இனவெறி வன்முறையை நவதாராள முதலாளித்துவத்தின் வன்முறையில் இருந்து பிரித்து பார்க்க இயலாது – பகுதி 1

18 Jun 2020

அமெரிக்காவில் காவல்துறையால் நிகழ்த்தப்படும் கறுப்பின கொலைகளின் பின்னணியில் “பிளாக் லைவ்ஸ் மேட்டர்” புரட்சி புதிப்பிக்கப்பட்டு வீதிகளை ஆக்கிரமிக்கும் வேளையில், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார அநீதி உட்பட பிற துறைகளிலும் கறுப்பின மக்களை அரசு வஞ்சிக்கிறது. பரவலாகக் காவல்துறையினரால் கறுப்பின மக்கள்  கொல்ப்படுவதை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல் வெள்ளை மேலாதிக்கம் மற்றும் புதிய தாராளமய முதலாளித்துவத்தின் செயல்பாடாக கறுப்பின சமூகங்கள் வேண்டுமென்றே நிராகரிக்கப்படுவது குறித்தும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சில வெகுஜன ஊடகங்கள் போராட்ட களத்தில் நடக்கும் திருட்டை கண்டிப்பதில் கவனம் செலுத்தியுள்ள நிலையில், ஒடுக்கபட்ட சமூகங்களுக்கு எதிராக புதிய தாராள முதலாளித்துவத்தால் நிகழ்த்தப்பட்டு வரும் மிகப் பெரிய அளவிலான சுரண்டல் குறித்த விவாதத்தையும் ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.

 

இந்த வரலாற்று தருணத்தில், இனவெறி வன்முறை என்னும் தொற்றுநோயை புதிய தாராளமய முதலாளித்துவத்தால் திணிக்கப்பட்ட வன்முறையிலிருந்து பிரிக்க முடியாது. தற்போது டிரம்பின் வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள சுவர்களும் சிமென்ட் தடைகளும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போலீஸ் வன்முறையை உருவாக்கும் இரக்கமற்ற தன்மையையும், வீண்சுமை என்று கருதப்படும் பிறநாட்டு மக்கள் மீது நடத்தப்படும் போரையும் குறிக்கின்றன. தெருக்களில் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கும் துணை ராணுவமும் புதிய தாராளமய முதலாளித்துவத்தை உந்துவிக்கும் பொருளாதார சக்திகளும், இனவெறி அரசியலும், வறுமை சுழற்சியும், ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பும் பிரிக்க முடியாத வகையில் பிணைந்திருக்கிறது. இந்த கொள்ளையடிக்கும் பொருளாதார கட்டமைப்பு நிதித் துறை முதல் பெருந்துயரை உருவாக்குகிற, கட்டற்ற சுரண்டலில் ஈடுபடுகிற, பொதுத் துறையை சூறையாடுகிற மேலும் செல்வத்தையும் அதிகாரத்தையும் ஆளும் வர்கத்தின் கைகளில் குவிக்கிற பெருநிறுவனங்கள் வரை விரிந்திருக்கிறது‌.

 

பெருகிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயும், இனவெறி வன்முறையின் சமூக பிரச்சனையை தனிநபர் பிரச்சனையாக கட்டமைக்கும் புதிய தாராளமயத்தின் மிருகத்தனத்திலிருந்தும், கொடுமையிலிருந்தும் கவனத்தை திசை திரும்பியுள்ளது. அது அனைத்து சமூகம் மற்றும் அரசியல் பிரச்சினையும் தனிமனித விதி மற்றும் தேர்வை சார்ந்ததென கூறுகிறது. இவ்வாறு தனிநபர் பிரச்சனையாக சமுக சிக்கல்களை சுருக்குவதென்பது இன மற்றும் பொருளாதார அடிப்படையிலான பெரும் ஏற்றத்தாழ்வுகளை மறைக்க மேற்கொள்ளும் முயற்சி.

 

இந்த நெருக்கடி, நாம் ஒவ்வொருவரும் சுயநலத்தால் வரையறுக்கப்படுகிறோம் மேலும் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நாமே பொறுப்பு என்ற கட்டுக்கதைகளை சிதைத்துவிட்டது, . சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய பிரச்சினைகளைத் தீர்க்க நாம் புதிய தாராளமயம் அல்லது பணக்காரர்களை நம்ப வேண்டும் என்ற தவறான கூற்றும் பல நெருக்கடிகள் நிறைந்த இந்த தருணத்தில் தெளிவாகியுள்ளது.

 

டிரம்ப் ஆட்சியின் கீழ் இத்தகைய கட்டுக்கதைகள் அனைத்தும் முற்றிலுமாக பொய்த்துவிட்டன. வலதுசாரிய புதிய தாராளவாத நடவடிக்கைகள் மற்றும் பிற்போக்குத்தனமான வரி கொள்கைகளால் சுகாதார அமைப்பு, பொது துறை மற்றும் பிற சமூக நிறுவனங்களின் வளங்கள் சூரையாட பட்டதன் விளைவாக  முக்கியமான மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, போதிய சோதனையின்மை,  தோல்வியுற்ற பொது சுகாதார சேவைகள் மற்றும் பொது முதலீடுகளின் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது திண்ணமாகியுள்ளது. ” சமூக சமத்துவமின்மையின் வன்முறை ” என்று தாமஸ் பிகெட்டி குறிப்பிட்ட புதிய தாராளமய பொருளாதார அமைப்பின் முகத்திரையை இந்த தொற்றுநோய் கிழித்துள்ளது. சமத்துவமின்மை என்பது உயிர்களை, ஜனநாயக நிறுவனங்களை மற்றும் சமுக கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு நச்சு, அது வலதுசாரி ஊடக கலாச்சாரத்தால் இயல்பாக்கப்பட்டு  பணக்காரர்களுக்கும் சக்திவாய்ந்தவர்களுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக மாறியுள்ளது.

 

COVID-19 தொற்றுநோயை அரசியலாக்குவதற்கும், போலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களை இராணுவமயமாக்குவதற்கும் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்காவில் ஒரு பார்வை உருவாகி வருகிறது. இந்த பார்வையால் மனிதநேயமின்மை, பொருளாதார மற்றும் இன நீதியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும், பத்திரிகையாளர்களை அடிப்பதற்கும், அமைதியான எதிர்ப்பாளர்களைத் தாக்குவதற்கும் டிரம்ப் நிர்வாகத்தால் கட்டவிழ்கப்படும் போர் தான் பாசிசத்தின் தொடக்கம் என்பது தெளிவாகியுள்ளது. டிரம்பின் கொடூர புதிய தாராளமய முதலாளித்துவ  கொள்கை என்பது பாசிச அரசியலின் புதுப்பிக்கப்பட்ட வடிவமென இளந்தலைமுறை செயற்பாட்டாளர்கள் தெருக்களிலும் மற்ற இடங்களிலும் முழங்குகின்றனர்.

 

பல்வேறு தொற்றுநோய் சிக்கல்களுக்கு மத்தியில் வெளிவரும் இந்த எதிர்ப்புக் குரல்கள் பொருளாதார, இன மற்றும் சமூக அநீதிகளில் வேரூன்றியுள்ள இந்த சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பை மறுசீரமைக்க அழைப்பு விடுக்கின்றன. இந்த போராட்டத்தின் சமத்துவமின்மைக்கு எதிரான குரல் இன நீதிக்காக மட்டுமல்லாமல் புதிய தாராளமய முதலாளித்துவத்தை அழிக்கவும், போலீஸ் வன்முறையை ஒழிக்கவும், நிறுவன இனவெறியை அகற்றவும், ஜனநாயக சோசலிச சமுதாயத்தை கட்டமைக்கவும் தேவையான ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்பும் பெரிய போராட்டத்தில் ஒரு முக்கிய அங்கமாகவும் விளங்குகிறது. போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிப்பது அல்லது  கை குலுக்குவது போன்ற படங்களை வெளியிடும் பிரபல பத்திரிகைகள் இதை ஒற்றுமைக்கான போராட்டமாக சித்தரிக்கிறது‌. ஆனால் இது ஒற்றுமைக்கான போராட்டம் மட்டுமல்ல இது நீதிக்கான போராட்டம். ஒற்றுமை வாடகையை செலுத்துவதில்லை, வேலைகளை வழங்குவதில்லை, உலகளாவிய அடிப்படை வருமானத்தை உறுதி செய்வதில்லை, வீழ்சியடையும் பொருளாதாரத்தால் இலட்ச கணக்கான மக்கள் உணவின்றி மருத்துவ வசதியின்றி, பொருளாதார பாதுகாப்பின்றி தவிர்ப்பதற்கு தீர்வளிப்பதுமில்லை.

 

பொருளாதார வளர்ச்சிக்கும் சமுக நீதிக்கும் எந்த வித தொடர்புமில்லை மேலும் அதிகரிக்கும் எற்றதாழ்வும் வளங்கள் சிலரின் கைகளில் குவிவதும் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்’ என்னும்‌ கட்டுக்கதைகளை புதிய தாராளவாத கொள்கை உருவாக்கியது. COVID-19 நெருக்கடியின் மத்தியில், இந்த கதை பொய்யானது மட்டுமல்ல கொடூரமுமானதும் இரக்கமற்றதும் கூட என தோன்றுகிறது. சமூகம் தனிநபர் பயனாக்கப்பட்டதால், தனிநபர் சிக்கல்களை முறையான சமூக கருத்தாக மொழிபெயர்ப்பது மிகவும் கடினம். இதன் விளைவு என்னவென்றால், சமத்துவமின்மை இயல்பாக்கப்பட்டு, தொற்று நெருக்கடி அதற்கு காரணமான அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார நிலைமைகளிலிருந்து தனிமைப்படுத்தப்படுகிறது. அனைத்து சிக்கல்களும் தனிநபர் பொறுப்பாக சுருக்கப்பட்டு  மனித தேவைகளை நிவர்த்தி செய்வதையும் உயிர்களை காப்பாற்றுவதையும் விட செலவு-பயன் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற தவறான மற்றும் ஆபத்தான புதிய தாராளவாத கருத்தை  கொரோனா நோய்த் தொற்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தருணத்தில் தனிநபர் பொறுப்பு சமுதாயத்திற்கு எதிராகத் கட்டமைத்து மனித நேயம் மற்றும் ஒற்றுமை உணர்வுடன் ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதற்கு மாறாக சுயநல உணர்வில் சிறைபட்டுள்ளது. இந்த கொள்கையினால் ஏற்படும் கொடுமையானது தொற்று நோய் பாதிப்பின் வீரியத்திலும் அது எவ்வாறு எளிய மக்களை சிதைக்கிறது என்பதிலும் பிரதிபலிக்கும்.

இதை ஜூடித் பட்லர் பின்வருமாறு அவதானிக்கிறார்

 

” வேலையில்லாதவர்கள் மற்றும் வீடற்றோர்களுக்கு எதிர்காலம்  இப்பொது கேள்விக்குறியாக உள்ளது.. சமமான செயல்பட கூடிய பொது சுகாதார அமைப்பின்மையால், மருத்துவம் பொதுவானதாக அரசால் வழங்கபடுக்கூடியதாக இல்லாததால் வேலையில்லாதவர்கள் நோயுற்று பராமரிப்பின்றி இறக்காமலிருக்க மாற்று வழிகளை தேடுகின்றனர். இது உலகின் பிற பகுதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அமெரிக்காவின் கொடுமையான நிலை. பல தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தபட்டதோடு, வேலைவாய்ப்பின் சரிவு, ஊதியம் இல்லா சூழல், வீடற்ற நிலை மற்றும் அவர்களின் சொந்த சமூகத்தால் கைவிடப்பட்ட உணர்வு ஆகியவற்றையும் எதிர்கொள்கிறார்கள்.”

 

புதிய தாராளவாத பாசிசத்தின் மொழியை எதிர்த்தல்

 

சமத்துவமின்மையை புதிய தாராளமய முதலாளித்துவத்தின் மைய நெறிமுறைகள் மற்றும் இயக்கவியல் ஆகியவற்றுடன்  வரலாற்று ரீதியாக அடிப்படை தொடர்புடையதாக  புரிந்து கொள்ளக்கூடிய ஒரு பரந்த மற்றும் விரிவான அரசியலின் ஒரு பகுதியாக   காண்பதே இங்குள்ள கல்வி மற்றும் நெறிமுறை சவால். சமூக நலன், தொழிற்சசங்ககள் மற்றும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல், காலநிலை மாற்றத்தை நிராகரித்தல், தனியார்மயமாக்குதல், முட்டாள்தனமான சுயநலம் மற்றும் பொதுத்துறை நிதிகளை குறைத்தல் ஆகியவற்றுடன் சமத்துவமின்மையை தொடர்பு படுத்துவதும் இதில் அடங்கும். நிதி மூலதன செயல்பாட்டின் இத்தகைய அரசியல் கொள்கையின் ஒரு பகுதியான சுரண்டல், பிரிவினை, வர்க பாகுபாடு, சமூக மரணங்கள் மற்றும் இன அழப்பின் மூலமாகவே வலதுசாரிய ஜனரஞ்சகமும் (Populism) பாசிச அரசியலும் எழுச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொற்று நெருக்கடியின் மத்தியில்பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் பங்குச் சந்தையின் வலிமையை மையமாகக் கொண்ட விவாதங்களால் நாட்டின் சுகாதாரம் குறித்த விவாதம் இருட்டடிக்கப் பட்டுள்ளது. இது போன்ற விவாதங்கள் மூலம் COVID-19 நெருக்கடிக்கு தனது நிர்வாகத்தின் தெளிவற்ற மற்றும் திறமையற்ற எதிர்வினையை மறைக்க டிரம்ப் முயல்கிறார்.

 

மேலும்  அரசியல் சந்தர்ப்பவாதமும்  இராணுவவாதமும் மற்றும் அவரது கேலிக்குரிய பத்திரிகையாளர் சந்திப்புகளும் தான் இனநீதிக்கு அழைப்பு விடுக்கும் பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கு டிரம்ப்பின் பதில்களாக உள்ளது. இன்னும் மோசமாக செயின்ட் ஜான் தேவாலயத்திற்கு முன்னால் பைபிளை வைத்திருக்கும் அவரது புகைப்படக் காட்சி, கு க்ளக்ஸ் கிளானுக்கு Ku Klux Klan இணையான வரலாற்றையும் டி.டபிள்யூ கிரிஃபித்தின் 1915 இனவெறித் திரைப்படமான “தி பெர்த் ஆஃப் எ நேஷன்”  இல் உள்ள காட்சிகளையும் எதிரொலிக்கிறது.

 

98 வயதான வரலாற்றாசிரியர் பெர்னி வெயிஸ்பெர்கரை மேற்கோள் காட்டி, புகழ்பெற்ற மூத்த பத்திரிகையாளர் பில் மோயர்ஸ் குறிப்பிடும் “மிகவும் வெளிப்படையான பாசிசம் ” என்ற சொல்லுக்கு இணையாக டிரம்பின் செயல்பாடுகள் உள்ளது. இராணுவமயமாக்கப்பட்ட வெள்ளை மாளிகையில் டிரம்ப்‌ தனக்கெதிரான ஒழுங்கு விசாரணைகளை நிறுத்த முயல்கிறார், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சட்ட மன்னிப்பு வழங்குகிறார் மேலும் தனக்கு எதிரான சார்புடையவர்களாக அவர் கருதும் ஊடக நிறுவனங்களையும் சமூக ஊடகங்களையும் தண்டிக்கிறார். அவர் இராணுவத்தை அரசியலாக்குகிறார், கருத்து வேறுபாடுகளை நசுக்குகிறார், பரவலாக ஊழலில் ஈடுபடுகிறார், அரசியலை ஒரு காட்சி பொருளாக்கி  தொடர்ச்சியான பொய்களால் பொதுமக்களை ஏமாற்றுகிறார். கொடுங்கோன்மையின் இந்த சூழலில் பரவலான போலீஸ் அத்துமீறல், சமத்துவமின்மை மற்றும் அதிகரிக்கும் இனவெறி போன்ற பிரச்சினைகள் கடுமையான இராணுவ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் “போர் களங்களாக” பார்க்கப்படுகின்றன. டிரம்பின் இராணுவமயமாக்கப்பட்ட பிரிவினைவாத அரசியலில் வண்முறையே வர்க மற்றும் இனப் போரின் ஆயுதமாக மாறியுள்ளது. எந்த வித முற்போக்கு நடவடிக்கைகளுக்கு இடமில்லாததாக அரசியல் களம் மாறியுள்ளது. பொது நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு ஒழுங்குபடுத்தபடாமல், சமூக இணைப்புகளும் சமய நல்லிணக்கமும் நொறுக்கப்பட்டு பாசிச அரசியல் வேட்கையும் அதற்கான சக்திகளும் அணி திரட்டப்படுகின்றன.

 

டிரம்பின் தார்மீக அரசியல் தலைமையின்மையையும் தாண்டி இங்கு அதிக பிரச்சனைகள் உள்ளது. மருத்துவமனை படுக்கைகளை வழங்குவதற்கும், சுகாதார வசதிகளுக்கு நிதியளிப்பதற்கும், ஒரு தொற்று பணிக்குழுவை விரிவுபடுத்துவதற்கும் (கலைக்காமல் தடுத்து), மற்றும் விஞ்ஞான நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கும் திறன் கொண்ட ஒரு தேசியக் கொள்கையின் பற்றாக்குறையால் தேவையற்ற உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. தொற்றுநோய் நம் முகத்தில் அறைந்திருக்கும் உண்மையானது, டிரம்ப் நிர்வாகத்தின் இனபேத பழமைவாத  கொள்கையால் சமத்துவமின்மை அதிகரித்ததும் அதே நேரத்தில் பொருளாதார உற்பத்தியின் அடிப்படையில் மட்டுமே மனித உயிரை மதிப்பிட முடியும் என்ற அனுமானத்தை முன்வைத்ததுமே ஆகும். இந்த அடிப்படையிலும் மேலும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (Herd Immunity)என்ற கருத்தியலிலும் முதியவர்கள், குடியேறியவர்கள், ஏழைகள் மற்றும் வெள்ளையினம் அல்லாத மக்கள் பயனற்றர்வகளாகவும் அதனால் ஆளும்  உயர்தட்டு மக்களை போல் வைரஸிலிருந்து பாதுகாக்க தேவையற்றர்வகளாகவும் கருதப்படுகிறார்கள். இதை ஜூடித் பட்லர்

 

“புதிய ஆரிய சமூகத்தில் ‘எளிய மக்கள்’ உற்பத்தி பயனற்றவர்கள் என்று கருதப்பட்டதால், அவர்கள் உயிருக்கு மதிப்பில்லை, அவர்கள் இறந்தால் அது வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது, ஏனென்றால் அவர்கள் பொருளாதாரத்தில் உற்பத்தித் தொழிலாளர்களாக அல்லாமல் ‘வடிகால்களாக’ கருதப்படுகிறார்கள். மந்தை நோய் எதிர்ப்பு சக்தி வாதம் இந்த கூற்றை வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அதில் இந்த கருத்து மறைந்திருக்கிறது” என விளக்குகிறார்.

 

பொருளாதார சமத்துவமின்மை மற்றும் அதன் இரக்கமற்ற விளைவுகளை அரசியல் தொடர்பற்றதாக நிறுவுவதே புதிய தாராளமயத்தின் மையத் திட்டமாகும். இந்த திட்டம் சமூகம் மற்றும் வரலாற்று மறதி, சமூக கூட்டு மனசாட்சியின் சரிவு மற்றும் ஒரு நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வரையறுக்கும் கதைகளை சுருக்கவுது அதை கட்டுப்படுத்துவது ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் சமத்துவமின்மை, வறுமை, துயரம் மற்றும் துன்பம் ஆகியவற்றின் வரலாறு காணாத வளர்ச்சி என்பது  அதிசெல்வந்தர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் நலனுக்கு கொடுக்கப்பட்ட விலையாக கருதப்படுகிறது. லிஸ் தியோஹரிஸ் தெளிவுபடுத்தியது போல் COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில், டிரம்ப் நிர்வாகம் பொருளாதார ரீதியாக மோசமாக இருப்பவர்களுக்கு பயனளிக்கும் திட்டத்திற்கு மாறாக CARES சட்டத்தின் மூலம் பணக்காரர்களுக்கு வெகுமதி அளிக்கும் அதிர்ச்சியூட்டும் தன்னிச்சையான நடவடிக்கையை எடுத்ததுள்ளது. புதிய தாராளமயத்தின் கீழ் வோல்ஃப் ஸ்ட்ரீட், காவல்துறை, லாபிகள் மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பணத்தை வாரி இரைக்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த பொருளாதார மற்றும் இன நெருக்கடி மாற்றப்படும். மேலும் தியோஹரிஸ் கவனித்தபடி:

 

மார்ச் நடுப்பகுதியில் இருந்து, அமெரிக்காவில் 600 க்கும் மேற்பட்ட பில்லியனர்களின் செல்வம் 434 பில்லியன் டாலர்கள் அல்லது 15% அதிகரித்துள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றிய CARES சட்டத்தில்,  நாட்டின் பணக்கார வணிக உரிமையாளர்களில் 43,000 பேருக்கு 135 பில்லியன் டாலர் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது . 

(இத்துடன் 2017 ஆம் ஆண்டு டிரம்பின் 1.5 டிரில்லியன் டாலர் வரிக் குறைப்பு மூலம் ஏழைகளிடமிருந்து பெரும் செல்வந்தர்களுக்கு நிகழ்ந்த சொத்து மறுபகிர்வையும் சேர்க்க வேண்டும். ) ”

 

தொற்று நெருக்கடி காலத்தில் சமத்துவமின்மை என்பது பொதுமக்களின் அச்சம், கட்டுபடுத்தாத தனித்துவம், மற்றவர்களை அரக்கர்களாக சித்தரித்தல், இடைவிடாத பேராசை மற்றும் சுயநல பிரச்சாரம் ஆகியவற்றின் மூலம் இயல்பாக்கப்பட்ட ஒரு தொற்றுநோயாக மாறியுள்ளது. சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மையின் அதிகரிப்பு மற்றும் ஆபத்து, பதட்டம் மற்றும் பயம் ஆகியவை குறித்த விரிவடைந்த பிரச்சாரங்களே அரசு நிர்வாகத்தின் மைய இயங்கியலாக மாறியுள்ளன. புதிய தாராளமய ஆளுகையின் இந்த வடிவம்  கடந்த கால சர்வாதிகார ஆட்சிகளைப் பிரதிபலிப்பதோடு தற்போது பிரேசில், ஹங்கேரி மற்றும் துருக்கி உள்ளிட்ட பல கடுமையான சர்வாதிகார அரசாங்கங்கள் மற்றும் போரிஸ் ஜான்சனின் தலைமையிலான ஐக்கிய இராச்சியம் போன்ற மித ஜனநாயக எதிர்ப்பு  சமூகங்களின் சித்தாந்தங்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது.

 

-ஹென்றி ஏ. கிரூக்ஸ்

தமிழில்: சர்ஜுன்

 

https://truthout.org/articles/racist-violence-cant-be-separated-from-the-violence-of-neoliberal-capitalism/

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW