உலக நெருக்கடி காலத்தில் காரல் மார்க்ஸை வாசிப்பது அவசியம்

05 May 2020

விஞ்ஞானத்தின் உதவியுடன், மனிதகுலம் இறுதியில் கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கும். பல புதிய கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் பிறக்கும், மக்கள் மற்றும் அரசாங்கங்கள் முன் பல விளக்கங்கள் முன்வைக்கப்படும். ஆனால் கேள்வி என்னவென்றால், COVID-19க்குப் பிந்தைய உலகம், முன்பு போலவே இருக்குமா அல்லது மாறுமா? முதலாளித்துவ ஒழுங்கு மேலும் மனிதாபிமானமற்றதாகவும், சுரண்டலாகவும் மாறுமா? என்பதே ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற  எழுத்தாளரான  தாமஸ் எல் ப்ரீட்மேன் “மனிதகுலம் இயற்கை மீது நடத்திய போரின் விளைவு கொரோனா” என்கிறார். வளர்ந்து வரும் இந்த நிலைமை குறித்த பொதுவிவாதத்தின் மையமாக கார்ல் மார்க்சும், மார்க்சியமும் இருக்கக்கூடும்.

 

“அனைத்து தத்துவவாதிகளும் உலகை பல்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர். இருப்பினும், உலகை மாற்றுவதே நோக்கமாகும்” என்பது மார்க்சின் புகழ்பெற்ற வாக்கியமாகும். இதுவே மார்க்ஸ் மற்றும் அவரது வாழ்நாள் தோழர் பிரீட்ரிக் ஏங்கெல்ஸின் தத்துவ நோக்கத்தின் அடிப்படையாக இருந்தது.  இந்த அடிப்படை நோக்கத்தின் ஊடாகவே மார்க்சும், ஏங்கெல்ஸும்  மனித இருப்பு, மனிதர்களுக்கும் இயற்கையுக்கும் இடையிலான உறவு, மனித இனங்களின் இனப்பெருக்கம் மற்றும் பொருளாதாரம் வாழ்வு குறித்து ஆய்வு செய்தனர்.

 

இயற்கையின் இயங்கியலைப் பகுப்பாய்வு செய்த மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் “உழைப்புதான் செல்வத்தின் ஆதாரம் மற்றும் மனித இருப்புக்கான பிரதான அடிப்படை நிலை” என்றார்கள். மனிதர்களுக்கும்  நிலம், நீர் மற்றும் காற்றுக்கும் இடையேயான நல்லிணக்கம் எவ்வாறு மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். மூலதனம் என்ற மார்ஸின் நூலில், “உழைப்பு என்பது முதலில் மனிதனும் இயற்கையும் பங்கேற்கும் ஒரு செயல்முறையாகும்” என்று விளக்கினார். உழைப்பு எவ்வாறு செல்வத்தின் மூலமாகும் மற்றும் உழைப்பு சக்தி எவ்வாறு உபரி மதிப்பை உருவாக்குகிறது என்பதை விளக்கினார். அதே வேலையில், முதலாளித்துவத்தின் கீழ், உபரி மதிப்பு எவ்வாறு உற்பத்தி  முறைகளின் உரிமையாளர்களான முதலாளிகளால் கையகப்படுத்தப்படுகிறது என்பதை விளக்கினார். உபரி மதிப்பானது எவ்வாறு ஒரு பக்கம் செல்வத்தை குவிப்பதற்கும், மறுபக்கம்  உழைக்கும் மக்களை மோசடி செய்வதற்கும் வழிவகுக்கிறது என்பதையும் அவர் விளக்கினார். இத்தகைய ஏற்றத்தாழ்வு உழைக்கும் மக்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளிலும் பிரதிபலிக்கிறது.

 

சமூகத்திலுள்ள குடியிருப்பு நிலைமைகளை பகுப்பாய்வு செய்யும் போது, முதலாளித்துவம் எவ்வாறு குடியிருப்பு நிலைமைகளை உருவாக்கியுள்ளது  என்று ஏங்கல்ஸ் சுட்டிக்காட்டினார்: “தொழிலாளர்கள் நெருக்கமான, சுகாதாரமற்ற இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். காலரா, டைபாய்டு காய்ச்சல், பெரியம்மை மற்றும் பிற கொள்ளை நோய்கள் போன்ற தொற்றுநோய்களின் இனப்பெருக்க இடங்களாக இவை இருக்கின்றன“.  கொரோனா பெருந்தோற்றல் இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏன் கற்பனை செய்ய முடியாத சிரமங்களை எதிர்கொண்டு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இது விளக்குகிறது.

 

கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் முதலாளிகளை தொழிலாளர் வர்க்கத்தின் மீதான சுரண்டலை நிலைநிறுத்துவதற்கான புதிய ஒப்பந்தங்கள் மற்றும்  திட்டங்களைப் பற்றி சிந்திக்கக் கட்டாயப்படுத்தியுள்ளன. COVID-19 க்கு முன்னர், 2008 ஆம் ஆண்டில் உலக முதலாளித்துவ பொருளாதாரம் ஒரு நெருக்கடியை எதிர்கொண்டது, தற்போதைய தொற்றுநோய் உலக பொருளாதார ஒழுங்கை வென்டிலேட்டருக்குள் தள்ளியுள்ளது.

 

இந்த தொற்றுநோய் அனைத்து நாடுகளையும், அனைத்து சமூகங்களையும், அனைத்து வர்க்கங்களையும் ஒரே மாதிரியாக பாதிக்கிறது என்று நினைப்பவர்கள் பலர் உள்ளனர். எனவே, முதலில் அதைக் கையாள அரசாங்கங்களை நாம் அனுமதிக்க வேண்டும் என்றும் நமக்கிருக்கும் கேள்விகளைக் கேட்பதற்காக காத்திருக்க வேண்டியும் ஆளும் வர்க்கம் எதிர்பார்க்கிறது. ஆனால் அது சரியல்ல. முதலாளிகள் புத்திசாலிகள், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில், முதலாளித்துவ அரசாங்கங்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை குவித்து வருகின்றனர்.

 

இந்தியாவில், பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டு, நாட்டை ஒரு இந்துதத்துவ பாசிச அரசை நோக்கி தள்ள முயற்சிக்கிறது. இந்த பாசிச அரசியல் ஒழுங்கிற்கு எதிராக உழைக்கும் எதிரான மக்களின் கோபத்தைத் இடது மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒழுங்குபடுத்த முயற்சிக்கின்றனர். பாசிச அரசியல் லட்சக்கணக்கான பொது மக்களின் உரிமைகளை மறுப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை பணயம் வைத்துள்ளது.

 

அரசாங்கத்தின் பொய்கள் மற்றும் தோல்விகள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவேண்டும். மக்களை பிரித்தாள, முதலாளித்துவம் ஒரு கருவியாக மதத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால் லட்சக்கணக்கான மக்கள் வகுப்புவாத-பாசிச ஆட்சியாளர்களின் கொடூரமான வடிவமைப்பைப் புரிந்துகொள்வார்கள், மேலும் சமூகத்தை மேலும் பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டார்கள். மார்க்ஸ் இந்திய சமூக கட்டமைப்பைப் பார்த்தபோது, அதில் சாதியின் இடம் அவருக்குப் புரிந்தது. சீனாவில் தைப்பிங் கிளர்ச்சி, இந்தியாவில் சிப்பாய் கலகம் (இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்) மற்றும் அமெரிக்காவில் கறுப்பினத்தவரின் எழுச்சி ஆகியவற்றிற்குப் பிறகு அவர் எழுதிய எழுத்துக்கள் இந்தியாவில் ஒரு ஜனநாயக புரட்சியின் தேவையை பற்றி பேசினார். மார்க்சின் “ஜனநாயக புரட்சி” என்ற சொல் சாதி முறையை ஒழிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.

 

ஒரு புதிய உலகத்திற்கான தத்துவ நோக்கத்தில், மார்க்சியம் ஒரு புரட்சிகர கோட்பாடாகவும் அறிவியலாகவும் வெளிப்பட்டது. லெனின் சுட்டிக்காட்டியபடி மார்க்சியத்தின் மூன்று ஒருங்கிணைந்த கூறுகள்,

 

  1. இயங்கியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதம், 2. உபரி மதிப்புக் கோட்பாடு, 3. வரலாற்றின் உந்துசக்தியாக வர்க்க போராட்டம் குறித்த கோட்பாடு

 

எதிர்காலம் அரசியல் அதிகாரத்திற்கான தீவிர வர்க்கப் போராட்டங்களுக்கு சாட்சியாகப் போகிறது, இதனால் ஒரு புதிய சமூக ஒழுங்கு உருவாகும், அதில் அரசு தனது குடிமக்கள் அனைவருக்கும் வீட்டுவசதி, சுகாதாரம், கல்வி மற்றும் அனைத்து வாழ்வாதாரங்களையும் உறுதி செய்யும், மேலும் அனைத்து குடிமக்களின் சமத்துவம், நீதி மற்றும் சுமரியாதை உறுதிப்படுத்தப்படும்.

 

மே 5 (1818) கார்ல் மார்க்சின் 202 வது பிறந்த ஆண்டு விழாவில், அஞ்சலி செலுத்தும் இந்தவேளையில், முதலாளித்துவ சமுதாயத்தை வீழ்த்துவதற்கும், அடக்குமுறை மற்றும் சுரண்டலின் சங்கிலிகளிலிருந்து விடுவிப்பதற்கும், உழைக்கும் மக்கள் போராட்டங்கள் வெல்லட்டும்.

 –தி. ராஜா

 

தமிழில்: ராதா

 கார்ல் மார்க்சின் 202வது பிறந்ததினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் தோழர் D. ராஜா அவர்கள் பத்திரிக்கைக்குக் கொடுத்திருக்கும் அறிக்கையின் தமிழாக்கம்.

https://indianexpress.com/article/opinion/columns/karl-marx-covid-19-capitalism-6393538/

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW