வாழ்வா, வாழ்வாதாரமா ? – தேர்வு யாருடையது ? – முதல்வருக்கு திறந்த மடல்

26 Jun 2020

மதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு,

 

இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை. தகுதி இருப்பதாகக் கற்பிதம் செய்துகொண்டு எழுதினாலும் தங்களது பார்வைக்கு வந்து சேருமா என்றும் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் எழுதுகிறேன்.

 

கரோனா குறித்த என்னுடைய அடிப்படையான கேள்வி இதுதான்: என்னுடைய உடலை, உடல் நலத்தைப் பாதுகாப்பதில் என்னைவிட யாருக்கு அதிக அக்கறை இருக்க முடியும்? அரசாங்கமும் நிர்வாகமும் என் உடலைக் காப்பாற்றுவதற்கு ராப்பகலாக உழைக்கிறது என்று சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? மருத்துவர்களும் பிறரும் தனிமனிதர்களாக இவ்வாறு கோருவது நியாயமானது. அவர்களைக் கெளரவிப்பதும் நியாயமானது. ஆனால், ஒரு அரசாங்கம் இப்படிக் கோருவதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மக்களைக் காப்பாற்ற அரசாங்கம் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரலாம் – ஏற்படுத்தித் தருவது தேர்ந்தெடுத்த அரசாங்கத்தின் கடமையும்கூட. இருப்பினும், நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் பொறுப்பு மக்களிடம் இருக்கிறதே தவிர அரசாங்கத்திடம் இல்லை. முதலில் அரசும் அரசாங்கமும் நிர்வாகமும் மக்களை நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை முற்றிலுமாக இல்லை. அதனால்தான், கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கே தீர்வாக மாறிக்கொண்டிருக்கிறது. மக்களை அடக்கி ஒடுக்கி, அவர்களது அன்றாட வாழ்க்கையை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டு மக்களை நோய்க் கிருமியிடமிருந்து காப்பாற்றுகிறோம் என்று சொல்வது முற்றிலும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு விரோதமானது. ஊரடங்கானது மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதற்கான காலம் அவகாசம் மட்டுமானதாகத்தான் இருக்க முடியும். மக்களை அடக்குவதற்கு அல்ல.

 

இரண்டாவது கேள்வி, கரோனாவுக்கு எதிரான இந்த ‘யுத்தம்’ (இப்படித்தான் இந்தியப் பிரதமர் விவரித்தார்) மக்கள் நலன் சார்ந்ததா? அல்லது எவ்விதத்திலாவது கரோனா ‘யுத்தத்தை’ வெல்ல வேண்டும் என்ற பிரதான குறிக்கோள் சார்ந்ததா? மக்களை அடக்கி ஒடுக்கி கரோனா ‘யுத்தத்தில்’ வெற்றி அடைவதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? ஆனால், அரசாங்கம் மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் இந்தக் கெடுபிடிகள் செய்வதாக முன்வைக்கிறது. இருப்பினும், அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பார்க்கும்போது (குறிப்பாக, காவல் துறையின் அணுகுமுறை) மக்கள் நலனைவிட கரோனா யுத்தத்தை வெல்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. கரோனாவைச் சமூகத்தில் மருத்துவப் பிரச்சினையாகப் பார்க்காமல், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்ப்பதுபோல் காவல் துறையின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. மொத்தத்தில், கரோனாவை முன்வைத்து ஜனநாயக உரிமைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஏறக்குறைய போலீஸ் ஆட்சி நடப்பதுபோல் இருக்கிறது. கொள்ளைநோய், தொற்றுநோய் ஆகியவற்றைக் கண்டு மக்கள் பயப்படுவார்கள். அரசும் அரசாங்கமும் நிர்வாகமும் அந்தப் பயத்தைப் போக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அரசும் அரசாங்கமும் மத்தியதர வர்க்கத்தின் சுயநலமும் பயத்தை ஆயுதமாக உபயோகிக்கின்றன. இந்த ஆயுதத்தைக் கொண்டு மக்களைப் பொறுப்பற்றவர்களாகச் சித்திரிக்கின்றன. பிரச்சினை என்னவென்றால், ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தில் செளத்திரிபோல் அரசாங்கமும் நிர்வாகமும் நடந்துகொண்டால், மக்கள் ஜகன்போல்தான் நடந்துகொள்வார்கள்.

 

மூன்றாவதாக வாழ்வா, வாழ்வாதாரமா என்ற இருமம் சிக்கல். வாழ்வா, வாழ்வாதாரமா என்று தீர்மானிக்கும் உரிமை யாருக்கும் இருக்கிறது? மக்களிடம்தான் அந்த உரிமை இருக்கிறது. பொதுச் சமூக நலன் சார்ந்து, தன் வாழ்வாதாரத்தில் சில சமரசங்களை மக்கள் செய்துகொள்ளலாம். ஆனால் வாழ்வா, வாழ்வாதாரமா என்று தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களிடம்தான் இருக்கிறது. முதலில் நாம் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம்: ஏன் மக்கள் வெளியே வருகிறார்கள்? எல்லா மக்களின் வாழ்வாதாரத் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருளாதார பலம் எந்த அரசாங்கத்திடம் இருக்கிறது? பொருளாதார வசதி கொண்டிருப்பவர்களுக்கு ஊரடங்கு பிரச்சினையில்லை. எல்லாவற்றுக்கும் மேலாகக் கிடைத்ததைத் தின்றுவிட்டு ஒரு மூலையில் சுருண்டுகிடக்க மக்கள் ஆடோ, மாடோ இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நோய் குறித்த விழிப்புணர்வும் அச்சமும் கொண்டிருக்கும் மக்கள் வெறுமனே ஊர் சுற்றுகிறார்கள் என்று அர்த்தப்படுத்துவது நியாயம்தானா? கல்லூரி மாணவர்கள் வீட்டுக்குள் அடங்கிக்கிடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிர்வாகம், இது ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்கள் குறித்து ஏதேனும் அக்கறை கொண்டிருக்கிறதா? இத்தனை கோடி அபராதமாக வசூலித்திருக்கிறோம் என்று காவல் துறை பெருமைப்பட்டுக்கொள்வது உண்மையில் அறரீதியான வெளிப்பாடுதானா?

 

மனிதர்களை மனிதர்கள் நலன் சார்ந்து சில நெருக்கடிகளுக்கு உட்படுத்தும்போதும் அவர்களை மனிதர்களாக நடத்த வேண்டும். இது அடிப்படையான ஜனநாயக உரிமை; மானுட உரிமை. இதை நிர்வாகம் மதிக்கவில்லை என்றால், மக்களாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள். இதையெல்லாம்விட, மதிப்புக்குரிய மருத்துவர் ஜெயபிரகாஷ் முலியில் போன்ற அனுபவம் பெற்ற கொள்ளைநோய் நிபுணர்கள் கரோனா குறித்துக் கருத்து சொல்வதற்கும், இந்த அரசாங்கமும் நிர்வாகமும் சொல்வதற்கும் ஏன் தொடர்பில்லாமல் இருக்கிறது? அவருடைய கருத்து குறித்து ஏதேனும் விவாதங்கள் அதிகாரிகள் மத்தியில் நடந்தனவா? மக்களுடைய பங்களிப்பு இல்லாமல் இந்த நோயை அரசாங்கத்தால் கட்டுப்படுத்திவிட முடியுமா? மக்கள் பங்கேற்பதற்கு மக்களுக்குச் சுதந்திரம் வேண்டும். அரசாங்கம் மக்களை நம்ப வேண்டும். வாழ்வா, வாழ்வாதாரமா என்று தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களிடம் இருக்க வேண்டும். என் உடல் எனக்குச் சொந்தமானது. இந்த அரசாங்கத்துக்கோ அல்லது நிர்வாகத்துக்கோ அல்ல.

 

நாங்கள் யாரை நம்புவது? மருத்துவர் ஜெயபிரகாஷ் முலியில் போன்ற நிபுணர்கள் சொல்வதையா அல்லது அதிகாரிகள் சொல்வதையா? எங்களது வாழ்வாதாரத்தை, எங்களது சுதந்திரத்தை, எங்களது எதிர்காலத்தை விலையாகக் கொடுத்து நாங்கள் எதைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம் என்று எங்களுக்குத் உண்மையிலேயே தெரியவில்லை.

 

தயவுகூர்ந்து இதை எங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று நினைக்கிறேன்.

 

தாழ்மையுடன்,

சீனிவாச ராமாநுஜம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW