுவிடும்.

திட்டத்தை வகைப்படுத்துவது

தற்போதைய திருத்தத்தில் திட்டங்கள் A,B1 மற்றும் B2 என மூன்றாக வகைப்படுத்தப்பட்டு திட்டத்தின் அளவு மற்றும் பண்பைப் பொருத்து சூழலியல் முன் அனுமதியின் அவசியத் தன்மையை தீர்மானிக்கின்ற முறை நடைமுறையில் உள்ளது. இதில் B2 வகையினத்தில் உள்ள சில திட்டங்களுக்கு சூழலியல் முன் அனுமதி அவசியமில்லை என்கிறது. ஆக, திட்டங்களை A வகையில் இருந்து B2 விற்கு மாற்றிவிட்டால் மேற்கூறிய எந்தத்தடையும் நிறுவனங்களுக்கு இல்லாமல் போகிறது. டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டப் பணிகளில் (314 கிணறுகள்) ஈடுபடவுள்ள வேதாந்தாவும் ONGC யும் எரிவாயுவைக் கண்டறிகிற (Exploration) பணிகளுக்கு இவ்வாறுதான் மத்திய அரசு விலக்களித்து, உத்தரவிட்டது. தற்போதைய வரைவின் படி கீழ்வரும் திட்டங்கள் B2 வகையில் கொண்டு வரப்படுகிறது. (Draft_EIA_2020 பக்கம் – 37)

  • 25 MW கீழ் மின்சார உற்பத்தி செய்கிற நீர்மின் திட்டங்கள்.
  • அனைத்து சூரிய மின் தகடு உற்பத்தி திட்டங்கள் மற்றும் சூரியசக்தி  மின் உற்பத்தி திட்டங்கள்
  • 1,50,000 சதுமீட்டர் பரப்பளவிலான கட்டுமானத் திட்டங்கள்
  • 2,000 ஹெக்டேர் பாசன பரப்பளவிற்கு உட்பட்ட நீர்ப் பாசனத் திட்டங்கள்
  • பக்கவாட்டில் 70 மீ அளவிற்கான சாலை விரிவாக்கத் திட்டங்கள்
  • சிமெண்ட் மற்றும் சுரங்கப் பணிகளில் ஈடுபடுகிற சிறு குறு நிறுவனங்கள்
  • துறைமுகங்களை இணைக்கின்ற நீர்வழி சாலைகள்.

சிக்கல் என்னவென்றால், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உற்பத்தி திறனை கணக்கில் கொள்ளாமல், அமைவிடத்தை கணக்கில் கொண்டால் மட்டுமே அத்திட்டத்தால் ஏற்படுகிற சூழலியல் விளைவுகளை அறியமுடியும். உதாரணமாக நீர்மின் திட்டமானது எந்தவித அறிவியல் பூர்வமான ஆய்வுமின்றி திடுமெனே ஆற்றின் குறுக்கே கட்டினால் என்னவாகும் யோசித்துப் பாருங்கள்.

பொதுமக்கள் பங்கேற்பிற்கு கட்டுப்பாடு:

புதிய திருத்தத்தின்படி, இனி தொழிற்சாலைகளின் சூழலியல் விதிமீறல்கள் குறித்து மக்கள் புகார் தெரிவிக்க முடியாது. மாறாக, தொழிற்சாலை பிரதிநிதிகளோ, அரசு பிரதிநிதிகளோ நிறுவன சூழலியல் விதிமீறல் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் எனக்கூறுகிறது. (Procedure of Public Consultation. (Draft_EIA_2020 பக்கம்-46) அதாவது, நிலக்கரி கனிமத்தை எடுக்கிற நிறுவனமானது, தாமாக முன்வந்து சுரங்கப் பணியால் பாதிப்பு வந்துவிட்டது எனக் கூறுமாம். இவ்வாறு விதிமீறலை மாசுக் கட்டுப்பாடு வாரியம் கண்டறிந்தால் நாளைக்கு இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் பணத்தை செலுத்திவிட்டு செல்லலாம். வண்டிவண்டியாக கனிம வளங்களை அள்ளிச் செல்பவர்களுக்கு ஆயிரம் பத்தாயிரம் ரூபாய் ஒரு பணமே இல்லை என்பது இவர்களுக்கு தெரியாது போலும்!

இது ஒருபக்கம் என்றால் மற்றொருபுறம், பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து நிறைய திட்டங்கள் விலக்களிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு,

  • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள்
  • B2 வகையில் வருகிற திட்டங்கள்
  • கடலுக்குள் 12 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு அப்பாலுள்ள திட்டங்கள்
  • எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து நூறு கி.மீட்டர் தொலைவில் வருகிற திட்டங்கள்

போலவே பொதுமக்கள் கருத்துக் கேட்பு கால அவகாசமும் 30 நாளிலிருந்து  இருபது நாளாக குறைக்கப்பட்டுள்ளது. (Draft_EIA_2020 பக்கம் – 48)

முன்னதாக, திருவண்ணாமலை கவுத்தி வேடியப்பன் மலையை குடைந்து எடுக்கப்படுகின்ற இருப்புத்தாது திட்டமானது சூழலியல் தாக்க மதிப்பீட்டின் விளைவாலும் அதனது தொடர்ச்சியாக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் மக்களின் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தப்பட்டது. இனி எதிர்காலத்தில் இத்திட்டமும்  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்ற பெயரில் சூழலியல் தடையில்லா சான்றிதல் இன்றியும் மக்கள் கருத்துக் கேட்பு இன்றியும் மலையை வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில் இந்த வரைவானது சூழலியல் பாதுகாப்பிற்கு எதிரானது, மக்களுக்கு எதிரானது. சூழலியல் மீறலுக்கு சட்டபூர்வ ஒப்புதல் வழங்குகிறது.

இறுதியாக:

கொரோனா பேரிடர் காலத்தில் சீனாவிலிருந்து பல தொழிற்சாலைகள் வெளியேறி இந்தியாவில் தொழில் தொடங்கும் என ஆருடம் கூறுகிற பிரதமர், அதற்கு மக்களை மிகப் பெரிய விலை கொடுக்க கோருகிறார். கார்ப்பரேட்களின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாக காட்டுகிறார். பேரிடர் காலத்திலே உலகப் பணக்காரர் வரிசையில் அம்பானி ஐந்தாம் இடத்திற்கு முன்னேறுகிறார். மக்களோ வேலை வருமானம் இன்றி பட்டினியால் சாகின்றனர். இருபது லட்சம் கோடி திட்டம் என கதையளக்கிற பிரதமர், மக்களை தெருக்கோடிக்கு தள்ளுகிறார். பேரிடரை வாய்ப்பாக பயன்படுத்தவேண்டும் எனக் கூறுகிற பிரதமர்,  கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கு வாய்ப்பை உருவாக்கித் தருகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி II ஆட்சியின்போது அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனை, ‘ஜெயந்தி டாக்ஸ்’ என மோடி தாக்கினார். அதாவது, பல தொழில்களுக்கு சூழலியல் அனுமதி என்ற பெயரில் சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை செய்வதாகவும், ஜெயந்தி டாக்ஸ் கட்டினாலே திட்டம் அனுமதிக்கப்படுகிறது எனத் தாக்கினார். தற்போதைய தனது இரண்டாம் சுற்று ஆட்சிக் காலத்தில், அதானிக்கு நிலக்கரி சுரங்கம் வழங்கவும், சூரிய மின் திட்டங்கள் வழங்கவும், அம்பானிக்கும் வேதாந்தா அகர்வாலுக்கும் எண்ணெய் எரிவாயு எடுப்பு பணிகளை சுலபமாக்கவும் இயற்கை வளங்களை தாரைவார்க்கவும் சூழலியல் அனுமதி விதிகள், பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கள் யாவற்றையுமே பாஜக அரசு சட்டபூர்வமாக நீக்கவுள்ளது.

நிலமும் நீரும்தான் உயிர் பிழைப்பதற்கான ஆதாரமாக உள்ளது. இவை இரண்டும் ஆரோக்கியமாக இல்லை என்றால், ஒரு சமூகம் உயிர் வாழ முடியாது. இன்று மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நீரும் நிலமும் கனிம வளங்களும்  சூறையாடும் முதலாளிகளின் சந்தைப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. இன்று தமிழகமெங்கிலும் பேரழிவுத் திட்டங்களாலும் கனிமவளக் கொள்ளைகளாலும் இயற்கை வள அழிப்பும் விவசாய அழிப்பாலும் சீரழிந்துவருகிற நிலையில் மற்றொரு இடியாக இந்த திருத்தச் சட்டம் வருகிறது. திமுக ஆட்சிக்கு சற்றும் சலைத்திடாத அதிமுகவோ பேரழிவு திட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கிறது.

கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் அணுவுலை விரிவாக்கங்கள், கெயில் குழாய் பதிப்பு, விளை நிலங்களில் உயர்மின் கோபுர பதிப்பு. நியூட்ரினோ திட்டம், டெல்டா மாவட்டத்தில் எண்ணெய் எரிவாயு எடுப்புத் திட்டம், எட்டுவழிச் சாலை, பத்துவழிச் சாலை, சாகர்மாலா, துறைமுகங்கள், அனல்மின் நிலையங்கள் இவற்றோடு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகிய அழிவுப் பாணியிலான வளர்ச்சி திட்டங்களால் பேரழிவை எதிர்கொண்டு வருகிறது. பன்னாட்டு முதலாளிகளின்‘ மீன்பிடிக் கப்பல்களால் கடல்வளம் கொள்ளையடிக்கப் படுவதற்காகப் பாரம்பரியமான மீனவர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர். கூடங்குளம் அணுமின்நிலையம், கல்பாக்கம் அணுமின்நிலையம், அனல்மின் நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றால் கடல்வளம் இரசாயனக் கழிவுகளாலும், அணுக்கழிவுகளாலும், தொழிற்சாலைகளின் சுடுநீர்க் கழிவுகளாலும் அழிக்கப்படுகிறது. மொத்தத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என மொத்த நிலப்பரப்பும் இன்று பாலையாக திரிந்துள்ளது.

இந்த பேரழிவுத் திட்டங்களால் நிலத்தையும் நீரையும் இழந்து நாம் பெறப்போவது என்ன? அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்வது என்ன? கண்ணை விற்று சித்திரம் வாங்க இயலுமா? என்பதுபோல நமது  நிலங்களை, நீராதாரங்களைப் பலிகொடுத்து, இந்த அழிவு வளர்ச்சி நமக்குத் தேவையா? அழிவை மேலும் துரிதப்படுத்துகிற சட்டத் திருத்தங்கள் தேவையா? என சிந்தித்து பார்க்க வேண்டும். ‘வளர்ச்சியே வேண்டாம்’ என்று கூறவில்லை. மண்ணையும் நீரையும் அழித்து, பன்னாட்டு நிறுவனங்கள் கொழுத்து வளரும் வளர்ச்சி வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்.

 

– அருண் நெடுஞ்செழியன்

ஆதாரம்:

https://www.downtoearth.org.in/blog/environment/why-draft-eia-2020-needs-a-revaluation-72148

https://www.livemint.com/mint-lounge/features/eia-draft-2020-weakening-an-important-environmental-safeguard-11593611958824.html

https://indianexpress.com/article/explained/draft-environment-impact-assessment-norms-explained-6482324/

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/scientists-waiting-for-two-more-clearances-for-neutrino-project/articleshow/66551013.cms?from=mdr

https://www.cseindia.org/eia-legislation-402#:~:text=The%20major%20difference%20in%20the,power%20to%20the%20State%20Government.&text=However%2C%20as%20per%20the%20new,its%20size%2Fcapacity%2Farea.

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW