ஓ பாசிஸ்டுகளே ! வரவரராவ், சாய்பாபாவை கொல்லப்போகிறீர்களா?


மக்கள் உரிமைக்களத்தில்
சமரசமில்லா போராளிகளான
புரட்சிகர எழுத்தாளர்கள், கவிஞர்கள்
கருத்தியல் செயல்பாட்டாளர்களை
கைதுசெய்தால் மனித உரிமைக்களம்
வெறுமையாகிவிடுமா?
எதிர்ப்புக்குரல்கள் ஊமையாகிவிடுமா?
வலிமையான கட்சி, வலுவான தலைமையென
பீற்றிக்கொள்கிறீர்களே? பிறகெதற்கு
80 வயது முதிய தோழர்
வரவரராவைக் கண்டு அச்சப்படுகிறீர்?
மாற்றுத்திறனாளி சாய்பாபாவைக்
கண்டு பயம் கொள்கிறீர்?
ஆன்ந்த டெல்டும்டேவின் எழுத்தைக் கண்டு
எச்சரிக்கையாகிறீர்?
அவர்களின் உறுதியின்முன்
நேர்மைமிக்க கொள்கையின்முன்
உங்கள் பெரும்பான்மை பலமும்
காவி அரசியலும் தோல்வியுறுமென்ற
அச்சம்தானே?
உங்கள் துப்பாக்கிகளுக்கு இறையானவர்கள்
மதச்சார்பின்மை நமது பண்பாடு என
வலியுறுத்திய கோவிந்த்பன்சாரே
தன் எழுத்தால் அறிவியலை வளர்த்த
மூடநம்பிக்கையை எதிர்த்த எம்.எம்.கல்புர்கி
இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிராகக் களம் கண்ட
மருத்துவர் நரேந்திர தபோல்கர்
மதவாதத்தை இந்துமதக் கோட்பாடுகளை
அம்பலப்படுத்தி எழுதிய கௌரி லங்கேஷ்
வரிசையில் முற்போக்கு அரசியலுக்கு
ஆதரவளித்தவர்கள்தான்
சுரேந்திர காட்லிங், சுதிர் தவாலே,
ரானா வில்சன், சோமாசென்,
மகேஷ் ராவுத், வரவர ராவ்,
ஆனந்த்டெல்டும்டே, வர்ணன் கன்சால்வேஸ்,
அருண் பெரைரா, சுதா பரத்வாஜ்,
கவுதம் நவ்லாக்காக்கள்
இவர்கள் தீவிரவாதிகளா?
மனித உரிமை செயல்பாட்டாளர்கள்
அறிவுஜீவிகள், பேராசிரியர்கள்,
எழுத்தாளர்கள் என பன்முக ஆளுமைகளை
கைதுசெய்து சிறையிலடைத்தால்
சிதைந்துவிடாது சிவப்பு சிந்தனைகள்!
ஓ பாசிஸ்டுகளே
இவர்களிடம் எதைக்கண்டு அஞ்சுகிறீர்?
வகுப்புவாதத்தை எதிர்த்து உரக்க சொல்லும்
எழுத்தின், கருத்தாயுதத்தின் செயலின்
வலிமையைக் கண்டுதானே?
ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும்
உங்கள் ஆட்சியில் ஜனநாயகம் சமத்துவமெனும்
உயிர்நாடியைக் காக்கத் துணிந்தவர்களைக்
கண்டு அஞ்சுகிறீர்கள் அஞ்சுவதால்தான்
தள்ளாத வயதிலும் சிறையில் தள்ளுகிறீர்
கொரானா நோயால் துடித்துக்கொண்டிருக்கும்
மனித உரிமையாளர்களை நோய்வாய்ப்பட்டவர்கள்
மனிதத்தன்மையற்று பழிவாங்கும்
உங்கள் வஞ்சகத்திற்கு பெயர்தான் பாசிசமா?
“மோடியைக் கொல்ல சதி“யாம்
என்ன ஒரு நாடகம் சதித்திட்டம்?
பீமா கோரேகான் நினைவிடத்தில்
கலவரம் செய்தவர்கள் யார்?
ஆர்எஸ்எஸ் மனோகர் பிதேயின்
“சிரீசிவ பிரதிஸ்தான் இந்துஸ்தான்” அமைப்பும்
“பாஜகவை சேர்ந்த மிலிந்த் ஏக்போட் நடத்தும்
சமஸ்த் இந்து ஆகாட்” எனும்
மதவெறி அமைப்பே என்பதை
மறைத்துவிட்ட மகாதிருடன் யார்? நீங்கள்
நாயகனாகப் போற்றும் நாசகாரபேர்வழி நரேந்திரமோடிதானே
வன்முறை ஏவிய தலைவனுக்கு குருஜி என
புகழாரம் சூட்டிய மோடி குற்றவாளியா?
மனித உரிமையாளர்கள் குற்றவாளிகளா?
சொராபுதீனைக் கொன்றது அமித்ஷா
குஜராத் முஸ்லிம் படுகொலையில்
மோடி – அமித்ஷா தொடர்பென
மனசாட்சியின்படி சாட்சியமளித்த
ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ்பட் இன்று சிறைக்குள்,
கொலைகாரர்களோ பிரதமராக,
உள்துறை அமைச்சராக வெளியில்
காவி குண்டர்கள் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை
நீதியின் பக்கம் நின்ற நிரபராதிகள்மீதோ
என்ஐஏ, யுஏபிஏ சட்டம் பாய்கிறதென்றால்,
இது மனித உரிமை மீறலில்லையா?
ஜனநாயகப்படுகொலையில்லையா?
மக்களை கொன்று மதவெறி ஆட்சி
நடத்தும் பாசிஸ்டுகளே
கோத்ரா ரயில் எரிப்பு, பாபர் மசூதி இடிப்பு
கலவரத்திற்கு காரணம் சங்கிகள்!
மாலேகான் குண்டுவெடிப்பிற்குக் காரணம்
பஜ்ரங்கதள் குண்டர்படை தலைவி பிரக்யா சிங்
ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில்
கலவரம் செய்ததும் டெல்லி கலவரத்திற்கும்
யார் காரணம்?
பாஜக குண்டர்கள் கபில்மிஸ்ரா,
அனுராக்தாக்கூர் மதவாதிகள்தானே?
ஒன்றுமட்டும் தெரிகிறது,
யார் கொலைசெய்கிறார்களோ
யார் மசூதிகளில் தேவாலயங்களில்,
கோயில்களில், மக்கள் கூடும் இடங்களில்
குண்டுவைக்கிறார்களோ
அந்த காவிபயங்கரவாதிகள் உங்கள் ஆட்சியில்
பதவிக்கு வரலாம், நாயகனாகலாம்
ஆனால், மனித ரத்தம்குடித்த வரலாற்றிற்குச்
சொந்தக்காரர்கள்! இந்துராஜ்ய சாவர்க்கர்,
காந்தியைக் கொன்ற கோட்சேக்களின் வாரிசு
நீங்களென்ற வரலாற்றை மறைக்கமுடியுமா?
ஓ சங்கிக்கூட்டங்களே
உமது வரலாறு பொய்யையும்
புராணப் புரட்டுகளையும் பரப்புகிறது.
ராமராஜ்யம், ஜெய் ஸ்ரீராம் என கொக்கரித்து
ஒரே பண்பாட்டை ஒற்றை தேசத்தை திணிக்கிறது
காஷ்மீர் மாநிலத்தை உடைத்து
ஒரே நாடு என்கிறீர்கள்
பொருளாதார நெருக்கடிக்கு
இந்துத்துவத்தை கையில் எடுக்கிறீர்கள்?
எமது வரலாறோ உண்மையை
உழைக்கும் வர்க்கத்தின் விடுதலையை
பன்முகப்பண்பாட்டை ஜனநாயகத்தை
மனிதநேயத்தையும் பறைசாற்றுகிறது!
அதிகார வர்க்கத்தின் கொட்டத்தை
தோலுரிக்கிறது. அதற்கு
மாவோயிஸ்டாக இருக்க வேண்டுமென்ற
அவசியமில்லையே?
ஆம் மோடியே உமக்கு தெரிந்திருக்குமல்லவா?
நீங்கள் பரப்பிய “அர்பன் நக்சல்“ உத்தி
உங்கள் பரப்புரை கேலிக்கூத்தாகியதே
நகர்ப்புற நக்சல் மக்களிடம் வரவேற்பை பெற்றதே
உண்மையின் பக்கம் நிற்பவராக இருப்பதே
உமக்கு ஆபத்து என எண்ணுகிறீர்கள்
இப்பூமிப்பந்தில் மனித மாண்பைக் காக்க
முன்வரும் ஒவ்வொரு சஃபூரா ஜர்கரும்,
உமர்காலித்களும், நடாஷா நர்வல்,
மஸ்ரத் ஜஹ்ராக்களும் பினாயக் சென்களும்
கபில்கான்களும் போராடும் தனிநபர்களும்
“அர்பன் நக்சலாக“ தெரிவார்களானால்
அவ்வாறே இருப்பதில் மகிழ்ச்சிகொள்கிறோம்.!
நீங்கள் சூட்டும் பல பொய் வழக்கும்
கைதும், சிறையும் வதையும் ஜோடனையும்
ஒருபோதும் போராட்ட உணர்வை நசுக்காது
பொய்கள் உண்மையாகிவிடாது
உருவாகும் போராளிகளைத் தடுத்திடாது
எண்ணற்றவர்களின் போராட்டத்தில்
தியாகத்தில் உருவான கருத்துரிமை,
பேச்சுரிமை, சனநாயகம் சட்டத்தின்மீதும்
சர்வாதிகாரத்தை செலுத்தினால்
எதிர்த்து கேட்பவர்களை அழிக்க நினைத்தால்
உம் தலைவன் ஹிட்லரின் மரணவழி எதுவோ
அதுவே உமக்கும் மக்கள் பரிசளிப்பார்கள்!
எச்சரிக்கை பாசிஸ்டுகளே
எச்சரிக்கை!!
– ரமணி