பொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்

04 Jun 2020

FRONTLINE இதழில் ‘An Empty Package’ என்ற தலைப்பில் ஸ்ரீதர் அவர்கள் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு – பகுதி 2

மாநில உரிமைகள் மீதான தாக்குதல்

 

பணவீக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், சொத்து வரி, பயனர் கட்டணங்கள் மற்றும் பிற வரிகளில் அவ்வப்போது மாநிலங்களும் அதிகரிப்பு செய்ய வேண்டும். மாநிலங்கள் தங்கள் வருவாயில் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கும் நேரத்தில் இது அறிவிக்கப் படுகிறது. நிபந்தனைகளுக்கு பதிலளித்த கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் “ நிபந்தனைகளை பூர்த்தி செய்வது கேரளாவுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது என்றாலும், இந்த நடவடிக்கை “மாநிலங்களின் சுயாட்சியில் தலையிடுவதாக உள்ளது” என்றார். சத்தீஸ்கர் நிதி மந்திரி டி.எஸ். சிங் தியோ “இது கூட்டாட்சி அமைப்பு மீதான தாக்குதல் மற்றும் மோசமான உள்நோக்கம் கொண்டது. இது மாநிலங்கள் மீது கொள்கையை சுமத்துவதாகும். பிறகு எதற்கு மாநில அரசுகள் உள்ளன? ” எனக் கேட்டார். 14 வது நிதி ஆணையத்தின் உறுப்பினர் எம். கோவிந்த ராவ், ‘இந்த நடவடிக்கை “மையத்தின் அதிகாரங்களை வரைமுறையின்றி பயன்படுத்துவதாகும்” என்றார். சட்டம் அத்தகைய அதிகாரங்களை மையத்திற்கு வழங்கியிருந்தாலும், இதற்கு முன்னர் இந்த அதிகாரங்கள் பயன்படுத்தப்படவில்லை. “இந்த அழுத்தம் மானியங்களுக்கல்லாமல் சந்தைக் கடன்களுக்குப் பயன்படுத்தப்படுவது போலித்தனமானது” என்று அவர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டார்.

 

ஆந்திராவின் நிதி முதன்மை செயலாளர் கே.ராமகிருஷ்ண ராவ், இந்த நிபந்தனைகள் “அதிகாரிகளின் கைவண்ணம்” என்று கூறினார். “நிபந்தனைகளுக்குப் பின் நிபந்தனைகள் உள்ளன, மேலும் நிபந்தனைகளுக்குள் கூட நிபந்தனைகள் உள்ளன” என்று அவர் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கூறினார்.

 

இதன் விளைவாக, ஐந்து நாட்களாக நிர்மலா சீதாராமன் வழங்கிய உரையால் நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் கொள்கை நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மோடி அரசு இல்லை என்ற வேதனையான செய்தி விளங்கியுள்ளது. அவரது உரையில் கூறிய அல்லது சொல்ல தவறிய இரண்டு அம்சங்கள் தெளிவாக தனித்து நிற்கிறது. முதலாவதாக, ஊரடங்கு குழப்பங்கள்  இந்தியாவின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையை  மாபெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவதாக, சில ஏழ்மையான மாநிலங்களிலுள்ள தங்கள் ஊர்களுக்கு சென்றுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பெருமளவில் செயல்படுத்தி அதன் மூலம் உடனடியாக உதவுமாறு கோருகிறார்கள். இந்த இரண்டு விஷயங்களிலும் அவர் தெளிவற்ற தவறாக வழிநடத்தும் மூர்க்கத்தனமான  கூற்றுக்களை கூறினார்.

 

எட்டு கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்காக அரசாங்கம் ரூ .3,500 கோடியை வழங்குவதாக அமைச்சர் கூறினார். இதில் பல சிக்கல்கள் உள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்களை அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமல் எவ்வாறு வழங்கவுது? அவர்கள் முகாம்களில் இருப்பதாக அமைச்சர் கூறினார், ஆனால் இந்தியாவில் முகாம்களில் உள்ள தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்கள் கேரளாவில் உள்ளனர் என உச்சநீதிமன்றத்தில் அரசாங்கம் தெரிவித்திருந்தது. புலம்பெயர்ந்தோரில் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே முகாம்களில் இருக்கின்றனர். நிச்சயமாக, எட்டு கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் முகாம்களில் தங்க வைக்கப்படவில்லை. உண்மையில் ஏற்கனவே செய்த வேலைக்கு பணம் செலுத்தாமல் அவர்களை முதலாளிகளால் விரட்டிய பின் சாலைகளிலும் அல்லது நகரங்களின் திறந்த வெளியிலும் இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன . இது மட்டுமின்றி பெரும்பாலான மாநில தொழிலாளர் துறையில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலுமில்லை.

 

இதன் விளைவாக இந்த புலம்பெயர் குடிமக்கள் யார், அவர்கள் எங்கிருக்கிறார்கள், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எத்தனை பேர் உள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் நம்மிடம் இல்லை. நம்மிடம் உள்ள ஒரே அதிகாரப்பூர்வ தகவல் பத்தாண்டிற்கு முன்னர் எடுத்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆனால் இது கூட மேம்போக்கானது தான். கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்) மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் இந்திய குடியேறியவரின் தகவலை ஒரளவிற்கு நிறைவு செய்கின்றது. இந்த தகவல் வெற்றிடத்தை பயன்படுத்திதான் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் வீடுகளுக்கு ரயில்கள் மூலம் அரசாங்கம் கொண்டு சேர்த்தது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், கடந்த மூன்று மாதங்களில் ஒரு இந்தியர் கூட பட்டினியால் இறக்கவில்லை என்று பொய்யாக கூறியதொடு 1,150 “ஷ்ராமிக் ஸ்பெஷல்” ரயில்களில் 15 லட்சம் தொழிலாளர்கள் சென்றனர் என இந்த எண்ணிக்கையை உயர்த்தினார்.

 

இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல வகையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் குறுகிய கால தொழிலாளர்கள்; பருவகால வேலைவாய்ப்பைப் பொறுத்து வருடத்தில் முன்னும் பின்னுமாக புலம்பெரும் தொழிலாளர்கள்; மற்றும் நீண்ட கால வேலைவாய்ப்புக்காக  புலம்பெயர்பவர்கள் (நிச்சயமாக நீண்டகால பணிபாதுகாப்பு இல்லாமல்).

 

புலம்பெயர்ந்தோர் மாநில எல்லைகளை கடக்கிறார்களா என்பதன் அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகிறார்கள். ஊரடங்கு மாநிலங்களுக்கு இடையில் புலம்பெயர்ந்தோரை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது என்றாலும், மாநிலத்திற்குள் புலம்பெயர்ந்தவர்களும் அதன் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. ஊரடங்கின் போது கர்நாடக அரசு பேருந்துகளை அனுமதிக்க முடிவு செய்தது, ஆனால் அதிகமான கட்டணம் வசூலித்தது. உதாரணமாக, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு வடக்கு கர்நாடகாவிலிருந்து பெங்களூரு வர கட்டணம் ரூ .1 லட்சத்துக்கு மேல் நிர்ணயிக்கப்பட்டது. பெங்களூரில் வெளி மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் என்றாலும் மாநிலத்திற்குள் இருந்து இடம்பெயர்ந்தவர்களும் கணிசமாக உள்ளனர். ஓலா, ஊபர் டாக்சி ஒட்டுவது மற்றும் கட்டிட வேலை உள்ளிட்ட பல தொழில்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இன்னல்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

 

இந்தியாவின் கோவிட் நெருக்கடியின் முகமாக புலம்பெயர் தொழிலாளர்கள் மாறியுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கைவிடப்பட்டதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசாங்கமும் பெரும்பாலான மாநில அரசாங்கங்களும் முதலாளிகளுடன் இணைந்து தொழிலாளர்களை ஊருக்கு செல்லாமல் தடுத்து அவர்களின் உழைப்பை சுரண்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன. அவர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை நடந்தும் மிதிவண்டியிலும் சிலர் செயற்கை கால்களுடனும், வயது முதிர்ந்த பெற்றோர்களையும் குழந்தைகளையும் சுமந்த படியும் செல்கின்றனர். ஊருக்கு செல்லும் முனைப்பில் நீர், நிலம் , கடல் போன்ற அனைத்து மார்கத்தை முயற்சிக்கின்றனர்.

 

எனவே, பியூஷ் கோயல் மற்றும் நிர்மலா சீதாராமன் தங்களின் சாதனைகளாக கூறுவதென்ன ? இந்தியாவில் உள்-மாநில புலம்பெயர்வுகளை  தவிர்த்து மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை 565 லட்சம் ஆகும் (10 ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரங்களின்படி). இதில் நான்கில் ஒருவருக்கு ஊருக்கு போக தேவைப்பட்டாலும் 141 லட்சம் பேரை இதுவரை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அப்படியானால் இந்தியாவின் மிகவும் நலிந்த தொழிலாளர்களின் கோரிக்கையில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே நிறைவேற்றப் பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் ஊர் திரும்ப விரும்பினால் மாநிலங்கள் அதற்கான இரயில்களை கோர வேண்டுமென கோயல் கோபமுடன்‌ கூறினார். இரண்டு மாதமாக தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யாமல் இவ்வாறு கூறுவது வேடிக்கையானது.

 

உண்மையில், மாநிலங்களுக்கு இடையிலான இடம்பெயர்வு இந்தியாவில் வறுமையின் நிலையை பிரதிபலிக்கிறது. உத்தரபிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களிலிருந்து நிகழும் இடம்பெயர்வு இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையிலான இடம்பெயர்வுகளில் பாதியாகும். மறுபுறத்தில், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்குளுக்குள்  இடம்பெயர்வதும் பாதியாகும். இந்த சூழலில் கோயலின் திடீர் உற்சாகம் என்பது அபத்தமானது. புலம்பெயர்ந்தோர் திரும்பிச் செல்லும் மாநிலங்கள் இந்தியாவின் ஏழ்மையானவையாகும்;திரும்பி வரும் தொழிலாளர்களுக்கு இடமளிக்கும் திறனற்றவை. இப்போது அவர் இயக்க தயாராகும் இரயில்களை 50-60 நாட்களுக்கு முன்பு இயக்க முடியாத அளவுக்கு எது வித்தியாசமாக இருந்தது என கோயல் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.

 

மாநில அரசுகள் பயணம் செய்ய விரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்யும்படி கேட்டுள்ளன. இவை நடைமுறை சிக்கல் நிறைந்தவை என்று அறியப்பட்டாலும், மாநிலங்கள் வெளியிட்ட ஒரு பகுதி பட்டியலில் மட்டுமே மே மாதத்திற்குள் குறைந்தது 55 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். கோவிட் நெருக்கடியின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை குறித்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ள ஸ்ட்ராண்டட் வொர்க்கர்ஸ் ஆக்சன் நெட்வொர்க்கில்  (Stranded Workers Action Network -SWAN) பணிபுரிபவரும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆசிரியருமான ராஜேந்திரன் நாராயணன், பதிவு செய்யும் முறையில் பல குறைபாடுள்ளதாக சுட்டிக்காட்டினார். இதனால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கான கறுப்புச் சந்தை வளர்த்துள்ளது. ஏழை புலம்பெயர்ந்தோர் பேருந்து அல்லது இரயிலில் பயணிக்க ஒரு டிக்கெட்டுக்கு ரூ 8,000 வரை செலுத்துகின்றனர் என்று ஸ்வான் சமீபத்தில் கூறியது.

 

இந்த தொழிலாளர்களுக்கான போக்குவரத்து தேவை குறித்து அரசாங்கம்  வேண்டுமென்றே பொருப்பற்று செயல்படுவதாக  தெரிகிறது. COVID நெருக்கடி முடிந்தவுடன், உற்பத்தித்திறன் தொழிலாளர்கள் தங்கள் பணியிடத்தில் இருக்க வேண்டும் என்பதை அரசாங்கமும் தொழில் மற்றும் வர்த்தக லாபிகளும் விரும்பின. மே 21 அன்று, மோடியின் தடையற்ற ஆதரவை பெற்ற லாபி அமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு, வர்தகத்தை தொடர புலம்பெயர் தொழிலாளர்களை உடனடியாக திரும்ப அழைத்து வர வேண்டும் என்றனர். இது மத்திய அரசின் திறமையின்மை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்பியதாக மாநில அரசுகள் மீது குற்றம் சாட்டியதுடன், இந்த தொழிலாளர்களை திரும்பப் பெறுமாறு மாநிலங்களை மத்திய அரசு கோரியது. ஆனால் சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய இடம்பெயர்வு ஏற்பட்டதற்கான காரணம்‌ குறித்து எதுவும் கூறவில்லை.

 

நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பரவலான ஊடகங்களின் கட்டாயத்தின் பேரில் அரசு வேறு வழியின்றி அரை மனதுடன் செயல்பட்டது. தொற்றுநோயை எதிர்த்துப் போரிடுவதற்கான எந்தவொரு திட்டமிடுதலையும் விட, ஆட்சியின் சர்வாதிகார விருப்பத்தை திணிப்பதற்கே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது தெளிவாகியுள்ளது. பல மாநிலங்களில் திடீரென வெளிப்படையாக ஒருங்கிணைந்து தொழிலாளர் சட்டத்தை அகற்றுவது, இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத அழுத்தம், விவசாய சந்தை கட்டமைப்புகளில் அதிரடி மாற்றங்கள் ஆகியவை விவசாயிகளை மேலும் இன்னல்களுக்கு உள்ளாக்குகிறது. இவை அனைத்தும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் சங்க பரிவார் அமைப்பு எதிர்ப்பு பலவீனமாக இருக்கும்  ஊரடங்கை வாய்ப்பாக பயன்படுத்துகிறது என்பதையே காட்டுகிறது .

 

காற்றில் வைரஸின் அச்சுறுத்தலும், நோய்த்தொற்று அரசின் திறமையின்மையால் மோசமாகவும் உள்ளதால் குடிமக்கள் பீதியில் உள்ளனர். இந்த மனநிலை மக்களிடையே போராட்ஙகளை ஊக்குவிக்க போவதில்லை. ஊரடங்கு விஷயங்கள் மோசமாக்கி, குடிமக்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை மட்டுமல்லாமல் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் நிர்ணயிக்கிறது. மொத்தத்தில், இந்தியா ஒரு இருண்ட பாதையில் நுழைகிறது, இது 1970 களின் அவசரநிலையை விட மோசமானாது.

 

  • வி. ஸ்ரீதர்

தமிழில்: சர்ஜுன்

 

https://frontline.thehindu.com/cover-story/article31658653.ece?homepage=true

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW