‘இது போர்க்குற்றம்’ – பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை இஸ்ரேலுடன் இணைக்கும் முயற்சிக்கு இஸ்ரேலில் வலுக்கும் எதிர்ப்பு!

11 Jun 2020

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜூலை மாதத்தில் ஏற்கனவே ஆக்கிரமிப்பிலுள்ள பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான வெஸ்ட் பேங்கின் ‘West Bank’ சில பகுதிகளை அதிகாரப்பூர்வமாக இணைக்கத் இணைக்கப்போவதாக அறிவிப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கடந்த சனிக்கிழமை (06-06-2020) மாலை டெல் அவிவில் (Tel Aviv) கூடினர்.  இஸ்ரேலின் இடதுசாரி கட்சியான  மெரெட்ஸ் கட்சி,  அரபு கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் பிரிவு மற்றும் பல இடதுசாரி குழுக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 6,000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர், கொரோனா தொற்று ஆரம்பித்தப் பின்னர் இஸ்ரேலில் நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும்.

 

வெஸ்ட் பேங்க் இணைப்பு (Annexation of West Bank)

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இரண்டு வலதுசாரித் தலைவர்களான அமெரிக்க அதிபரும் இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகுவும் வெள்ளை மாளிகையில் சந்தித்தபொழுது, அமெரிக்கா,  வெஸ்ட் பேங்க் ஆக்கிரமிப்புப் பகுதியை இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்வதற்கு அமெரிக்க அரசின் ஆதரவை தெரிவித்துள்ளது.  1967ல் இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த இந்த நிலப்பரப்பின் 30% பகுதியை இஸ்ரேல் அரசின் இறையாண்மைக்குட்பட்ட பகுதியாக இணைத்துக்கொள்வதற்கான ஒப்பந்தம் அமெரிக்க – இஸ்ரேல் இடையே கையெழுத்தாயிருந்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா முன்மொழிந்துள்ள வெஸ்ட் பேங்க் வரைபடம்

 

இதையடுத்து, மூன்றுமுறை தேர்தல் நடத்தியும் எந்த அரசியல் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாததால், 500 நாட்களுக்கு மேலாக நிலையற்ற அரசாங்கம் இஸ்ரேலில் நிலவி வந்த நிலையில், எதிக்கட்சித் தலைவரான காண்ட்ஷுக்கும் ஆளும் கட்சியின் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் (Benjamin Netanyahu)  இடையிலான உடன்படிக்கையின் அடிப்படையில் உருவாக்கியுள்ள தற்காலிக கூட்டணியின் மூலம், மூன்றாண்டுகளுக்கு இந்த கூட்டணி ஆட்சி செய்வதற்கான ஒப்புதலைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் முதல் 18 மாதங்களுக்கு  பெஞ்சமின் நெதன்யா பிரதமர் பதிவில் நீடிப்பார் மற்றும் துணைப் பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவிகளில் காண்ட்ஸ் கட்சியினர் இருப்பர். அடுத்த 18 மாதங்களில் பதவிகள் மாற்றிக்கொள்ளப்படும்.

 

புத்தாக அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமாதான திட்டத்தின் கீழ் இஸ்ரேல் வெஸ்ட் பாங்கின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பெரும்பகுதியை இணைப்பதற்கான பணிகளை ஜூலை முதல் வாரத்திலிருந்து ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க  அலுவலர்கள் இந்த குழு இணைப்புக்குத் தேவையான ஆயத்தப்பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து  வெஸ்ட் பாங்கின் இஸ்ரேலிய குடியேற்றப்பகுதி உட்பட, நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

 

இணைப்புக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

இஸ்ரேலின் இடதுசாரிக்கட்சியான மெரெட்ஸ் கட்சியின் தலைவர் எம்.கே. நிட்ஸன், ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது “வெஸ்ட் பேங்கினை இஸ்ரேலோடு இணைப்பது போர்க்குற்றம், அமைதிக்கு எதிரான குற்றம், மனிதக்குலத்திற்கு எதிரான குற்றம் . தொற்றுநோய் காரணமாக ஏற்கனவே பொருளாதாரம் சரிந்து வரும் நிலையில் இது இஸ்ரேலுக்கு மில்லியன் கணக்கில் பொருட்செலவை உண்டாக்கும்”  என்றும் “பத்தாண்டுகளுக்கு மேலான ஆக்கிரமிப்பை ஒரு இனவெறி நடவடிக்கையாக மாற்ற முயற்சிக்கக்கூடாது” என்றும் கூறியுள்ளார்.  தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்திடம், ஊழல் புகாரில் சிக்கியிருக்கும்  இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு செய்திருக்கும் இந்த ஒப்பந்தம்,  தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கும் ஒருவருக்கும்,  ஊழல் விசாரணையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் மற்றொருவருக்கும் இடையிலான சபிக்கப்பட்ட ஒப்பந்தம் என்கிறார்.

 

இஸ்ரேலின் ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டமைப்பின் தலைவர் அய்மன் ஓதே பேசுகையில், “அமைதி மற்றும் நீதியை ஆதரிக்கும் அனைத்து யூதர்களும் அரேபியர்களும் வெஸ்ட் பாங்கின் சுமார் 30% பகுதியை இஸ்ரேலின் இறையாண்மைக்கு உட்படுத்தும் நெதன்யாகுவின் திட்டத்தை எதிர்க்க வேண்டும்’ என்றும் ‘வெஸ்ட் பாங்கின் இணைப்பு இனவெறிச்செயல்’ என்றும் கண்டித்துள்ளார்.

 

அமெரிக்காவைச் சேர்ந்த  ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் வெளியிட்ட காணொளியில்      ‘வெஸ்ட் பாங்கின் எந்தப் பகுதியையும் இணைப்பதற்கான திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர வேண்டும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள அனைத்து மக்களும் சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

 

அண்டை நாடான ஜோர்டான், இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கைக்கு இந்த திட்டம் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எச்சரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் பாலஸ்தீனம் இஸ்ரேலுடனான முந்தைய அனைத்து ஒப்பந்தங்களையும் நிராகரிப்பதாகவும் கூறியுள்ளது.

 

இரண்டாவது முறையாக இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய வலதுசாரி மோடி அரசாங்கம், அரசமைப்பு சாசனம் காஷ்மீருக்கு வழங்கியிருந்த சிறப்பு அந்தஸ்தை (Article 370) விலக்கிக்கொண்டது. காஷ்மீரை நிரந்தரமாக ஆக்ரமித்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் முழு ஊரடங்கு மற்றும் ராணுவ பிடியில் மக்களை சிறைப்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் மீண்டும் ஆட்சியிலமர்ந்திருக்கும்  வலதுசாரி நெதன்யாகுவின் அரசாங்கம், ஆக்கிரமிப்பு பகுதியை  இணைத்துக்கொள்வதற்கான ஆயத்துப்பணிகளைத் தொடங்கியிருக்கிறது. உலகமுழுவதும் வலதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றவும், ஆட்சியை நீட்டித்துக்கொள்ளவும், பொருளாதாரத் நெருக்கடியை திசைதிருப்பவும், ஊழல் புகாரிலிருந்து தப்பித்துக்கொள்ளவும்,  இனவெறி மற்றும் அதீத தேசியவாத கருத்தாக்கத்தை கட்டமைத்து, ஆக்கிரமிப்பாளர்களாகவும், வன்முறையாளர்களாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

 

–       ராதா

 

 

https://www.timesofisrael.com/thousands-rally-in-tel-aviv-against-netanyahus-annexation-plans/?fbclid=IwAR1TCg3PWVlOaAnA5-Vi6AJO6WVAP56gwLPB6HE425d1vtJLenDv-ET_6IM

https://www.washingtonpost.com/world/middle_east/netanyahus-plan-for-west-bank-annexation-faces-unexpected-opposition-from-settlers/2020/06/10/9db6c694-a744-11ea-898e-b21b9a83f792_story.html

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW