டிரம்ப், கொரோனா மற்றும் காலநிலை மாற்றம்

04 May 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒவ்வொரு நாளும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும் கருத்துக்கள் சர்ச்சையையும் கோபத்தையும் சமயங்களில் சிரிப்பையும் ஏற்படுத்துகின்றன. கொரோனாவை சைனீஸ் வைரஸ் என்றழைத்தது முதல் கொரோனா சிகிச்சைக்கு கிருமி நாசினியை உடலில் செலுத்த பரிந்துரைத்தது வரை ஒவ்வொரு கருத்தும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரிதும் பேசப்படுகின்றன. ஒரு புறம் கொரோனா கட்டுப்பாட்டில் மெத்தனம் காட்டி கோபத்தை ஏற்படுத்தியதும் கொரோனா குறித்த விந்தையான கருத்துகளை கூறிய கோமாளித்தனமும் நிகழ்ந்தேற மறுபுறம் டிரம்ப் நிர்வாகம் இந்த சூழலை பயன்படுத்தி முக்கியமான சட்ட திருத்தங்களை குறிப்பாக கால நிலை மாற்றம் குறித்தான சட்ட திருத்தங்களை செய்து வருகிறது. இது தான் கோமாளித்தனமாக பார்க்கப்படும் அரசின் அசலான ஆபத்தான முகம், இறுதியில் மக்கள் தான் கோமாளி ஆக்கப்படுகிறார்கள். இது குறித்து எம்.ஆர் ஆண்லைன் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமே இந்த கட்டுரை.

====================================================================================

 

2009 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் போது, ​​அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாக தலைவரான ரஹ்ம் இமானுவேல் “ ஒரு நல்ல நெருக்கடியை வீணாக்க ஒருபோதும் அனுமதிக்க கூடாது ” என்று கூறியது பிரபலமானது. மேலும் அவர் “சாத்தியமற்றது என்று நீங்கள் நினைத்த காரியங்களைச் செய்ய இது ஒரு வாய்ப்பு” எனவும் விவரித்தார்.

 

அந்த அடிப்படையில் கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார சீர்குலைவு மற்றும் வரலாறு காணாத வேலையின்மை ஆகியவை சில அரசியல்வாதிகளுக்கு முன்பு சிந்திக்க முடியாத, சாத்தியமற்ற காரியங்களைச் செய்ய சிறந்த வாய்ப்பாக அமைகிறது. குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பாக எஞ்சியிருக்கும் முடிவுகளை துரிதப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பாக அமைகிறது .

 

வெள்ளை மாளிகையின் பத்திரிகை அறையில் தினசரி கொரோனா குறித்த சந்திப்புகள் குறித்து கவனம் செலுத்தும் வேளையில், டிரம்ப் நிர்வாகமும் மாநில அளவில் அவருக்கு ஆதரவான குடியரசுக் கட்சியினரும் பலவிதமான காலநிலை மாற்றம் தொடர்பான தீர்ப்புகள், உத்தரவுகள் மற்றும் பிற நிர்வாக முடிவுகளை செயல்படுத்தியுள்ளனர். இத்தகைய முடிவுகள் இயல்பான சூழலில் பெரிதும் கவனத்தை ஈர்ப்பதாகவும் பெரும்பாண்மையினரின் எதிர்ப்பை பெற்றதாகவும் இருக்கும். தொற்றுநோயால் பொதுமக்கள் கவனம் திசைதிரும்பும்போது, ​​அரசாங்கம் காலநிலை குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது அடிப்படையில் ஜனநாயகத்தின் விதியையே மாற்றி எழுவதற்கு நிகரானது. மேலும் இத்தகைய அளவிலான காலநிலை குறித்த அரசாங்கத்திள் நடவடிக்கை‌யை அடிப்படையில் நாட்டை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்து புதைபடிவ எரிபொருளால் இயங்கும் எதேச்சதிகார அரசை உருவாக்கும் பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகவே நிறுவ முடிகிறது.

 

கொரோனா பாதிப்பிலிருந்து தொழிலாளர்களையும் பொதுமக்களையும் பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஈ. பி. ஏ (Environment Protection Agency-EPA) இரண்டு வாரங்களுக்கு முன்பு சில நீர், காற்று மற்றும் அபாயகரமான-கழிவுகள் குறித்தான கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப் போவதில்லை என்று அறிவித்தது. இந்த திடீர் தலைகீழ் மாற்றத்திற்கான நிர்வாகத்தின் வாதம் என்னவென்றால் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே கொரோனா பாதிப்பினால் பணிநீக்கங்கள், நீண்ட விடுப்புகள் , நிர்வாக கட்டுப்பாடுகள் போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன, இத்தருணத்தில் வணிகங்கள் மற்றும் தொழில்துறை மீதான  சுற்றுச்சூழல் தொடர்பான கட்டுப்பாடுகளை எளிதாக்க வேண்டும் என்பதே. எவ்வித ஆதாரங்களுமில்லாமல் கொரோனா தொற்றினால் ஏற்படும் செலவுகளும் சுற்றுச்சூழல் இணக்க அபராதங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று கூறுவதன் மூலம் ஈ. பி. ஏ தன்னை  “சுய கட்டுப்பாடு” நிர்வாகம் என்று கூறும் அந்தஸ்தை இழந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் கீழ் ஈ. பி. ஏ வை வழிநடத்திய ஜினா மெக்கார்த்தி, இந்த மாற்றத்தை “மாசுபடுத்த அனுமதிக்கும் திறந்த உரிமம்” என்று கூறினார். இது குறித்து நியூயார்க் டைம்ஸில் வெளியான “கொரோனாவின் பின்னணியில் ஈ. பி. ஏ மாசுக் கட்டுப்பாடுகளை பெருமளவு தளர்துகிறது” என்று தலைப்பிடபட்ட கட்டுரையில் அவர் கூறியதாவது:

 

“இந்த வெட்கக்கேடான உத்தரவு, நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான ஈ. பி. ஏ வின் கொள்கையை கைவிடுவதே தவிர வேறு ஒன்றுமில்லை”

 

மிக சமீபத்தில், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பாதரசம் (mercury) மற்றும் பிற நச்சு உலோகங்களை நாட்டின் காற்று மற்றும் தண்ணீரில் வெளியிடுவது தொடர்பான விதிமுறைகளை தளர்த்துவதாகவும் ஈ. பி. ஏ நிறுவனம் அறிவித்துள்ளது. பாதரசம் என்பது மூளை சேதத்துடன் தொடர்புடைய ஒரு அடர் உலோகமாகும், மேலும் இந்த விதிகளை தளர்த்துவது டிரம்ப் நிர்வாகத்தை ஒரு தொற்றுநோய்க்கு நடுவில் சுகாதாரப் பாதுகாப்புகளைத் திரும்பப் பெறும் இக்கட்டான நிலையில் வைக்கிறது. ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் ஈ. பி. ஏ இந்த முயற்சியை வேறு விதத்தில் பார்க்கிறது, மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பாதரசத்தை அகற்றுவதற்கான செலவு மாசு கட்டுப்பாடுகள் இல்லாமல் சுற்றுசூழிலில் வெளியிடுவதனால் ஏற்படும் பொருளாதார நன்மையை குறைத்துவிடுகிறது என வாதிடுகிறது. நகைமுரணாக ஏற்கெனவே பெரும் தொகைகளை பாதரச விதிகளுக்காக செலவிட்டுள்ளதால் அவற்றை மாற்றக் கூடாதென மின்சார பயன்பாடு நிறுவனங்கள் டிரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளன.

 

இது மட்டும் இல்லை.

டிரம்ப் நிர்வாகம் ஆட்டோமொபைல்களின்  எரிபொருள் செயல்திறன் தரங்களை தளர்த்தியுள்ளது. இதை டைம்ஸ்  பத்திரிக்கை “மத்திய அரசாங்கத்தின் மிக முக்கியமான காலநிலை மாற்றக் கொள்கையை தகர்ப்பது ” என்று  விமர்சித்தது.

டிரம்ப் புதிய எரிபொருள் சிக்கன கொள்கையை ஒரு வரமென கூறுகிறார். சில நிபுணர்கள் அதனால் அதிக செலவுகள் ஏற்படுமென கணிக்கின்றனர் .

தொழில் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் நோக்கில் 102 ஆண்டு பழமையான  பறவைகள் சட்டம் போன்ற சிறப்பு வாய்ந்த சுற்றுச்சூழல் சட்டத்தை பலவீனப்படுத்த டிரம்ப் நிர்வாகம் முயல்கிறது, பறவைகளின் வாழ்வாதாரத்தை வேண்டுமென்றே அல்லாமல் மாறாக தற்செயலாகக் சிதைக்கும் வணிகங்கள் வழக்குகளுக்கு அஞ்சாமல் செயல்பட முடியும் என்கிறது.

பரந்த அளவில் காலநிலை மாற்றத்தை, சுற்றுச்சூழல் பாதிப்பின் மதிப்பீடாக கருதப்படுவதை மாற்ற டிரம்ப் அதிகாரிகள் முயல்கின்றனர். விஞ்ஞானிகள் பாதரச வெளியீடு குறைவினால் ஏற்படும் “ இணை பயன்களை” கருத்தில் கொள்வது சரியானதல்ல என வாதிடுகின்றனர். இந்த இணை பயன்களில் குறைந்த சல்பர் டை ஆக்ஸைட் மற்றும் குறைந்த அளவிலான துகள் பொருட்கள் காற்றில் கலப்பதும் அடங்கும். இதன் மூலமாக பொது மக்களின் உடல் நல பிரச்சனைகளும் குறைகிறது. பாதரசம் மற்றும் துகள் பொருட்கள் வெளியீட்டின் கட்டுபாடுகளால்  ஒவ்வொரு ஆண்டும் 11,000 மரணங்களும் அத்துடன் 4,700 மாரடைப்பு மற்றும் 130,000 ஆஸ்துமா தாக்குதல்களும் குறைவதாகவும் அதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் 80 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தபடுவதாகவும்  ஒபாமா நிர்வாகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த பயன்களோடு மிகப் பெரும் இணை பயனாக காலநிலை மாற்றத்திற்கு வழி வகுக்கும் சல்ஃபர் டை ஆக்ஸைட் மற்றும் பிற துகள் பொருட்களின் அளவும் குறைகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் புதிய ஒப்பந்தத்தின் கீழ் இத்தகைய இணை பயன்கள் கருதப்படமாட்டாது.

நவம்பர் மாதத்தில் குடியரசுக் கட்சி வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை இழக்க நேர்ந்தால் சுற்றுச்சூழல் விதிகளை பலவீனப்படுத்துவதற்காக நிர்வாகத்தின் புதுப்பிக்கப்பட்ட முடிவுகளுக்கு சிக்கல் ஏற்படலாம். ஆனால் ஜூன் மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றப்படும் எந்தவொரு  முடிவும் காங்கிரஸின் மறுஆய்வு சட்டத்திற்கு உட்பட்டது அல்ல.  இதனால் புதிய நிர்வாகத்தால் அதை திரும்ப பெறுவது மிகவும் கடினம். எனவே பொது கவனம் கொரோனா குறித்த செய்திகளில் குவிந்திருக்கும் அடுத்த சில வாரங்கள் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை விதிமுறைகளை பலவீனப்படுத்துவதற்கான முக்கியமான காலக்கட்டமாகும்.

இந்த நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு காரணமாக காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் ஈ .பி. ஏ வின் எதிர்கால முயற்சிகளுக்கு  கைவிலங்கிடும்  நோக்கத்தை இந்தியானா பல்கலைக்கழகத்தின் பொது மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களின் பேராசிரியர் டேவிட் கோனிஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார். டைம்ஸின் “ஈ .பி .ஏ வின்  பாதரச கட்டுப்பாடுகள் தளர்வு” குறித்து “இது வெளியில் சொல்லப்படாத மிகப்பெரிய திட்டம்” என்று அவர் கூறினார் .

இத்தகைய சுற்றுச்சூழல் எதிர்ப்பு முயற்சிகள் மைய அரசின் நிர்வாக மட்டத்துடன் நின்று விடவில்லை. மேற்கு விர்ஜீனியா, தெற்கு டகோட்டா மற்றும் கென்டக்கி ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் இணைப்புகள் “முக்கியமான கட்டமைப்புகள்” என்பதால் புதைபடிவ எரிபொருள் கட்டுமான திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை குற்றமாக்கும் சட்டங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இது குறித்து  இங்கிலாந்தின் இன்டிபென்டன்ட் எழுதுகையில் அமெரிக்காவின் க்ரீன்பீஸ் அமைப்பின் ஆராய்ச்சியாளரான கானர் கிப்சனை கூறியதை மேற்கோளிட்டுள்றது:

நாம் அனைவரும் COVID-19 பாதிப்பு மற்றும் அதற்கான காங்கிரஸின் நிவாரண தொகுப்புகள் குறித்து கவனம் செலுத்தி வரும் நிலையில், மாநில சட்டமன்றங்கள் அமைதியாக புதைபடிவ எரிபொருள் போராட்டங்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. இந்த சட்டங்களால் சமூகத்திற்கு எந்த பயனும் புதிதாக ஏற்பட போவதில்லை. அதற்கு பதிலாக அவர்கள் நம் நாட்டின் மிகப் பெரிய அரசியல் மற்றும் சமூக வெற்றிகளுக்கு வழிவகுத்த அகிம்சை வழியிலான ஒத்துழையாமை போராட்டத்தை தடுக்க முயல்கின்றனர்.”

இந்த செயல்களுக்கு ஒரு மறைமுக நோக்கம்  உள்ளதாக பொருளாதார நிபுணர் மற்றும் செய்தித்தாள் கட்டுரையாளர் பால் க்ருக்மேன் உட்பட பல வல்லுநர்கள் கருதுகின்றனர். அவர் சமீபத்தில் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வரும் தந்திரங்களை ஹங்கேரி போன்ற பெரும் ஜனநாயக விரோத நாடுகளில் ஏற்கனவே நடந்தவற்றுடன் ஒப்பிடடுகிறார் – அங்கு வெள்ளை தேசியவாத ஆளும் கட்சி அதன் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டஙகளை திருத்தி தனக்கு சாதகமான  விதிகளை நிரந்தரமாக்குகிறது. ஏப்ரல் 9 நியூயார்க் டைம்ஸ்  கட்டுரையில் அவர் தேசியவாத தலைவர்களால் ஒட்டுமொத்த  ஜனநாயகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து எழுதினாலும், அந்த அச்சுறுத்தலால் கால நிலை மாற்றத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த அவரது அவதானிப்பு நிதர்சமானது. க்ருக்மேன் தனது கட்டுரையில், ஹங்கேரிய அரசு எவ்வாறு

 

அதன் கட்டுப்பாட்டை பலப்படுத்தி அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வணிக நிறுவனங்களுகடன் நட்பு பாராட்டி வெகுமதி அளித்தோடு விமர்சகர்களைத் தண்டித்து சுயாதீன செய்தி ஊடகங்களை அடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது

என்பதை விவரிக்கிறார்

 

இறுதியாக அவர் முடிக்கையில்:

 

இதேபோன்ற ஒன்று அமெரிக்காவில் நடக்காது என்று நீங்கள் நம்பினால், நீங்கள் அப்பாவியாக இருக்கிறீர்கள்.

 

அல்லது வெற்றிகரமாக திசை திருப்பபட்டிருக்கிறீர்கள்.

 

டான் ட்ரோலெட் ஜூனியர்  “புல்லட்டின் ஆஃப் த அட்டாமிக் ஸைன்டிஸ்ட்” ன் துணை ஆசிரியராக உள்ளார். அவர் ஒரு அறிவியல் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர். அண்டார்டிகாவைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் கதைகளைத் சேகரித்த ஒரு வெளிநாட்டு ஆர்வலர் . இவரது கதைகள் அமெரிக்கன் ஸைன்டிஸ்ட், இன்டர்நேஷ்னல் வைல்ட் லைஃப், எம்ஐடியின் தொழில்நுட்ப விமர்சனம், காஸ்மோஸ், ஸைன்ஸ், நியூ ஸைன்டிஸ்ட் மற்றும் பிபிசி ஆன்லைனில் வெளிவந்துள்ளன. அவர் ஜெர்மனியின் பிராங்பேர்ட் ஆம் மெயின் நகர TEDx பேச்சாளராக இருந்தார். மேலும் ஆஸ்திரேலியாவில் நான்கு ஆண்டுகள் தங்கி ஃபுல்பிரைட் முதுகலை பயண வகுப்பை நடத்தினார். மூன்று ஆண்டுகளாக, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள CERN இன் ஆன்-லைன் வார இதழைத் தொகுத்துள்ளார். ட்ரோலெடின் “கோல்ட் ரஷ் இன் தி ஜங்கிள்: தி ரேஸ் டு டிஸ்கவர் அண்ட் டிஃபெண்ட் தி ரேரஸ்ட் அணிமல்ஸ் ஆஃப் வியட்நாமஸ் லாஸ்ட் வேர்ல்ட் ” நூலை ஏப்ரல் 2013 இல் கிரவுன் வெளியிட்டது. மிசோரி பல்கலைக்கழகத்தில் பி. ஜே. (Bachelor of Journalism-இளங்கலை இதழியல்) மற்றும் நியூயார்க் பல்கலைக்கழக அறிவியல், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் இதழியல் திட்டத்தில் அறிவியல் எழுத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

 

தமிழில்: சர்ஜுன்

https://mronline.org/2020/04/24/trump-coronavirus-and-climate-change-using-a-pandemic-to-gut-the-epa/

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW