சாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன?

29 Jun 2020

எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரு இந்நாட்டும் மன்னர் என்று பூரித்துப் போன இந்தியாவின் சுதந்திரம், குடியரசு, அரசமைப்பு சட்டம் என அனைத்தும் தோற்றுப்போய் காக்கிச் சட்டை அணிந்த சிலரால் சாத்தான்குளத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெருந்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதில் இருந்து மக்களைக் காக்கிறேன் பேர்வழிகள் அமலாக்கிய பொதுமுடக்கத்தால் பஞ்சம் நம் நாட்டில் குடிபுகுந்துக் கொண்டது. இத்தகைய ஒரு காலப்பகுதியில் கொரோனாவுக்கும் சாவாமல், பட்டினியும் தின்னாமல், காவல்  நிலையத்தில் பலியாகியுள்ளன அவ்வுயிர்கள்.

கொரோனாவுக்கு இன்னும் ஓரிரண்டு ஆண்டுக்குள் தடுப்பூசி வந்துவிடுமாம். பசி நோய்க்கு மருந்தாம் சோறு உண்டு, பட்டினியால் சாகாமல் தடுக்கலாம்.  ஆனால், காவல்நிலைய கொலைகளை எப்படி, என்றைக்கு நாம் தடுக்கப் போகிறோம்? அதற்கு முடிவுகட்டும் நாள் எது? வழி என்ன?

மக்கள் எஜமானர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு தொண்டு செய்வோர். காவல்துறை மக்களைக் காக்கும் துறை. அரசு பணியாளர்கள் மக்களுக்கு அரசின் சேவைகளைக் கொண்டு சேர்ப்போர்’.. நம் நாட்டில் இவையெல்லாம் காகிதத்தில் எழுதிவைக்கப்பட்ட இலக்கணங்கள். மெய்நிலையோ தலைகீழானது. மக்கள் அடிமைகள், கையேந்திகள், பிச்சைக்காரர்கள், இலவசங்களுக்கு காத்திருப்போர், வாக்களிப்போர் மட்டுமல்ல வாக்கை விற்போரும்கூட, மானமிழந்தவர்கள்.  மண்புழுக்களைப் போன்றோர். கட்சித் தலைவர்கள், பிரதமர், முதல்வர்கள் மன்னர்களைப் போன்றோர்.  அரசு ஊழியர்கள் கையேந்திகளுக்கு பிச்சைப் போடுபவர்கள். காவல்துறையினர் மக்களை அடக்கியாளும் எஜமானர்கள். இதுதான் இன்றைய நிலை. வாக்களிப்பதை தவிர சனநாயக நாட்டிற்கு உரிய எந்த அனுபவமும் மக்களுக்கு கிடையாது.

மக்களின் வரிப்பணத்தில் நலத்திட்டங்களை அறிவித்தவர்கள் ‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம், அம்மா உணவகம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ என தான் வாழும் போதே தம் பெயரை வைத்துக் கொண்டனர். அப்படி வைத்துக் கொள்வதற்கு அந்த தலைவர்களுக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை.  கட்சியில் நிரந்தர தலைவர், நிரந்தரப் பொதுச்செயலாளர், சாகும் வரை முதல்வர் அல்லது முதல்வர் வேட்பாளர், கட்சியின் தலைவராக வாழையடி வாழையென வரும் குடும்ப வாரிசுகள் என மன்னர் காலத்திற்கே உரிய அரசியல் கலாச்சாரமே நீக்கமற நிறைந்திருக்கிறது.  தன் அப்பன் வீட்டு பணத்தில் இருந்து நலத்திட்டங்களை அவர்கள் கொடுக்க வில்லை. மக்களின் வளம், மக்களின் உழைப்பால் விளைந்த செல்வம், மக்களின் சொத்து மக்களுக்கே பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், மக்களின் உரிமை என்று அவை விளக்கப்படுத்தபடாமல் மன்னர் பெருமக்களின் பட்டத்து ராணியின் கருணை என்றும் ஆளுமை என்றும் மக்கள் மீது அத்தலைவர் கொண்டிருக்கும் அக்கறை என்றும் விளக்கப்படுத்துவதுதான் இங்கே அரசியல் கலாச்சாரம்.

ரேசன் கடை ஊழியர், பேருந்து ஓட்டுநர், நடத்துனர், அரசு பள்ளி ஆசிரியர், அரசு மருத்துவர், மாநகராட்சி, நகராட்சிப் பணியாளர்கள் என எல்லோரும் மக்கள் மீது அதிகாரம் செலுத்துகின்றனர். மக்களின் கேள்விகள் அவர்களுக்கு எரிச்சல் ஊட்டுகின்றன. மக்கள் புழுக்களைப் போல் இவர்களிடம் மண்டியிட நேர்கிறது. இவையெல்லாம் கூட நமது அரசியலில் தலைவிரித்தாடும் மன்னராட்சி கலாச்சாரத்தின் பிரதிபலிப்புகளே ஆகும்.

பொதுவாக அரசு இயந்திரம் வர்க்க சார்புடையது, சிறைச்சாலை, காவல்துறை, இராணுவம் ஆகியவைதான் அரசு என்பதே உண்மை.  ஆளும் வர்க்கத்திற்கே முழு சனநாயகம். அதாவது, உடைமை வர்க்கத்திற்கே முழு சனநாயகம். அதே நேரத்தில், முதலாளித்துவ சனநாயக நாடுகளில் உள்ள அரசுகள், ஆளப்படும் மக்களிடம் காட்டும் குறைந்தபட்ச சனநாயகம்கூட இங்கு இல்லை. இங்கிலாந்திலோ, பிரான்சிலோ ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு போல் ஒன்றை கற்பனையும் செய்து பார்க்க முடியாது. அங்கே பொதுவாக மக்களின் உயிர் பொருட்டாகும். அதனால் தான், கருப்பர் ஒருவர் கொல்லப்பட்ட போது கொந்தளித்து போராடுகின்றனர் அமெரிக்க மக்கள்.

காவல்துறையினரால் மக்கள் சுயமரியாதை உடன் நடத்தப்படவில்லை என்பது கலைஞருக்கோ அல்லது ஜெயலலிதாவுக்கோ அல்லது எடப்பாடி பழனிச்சாமிக்கோ அல்லது மு.க. ஸ்டாலினுக்கோ தெரியாமல் கிடையாது. சுயமரியாதை சூரர்கள், சமூக நீதிக் காவலர்கள் ஏழை, எளிய மக்களின் தன்மானத்திற்காகவோ அல்லது மனித மாண்புக்காகவோ கவலைப்பட்ட தில்லை.

நம்மோடு பள்ளியிலும் கல்லூரியிலும் ஒன்றாய் படித்தவர்கள், திடல்களில் ஒன்றாய் விளையாடியவர்கள், கிணற்றில் நீச்சல் பழகியவர்கள், பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்கள், அடுத்த தெருவை சேர்ந்தவர்கள் என நம்முடைய சொந்த சகோதரர்கள் காக்கிச் சட்டை அணிந்தவுடன் தங்களை தனிப் பிறவியாக கருதிக் கொள்வதற்கும் மக்களைக் கீழானவர்களாக நடத்துவதற்கும் அவர்களை மட்டும் பொறுப்பாக்க முடியுமா? இன்னொருபுறம் அரசு ஆசிரியர்கள், மருத்துவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என எல்லோரும் மக்களை ஏளனமாக நடத்துவதும்  கடனுக்கென்று பணியாற்றுவதும் ஏன் நடக்கிறது?  சொந்த மக்கள் மீது துளியளவு அன்பும் அற்ற அரசுப் பணியாளர்கள் உருவானதில் அரசியல் தலைமைக்கும் அதன் அரசியல் பொருளாதார கொள்கைகளுக்கும் பங்கில்லையா?

 

சுயமரியாதையின் பெயராலும் சமூக நீதியின் பெயராலும் சனநாயகத்தின் பெயராலும் தமிழின் பெயராலும் மாநில சுயாட்சியின் பெயராலும் ஆட்சிக்  கட்டிலுக்கு வந்த கழகத்தார், தமது  வாய்ச்சொல் வீச்சுகளுக்கு அப்பால் நடைமுறைப்படுத்தியது என்னவோ  மன்னர்கால அரசியல் கலாச்சாரத்தைத் தான். எனவேதான், தம் வாழ்நாளிலேயே  ‘பேரறிஞர், முத்தமிழ் கலைஞர், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி’ என்று பெயருக்கு முன்னால் பட்டம் போட்டுக் கொண்டு அகம் மகிழ்ந்த அற்பர்களாகவே நம்முடைய தலைவர்கள் இருந்தார்கள்.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சனநாயகத்தை நோக்கி அடியெடுத்து வைத்த அமெரிக்கர்கள், அதிபரே ஆனாலும் எந்த பட்டங்களும் இன்றி திரு அதிபர் Mr. President என்று அழைக்கத் தொடங்கினர். அரண்மனைகளை அருங்காட்சியகங்களுக்கு அனுப்பிவிட்டு செங்கோல், மணிமகுடம், ஆடை அணிகலன்கள் ஆகியவற்றோடு சேர்த்து மன்னர்கால கூஜா தூக்கித் தனத்தைக் காட்டும் ‘மேதகு, மாண்புமிகு’ போன்ற பட்டங்களையும் குப்பைத் தொட்டிக்குள் வீசியெறிந்தனர்.

இன்றைக்கு கொரோனா நெருக்கடியின் போதும் அன்றாடம் ஊடகங்களை சந்தித்து பதிலளிக்கிறார் உலகை ஆளும் வெள்ளை மாளிகையின் அமெரிக்க அதிபர்.  இந்தியாவிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி நிலைமை தலைகீழானது. ஊடகங்களைக் கண்டால் விலகி ஓடும் கோழைதான் இங்கே பிரதமர்.

இந்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு எங்கே கிடைக்கிறது சுயமரியாதை? மக்களை முதன்மைப்படுத்தாத  அருவெறுக்கத்தக்க இந்த அரசியல் பாரம்பரியத்திற்குதான் சுயமரியாதை, சமூக நீதி என்று வண்ணப் பூச்சுகள் இட்டு வரிசை பாடி வருகின்றன சிம்மாசனங்களுக்கு அடியில் நசிந்துபோன மூளைகள்.

சட்டமன்றங்களையும் நாடாளுமன்றங்களையும் அரண்மனைகளாகவும் முதல்வர், பிரதமர் இருக்கைகளை சிம்மாசனங்களாகவும் கருதிக் கொண்டு வரலாற்றின் புதைக்குழிக்குப் போன மன்னர்களின் ஆடையணிகளையும் மணிமகுடங்களையும் தோண்டியெடுத்து முகந்து முகந்து அணிந்து கொண்டு டிவிட்டரில் கண்டன அறிக்கைகளை வெளியிடும் தலைவர்கள் வாழும் நாட்டில் சாத்தான்குளங்கள் தொடரத்தான் செய்யும்.  எதுவரை தொடரும் என்று கேட்கிறீர்களா? முக ஸ்டாலின் காலம் முடிந்து அவரது மகன் உதயநிதி கழகத் தலைவராய் கண்டன அறிக்கை விடும் காலங்களிலும் ஜெயராஜ், பென்னிக்ஸ்களின் ஆசனவாயில் இருந்து மட்டுமல்ல சனநாயகத்தின் கழுத்து அறுக்கப்பட்டு இரத்தம் பீறிட்டு ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

சிந்திப்பாய் தமிழா!

”நாமார்க்கும் குடியல்லோம்!” ”நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!” ”கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை உண்டு!”, ”மன்னவனும் நீயோ! வளநாடும் உனதோ? உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்?”,  “துச்சமாக எண்ணி நம்மை ஊறு செய்த போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை!”  என்றொரு மரபு நமக்கு உண்டு. அந்த மரபின் தொடர்ச்சியாய் புத்துலக குடியாட்சிய வாழ்வுக்குள் தமிழர்களாகிய நாமும் அடியெடுத்து வைக்க வேண்டாமா?

தாக்கிய காவலர்களில் ஒருவர் கோனார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் இறந்தவர்கள் நாடார்கள் என்றும் அதனால் தான் போராட்டம் எழுந்ததும் என்றும் முன்பு இதே போல் ஒரு லாக்கப் கொலையில் தாக்கிய காவலர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியில் போராட்டம் வெடிக்கவில்லை என்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சொன்னதாக www.thelede.in என்ற இணைய தளத்தில் கட்டுரையாளர் சந்தியா விரிவாக எழுதியுள்ளார். (https://www.thelede.in/governance/2020/06/27/three-cops-in-sathankulam-leave-a-trail-of-violence-casteism-in-one-year)

ஆக, தன் சாதிக்காரன் தவறு செய்தால் அதை மன்னித்துவிடு என்ற நடைமுறை நிலவுவதை இது சுட்டிக்காட்டுகிறது. சாதி அடிப்படையிலான பரிவு உணர்ச்சி தான் கடந்த 50 ஆண்டுகாலமாக இங்கே வளர்த்தெடுக்கப்பட்டதே  ஒழிய நீதி அடிப்படையிலான உணர்ச்சி வளர்த்தெடுக்கப்படவில்லை. இன்னும் ஒருபடி போய், ”பார்ப்பனர்கள் எப்படி தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தவறிழைத்தாலும் அவருக்கு பக்க பலமாக நிற்கிறார்களோ அதுபோல் நாமும் இருக்க வேண்டும்“ என்று ஒவ்வொரு பார்ப்பனரல்லாத சாதித் தலைவரும் அறிவுரைகள் வழங்குகின்றனர். சரி, பிழையை இனம் பிரிப்பதற்கு பதிலாக தன் சாதியா ? இல்லையா ? என்று இனம் பிரிக்கப்படுகின்றது.

எந்த சாதி வேற்றுமை காட்டப்படுகின்றது என்பதை எதிர்த்து பல்வேறு சாதி அடிப்படிப்படையிலான அரசியல் போக்குகள் நம் மண்ணில் எழுந்தனவோ அவை சாதி வேற்றுமைப் பார்த்து நீதிக்கு புறம்பாக நிற்பதில்போய்  முடிவடைந்துள்ளன. மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போல் ஒரு செயல் அது ஏற்படுத்தும் விளைவால் எடைபோடப்படாமல் அதை செய்வோரின் சாதியால் எடைபோடப்படுகின்றது.  திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார் என அறநூல்கள் பல கண்ட தமிழினத்தில்தான் இன்று தன் சாதியைச் சேர்ந்தவர் என்றால் கொலையைக் கூட ஆதரிக்கும் போக்கு நிலவுகிறது. எனவே, சாதியுணர்ச்சிக்குப் பதிலாக நீதியுணர்ச்சியை வளர்த்தெடுக்கும் ஒரு புதிய புரட்சிகர அரசியலின் தேவை பெருகிக் கொண்டே போகிறது. மன்னராட்சி அரசியல் கலாச்சாரத்தைக் கொண்ட கட்சிகளை அம்பலப்படுத்த வேண்டும். புரட்சியின் இடத்தில்  எதிர்ப்புரட்சியை அமரச் செய்யும் போக்குக்கு முடிவுகட்ட வேண்டும். பழையன கழிந்து புதியன பிறந்திட வேண்டும்.

நீதிமன்றங்கள் காவல்துறையின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறது. அங்கேயா நீதி கிடைக்கப் போகிறது?  கோவையில் தள்ளுவண்டி கடை நடத்துபவரிடம் கடையை மூடுமாறு சொன்ன காவலர் அந்த பெண்ணை மரியாதை இன்றி பேசுகிறார்.

 

”மரியாதையில்லாமல் பேசினார் அதனால் நான் காவலரின் சட்டையைப் பிடித்தேன்” என்று அவரது மகன் சொன்னான்.  அவன் ஒரு பள்ளி மாணவன். தான் சட்டையைப் பிடிக்கவில்லை என்றோ அல்லது தெரியாமல் செய்துவிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்றோ அவன் சொல்வதுபோல் நாம் அந்த காணொளியில் பார்க்கவில்லை.  இன்ன காரணத்திற்காகத்தான் நான் சட்டையைப் பிடித்தேன் என்றான். இப்படித்தான் அத்துமீறும் காவலர்களை அச்சமின்றி நாம் எதிர்கொண்டாக வேண்டும்.

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பர் அநீதியான வகையில் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்த போராட்டங்களில் மினியாபோலிஸில் ஒரு காவல்நிலையம் எரிக்கப்பட்டது. வெள்ளை மாளிகைக்கூட முற்றுகையிடப்பட்டது.  அதிபர் டிரம்ப் பதுங்குகுழியில் சென்று ஒளிந்துகொண்டார், அத்தகைய போராட்டங்கள் நடந்தால் ஒழிய காவல்துறை அத்துமீறல் மற்றும் அராஜகத்திற்கு முடிகட்ட முடியாது.

காவல்துறையினர் காவல்நிலையத்தில் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக காவல் நிலையங்கள் முற்றுகையிடப் பட வேண்டும். மனித உரிமைகளுக்கானப் போராட்டத்தில் ஒவ்வொரு அத்துமீறலுக்கு எதிராகவும் தமிழகம் தழுவியப் போராட்டங்கள் நடக்க வேண்டும். நம்முடைய போராட்டங்களின் வழியாக காவல்துறையில் நடக்க வேண்டிய சீர்திருத்தங்களை நாம் கோர வேண்டும். சுயமரியாதை மீதும், நீதியின் மீதும் மெய்யான அக்கறை கொண்ட ஒரு சமூகத்தைப் படைக்க வேண்டும்.

 

-செந்தில்

 

 

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW