காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு

04 Jul 2020

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்தமிழ்நாடு

JOINT ACTION AGAINST CUSTODIAL TORTURE – TAMILNADU

சாத்தான்குளத்தில் 19.06.2020 அன்று நடந்த கொடூரமான காவல் சித்திரவதைகளும், அதனால் பலியான இரண்டு வணிகா்களின் உயிரிழப்பும் நாடெங்கும் மக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்படச் செய்தன, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் காவல்துறையினரின் கொடூரமான அத்துமீறல்களையும் சித்திரவதைகளையும் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனா். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்தேறிய கொடூரமான சித்திரவதைச் சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் அனைத்துலக அளவிலும் பேசுபொருளாக மாறியது. உடல் முழுக்கக் காயங்களாலும் ஆசனவாயில் லத்தியைச் செருகியதால் ஏற்பட்ட இரத்தப் போக்காலும் அவதியுற்ற தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் எந்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படாமல் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனா்.

சாத்தான்குளம் நீதித்துறை நடுவா் D.சரவணன், குற்றம் சுமத்தப்பட்ட இவ்விருவரையுமே நேராகப் பார்க்காமல் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய சோகம் நடந்தேறியது. சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலாவும் பொய்யான அறிக்கை அளித்து அவ்விருவரையும் கோவில்பட்டி கிளைச்சிறைக்கு அனுப்பி விட்டார். தந்தை மகன் இருவரும் கொடூரமான இரத்தக் காயங்களோடு சாத்தான்குளத்திலிருந்து ஏறத்தாழ 110 கி.மீ. தாண்டி இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஏற்கெனவே சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டப் பகுதிகளில் பல்வேறு அப்பாவி மனிதர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்து கொடூரமாக மிருகத் தாக்குதல் நடத்தி கைகால் ஊனமாக்கிய ’பெருமை’ சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் தலைமைக் காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் கொண்ட கூட்டணியைச் சாரும் எனப்படுகிறது. அவர்கள் இந்தக் கொடும்பணியைத் தொடா்ச்சியாக செய்து வந்துள்ளனர். இவ்வாறு கொடூரத் தாக்குதலுக்கு பலியாகி இறந்தோரும், இன்னும் உயிருக்கு போராடுவோரும் உண்டு. ஆனால் இவை பற்றிப் பல முறையீடுகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் இ.கா.ப., அவர்களுக்குச் சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவுதான்  ஜெயாராஜ், பென்னிக்ஸ் இருவரின் படுகொலை.

நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்ட பின்னரும் தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மீதோ சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீதா் மற்றும் காக்கிச்சட்டைக் கொலையாளிகள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முத்துராஜ், முருகன் ஆகியோர் மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இந்தக் காக்கிச்சட்டை கொலையாளிகளோடு சோ்ந்து காவல்துறை நண்பா்கள் என்ற போர்வையில் கூலிப் படையினரும் மிருகத்தனமான தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனா்.

பொதுமக்களின் கொந்தளிப்பால் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை 24.06.2020 அன்று தானாகவே இந்த வழக்கைக் கையிலெடுத்துத் தன் கண்காணிப்பில் நேரடி விசாரணையும் தொடங்கியது.

கோவில்பட்டி நீதித்துறை நடுவா் திரு. பாரதிதாசன் அவா்கள் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்குச் சென்று குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 176(1)(A) இன் கீழ் விசாரணை மேற்கொண்ட போது அங்கிருந்த தூத்துக்குடி கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (ADSP) D. குமார், துணைக் கண்காணிப்பாளர் (DSP) C. பிரதாபன் ஆகியோர் நீதித்துறை நடுவரை மிரட்டுகின்ற தொனியிலும் விசாரணையை தடுக்கும் வகையிலும் வெளிப்படையாகவே செயல்பட்டது பொதுமக்களுக்கு அச்சத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது. நீதித்துறை நடுவரிடம் மிகவும் தரக்குறைவாகவும் அநாகரிகமாகவும் சாத்தான்குளம் காவலா் மகாராஜன் நடந்து கொண்டது அருவருப்பின் உச்சம்.

தமிழக அரசு 29.06.2020 அன்று இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப் போவதாக முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவித்ததன் நோக்கம் ஐயத்துக்குரியதே. இவ்வழக்கின் தன்மையைப் புரிந்து கொண்டு மதுரை உயா்நீதிமன்றக் கிளை 29.06.2020 அன்றே சி.பி.சி.ஐ.டி. தற்காலிகமாக விசாரிக்குமாறு ஆணை பிறப்பித்தது. இது இந்த வழக்கில் வரவேற்கத்தக்க நல்ல முடிவாகும்.

கோவில்பட்டி நீதித்துறை நடுவா் திரு. பாரதிதாசன் அவர்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 176(1)(A) இன் கீழ் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல்துறையினரின் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக உயா் நீதிமன்ற நீதியர் 30.06.2020 அன்று வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்தனா்.அதைத் தொடா்ந்து சி.பி.சி.ஐ.டி. புலனாய்வுக் குழுவினர் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலா்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் மீது இ.த.ச. பிரிவு 302 இன் படி கொலை வழக்கு பதிவு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

சாத்தான்குளம் தொடங்கித் தமிழக அளவில் வணிகர்களும் பொதுமக்களும். கிளர்ந்தெழுந்து போராடியதாலும், அரசியல் கட்சிகள் இயக்கங்கள். மனிதவுரிமை அமைப்புகள் தொடர்ந்து எடுத்த முயற்சிகளாலும், முன்னாள் நீதியர், இந்நாள் சட்டத்தரணியர் உள்ளிட்ட, அக்கறையுள்ள பலதரப்பட்ட குடிமக்களும் ஓங்கிக் குரல் கொடுத்தமையாலும், ஊடகங்களும் ஊடகர்களும் ஏற்றிய வெளிச்சத்தாலும், அனைத்திந்திய அளவிலும் அனைத்துலக அளவிலும் கூட நீதிக்கான குரல் எதிரொலித்தமையாலும் சாத்தான்குளம் நீதிக்கான போராட்டப் பயணத்தில் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை எடுத்த முடிவுகளையும், கோவில்பட்டி நீதித்துறை நடுவர் திரு. பாரதிதாசன் அவா்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையையும், சி.பி.சி.ஐ.டி.  புலனாய்வுக் குழுவினரின் விரைவான நடவடிக்கைகளையும் வரவேற்கிறோம். இந்த முயற்சிகளில் சற்றும் தளர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு நம் அனைவர்க்கும் உண்டு.

சென்ற ஞாயிற்றுக் கிழமை 28.06.2020 அன்று சாத்தான்குளம் சித்திரவதைகளையும் படுகொலைகளையும் கண்டித்து அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் பங்கேற்ற மாபெரும் இணையவழி கண்டனக் கூட்டத்தின் தொடர்ச்சியாக சாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்கு நடவடிக்கை கோரியும் தமிழகத்தில் காவல் சித்திரவதைகளைத் தடுக்கும் வகையிலும் தமிழகம் தழுவிய கூட்டியக்கம் ஒன்றை  உருவாக்கத் தீா்மானித்தோம். அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளைக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு சார்பாக முன்வைக்கிறோம்.

கோரிக்கைகள்:

  1. சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்துக் காவலா்கள் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
  2. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜுன் 19 ஆம் நாள் இரவு ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சித்திரவதை செய்ததில் காவல்துறைக் கொலையாளிகளுடன் சேர்ந்து ஈடுபட்ட காவல்துறையின் நண்பர்கள் (Friends of Police) எனப்படுவோரையும் கொலைவழக்கில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.
  3. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் நேரில் பார்க்காமலே நீதித்துறைக் காவலுக்கு அனுப்பிய சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் D.சரவணன், அவர்களது உடல்நிலை குறித்துப் பொய்ச் சான்று வழங்கிய சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா, அவர்களை எவ்வித ஆய்வுமின்றி சிறையில் சேர்த்துக் கொண்ட கோவில்பட்டி சிறைக் கண்காணிப்பாளர் ஆகிய கடமை தவறிய அதிகாரிகள் மனிதவுரிமைகளுக்கும் மனிதவுயிருக்கும் ஏற்படுத்திய ஆபத்தைக் கருத்தில் கொண்டு அவா்களை உடனே பணியிடைநீக்கம் செய்து, அவா்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
  4. கோவில்பட்டி நீதித்துறை நடுவர் திரு. பாரதிதாசன் அவா்கள் விசாரணைக்கு சாத்தான்கும் சென்ற போது அங்கு ஒத்துழைப்பு தர மறுத்த தூத்துக்குடி கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (ADSP) குமார், துணைக் கண்காணிப்பாளர் (DSP) C. பிரதாபன் ஆகியோரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து அரசு அவர்கள் மீது இ.த.ச. பிரிவு 353 இன் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  5. விசாரணைக்குச் சென்ற கோவில்பட்டி நீதித்துறை நடுவரை மிகவும் தரக்குறைவாகப் பேசிய காவலா் மகாராஜன் மீது இ.த.ச. பிரிவு 353 இன் கீழ் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்.
  6. கடந்த காலத்தில் சாத்தான்கும் பகுதியில் தொடா்ச்சியாக நடைபெற்ற காவல் சித்திரவதைகள் குறித்த முறையீடுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த இரட்டைப் படுகொலைக்குத் துணைபோன தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன், இ.கா.ப., உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.
  7. இவ்வழக்கில் நேர்மையாகவும் உண்மையாகவும் சாட்சியமளித்துள்ள தலைமைக் காவலா் ரேவதி அவா்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரது நேர்மையான சேவையை அரசு அறிந்தேற்றுப் பாராட்ட வேண்டும்.
  8. சி.பி.சி.ஐ.டி. புலனாய்வுக் குழுவினர் இந்த இரட்டைப் படுகொலை வழக்கில் முறையான முழுமையான பாகுபாடற்ற புலனாய்வைக் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடித்து சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.
  9. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இதுவரை தொடா்ச்சியாக நடைபெற்றிருக்கும் காவல் சித்திரவதைகள், காவல் படுகொலைகள் — ராஜாசிங் என்பவா் மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதல், மகேந்திரன் என்பவா் அடிந்து கொலை செய்யப்பட்ட கொலை வழக்கு, லாசா் பர்னபாஸ் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகள் மற்றும் மாற்றுத்திறனாளியான அப்பாத்துரை மீது நிகழ்த்தப்பட்ட கொடும் தாக்குதல் போன்ற அனைத்துக் குற்றங்களும் முழுமையாக விசாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சாத்தான்குளம் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர்கள் முத்துராஜ் முருகன் ஆகியோர் மீது சம்பந்தப்பட்ட குற்றவியல் சட்டப் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  10. தமிழக அரசு சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பக் கூடாது. இப்போது நடைபெறும் சி.பி.சி.ஐ.டி. விசாரணையே தொடர வேண்டும். அது சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பும் வழங்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு இதற்கு முன்னா் அனுப்பப்பட்ட (ஸ்டொ்லைட் தொடா்பான வழக்கு, ஐ.ஐ.டி. மாணவா் பாத்திமா வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு போன்ற) வழக்குகள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே கிடப்பில் கிடப்பதைக் கணக்கில் கொண்டு சி.பி.ஐ. புலனாய்வு ஒரு கண்துடைப்பே என்றாகி விட்டதால், இந்த வழக்கை சி/பி.ஐ-இடம் ஒப்படைக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.
  11. சாத்தான்குளம் காவல் சித்திரவதை, இரட்டைக் கொலை போன்ற கொடுமைகள் மீண்டும் நிகழாமலிருக்கக் காவல் துறை அதிகாரிகளின் இடமாற்றம் என்பதற்கு மேல் தமிழக அரசு என்ன உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கவிருக்கிறது என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். இது குறித்துப் பொது விவாதம் நடத்த வேண்டும்.

 

தோழா். தியாகு                                                                  தோழா். மீ.த. பாண்டியன்            

ஒருங்கிணைப்பாளா், JAACT-TN                                     செயலாளா் JAACT-TN                      ,  (தமிழ்தேசிய விடுதலை இயக்கம்)                              (தலைவர், தமிழ்தேச மக்கள் முன்னணி)

திரு. அப்துல் சமது                                                          நெல்லை முபாரக்

பொதுச்செயலாளா், மனித நேய மக்கள் கட்சி      மாநிலத் தலைவா், SDPI

திரு. கனியமுதன்                                                            பேராசிரியா் தீபக் நாதன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி                                    டிசம்பா் 3 இயக்கம்

மருத்துவா். சேவியா் செல்வ சுரேஷ்                     வழக்கறிஞா். அஜீதா       

தடயவியல் நிபுணா்                                                             சென்னை உயா்நீதிமன்றம்

திரு. ம. பிரிட்டோ                                                             திரு. ஆசீா்                                            

வழக்கறிஞா், திருநெல்வேலி                                           மக்கள் கண்காணிப்பகம் – மதுரை

                     

                                                            (ஒருங்கிணைப்புக் குழு)

 

 

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு

Joint Action Against Custodial Torture – Tamil Nadu (JAACT –TN)

தொடா்புக்கு : 32, பெசண்ட் சாலை, சொக்கிகுளம், மதுரை – 625 002

89391 54752, 99943 68571, 94426 18117

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW