மானுட விடுதலைக்கு மார்க்சியத்தை பிரசவித்த காரல் மார்க்ஸ் 202

05 May 2020

 1818ல் மே – 5ல்  ஜெர்மன், ரைன் நதிக்கரையோரம் அமைந்துள்ள டிராய் நகரில் பிறந்தவர் பேராசான் கார்ல்மார்க்ஸ் 202வது பிறந்த தினம் இன்று. படர்ந்த தாடிக்கும், அகன்ற முகத்திற்கும், கூர்மையான கண்களுக்கும், மனித குல விடுதலையை நேசிக்கின்ற புன்னகைக்கும் சொந்தக்காரர்தான் ஜெர்மன் தேசத்து சிந்தனையாளர் காரல் என்ரிச் மார்க்ஸ். யூதக்குடும்பத்தில் பிறந்தார். 1835ல் இளவயதில் பான் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞராக படித்தார். 1845ல் பெர்லின் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் பட்டம் பெற்றார். கார்ல் மார்க்சை இவ்வாறு நாம் போற்றலாம். “சர்வமும் பொருந்தும் மார்க்சியத் தத்துவம் மலர்ந்திட மகத்தானப் பங்களிப்பை செய்தவர், மூலதனத்தை பிரசவித்த புத்திஜீவி. உபரி மதிப்பின் மூலத்தைக் கண்டறிந்தவர், முதலாளிய தனியுடைமை மூலதனத்தின்மீது தாக்குதலைத் தொடுத்து பாட்டாளி வர்க்கத்திற்குப் பேரொழி வெளிச்சத்தைப் பாய்ச்சியவர். அவர் ஓர் மார்க்சிய தத்துவவாதி மட்டுமல்ல, அகங்காரமற்ற அறிவுக்குச் சொந்தக்காரர், அறிவியலாளர், ஆய்வாளர், எழுத்தாளர், மெய்யியலாளர். பொருளாதார அறிஞர், சிறந்த ஆசிரியர், கவிஞன், கலைஞன் சிறந்த நகைச்சுவை நாயகன் எனப் பன்முகங்களைக் கொண்டவர். மார்க்சின் தத்துவ ஆய்வுப்பணியில், வாழ்வின் மறு உருவமாய் இருந்தவர்கள் எங்கெல்ஸ், மற்றும் ஜென்னி. இவர்களின்றி மார்க்ஸ் இல்லை மார்க்சின் குடும்ப வாழ்வும், மூலதனப்பணியும் இல்லை என்பதே வரலாறு.   

18 ஆம் நூற்றாண்டில் நடந்த அய்ரோப்பிய புரட்சி, பாரீஸ் எழுச்சி என வீரப் போராளிகளின் எழுச்சிக் கலகம் கண்டு பூரித்தார் புரட்சியாளன் மார்க்ஸ். பெற்ற தோல்வியைப் படிப்பினையாக்கி அடுத்த சமூக வளர்ச்சிக்கு தத்துவத்தை வளர்த்தெடுத்தார். ஐரோப்பா கண்டம் எங்கும் வெடித்த தொழிலாளர் போராட்டங்கள், இச்சமூகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் சமத்துவத்தை சனநாயகத்தை, சுதந்திரத்தை, விடுதலையை உறுதிசெய்திட வழி சமைத்தது. மார்க்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும், லெனின் சிறையிலிருந்தபோது எழுதிய துண்டு பிரசுரமும்தான் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்“ என அறைகூவல் விடுத்து ஐரோப்பியக் கண்டமெங்கும் பாட்டாளிவர்க்கத்தை ஆர்த்தெழ வைத்தது.  இன்றைய நவீன சகாப்த காலகட்டத்தில் வியர்வை சிந்தும் ஒவ்வொரு உழைப்பாளியாலும் ஆழமாக நேசிக்கபடுவரானார் மார்க்ஸ். மாற்றம் வேண்டும் என விரும்பும் பெரும் அறிவாளுமைகள்கூட மார்க்சை அறியாமல் இருக்கவோ,  அவர் எழுதிய அரசியல் பொருளாதாரம், கூலி உழைப்பு ஆய்வுகளைப் புறந்தள்ளவோ முடியாது. 

1860களில் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டும் முயற்சியில் இறங்கிய மார்க்ஸ் “முன்னேற்றம்“ என்ற பத்திரிகையை தொடங்கினார். மார்க்சின் மதிநுட்பமும், எழுத்தின் கூர்மையும் அதிகாரவர்க்கத்தை ஆட்டிப்படைத்தது. மார்க்சின் உந்துதலில் ஊக்கம் பெற்ற தொழிலாளர்கள் ஆயிரமாய் திரண்டனர். ஜெர்மன் அரசு உடனடியாக “முன்னேற்றம்“ என்ற பத்திரிகையைத் தடைசெய்தது. நாடு கடத்த உத்தரவிட்டது. ஜெர்மன் அரசு நிபந்தனை ஒன்றையும் விதித்தது. ஒரே ஒரு வார்த்தை அவர் சொல்லிவிட்டால் நாங்கள் விட்டுவிடுகிறோம் அந்த வார்த்தை “மன்னிப்பு“  என்றது. இணங்க மறுத்த மார்க்ஸ் தன் குடும்பத்தோடு பெல்ஜியம் நகரத்திற்கு குடியேறினார். பெல்ஜியம் அரசும் மார்க்சின் எழுத்தைக் கண்டு அஞ்சியது. “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது, மீறினால் சிறையில் தள்ளுவோம்“ என்று உத்தரவிட்டது. “எழுத்தே என் உயிர் மூச்சு“ என்று வாழ்ந்த மார்க்ஸ் காகிதங்களில் நடனமாடிய தன் விரலுக்கு ஓய்வு கொடுப்பாரா என்ன? நாடு மாறினார். எங்கெல்சை சந்தித்தார். இருவரும் இணைந்து லண்டன் நகரில் “முதல் கம்யூனிஸ்ட் சங்கம்“ தை கட்டினர். முதல் மாநாட்டையும் நடத்தினர். 1848ல் பாரீஸ் எழுச்சி ஏற்பட்டது. மார்க்சும் ஜென்னியும் கைதுசெய்யப்பட்டனர். பின் நாடு கடத்தப்பட்டனர். தொடர்ந்து நாடு கடத்தப்படும் சூழலில்தான் “எல்லா நாடும் என் நாடே! எல்லா மக்களும் என் மக்கள்!! நானோர் உலக மகன்!!!“  என்று அகமகிழ்ந்து கூறினார் மார்க்ஸ். 

“ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே“ எனக் கண்டறிந்தார் மார்க்ஸ். மனித குலத்தின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்தார். ஆய்வில் மிக முக்கியமானது, “உழைப்பினால் கிடைத்த பயன்களை அனைவரும் சமமாகப் பகிரும்வரை பேதங்கள் இருந்தது இல்லை. ஆனால் பகிர்ந்ததுபோக, மீதமிருந்தது ‘உபரி மதிப்பு‘ என்றும், இந்த உபரி மதிப்பே மீண்டும் ‘மூலதனம் ஆகிறது என்றும் மூலதனத்தின் மூலமே வர்க்கங்கள் தோன்றின“ என்றும் வரலாற்றின் முடிச்சுகளை அவிழ்த்தார் மார்க்ஸ். 

உலகத்தில் தோன்றிய விஞ்ஞானிகள், கருத்துமுதல்வாத தத்துவவியலாளர்கள் அனைவரும் “இந்த சமூகம் எவ்வாறு இயங்குகிறது“ என்று கண்டுபிடித்தார்கள். “சமூகத்தை எவ்வாறு மாற்றுவது என்று பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு அறிவியலாக வளர்த்தெடுத்தார். அறிவியலற்ற உலக கண்ணோட்டங்கள் அனைத்தையும் தன் காலடியில் மண்டியிடச்செய்தார். “இப்பூமியில் உள்ள அனைத்தும் இடையறாது இயங்கிக்கொண்டேயிருக்கிறது“ என்று இயக்க மறுப்பியல்வாதிகளின் மண்டையில் ஓங்கியடித்தார் மார்க்ஸ். “மாற்றம் ஒன்றே மாறாதது“ என்று உலகிற்கு பறைசாற்றினார். மார்க்ஸ் தொடங்கிய ஆய்வுப்பணியில் மூலதனத்தின் மூன்றாவது தொகுதியை முடித்துவைத்தவராகத் திகழ்பவர் எங்கெல்ஸ். “மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறியதற்கிடையில் உழைப்பின் பாத்திரம்“ மற்றும் “குடும்பம், தனிச்சொத்து, அரசு“ போன்ற மிக முக்கிய மனிதகுல இனக்குழுக்களின் ஆய்வு நூல்களை எழுதியதன்மூலம் மார்க்சின் அறிவுத்திறனோடு இணைந்த இன்னொரு தத்துவ ஆளுமையாக விளங்கினார். இத்தகைய மானுட சமூக வரலாற்றுத் தொடர்ச்சியின் வினையூக்கியாக மார்க்சியம் எனும் நாணயத்தின் இரு பக்கங்களாக விளங்கியவர் எங்கெல்ஸ் மற்றும் ஜென்னி என்பதை மறுக்கமுடியாது.

இதற்கு அவர் உழைத்த உழைப்பு, பட்ட துயரங்கள் உலகத்தில் வேறெவருக்கும் நேர்ந்திராதவை. அதற்கு அவரின் குடும்ப வாழ்க்கையே உதாரணம்

குடும்ப வாழ்க்கை

வெள்ளை நிற உயர்க்குடியினரான ஜெர்மானியர்கள் வெறுத்தொதுக்கும் யூத இனத்தில்  பிறந்தவர் காரல் மார்க்ஸ். தன் கவிதைகளாலும் கூர்மையான சிந்தனையாலும் ஈர்க்கும் வசீகரமும், பெண்களை மதிக்கும் பண்பும்கொண்ட மார்க்ஸை, ஜெர்மானிய பிரபுக்குடும்பத்தில் பிறந்திருந்த குடும்ப நண்பரின் மகளான பேரழகி ஜென்னி காதலித்தார். அவரின் அறிவாளுமையால் ஈர்க்கப்பட்டார். அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் ஜென்னி. 1843ல் தன் வாழ்க்கைத்துணையாக தன்னைப்போல் மக்கள் மேல் பற்றுகொண்ட ஜென்னிவான் வெஸ்ட்பாலனை மணந்தார் மார்க்ஸ். 6 குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இருவரின் வாழ்க்கைப் பயணத்தில் அரசின் அடக்குமுறை, நாடுகடத்தல், வறுமை, பட்டினி ஆகிய கொடிய துன்பங்களை இறுதிவரை சந்தித்த ஜென்னி, மார்க்ஸ் இருவரும் தன் அரசியல் பணியை, தத்துவ ஆய்வுப்பணியை ஒருபோதும் கைவிடவில்லை. மக்களுக்கான தம் உழைப்பிலிருந்து அவர்கள் ஒருபோதும் ஓய்வை விரும்பவில்லை. “எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை“ என்கிற நூலில் ஜென்னி குடும்ப வாழ்வின் கொடுமையை சொல்லியிருப்பார். இறுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜென்னி தன் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது மார்பிலிருந்து இரத்தம் மட்டுமே வந்தது. எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில், “தன் குழந்தைகள் ஒவ்வொன்றும் செத்துக் கொண்டிருக்கிறது. “கடைசிக் குழந்தை எட்கரை புதைக்க சவப்பெட்டி இல்லை. வாங்கப் பணம் இல்லை“ என்ற நிலையில், மார்க்சின் கோட்டுத்துணியை விற்று குழந்தைக்கு சவப்பெட்டி வாங்கி புதைத்தோம்“ என்று சொல்லி அழுதார் ஜென்னி. குழந்தைகளின் அழுகுரலை மட்டுமே கேட்டிருந்த அந்த அறையில் அன்று ஜென்னியின் அழுகுரலையும் கேட்டார் மார்க்ஸ். ஜென்னியின் சகிப்புத்தன்மை, அர்ப்பணிப்பு என்பது, படைக்கப்போகும் உன்னத சமூகத்திற்காகவும், தன் காதலுக்காகவும்தானே இருக்கமுடியும். 

 

இத்தகைய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் சுயநலமிக்க ஒவ்வொரு மனிதரையும் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கும். அவர்களின் கொடிய துயரமிக்க வாழ்வு இன்று நாம் நினைத்து பார்த்தாலும் அதிர்ச்சியாக இருக்கிறது. காரல் மார்க்ஸ் குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருந்த போதுதான் மூலதனம், அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட ஆய்வுகளை எழுதினார். அர்ப்பணிப்பு என்கிற ஆழமான உணர்வையும், அசாத்தியமான உழைப்பும் தம்மை முழுமையாக புரட்சிக்கு அர்ப்பணித்தவர்களால் மட்டுமே இதுபோன்ற வாழ்வை ஏற்கமுடியும்.

21 ஆம் நூற்றாண்டில் மார்க்சை நினைவுகூரும் போது, இன்றைய முதலாளித்துவம் முட்டுச்சந்தில் திணறிக்கொண்டிருப்பதை நினைவூட்டுகிறது. 1935களுக்கு பிறகு தற்போது பொருளாதாரப் பெருமந்தத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியை மறைப்பதற்கு மக்கள்மீது யுத்தத்தை தொடுக்க தயாராகிவிட்டது முதலாளியக்கூட்டம். வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம், மக்களின் மானியங்கள் பறிப்பு. தொழிலாளர்களின் உரிமைகள் பறிப்பு, அதிகாரம் சில முதலாளிகளின் கையில் ஒன்று குவிவது, பழைய பிற்போக்குவாதிகளின் ஆட்சி, வலதுசாரி சிந்தனைகள் ஒரு உலகளாவியப் போக்காக உருவம் பெற்றிருக்கிறது. முதலாளித்துவ சக்திகளில் ஒரு பிரிவினரே இத்தகைய பாசிச ஆட்சியாளர்களின் போக்கை எதிர்த்துவருகிறார்கள். அறிவியலுக்கும் அறிவியலற்ற பிற்போக்குக் கருத்துக்குமான சண்டை இன்று தீவிரப்பட்டிருக்கிறது. மார்க்சியத்தின்  தேவையை நோக்கி உலகப்பார்வை திரும்பத் தொடங்கியிருக்கிறது. முதலாளித்துவம்தான் அனைத்திற்கும் மாற்று என்று கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும் முதலாளித்துவ தாராளவாதிகள், புத்திஜீவிகளோ இன்று உலகளாவிய அளவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியிலிருந்து மீண்டெழ வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். முதலாளித்துவத்தின் நெருக்கடி உலகப்போர்களை உருவாக்கும். பாசிசத்தைத் தோற்றுவிக்கும். முதலாளித்துவத்தின் வீழ்ச்சி பாட்டாளிவர்க்கத்தின்,  பரந்துபட்ட மக்கள் எழுச்சியில் அடங்கியிருக்கிறது என்றார் மார்க்ஸ். மூலதனத்திற்கும் உழைப்பிற்குமான முரண்பாடு இறுதியில் சோசலிசத்தை அடைந்தே தீரும் என்பதே எதார்த்தம். சமூக முரண்களை, அதன் இயக்கபோக்கை ஆளும்வர்க்க முரண்பாடுகளைத் தீர்மானிக்கும் அடிநாதக்காரணியான உற்பத்திமுறையை தீர்மானிக்கும் வர்க்க சக்திகளை அறிந்து ஆழ உழுதிடும்  பார்வை கொண்டவர்களே மார்க்சியவாதியாக இருக்க முடியும். அதுவே மார்க்சியம் அதுவே லெனினியம். அதுவே மாவோவியம் என்பதில் ஊன்றி நிற்போம். சோசலிசத்தை நோக்கிய ஜனநாயகப் புரட்சிக்கான பாதையை புனரமைப்போம்.

 

-ரமணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW