முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையிலான பொருளாதார மீட்சி குழுவில் தமிழக அரசு அனைத்து தரப்பையும் பங்கேற்க செய்ய வேண்டும்

12 May 2020

கொரானா முழு முடக்கம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை வருவாய் பற்றாக்குறையை கொண்டுவந்துள்ளது, ஏற்கனவே பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை சுட்டிகாட்டப்பட்டது, இப்பொழுது கடந்த 50 நாட்களாக அனைத்து வகையான உற்பத்தி நடவடிக்கைகளும் நின்று போனதால் ஏற்கனவே பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட வருவாயும் குறைந்துபோய் கொரானா புதிய செலவுகளையும் சுமைகளையும் கொண்டுவந்திருக்கிறது. மோடி அரசு தமிழகத்திற்கு திருப்பி தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, பேரிடர் கால நிதி ,மருத்துவ சேவைகளுக்கான நிதி எதையும் வழங்க தயாராக இல்லை, இந்த சூழலில்தான் தமிழகத்தின் பொருளாதார மீட்சிக்கு செயல்திட்டம் வடிவமைக்க முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி ரங்கராஜன் அவர்களின் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது, இந்த குழு மூன்று மாதத்தில் தனது முழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் இடைக்கால அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வருவாய் பற்றாக்குறையை காட்டி பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்தியது, பின்னர் டாஸ்மாக் சாராயக் கடை திறப்பை நியாயப்படுத்தியது, இதற்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு வந்த சூழலில் தற்போது இந்த பொருளாதார மீட்பு குழுவை அறிவித்துள்ளது, கொரானா  பெருந்தொற்றை தடுக்க முழு முடக்கத்தை அமல்படுத்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் 19 பேர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்தது தமிழக அரசு, ஆனால் இன்றுவரை தொற்று நோய் கட்டுப்படுத்த பட முடியாமல் முதல்வர் ஜீரோ ஆக்குவேன் என்று சொன்ன அடுத்த நாளிலிருந்து புதிய தொற்று பகுதிகள் கிளஸ்டர்கள் உருவாகி எண்ணிக்கை தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது.

மார்ச் 22ல் இருந்து கடந்த 50 நாட்களாக  அமல்படுத்தப்படுகிற கொரானா முறியடிப்பு மருத்துவ கொள்கை வெற்றிகரமானதாக இல்லை, தெற்கு மாநிலங்களில் தமிழகம் அதிகபட்ச எண்ணிக்கை கொண்டு முதலிடத்தை வகிக்கிறது, மத்திய அரசும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் வழங்குகிற ஆலோசனையை தமிழக அரசு நியமித்துள்ள வல்லுனர் குழு பரிசீலித்து இறுதியில் தமிழக அரசின் முடிவு அமல்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்கு வந்தபாடில்லை, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அறிவிக்கப்பட்ட முழு முடக்கம் தற்போது தளர்த்தப்படுகின்ற காலத்தில் நோய் பரவல் எண்ணிக்கை தீவிரமடைந்து வருகிறது, மோடியினதும் தமிழக எடப்பாடி அரசினதும் கொரானா முறியடிப்பு மருத்துவ கொள்கை தோல்வியடைந்துள்ளது, எனவே இப்பொழுது அவர்களுடைய அறிவிக்கப்படாத கொள்கை நடைமுறை அறிவுறுத்தல் கொரானாவோடு வாழ பழகுங்கள் என்பதுதான்.

மோடிக்கு ஆரவாரமாக நள்ளிரவு அறிவிப்பு கொடுக்க தெரியும், குழப்பத்தை விளைவிக்க தெரியும், செய்த தவறுகளை மறைக்க புதிய புதிய அறிவிப்புகள் கொடுக்க தெரியும், ஆனால் பிரச்சனைக்கு தீர்வு காண தெரியாது கடந்த 6 ஆண்டுகளாக நாம் பார்த்து வருகின்ற உண்மை. கொரானா முறியடிப்பு மருத்துவ கொள்கையிலும் அதுதான் நடந்திருக்கிறது, மோடியை பின்பற்றுவதற்கு கீழ் படிந்துள்ள பிழைப்புவாத அடிமை எடப்பாடி நம்மையும் புதை சேற்றில் தள்ளி கொண்டிருக்கிறார். பொருளாதாரக் கொள்கையிலும் இதை நாம் தொடர அனுமதித்தால் உடனடியாகவும் நீண்டகால நோக்கிலும் மிகப்பெரிய சேதம் ஏற்படும், மக்களும் மாநில அரசும் பெரும் சுமைகளை சுமக்க வேண்டியிருக்கும், எனவே பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளில் தலையிடவும் கண்காணிக்கவும் வேண்டிய அவசியம் இருக்கிறது, தமிழகத்தின் குறிப்பான நிலைமைகளைப் புரிந்து திட்டங்களை வகுத்தால் தான் மக்களுக்கு பயனுடையதாக இருக்கும், அதற்கு இங்குள்ள அனைத்து தரப்பையும் பங்கேற்க செய்ய வேண்டும், தமிழக அரசு அறிவித்துள்ள பொருளாதாரமீட்சி குழுவில் அரசு செயலர்கள்  மட்டத்திலான அதிகார வர்க்கத்தினரும், பெருந்தொழில் குழும அதிபர்களும், ஒரு சில பொருளாதார ஆய்வாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர், ஆனால் பங்கு பெற வேண்டிய உற்பத்தியில் பிரதானமாக பங்கு வகிக்கக்கூடிய, விவசாயிகளிடமிருந்தும் ,தொழிலாளர்களிடமிருந்தும்,  சிறு குறு உற்பத்தியாளர்களிடமிருந்தும், வணிக பிரிவினரிடமிருந்தும், சுய வேலைவாய்ப்பு செய்வோரிடமிருந்தும் இன்னும் எதிர்க்கட்சிகள், மக்கள் இயக்கங்கள், தொழிற்சங்கங்களிருந்து  யாரும் பங்கு பெறவில்லை.

இவர்கள் பங்கு பெற்றால் தான் சமுதாயத்தின் முழுமையான பொருளியல் நெருக்கடிகளை கோரிக்கைகளை புரிந்துகொண்டு அனைவருக்குமான திட்டத்தை தீர்வை முன்வைக்க முடியும், குறை வருவாய் உள்ள மக்கள் பிரிவினருக்கு அரசே நேரடியாக மாதாந்திரம் அடிப்படை ஊதியத்தை வழங்குவது, விவசாயத்தில் துணிவான சீர்திருத்தங்களை கொண்டு வந்து கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வாங்கும் சக்தியை அதிகரிக்க செய்வது சொந்த சந்தையை பலப்படுத்துவது, சிறு குறு தொழில் துறையை பலப்படுத்துவதற்காக அரசின் கூட்டு முதலீட்டு கொள்கையை அமல்படுத்துவது, பெரு நிறுவனங்களுக்கும் உயர் வருவாய் மற்றும் சொத்து உள்ள பிரிவினருக்கும் செல்வ வரியை விதிப்பது, வரி வருவாயில் மைய அரசின் அதிகாரத்தை குறைத்து மாநில அரசு நேரடி வரி வருவாயை பெருக்கிக் கொள்வது, உடனடியாக அனைவரும் வலியுறுத்துகிற பெரும் தொகையை பத்து லட்சம் கோடி ரூபாயை மைய அரசை மாநிலங்களுக்கு பிரித்து வழங்க கோருவது, மருத்துவ துறையில் தனியார்மயமாக்கல் காப்பீட்டு துறையிடம் ஒப்படைத்தல் போன்ற கொள்கைகளை கைவிட்டு பொது முதலீட்டின் மூலம் சர்வதேச தரத்திற்கு இணையான மருத்துவ கட்டமைப்பை  மருந்து நிறுவனங்களை ஆராய்ச்சி நிறுவனங்களை ஆரம்ப நிலையிலிருந்து உருவாக்குவது, மருத்துவர் செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களை சர்வதேச தரத்திற்கு ஏற்ற எண்ணிக்கையில் உருவாக்குவது, அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையான கல்வி மருத்துவம் வீடு அடிப்படை உரிமை ஆக்குவது, என்ற கண்ணோட்டத்தில் இருந்து பொருளாதார மீட்சிக்கும் பொது முதலீட்டிற்கும் வழிவகை காண்பதை நோக்கிதான் திட்டமிடல் கொள்கை அமைய வேண்டும், மக்களை நோக்கி பொது முதலீட்டிற்கும் மாநிலங்களை நோக்கி நிதி அதிகாரத்தை பரவலாக்கவும் கோரிக்கை விடுக்கிறோம்.

பெருங் குழும நலனை நோக்கியும் சிறுகும்பலின் மைய நிதி அதிகாரத்தை நோக்கியும் அவர்களின் பொருளாதார கொள்கை திசைவழி இருக்கிறது, இது ஒரு அடிப்படையான சிக்கல், நம்முடைய கோரிக்கையை அதீதமானதாகவும் சமூகத்தில் குழப்பத்தை விளைவிக்க கூடியதாகவும் அவர்களுடைய வாதம் அமையலாம், ஆனால் அவர்களுடைய அதீத மையப்படுத்துதல், அதிகாரக் குவிப்பு, இயற்கையின் மீதான அச்சுறுத்தல், சிறு கும்பல் நலனை விட, மக்களின் வாழ்க்கை நெருக்கடியிலிருந்து சுகாதாரமான வாழ்க்கையின்  தேவையிலிருந்து நாம் எழுப்புகின்ற கோரிக்கை அதீதமானதல்ல, மூலதனத்தை பறித்துக் கொள்வோம் என்ற பிரகடனத்தை வெளியிட வில்லை, சமூகத்தின் பொது வளத்தை தின்று கொழுப்பதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள், மக்களுக்கு கூடுதலாக பங்கு தாருங்கள் என்ற கோரிக்கையை தான் விடுக்கிறோம், இன்னும் சொல்லப்போனால் நெருக்கடியான பல காலகட்டங்களில் அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்வதற்காக சமரசமாக வைக்கபட்ட  நலவாழ்வு அரசின் சீர்திருத்த கோரிக்கைதான், எனவே அதீதம் என்ற பிரகடனத்தை வெளியிடுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை, நம் எடப்பாடிகளுக்கு வேண்டுமானால் அறியாமையில் தெரியாமல் இருக்கலாம் சி ரங்கராஜன்களுக்கு நிச்சயம் தெரியும்.

 

பிரதான எதிர்க் கட்சிகளும் இதை பரிசீலிக்க வேண்டும், மக்களின் பக்கம் நின்று பங்கை கோருகிறோம், மக்களை சட்டமன்றங்களில் நாடாளூமன்றங்களில் அவர்களின் பெரும் ஒப்புகையோடு பிரதிநிதித்துவ படுத்துகிறீர்கள், ஆகவே நீங்கள் பங்கு எடுக்க வேண்டும் எந்த அளவிற்கு பங்கு கேட்பதில் நியாயம் இருப்பதாக நினைக்கிறீர்களோ அந்த அளவிற்கு கேளுங்கள், எந்த அளவிற்கு விரிவுபடுத்துவதற்கு நியாயம் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோமோ அந்த அளவிற்கு கோரிக்கையை விரிவு படுத்துகிறோம், ஆனால் பங்கை கேட்போம் ,அதற்கு முதலில் சி ரங்கராஜன் தலைமையிலான பொருளாதார குழுவில் அனைத்து தரப்பும் பங்கு பெறுவதற்கு பங்கு கோருவோம், எடப்பாடி பழனிச்சாமி அரசே தமிழக பொருளாதாரம் உங்க அப்பன் வீட்டு சொத்தோ, மோடி கும்பலின் சொத்தோ அல்ல அனைத்து தரப்பு பங்கேற்பை உறுதிப்படுத்து.

-பாலன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW