சிவப்பு, ஆரஞ்சு, பச்சை – மருத்துவக் கொள்கையின்றி மக்களை வதைக்கும் நடுவண் அரசு! பகுதி – 1

03 May 2020

ஏப்ரல் 15 அன்று வெளியிடப்பட்ட வரையறைகள்:

ஏப்ரல் 15 அன்று நடுவண் நலவாழ்வு அமைச்சகம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மாவட்டங்கள் என்று வரையறுப்பதற்கான அடிப்படைகளைக் கொடுத்தது. ஏப்ரல் 17 அன்று நலவாழ்வு அமைச்சகம் நோய்க் கட்டுப்படுத்துவது குறித்து வெளியிட்ட அறிக்கையையும் இணைத்துப் பார்த்தால்தான் அந்த வரையறுப்புகளைப் புரிந்துகொள்ள முடியும். அதன்படி,

  • நோய்த் தொற்று சுழியமாக (ஜீரோ) இருக்கும் மாவட்டங்கள் -பச்சை
  • நோய்த் தொற்று 15க்கு குறைவாக இருந்தால் ஆரஞ்சு
  • நோய்த் தொற்று 15க்கு மேல் இருந்தால் அவை சிவப்பு

சிவப்பு மாவட்டம் என்று வரையறுப்பதற்கு கூடுதலாக சில காரணிகளைச் சொன்னார்கள். இந்தியாவில் உள்ள மொத்த தொற்று எண்ணிக்கையில் 80% தொற்றுக்கு பங்களிக்கக் கூடிய மாவட்டங்கள் அல்லது ஒரு மாநிலத்தில் 80 % தொற்றுக்கு பங்களிக்கக் கூடிய மாவட்டங்கள் அல்லது நோய்த் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பு ஆவதற்கான நாட்கள் 4 விடவும் குறைவாக இருந்தால் அவையெல்லாம் சிவப்புப் பகுதிகள் என்றனர். அந்த சிவப்பு மாவட்டங்கள் ’பெரும் பரவல் இருக்கும்’(large outbreak) மாவட்டங்கள் என்றும் சில கொத்துகள் ( clusters) இருக்கும் மாவட்டங்கள் என்றும் வேறுபடுத்தப்பட்டன. அதன்படி இந்தியாவில் மொத்தம் உள்ள 733 மாவட்டங்களில் 170 சிவப்பு மாவட்டங்கள் என்றும் 207 ஆரஞ்சு மாவட்டங்கள் என்றும் ஏனைய மாவட்டங்கள் பச்சை என்றும் சொன்னார்கள்.

 

 

தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் சிவப்பு பகுதிகள் என்றும் 9 மாவட்டங்கள் ஆரஞ்சு பகுதிகள் என்றும் நடுவண் நலவாழ்வு அமைச்சகம் சொன்னது. அன்றளவில் புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகரி ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை சுழியம் ஆக இருந்த நிலையில் எஞ்சிய 34 மாவட்டங்களும் சிவப்பு, ஆரஞ்சு பகுதிகளுக்குள் வந்திருக்க வேண்டும். ஆனால், நடுவண் அரசு கொடுத்த பட்டியலில் சில மாவட்டங்களே விடுபட்டிருந்தன. அந்த அளவுக்கு நேர்த்தியுடன் நாட்டுக்கு ஆணைகளைப் பிறப்பித்தது நடுவண் அரசு.

இவைமட்டுமின்றி, ஒரு மாவட்டம் சிவப்பில் இருந்து ஆரஞ்சு என்று மாற்றப்படுவதற்கு தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு நோய்த் தொற்று எதுவும் இருக்கக் கூடாது என்றார்கள்.  ஒரு மாவட்டம் ஆரஞ்சில் இருந்து பச்சை என்று மாற்றப்படுவதற்கு தொடர்ச்சியாக மேலும் 14 நாட்களுக்கு நோய்த் தொற்று எதுவும் இருக்கக் கூடாது என்றார்கள்.

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று தரம் பிரிப்பதற்கு சொல்லப்படும் காரணிகள் அறிவியல் பூர்வமானது தானா? என்ற கேள்வியை  எழுப்பாமல் தமிழக அரசும் தலையசைத்ததோடு பச்சை மாவட்டங்களில்கூட ஊரடங்கைத் தளர்த்தாமல் முழு ஊரடங்கு என்று அறிவித்தது.

கொடுமை நிறைந்த 15 நாட்கள் உருண்டோடின.

மே 1:

இந்தியா முழுவதும் உள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மாவட்டங்களில் என்னென்ன நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் மே 1 அன்று ஆணைப் பிறப்பித்தது. மேலும் மே 4 இல் இருந்து மே 17 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது அந்த ஆணை.

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்பதற்கான வரையறைகள் நலவாழ்வு அமைச்சகத்தின் ஏப்ரல் 30 ஆம் தேதியிட்ட கடிதத்தில் இருக்கிறதென்று சொல்லப்பட்டது. அக்கடிதத்தில் பார்த்தால், இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களில் 130 சிவப்பு பகுதிகள் என்றும் 284 ஆரஞ்சு  பகுதிகள் என்றும் 319 பச்சைப் பகுதிகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று இல்லாத மாவட்டங்கள் அல்லது கடந்த 21 ( முன்பு 28 என்று சொன்னார்கள்) நாட்களில் புதிய தொற்று ஏதும் கண்டறியப்படாத மாவட்டங்கள் பச்சை என்றும் தொற்று எண்ணிக்கை, ஆய்வு செய்யப்பட்ட அளவு, எத்தனை நாட்களில் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகிறது  மற்றும் கண்காணிப்புத் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சிவப்புப் பகுதிகள் முடிவு செய்யப்படுவதாக அக்கடிதம் சொல்கிறது. சிவப்பும் பச்சையும் இல்லாத மாவட்டங்கள் ஆரஞ்சு என்று சொல்லப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு என்றும் கிருஷ்ணகிரி பச்சை என்றும் ஏனைய மாவட்டங்கள் ஆரஞ்சு(12)  என்றும் நலவாழ்வு அமைச்சகம் சொல்லியுள்ளது.

கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் விதமாக பச்சையை ஆரஞ்சு என்றோ அல்லது ஆரஞ்சை சிவப்பு என்றோ அந்தந்த மாநிலங்கள் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், சிவப்பை ஆரஞ்சு என்றோ ஆரஞ்சைப் பச்சை என்றோ முடிவு செய்தல்கூடாது, ஏழு நாட்களுக்கு ஒருமுறை இதை மீளாய்வு செய்து அறிவிப்போம் என்று நலவாழ்வு அமைச்சகமும்  உள்துறை அமைச்சகமும் கட்டளையிடுகிறது.

மேலும் சிவப்புப் பகுதிகளாக சில மாவட்டங்களை அறிவிப்பதற்கு சில மாநிலங்கள் கவலை தெரிவித்தார்கள் என்றும் அந்த மாநிலங்களுக்குப் பதில் சொல்லும் வகையில் இப்படி அடையாளப்படுத்துவது மாறும் தன்மையுடையது( dynamic) என்றும் விளக்கம் தருகிறது நலவாழ்வு அமைச்சகத்தின் கடிதம்.

ஏப்ரல் 15 அன்று கொடுக்கப்பட்ட வரையறைகளின் அடிப்படையில் ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று தமிழக அரசு கொடுத்துள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மாவட்டங்களைக் காட்டும் வரைப்படம் கீழே:

நடுவண் அரசு சிவப்பு, ஆரஞ்சுக்கான அடிப்படைகளை மாற்றிக் கொண்டதால் மே 1 அன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் அடிப்படையிலான மாவட்டங்களின் வரையறுப்பு என தமிழக அரசால் வெளியிடப்பட்ட வரைப்படம் கீழே.

ஆக, நடுவண் அரசு கொடுத்த வரையறைகள் மாறிவிட்டதால் கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படும் மாவட்டங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

அப்படியென்றால், ஏப்ரல் 15 அன்று கொடுக்கப்பட்ட வரையறைகளுக்கான அடிப்படை என்ன? தொற்று எண்ணிக்கை 15 க்கு குறைவா? அல்லது அதிகமா? என்று சொன்னபோது ’15’ என்ற அந்த மாய எண்ணை(magic number) நடுவண் அரசு முன்வைத்ததற்கான அடிப்படை என்ன? இப்போது பரிசோதனையின் அளவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது போல் அப்போது ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இன்றைக்கு சொல்லப்பட்டிருக்கும் வரையறைகள் அடுத்து வரும் நாட்களில் மாறுமா?

ஏற்கெனவே சொல்லப்பட்ட வரையறைகள் தவறென்றால் இந்த பதினைந்து நாட்களாக பல மாவட்டங்கள் சிவப்புப் பகுதிகள் என்று முத்திரையிடப்பட்டு தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததற்கு நடுவண் அரசு பொறுப்பேற்று விளக்கம் தர வேண்டாமா?

சரி, மே 1 அன்று பச்சை மாவட்டம் என்று சொல்லப்பட்ட கிருஷ்ணகிரியில் மே 2 அன்று ஒரு புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளதே. இனி அந்த மாவட்டம் ஆரஞ்சு என்ற வரையறையில் வந்துவிடுமா? அங்கேயும் மே 3 க்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படாதா?

தமிழகத்தை ஒத்த மக்கள் தொகையைக் கொண்ட பிரான்சு தொற்று எண்ணிக்கை 3000 த்தைவிடவும் அதிகமாக இல்லாவிட்டால் மே 11 முதல் ஊரடங்கைத் தளர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறது. பிரான்சு அரசு தொற்று எண்ணிக்கையை சுழியம் ஆக்கும் வரை ஏன் காத்திருக்கவில்லை?

ஆட்டு மந்தைகள் போல் மாநில அரசுகளும் ஊடகங்களும் இந்தக் கேலிக்கூத்தான வரையறைகளைக் கேள்விக்குள்ளாமல் கும்மியடித்துக் கொண்டிருக்கின்றன.

ஊரடங்கை தளர்த்துவதற்கு என்னென்ன காரணங்களைக் கணக்கில் எடுத்திருக்க வேண்டும்? இப்போது சொல்லப்படும் காரணிகளாவது பொருத்தமுடையதா? எதை மறைப்பதற்காக இந்த பித்தலாட்டங்களை நடுவண் அரசு செய்து வருகிறது?

 

-செந்தில், சரவணன்

 

  1. MoHFW-Letter-States-reg-containment-of-Hotspots.pdf in NDMA website
  2. MOHFW to CS 30 april.pdf in NDMA website

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW