கொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா? – பகுதி 1

05 Jul 2020

இந்த கொரோனா காலத்தில் மக்கள் அந்த நுண்ணுயிரியுடன் போராடுகிறார்களோ இல்லையோ அந்நோயினால் வந்த அச்சத்துடன் போராடவேண்டி இருக்கிறது. கொரோனா வந்தால் செத்து மடியத்தான் வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் ஆழ்மனதில் பதிந்து விட்டது .

பாரம்பரிய மருத்துவ முறைகளை நோக்கி மூச்சுக்கு முன்னூறு தடவை சான்றுகள் அடிப்படையிலான மருந்துகள் (Evidence Based Medicine) தம்முடையது என்று மார் தட்டிக்கொள்ளும் அலோபதியின் மீதுதான் அத்தனை கறையும் படிந்து கிடக்கிறது. இந்த கட்டுரையும் அதை பற்றி தான் பேசப் போகிறது.

 

இந்தியாவில் அலோபதி மருந்துகள் :

முதலில் மருந்துகள் பற்றியும் அது கடந்துவரும் படிநிலைகளைப் பற்றியும் பார்ப்போம்.

மருந்து (Drug) என்றால் என்ன? மருந்து என்பது மனித உடலை பரிசோதிக்கவோ அல்லது சீர்படுத்தவோ கண்டுபிடிக்கபட்ட, மக்களுக்கு முற்றிலும் நலன் மட்டுமே தரக்கூடிய ஒரு பொருள். எந்த புத்தகத்தை திறந்தாலும் மருந்துக்கான வரையறை இப்படித்தான் இருக்கும் .

ஆனால், மேற்கூறப்பட்ட நோக்கத்துடனா இன்றைய மருத்துவ உலகில் மருந்துகள் கையாளப்படுகின்றன? இல்லை என்பது தான் உண்மை

மேலும் தேவையான மருந்துகள், சரியான மருந்துகள் என்றெல்லாம் சொல்கிறோமே அது என்ன ?

Essential Medicines ( தேவையான மருந்துகள்) என்பது ஒரு சமூகத்திலோ அல்லது அது சார்ந்த சூழலிலோ மக்களுக்கு பரவலாக இருக்கும் உடல் உபாதைகளுக்கு ஏற்றாற்போல் தயாரிக்கப்படும் ஒன்று. (உதாரணமாக இந்தியாவில் இரத்தக் கொதிப்பு (BP) மற்றும் சர்க்கரை (Diabetes ) நோயைச் சொல்லலாம்). அம்மருந்து 24*7 மணி நேரமும் இருக்க வேண்டும், சரியான வடிவில் நல்ல தரத்துடன் இருக்க வேண்டும். இம்மருந்தை கையாள்பவருக்கு  இதனை பற்றி முழுவதுமாக தெரிந்திருக்க வேண்டும். மிக முக்கியமாக அனைவரும் வாங்கும்படியான விலையில் இருத்தல் வேண்டும். இது நாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் மாறிக்கொண்டே இருக்கும். இதனை வரிசைப்படுத்தித்தான் National List of Essential Medicine (NLEM) என்று வைத்திருப்பார்கள் . மொத்தம் 348 NLEM உள்ளது.

Rational drugs (சரியான மருந்துகள்). அது என்ன சரியான மருந்துகள் ? சரியான தேவைக்கு சரியான மக்களுக்கு சரியான முறையில் சரியான அளவில் வழங்கப்படும் மருந்துகள். இதற்கு சில வழிமுறைகளும் உண்டு.

முதலில் நோய்யுற்றவர் சொல்லும் விஷயங்களுக்கு ஏற்றாற் போல ஒரு தற்காலிக தீர்வை (Provisional Diagnosis) வைக்க வேண்டும். அடுத்து நாம் எதற்காக அம்மருந்தை தரப்போகிறோம் ? நோயை குணப்படுத்தவா?  அல்லது நோயினால் வந்த அறிகுறிகளுக்கா ? அல்லது உயிரைப் பாதுகாக்கும் அவசர  தேவைக்காகவா?

மூன்றாவது அந்த மருந்தின் வீரியத்தன்மை, விலை எல்லாம் கருத்தில் கொள்ளப்பட்டு தேர்வு செய்ய வேண்டும்.

நான்காவது அது மாத்திரையா? ஊசியா? என்ற முடிவுக்கு வர வேண்டும்.

அடுத்து மிக முக்கியமான கட்டம் என்பது நோய்யுற்றவர்களுக்கு அதை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆறாவதாக அவர்களிடம் விசாரித்தல் வேண்டும் அப்படி செய்தால்தான் இது  அவருக்கு சரியாக வேலை செய்கிறதா? என்ற முடிவுக்கு வர முடியும்.

இத்தனையும்தான் ஒரு சரியான மருந்தை பரிந்துரைப்பதற்கான வழிமுறை.

இப்படியான மருந்துகள் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தவுடன் புழக்கத்திற்கு வருவதில்லை. அது பல படிநிலைகளைக் கடந்து தான்வர வேண்டும். அது தான் முன்மருத்துவ (Pre clinical) மற்றும் மருத்துவ (clinical) பரிசோதனை (Trials).

முன்மருத்துவ பரிசோதனை :

ஒரு மருந்து செய்தவுடன் அதனை முதலில் ஒரு சிறிய விலங்கின் மேல் பரிசோதித்துப் பார்ப்பார்கள். அடுத்த கட்டமாக மனிதன் மாறியே இருக்ககூடிய ஒரு பெரிய விலங்கில் பரிசோதித்துப்  பார்ப்பார்கள். அதன் பிறகு நாம் எந்த நோய்க்காக அதனைப் பரிசோதிக்கிறோமோ அந்நோயை அவ்விலங்கிற்கு செயற்கையாக வரவழைத்துவிட்டு மீண்டும் பரிசோதித்துப் பார்ப்பார்கள். இதை செய்தால்தான் அம்மருந்தின் நம்பகத்தன்மையை ( Safety Profile) அறிய முடியும் . அதன் பின் தான் மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய முடியும். இதில் தேர்ச்சிப் பெறும் மருந்துகளை IND (Investigational New Drug) என்பார்கள். இதன் காலஅவகாசம் ஒரு சில மாதங்கள்.  இதில் தேர்ச்சிப் பெறவில்லை என்றால் அந்த மருந்து குப்பையைத்தான் சென்றடையும்.

IND களின் மருத்துவப் பரிசோதனை: முழுக்க முழுக்க” ஒப்புதல் ” அடிப்படையில் நடத்தப்படும் ஒன்று

கட்டம் 1 : குறைந்த அளவிலான மனிதர்களை கொண்டு அம்மருந்தின் நம்பகத்தன்மையைப் பரிசோதிப்பது. பின்விளைவுகள் ஏதேனும் எழுகிறதா என்று உற்று நோக்குவது. Tolerability ( பொறுத்துக்கொள்ளும் தன்மை) பற்றியும் தெரிந்துகொள்ளலாம். இதன் கால அவகாசம் சில மாதங்கள் இதில் தேர்ந்தால் கட்டம் 2 . இல்லையென்றால் குப்பை.

கட்டம் 2 : அதே அளவிலான மனிதர்களை கொண்டு இப்பொழுது அதன் curative property (எவ்வளவு கொடுத்தால் அதிகப் படியாக நோய் சரியாகும்) யை பரிசோதித்துப் பார்ப்பார்கள். அதன்பின் தான் அதன் Efficacy (செயல்திறன்) பற்றி தெரிந்து கொள்ள முடியும். இந்நிலையிலும் பின்விளைவுகள் மேல் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும் . இதற்கான கால அவகாசம் சில மாதங்களில் இருந்து 2 வருடங்கள் வரையாகும். இதை கடந்தால் கட்டம் 3.

கட்டம் 3 : இப்பொழுது அம்மருந்தை மார்க்கெட்டில் இதே வேலையை செய்யக் கூடிய விலை மிகவும் குறைவான இன்னொரு மருந்துடனும் (comparator) இல்லை வேலையே செய்யாத (Placebo) மருந்துடனும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.

இதில் Blinding என்ற முறையைக் கையாளுவார்கள். அதாவது பரிசோதனை செய்யும் மக்களை சீரற்ற (Random) முறையில் தேர்ந்தெடுப்பார்கள். மேலும் நாம் கொடுப்பது INDயா இல்லை Placebo வா இல்லை comparator ஆ என்று பரிசோதிப்பவருக்கும் தெரியாது, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கும் தெரியாது. அப்போது தான் பிழை (BIAS) வராமல் இருக்கும். இந்த நிலையைக் கடந்தவுடன் தான் அம்மருந்து சந்தையில் விற்பனைக்கு வரும். இதன் கால அவகாசம் 2 -4 வருடங்கள் இதிலும் தேர்ச்சிப் பெறவில்லை என்றால் வழக்கம்போல் அது குப்பையில் வீசப்படும். ஆனால் சில சமயம் விதிமுறைகளில் தளர்வு கொடுத்து பரிசீலனைக்கு உட்படுத்துவார்கள்.

விற்பனைக்கு வந்த பிறகும் அவ்வளவு எளிதில் விடுவதில்லை. சான்றுகள் அடிப்படியிலான மருந்துகள் என்றால் சும்மாவா? அப்படி பரிசோதிக்கும் இந்த கட்டம்தான் சந்தைக்கு பின் கண்காணிப்பு (Post marketing surveillance). அதாவது பலதரப்பட்ட உடல் உபாதைகள் கொண்ட மக்களில் இம்மருந்து என்னவாக வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும் ; கர்பிணி பெண்களுக்கு ஏதுவாக இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அதிக நாள் உட்கொள்ளும் பின்விளைவுகள் பற்றி ஆராய வேண்டும். அப்படி ஆராய்ந்து அந்த மருந்தில் எதும் மாற்றம் செய்ய முடியுமா? என்று பார்ப்பார்கள். அப்படி இல்லை என்றால் மீண்டும் அது குப்பைக்கு சமமானதுதான்.

இத்தனை கஷ்டப்பட்டு ஆராய்ந்து கொண்டுவரப்பட்டதைக் குப்பையென்று சொல்வதா? என்று சிலர் கேட்கக்கூடும்.

ஆனால் மனித உயிர்களின் முன் இவையெல்லாம் ஒரு பொருட்டல்ல.  நாம் சாதாரணமாக மருந்து கடைக்கு சென்று வாங்கும் அனாசினுக்குப் பின் எத்தனை பரிசோதனைகள் இருக்கிறது பாருங்கள்.

உடனே அந்த மருந்து ஆராய்ச்சியாளர் மீதோ அல்லது மருந்து நிறுவனத்தின் முதளாலிகள் மீதோ பாவம் பார்க்காதீர்கள். ஆராய்ச்சியாளர் கூட வேறு வழிமுறைகளைப் பற்றி யோசிக்க நகர்ந்து விடுவார். ஆனால் முதலாளிகளுக்கு அது முழுக்க முழுக்க நட்டம்தான். சரி நம்ம மக்களுக்கு இது நல்லது தானேனு யோசிக்க அவர்கள் அவ்வளவு நல்லவர்கள் இல்லை. இங்கே தான் அவர்கள் ‘கார்ப்பரேட் கிரிமினல்’ புத்தியை செயல்படுத்துவார்கள். இந்த படி நிலைகளை உருப்படியாக கடந்தால் தான் அதனை தேவையான மருந்துகள், சரியான மருந்துகள் என்று பிரிக்க முடியும்.  ஆனால் படிநிலையிலே தகிடுதத்தாம் போட்டால் அது குப்பையைத் தவிர வேறு எதுவும் இல்லை. அப்படியா நடக்கிறது என்றால் ? ஆம் அப்படித்தான் நடக்கிறது.

இந்தியாவில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனத்திற்கு நிகராக இருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கிறது. உலகிலேயே இந்தியாவில்தான் மருந்து மலிவான விலையில் தயாரிக்கப்படுகிறது.  ஆனாலும் இந்திய மருந்துகளின் சந்தையை தோல்வியடைந்த சந்தை என்பார்கள். ஏனென்றால் இத்தனை மலிவான விலையில் தயாரிக்கப்படும் மருந்துகள் ஏனோ கடைகோடியில் இருக்கும் மக்களுக்கு அது சென்றடைய வில்லை. ஏதோ புற்றுநோய் (Cancer) போன்ற அரிதான  நோய்க்கான மருந்துகள் பற்றி சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இங்கு NLEM கிடைப்பதே பெரும்சிக்கலாக இருக்கிறது. இந்தியாவில் முதல் சில இடங்களில் இருக்கும் மருந்து நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இந்த NLEM மை தயாரிக்கிறார்கள். அப்போது மற்ற நிறுவனங்கள் என்ன தயாரிக்கிறார்கள்? என்று உங்களுக்கே புரிந்திருக்கும். அந்த நிறுவனங்களுமே NLEM மை முழுவதுமாக தயாரிக்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை 50% குறைவான NLEM மை தான் தயாரிக்கிறார்கள். அப்படி பார்தால் மீதி அவர்கள் தயாரிப்பது தரமற்ற தேவையில்லாத மருந்துகள் தான். இதற்கு Spurious, counterfeit, irrational, hazardous என்று ஆயிரம் பெயர் வைத்து விளக்கங்களும் கொடுக்கலாம்.

மருந்து விஷயத்துல கூடவா இப்டி ? ஆமாம் அப்படி தான் இருக்கும் ஏனென்றால் வளர்ந்த அல்லது வளர்ந்துவரும் நாடுகளில் மருத்துவம் என்பது இலவசம் அல்ல வர்த்தகம். வர்த்தக முதலாளிகளுக்கு நியாய தர்மம் எல்லாம் இலாபத்திற்கு முன் தூசுக்கு சமம். அதனால்தான் முதாலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும் என்று மேடை மேடையாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி என்ன தான் மருந்து சந்தைகளில் நடக்கிறது?

 

முதலில் இந்த NLEM அல்லாத மருந்துகள் (Outside the NLEM )  என்றால் என்ன .? 

உதாரணத்திற்கு ஒரு பிராண்டில் தயாரிக்கப்படும் சிப்ரோ மாத்திரை இன்னொரு பிராண்டைவிட விலை மிக கூடுதலாக இருக்கும் ஆனால் தரத்திலும் செயல்திறனிலும் ஒரே மாதிரியாகதான் இருக்கும். ஆனாலும் விலை அதிகமான பிராண்ட் தான் பெரும்பாலும் விற்கபடும்.  இன்னொன்று ஒரே வேலையை செய்ய கூடிய பல தரபட்ட மருந்துகள் இருக்கும். உதாரணத்திற்கு இரத்த கொதிப்பு மாத்திரையான Ramipril , Enalapril ஐ சொல்லலாம் . மேலே சொன்னது போல ஒன்று மற்றொன்றை விட விலை அதிகமாக அதே அல்லது கூடுதல் செயல்திறன் கொண்ட மாத்திரையாக இருக்கும். ஆனால் அதெல்லாம் கணக்கில்லை. விலை அதிகம் இருந்தால் தான் இங்கு மவுசு அதிகம். இதைதான் NLEM அல்லாத மருந்துகள் என்பார்கள். அது எப்படி விலை அதிகம் இருந்தா வாங்கிடுவோமா ? நல்ல மருந்தைத் தானே வாங்குவோம் என்றால் அப்படியெல்லாம் இல்லை. அந்த விலை உசத்தியான மருந்தை தான் நல்ல மருந்து என்று உங்களை மருத்துவர்கள் வாயிலாகவே நம்ப வைப்பார்கள். அது தான் சந்தைப்படுத்தல் உத்தி (Marketing strategy). இது ஒரு அபாயம். ஏனென்றால் சில மருந்துகள் உபயோகிக்க தகுதியற்றது என்று சொல்லப்பட்டு மற்ற நாடுகளில் தடை செய்திருப்பார்கள். அந்த மருந்து கூட இந்தியாவில் அதிகம் விற்கக் கூடிய மருந்தாக இருக்கும் காரணம் அதை தயாரிக்கும் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் உத்திதான் அது. அந்த நிறுவனத்தின் விற்பனை நிர்வாகிகளும் (Sales executives) தாம் திற்ம்பட வேலை செய்வதாக நினைத்து, வாங்குபவரை ஏமாற்றுவதாக நினைத்து சொல்லில் விளையாடி அம்மருந்தை விற்று விடுவார். அவருக்கே உடல் உபாதை ஏற்பட்டால் கூட அந்த மருந்து தான் அவரின் சிகிச்சைக்கு வரும் என்பது கூட தெரியவிடாமல் அவருக்கு சாதனைப்பட்டம் சூட்டி சில பல பரிசுகளை நிறுவனங்கள் அள்ளி இறைக்கும்.” வேலைக்காரன் “படம் எல்லாம் கண் முன்னாடி வந்து போகுதா  இல்லையா? வேடிக்கை என்னவென்றால் தடை செய்யப்பட்ட நாடுகளிலும் அம்மருந்தை தயாரித்து இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்புவார்கள். அவ்வளவு நல்ல எண்ணம்!

 

இன்னும் சேர்க்கை மருந்துகள் (Combination) என்று சொல்லப்படும் மருந்துகளின் பின்னணி கேட்டால் கூத்தாக இருக்கும். இதை சரி செய்ய அரசு எதும் செய்யவில்லையா? செய்வார்கள். NLEM’ல வந்தா தானே கேள்வி கேட்பீர்கள் என்று NLEM  சேர்த்தல் –  விலக்கலுக்கான  அளவு கோல்களில் (Inclusion and exclusion criteria) தனது இராஜதந்திரங்களை கையாள்வார்கள். ஏன்னா நமக்கு சந்தை முக்கியம் இல்லையா?. இதெல்லாம் உண்மையா நடக்குதா ? ஆம் நடக்குது, நடந்தது.

The letrozole affair , The case of Nimesulide, Boehringer Mannheim’s cotrimoxazole என்று BMJ ( British Medical journal ) கதவை தட்டினால் தெரியும். இதற்கெல்லாம் நடவடிக்கையாக “சாமி கண்ண குத்திடும்” போன்ற மிரட்டல்களையும் கொடுத்து பார்த்தார்கள். ஆனால் நிறுவனத்தின் 100 ஆண்டுகால நற்பெயருக்காக அதையும் குறைக்க வேண்டியதா போச்சு. இந்த Bad quality drugs ஐ (தரமற்ற மருந்துகளை) பின் எப்படி தான் விற்கிறார்கள்? விற்பார்கள் .

உதாரணம் : ஒரு இருமல் மருந்து இருந்தால் அதில் இருமலுக்கான மருந்தை மட்டும் சேர்க்காமல் மதுப்பொருளையும் (alcohol) சேர்ப்பார்கள். அது மயக்கத்தன்மையை ஏற்படுத்தும்  தூக்கம் நன்றாக வரும். பின் தூண்டுதல் ஆகி பசியை அதிகப்படுத்தும் (இதில் பசியைப் பின்விளைவாக கருத வேண்டும்) . இப்போது அந்த இரும்பல் மருந்து சரியாக நகர வில்லை என்றால் உடனே இதனை பசியை தூண்டும் மருந்து என்று ஊக்குவித்து பரிந்துரைக்கச் செய்வார்கள். இதையெல்லாம் கண்டிக்க தரம் சரி பார்க்கும் குழு என்று ஒன்று இருக்கிறது. ஆனால் காலக்கொடுமை என்ன வென்றால் யார் ஒருவரின் மருந்து நிறுவனம் தவறுகளுக்காக முடக்கப்பட்டதோ அவரே அந்த குழுவின் நிர்வாகியாக இருப்பார். இதை Jeykll and Hyde character (இரட்டை வேஷம்) என்று அழகாக சொல்லலாம்.

இது ஒரு பக்கம் என்றால் ஆம்வே (Amway) போன்ற Nutraceuticals (ஊட்டச்சத்து பொருள்) இன்னொரு பக்கம் விளையாடி கொண்டிருக்கிறார்கள். Nutraceuticals ஒரு மருந்து மற்றும் உணவுக்கான எந்த படிநிலைகளையும் கடந்து வந்திருக்காது அதனால் இது உணவிலும் வராது மருந்திலும் வராது ஆனால் குணப்படுத்தும் தன்மை உடையது என்று சந்தைபடுத்தப்படும். மக்கள் அதையும் நம்பி வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள் சில மருத்துவர்கள் பரிந்துரைக்கவும் செய்கிறார்கள். இவர்களின் இறுதியாண்டு விற்றுமுதல் (Annual turnover) பல மருந்து நிறுவனங்களைவிட அதிகம்.

என்னதான் மக்கள் ஏமாந்தாலும் மருத்துவர்களை ஏமாற்ற முடியுமா? 

அவர்களுக்கு இது தெரியாதா என்றால் அதற்கு பதில் “தெரியும் ஆனா தெரியாது”. எப்படியென்றால் மேல் சொன்ன சந்தைப்படுத்தல் உத்தி முதலில் பாய்வதே இவர்கள் மேல்தான். ஒரு மருத்துவரிடம் ஒரு விற்பனை நிர்வாகி எப்படி பேசவேண்டும் என்பது முதற்கொண்டு நிறுவனங்கள்  உரையாடல் வடிவில் எழுதிக் கொடுப்பார்கள். அதாவது இங்கே மருத்துவர்களும் ஏமாற்றபடுகிறார்கள். ஆனால் அது நேரடி ஏமாற்றாக இருக்காது. மருத்துவர்களுக்கு இலஞ்சமாக அவர்களுக்குப் பிடித்த பொருள் கொடுப்பது. ஒரு பெரிய ஓட்டலில் பார்ட்டி கொடுப்பது என்று அவர்கள் உளவியலில் கேக்வாக் செய்வார்கள். சில மருத்துவர்களுக்கு இது புரியும். அவர்களுக்கு இதை விட பெரிய பரிசாகக் கொடுத்து வாய் அடைத்து விடுவார்கள். சில மருத்துவர்கள் (<1%) எதிர்ப்பார்கள்.  அவர்களை முடக்குவதில்தான் முழுமூச்சாக ஈடுபடும் நிறுவனங்கள்.

சரி, இந்த மருந்தெல்லாம் பல படிநிலையை கடந்துதானே வர வேண்டும், அங்கே எப்படி இவைகள் கடந்தன ?  நல்ல கேள்வி இங்க தான் “லட்டுல வச்சேன்  நினச்சியா தாஸ் நட்டுல வெச்சேன்” ற கதையா அவர்கள் களமாடும் இடமே மருத்துவப் பரிசோதனையில்தான். அதையே கடக்கும் இவர்களுக்கு சந்தைப்படுத்தல் எல்லாம் எம்மாத்திரம்.

ஒரு மருத்துவ சோதனை எப்படி நடக்கும் என்று என்னால் முடிந்த வரையில் தெளிவாக சொல்லியிருக்கிறேன். அது அப்படியே நடந்தால் இங்கு பிரச்சனையே இல்லை ஆனால் அது அப்படி நடப்பதில்லை.

இங்கே உணவு மற்றும் மருந்துகளின் நிர்வாகம் (FDA) போன்று மேற்பார்வைக்காக அமைக்கப்பட்டு இருக்கும் அனைத்துமே கண்துடைப்பு வேலை மட்டுமே செய்து வருகிறது. ஒரு மருந்துக்கான படிநிலைகளில் இவர்களின் கவனம் அதை சந்தைபடுத்தப்பட்ட பிறகு காட்டும் அக்கறையைவிட குறைவுதான். ஏனென்றால் சோதனைகளில் மாட்டினால் குப்பைக்கு சென்றுவிடும். கட்டம் 3 இல் வேண்டுமானல் வாய்ப்புகள் குறைவு. கட்டம் 2 இல் செய்த முதலீடு காரணாமாக பரிசீலனைக்கு அனுமதிப்பார்கள். மாறாக கண்கானிப்பில்  மாட்டினால் பரிசீலனை தான் அதிகம்,  நிராகரிப்பு  குறைவு. ஆங்காங்கே கவனிக்கப்படுவதற்கான விசுவாசம் தான் இது.

 

தொடரும்…

 

-அபர்ணா,

துணைப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம்

kaaparna.28@gmail.com

 

ஆதாரங்கள்:

வரியறைகள் மற்றும் பரிசோதனை விளகங்கள் : Essentials of Medical Pharmacology by Dr. Tripathi -7 th edition

மருந்து சந்தை: http://www.locostindia.in/

Book Resource : A lay person’s guide to medicines . Particularly chapter 4 and 5

https://m.indiamart.com/impcat/nimesulide-tablets.html

கிளன்மார்க் மற்றும் Favipiravir :

https://www.nytimes.com/2020/05/05/business/japan-avigan-coronavirus.html

https://www.wsj.com/articles/japan-china-vie-to-be-global-supplier-of-unproven-coronavirus-drug-11587029402

https://m.economictimes.com/markets/stocks/news/will-the-launch-of-favipiravir-mark-the-turnaround-for-glenmark-pharma/articleshow/76498902.cms

https://pubmed.ncbi.nlm.nih.gov/32346491/

பாரத் பையோடெக் மற்றும் covaxin :

https://science.thewire.in/health/how-indigenous-is-bharat-biotechs-new-covid-19-vaccine-covaxin/

https://www.who.int/publications/m/item/draft-landscape-of-covid-19-candidate-vaccines

ICMR :

https://m.thewire.in/article/health/icmr-covid-19-pandemic-editorial

https://www.google.com/amp/s/amp.scroll.in/article/966416/its-unscientific-doctors-entrusted-with-covid-19-vaccine-trial-slam-icmrs-august-15-deadline

 

RELATED POST
3 comments
  1. We are appreciating your brave effort on this content madam… me and my friends are researching about vaccines and human immune system.. we are not doctors ..we are common ppls … they call us antivaxers or conspiracy theorist… but we did some research on vaccines and how it works… can we have a conversation about allopathical medicines and vaccines madam.. your knowledge will be helpfull to us to know about the reality of vaccines and allopathical treatment…

  2. நல்ல புரிதலை ஏற்படுத்தும் பதிவு.
    மக்கள் நலன் சார்ந்த பதிவிற்கு வாழ்த்துகள்.

  3. அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய அருமையான பதிவு. பொதுநலன் கருதி பெறும் முனைப்புடன் எழுதியமைக்கு
    நெஞ்சார்ந்த நன்றி. “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.”

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW