கறுப்பர் கூட்டத்தினர் கைதுக்கு கண்டனம்! இந்துத்துவப் பாசிசத்திற்கு அடிமை சேவகம் செய்யும் அதிமுக! கைகழுவும் திமுக, காட்டிக்கொடுக்கும் பாமக!

20 Jul 2020

கறுப்பர் கூட்டத்தினரின் கைதுக்கு கண்டனம்:

இதுவரை கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். திநகர் கண்ணம்மாப்பேட்டையில் உள்ள அவர்களது அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. கடவுள் முருகனை இழிவுப்படுத்தி விட்டதாகவும் அதனால் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு சொல்கிறது.

இவையாவும் திடீர் என்று நடந்துவிடவில்லை. மாரிதாஸ், கிஷோர் கே.சுவாமி, கல்யாண ராமன் என பாரதிய சனதாவைச் சேர்ந்த சைபர் கிரைம் கும்பல் ஒன்று, காட்சி ஊடகங்களில் உள்ள கம்யூனிஸ்ட்கள், திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என அவர்கள் கருதும் சிலரை ஊடகங்களில்இருந்து வெளியேற்றுவதற்கும் மெளனமாக்குவதற்கும் தொடங்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகளில்தான் கறுப்பர் கூட்டம் யூடியூப் சானலில் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட கந்தசஷ்டி கவசம் தொடர்பான காணொளி பற்றி பேசப்பட்டது. இந்த நடவடிக்கையில் முதன்மை இலக்காக நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணியாற்றும் அசீப், குணசேகரன், செந்தில் ஆகியோர் குறிவைக்கப்பட்டனர்.  ஒருகட்டத்தில் நியூஸ் 18 இல் பணியாற்றும் அசீப்புக்கு உள்ள இஸ்லாமிய அடையாளத்தை தொடர்புபடுத்தி கறுப்பர் கூட்டம் யூடியூப் சானலில் கந்தசஷ்டி கவசத்தை அசீப் இழிவுப்படுத்தும் காணொளி இதுவென்று இணையத்தில் பொய்ப் பரப்புரை செய்யப்பட்டது. முருகன் தமிழ்க் கடவுள் என்று தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பரப்புரையையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு காவிக் கூட்டம் இந்த காணொளியை மென்மேலும் ஊதிப் பெரிதாக்கியது. நியூஸ் 18 இல் பணியாற்றுவோருக்கு எதிரான முயற்சியில் நியூஸ் 18 நிறுவனமே மாரிதாஸ் மீது புகார் அளிக்கும் எதிர்வினைகள் நடக்கவே அதில் இருந்து எல்லோரது கவனத்தையும் திசைதிருப்பும் வகையில் கறுப்பர் கூட்டத்தின் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாரதிய சனதா கட்சியே நேரடியாக போராட்டம் நடத்தியது.

பெண் ஊடகவியலாளரை இழிவுப்படுத்திய எஸ்.வி.சேகர், ஹைகோர்ட்டாவது மயிராவது என்று பேசிய எச்.ராஜா, நியூஸ் 18 நிறுவனத்தின் மின்னஞ்சலைப் போலியாகப் போட்ட மாரிதாஸ், சைபர் கிரைம் சைக்கோ கிஷோர் கே சுவாமி என பாசிச பா.ச.க.காரர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் மீது எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்காத தமிழக அர,சு, கறுப்பர் கூட்டத்தின் மீது அடக்குமுறையை ஏவியுள்ளது. கேட்டால் கந்தசஷ்டிக் கவசத்தையும் முருகனையும் ஆபாசமாக பேசிவிட்டார்களாம். ஒரு தோழமை இயக்கம் சுட்டிக்காட்டியது போல் கம்பரசம் கண்ட அறிஞர் அண்ணாவைவிடவுமா கறுப்பர் கூட்டத்தார் கந்தசஷ்டிக் கவசம் பற்றி ஆபாசம் பேசிவிட்டனர். அந்த அண்ணாவின் புகைப்படத்தை கொடியில் போட்டுக்கொண்டு கறுப்பர் கூட்டத்தின் மீது நடவடிக்கையா? பாசிச பாசக கால்பிடித்து பதவிசுகம் காணும் அடிமைப் பிழைப்புக்கு ’ஆபாசம்’ என்பதெல்லாம் வெறும் சாக்குதான். ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சைபர் கிரைம் காவிக் கும்பலைக் கைதுசெய்ய துணிவில்லாமல், கறுப்பர் கூட்டத்தாரைக் கைது செய்து சிறையில் அடைக்க வெட்கமாக இல்லையா? கறுப்பர் கூட்டத்தினரைக் கைது செய்திருப்பதற்கும் அவர்களது அலுவலகத்திற்கு சீல் வைத்திருப்பதற்கும் வன்மையான கண்டனம். இந்நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

நாத்திகப் பிரச்சாரம்:

தமிழகத்தின் நவீனகால வரலாற்றைப் பார்த்தால் நாத்திகப் பிரச்சாரம் கடந்த நூறாண்டு காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தபட்ட மக்களின் நலனோடு இணைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இன்னும் குறிப்பாக பார்ப்பனிய மேலாதிக்கம், வர்ணாசிரமப் பண்பாடு, இந்துத்துவம் ஆகியற்றிற்கு எதிராக இவற்றால் ஒடுக்கப்படும் மக்கள்திரளின் சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு நாத்திகப் பிரச்சாரம் இணைக்கப்பட்டது.  ஆனால், முருகனைப் பற்றிய கந்தசஷ்டி கவசம் மீதான கறுப்பர்கூட்டத்தின் கருத்தை எதிர்கொள்வதற்கு பாசிச பாசக,  தமிழ்கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாகப் பரப்புரைசெய்து பாசகவின் இந்துத்துவ அரசியலை ஏற்காத சிலரையும்கூட தன்னோடு இணைத்துக் கொண்டது. அதாவது சமஸ்கிருத எதிர்ப்பையும் தமிழுணர்வையும்கூட தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தம்மோடு அணிதிரட்டிக் கொள்ள முடிந்ததைக் காண்கிறோம். சமூக மாற்றத்திற்கு துணை செய்யும் வகையில் பாசிச எதிர்ப்பையும் இணைத்து முன்னெடுக்கப்படும் நாத்திகப் பிரச்சாரத்தால்தான் இன்றைக்குப் பயனுண்டு. ஏனென்றால், இங்குள்ள தனித்த சாதி அடையாளங்களையும், மொழிப் பற்றையும் வட்டார சமய அடையாளங்களையும் பாசிச அரசியலுக்கு பயன்படுத்தும் தீவிர முயற்சியில் பாசக இருக்கிறது. ஆகவே, சமூகவியல் கண்ணோட்டத்துடன் சமகால அரசியல் சூழலைக் கணக்கில் எடுத்து மக்கள் நலனின் அடிப்படையில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கானப் படிப்பினையாக இப்போது எழுந்துள்ள சிக்கலைக் கருதிப் பார்க்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

தமிழின அரசியலில் நாத்திகத்திற்கு இடமில்லையா?

திராவிட எதிர்ப்புக்கு கிடைத்த வாய்ப்பென்று கருதி பாசிச பாசகவோடு தெம்மாங்கு பாடப் புறப்பட்ட தமிழினவாத பேர்வழிகள் ‘நாக்கை அறுப்போம்’ என சினிமா பாணியில் கூச்சலிடுகின்றனர். இந்துத்துவ பாசிஸ்ட்களின் சுண்டு விரலைக்கூட தொட்டுப் பார்க்கும் துணிவில்லாதவர்கள் சந்தடி சாக்கில் கறுப்பர்கூட்ட இளைஞர்களுக்கு எதிராய் வன்முறையைப் பேசுகின்றனர். தமிழர்களின் நீண்டநெடிய வரலாற்றில் கடவுள்மறுப்பு மெய்யியலுக்கு இடமுண்டு என்பதை அறியாதவர்கள் கொச்சை நாத்திகத்திற்கு எதிரிடையாய் நாத்திகப் பரப்புரையைத் திராவிட அரசியலோடு சுருக்கிப்பார்த்து காட்டுக்கூச்சல் போடுகின்றனர். பாசிச பாசகவின் சூழ்ச்சிகளுக்கு தமிழ்மக்களின் நலனைப் பலிகொடுக்கிறோம் என்பதைக்கூட பத்தாம்பசலியாக இருக்கின்றனர். தமிழர் வரலாற்றையும் அதில் முரண்பட்ட மெய்யியல் போக்குகளுக்கு இருக்கும் இடத்தையும் அறிந்துகொண்டு எதிரிக்கு இனநலனை இரையாக்கும் வேலையை இனியாவது செய்யாமலிருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

காட்டிக்கொடுக்கும் பாமக கைகழுவும் திமுக:

பார்ப்பனிய எதிர்ப்பு,  இடஒதுக்கீடு, சமூகநீதி, பெரியார் பற்று ஆகியவற்றை எல்லாம் முன்வைத்து வாக்கு அரசியல் செய்துவரும் பாமக, தமிழ்நாட்டில் திடீரென்று நாத்திகப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவது போலவும் இவையெல்லாம் ஊடகங்களைக் கைப்பற்றும் நோக்கத்துடன பாசக முன்னெடுக்கும் சதித்திட்டம் என்பதை அறியாதது போலவும் பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசகவுடன் கூட்டணி, தேர்தல் நலன், பதவி நலன் என்பதைத் தாண்டி இந்த கண்டிப்புக்குப் பின்னால் எதாவது ஒரு நியாயத்தைப் பாமக சொல்ல முடியுமா? பாசிஸ்டுகளுக்கு காட்டிக்கொடுக்கும் வேலையை கனகச்சிதமாக பாமக செய்துவருகின்றது.

அதுபோலவே, பார்ப்பனிய எதிர்ப்பு, சமூக நீதி மற்றும் இன்றைக்கு இருக்கும் பாசிச எதிர்ப்பு ஆகியவற்றை எல்லாம் பயன்படுத்தி வாக்குகளை அறுவடை செய்துகொள்ள முயலும் திமுகவும் தேர்தல் மற்றும் பதவி நலனை முன்னிட்டு கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்துள்ளது. திமுகவின் தேர்தல் நலனுக்காக திகவும் சுப வீரபாண்டியனும் கறுப்பர் கூட்டத்தைக் கைகழுவியுள்ளனர். எந்நேரத்திலும்  மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியுடனான உறவுக்கு கதவை திறந்துவைத்திருப்பது, பெருமுதலாளிய வர்க்க நலனுக்காக சமரசம் செய்து கொள்வது என்பது திமுகவின் அரசியலில் இரண்டறக் கலந்திருக்கும் சந்தர்ப்பவாதமாகும். பாசிச எதிர்ப்பு என்பது திமுகவைக் காப்பது அல்ல, தேர்தல் களத்தில் எதிர்கொள்வது மட்டுமல்ல என்பதை பாசிச எதிர்ப்பில் மெய்யான அக்கறைக் கொண்டிருப்போர் இந்நேரத்திலாவது கருதிப்பார்க்க வேண்டும். தேர்தலைக் கடந்த வலுவான பாசிச எதிர்ப்பு இயக்கத்தினால் மட்டும்தான் பாசிச சங் பரிவார அரசியலைக் குழித்தோண்டிப் புதைக்க முடியும்.

இன்றைக்கு ஊடகத்தையும் கருத்துதளத்தையும் கைப்பற்ற பாசிசம் முயற்சி செய்துகொண்டிருக்கிறது. அதன் பலிகடாக்கள்தான் நியூஸ் 18 அசீப்பும் குணசேகரனும். பாசிசம் தீவிரமான தாக்குதலை நடத்தும் பொழுது சந்தர்ப்பவாத ஆற்றல்கள் கைகழுவிவிட்டு ஓடிவிடுவார்கள் என்பதை பாசிச எதிர்ப்பாளர் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது. ஆகவே, பாசிசத்திற்கு எதிராக  சமரசமுமற்ற, தற்சார்பான சனநாயக முகாமைக் கட்டியெழுப்ப இடதுசாரி சனநாயக  ஆற்றல்கள் ஒன்றுபட வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் சார்பாக அறைகூவல் விடுகிறேன்.

 

பாலன்,

பொதுச்செயலாளர்,

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

7010084440

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW