‘சமூக தடுப்பாற்றல்’ – ஸ்வீடன் மாதிரியிலுருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன ?

03 May 2020

உலகமே சந்தித்துவரும் கொரோனா வைரஸ் நெருக்கடியைக் குறிப்பிடும்போது “கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போர்” என்று பெரும்பாலான நாட்டின் அதிபர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த உருவகம் அடிப்படையில் பிழையானது மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியது. போர்கள் மனிதர்களால் வெல்லப்படுகின்றன. ஆனால் நீங்கள் வைரஸ் அல்லது காலநிலை மாற்றம் போன்ற இயற்கையின் சவால்களுக்கு எதிரான போராட்டத்தில் இருக்கும்போது இயற்கையைத் தோற்கடிப்பது குறிக்கோள் அல்ல, சாத்தியமும் அல்ல. இயற்கை வேதியியலாலும், உயிரியலாலும் மற்றும் இயற்பியலாலும் ஆனது. அதனைப் புரிந்துகொண்டும், ஏற்றுக்கொண்டும் அதோடு வாழ்வதே குறிக்கோள். இயற்கை வலிமையானவர்களுக்கோ அல்லது புத்திசாலிகளுக்கோ சாதகமாக இருப்பதில்லை மாறாக இயற்கையின் அறிவியலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்ளும் உயிரினங்களுக்கே சாதமாக அமையும்.

அதனால்தான், இந்த ஊரடங்குகள் முடிவடையும் முன், நாம் பதிலளிக்க வேண்டிய மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று என்னவென்றால்:

சுவீடன் முயற்சிப்பதுபோல் கொரோனா வைரசுடன் வாழ நம்மை  வடிவமைத்துக்கொள்வதா? அல்லது ஊரடங்குகளை முடிவுக்குக் கொண்டுவர வேறுவழியின்றி  குழப்பமான நிலைக்குச் செல்வதா?

சுவீடனின் திட்டம் என்ன?

கொரோனா வைரசைக் கையாள்வதில் சுவீடன் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை எடுத்துள்ளது. இது கொரோனா நோய்த்தொற்றுக்குத் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதன் மூலம் “சமூக தடுப்பாற்றல் (herd immunity)”  உருவாக்குவதை உத்தியாகத் தேர்வு செய்துள்ளது.

இது சமூகத்தின் பெரும்பாலாநொறுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதன் (நோய்க்கு ஆளாகுவதன் மூலம் இயற்கையாக எதிர்ப்புச்சக்தியை  உருவாக்குவது) மூலம் நோய் பரவலைக் குறைத்து அல்லது முற்றிலும் தடுத்து  நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள மக்களைப் பாதுகாக்கும் முறையே ஆகும்.

சுவீடன் கடைப்பிடிக்கும் திட்டம் என்னவென்றால்

  1. 65 வயதுக்கும் குறைவான, நல்ல ஆரோக்கியம் கொண்ட பெரும்பாலான மக்களை கொரோன நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி அதில் பெரும்பாலோனோருக்குச் சாதாரண சளி, காய்ச்சலோடு நோய் குணமாகுதல்.
  2. அதிகமாகப் பாதிப்புக்கு உள்ளானோரைக் குணப்படுத்தத் தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்தல்.
  3. 65 வயதிற்கும் மேலான மற்றும் உடல் ஆரோக்கியம் இல்லாதோரைப் பாதுகாக்க மற்றும் பராமரிக்க ஏற்பாடுகள் செய்தல்.
  4. 60 சதவீதம் மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகும்வரை காத்திருக்கச் செய்தல்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தடுப்பூசி வழியாகவோ  அல்லது இயற்கை நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவது மூலமாகவோ ‘சமூக தடுப்பாற்றல் உருவாக்குவதே குறிக்கோள்.

 

ஏன் சமூக தடுப்பாற்றல் முக்கியம்?

சுவீடனின் இந்த திட்டத்திற்கு தலைகீழாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஊரடங்கிலிருந்து எந்த திட்டமுமின்றி தளர்வுகளை ஏற்படுத்தத் தயாராகியுள்ளனர். பெரும்பாலான  மக்கள் மத்தியில்  எதிர்ப்புசக்தி உருவாகாத இந்த சூழலில் எந்த திட்டமுமின்றி இயல்புநிலைக்குத் திரும்புவது என்பது இரண்டாவது அலை கொரோனாத் தாக்குதளுக்கு இட்டுச்செல்லும்.

உதாரணமாக, ஊரடங்குத் தளர்வுக்குப் பிந்தைய நியூயார்க் நகரத்தின் சவாலைப் பற்றி சிந்தியுங்கள். நோயாளிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்து  மருத்துவமனைகளை மூழ்கடிக்கும். கடுமையான பொருளாதார விலை கொடுத்து காப்பாற்றிவந்த கோடிக்கணக்கான மக்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. சீனா போன்று  சோதனை, கண்காணிப்பு, தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடித்தால் கூட வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது முடியாமல் போகலாம்.

இப்போது ஸ்டாக்ஹோமைப் (ஸ்வீடன்) நகரினை ஒப்பிட்டுப் பார்ப்போம். ஸ்வீடனின் பொதுசுகாதார அமைப்பின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர், நாட்டின் உயர்மட்ட தொற்றுநோய் அதிகாரி ஆண்டர்ஸ் டெக்னெல்  கூறியது என்னவென்றால்: “ஸ்டாக்ஹோமில் 25 சதவீதம் பேர் வரை  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு   நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். ஸ்டாக்ஹோமில் உள்ள எங்கள் மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் நடத்திய ஆய்வில், அங்குள்ள ஊழியர்களில் 27 சதவீதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் பணியிடங்களில் மட்டுமின்றி சமுதாயத்தில் பரவுவதிலிருந்தும்  விடுபடுகிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். சில வாரங்களுக்குள் நாங்கள் ஸ்டாக்ஹோமில் சமூக தடுப்பாற்றல் யை அடைய முடியும்.

சுவீடன் சமூக தடுப்பாற்றல் அடைய எல்லா மக்களையும் நோயைப் பெற அனுமதிப்பது இல்லை, இந்த தொற்றுநோய்க்கு வழிசெலுத்த மிகவும் நிலையான, வடிவமைக்கப்பட்ட ஒரு உத்தியை பின்பற்றுகிறது. உதாரணமாக கல்லூரிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன, ஆனால் ஒன்பது வகுப்பு முதல் மழலையர் பள்ளி திறந்திருக்கும், பல உணவகங்கள், கடைகள் மற்றும் வணிகங்கள் போன்றவைகளும் திறக்கப்பட்டிருக்கும். அரசாங்கம் சமூக விலக்கத்திற்கான  வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது, அவை எல்லோராலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிக்கின்றன மற்றும் அத்தியாவசியமற்ற  பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமாக, 70 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் வீட்டில் தங்க ஊக்குவித்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் கூட்டங்கள் மற்றும் மருத்துவ இல்லங்களுக்கு வருகை தருவதை தடைசெய்தது.

இதன் விளைவாக, இதுவரை பாதிக்கப்படக்கூடியவர்களிடையே படிப்படியாக ‘சமூக தடுப்பாற்றல்’யை கட்டியெழுப்புவதாக டெக்னெல் குறிப்பிட்டார், அதே நேரத்தில் நாடு  வேலையின்மை மற்றும் மருத்துவமனை சுமை ஆகியவற்றின் பெரும் பகுதியைத்  தவிர்த்துள்ளது.  ஆனால் சுவீடன் இதற்காக அதிக விலை கொடுத்துள்ளது.  “சுவீடனில் 1 கோடி மக்கள் உள்ளனர். அதன் அருகிலுள்ள ஸ்காண்டிநேவிய அண்டை நாடுகளை விட இரு மடங்கு பெரியது. ஏப்ரல் 28 நிலவரப்படி, நாட்டின் கோவிட் –19 இறப்பு எண்ணிக்கை 2,274 ஐ எட்டியுள்ளது, இது டென்மார்க்கை விட ஐந்து மடங்கு அதிகமாகும், நோர்வேயை விட 11 மடங்கு அதிகமாகும். இதில் நர்சிங் ஹோம் குடியிருப்பாளர்கள் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள்“.

கோவிட் -19 நோயெதிர்ப்பு சக்தி கொண்ட நபர்கள் மீண்டும் தொற்றுக்கு உள்ளக்கமாட்டார்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று எச்சரிக்கும் நிபுணர்களுக்கு டெக்னெல்-ன் பதில் என்னவென்றால், “இதுபோன்ற சிந்தனை ஒரு தடுப்பூசியின் தேவையை குறைத்து மதிப்பிடுவது ஆகும். மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற முடியாவிட்டால், ஒரு தடுப்பூசி நம்மைப் பாதுகாக்கும் என்று நாங்கள் எப்படி நினைக்க முடியும்?. இப்போது பல நாடுகள் ஸ்வீடிஷ் வழியில் வரத் தொடங்குகின்றன. அவர்கள் பள்ளிகளைத் திறக்கிறார்கள், ஊரடங்கிலிருந்து  வெளியேறும் உத்தியை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். சில மாதங்கள் அல்லது பல வாரங்களுக்கு மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு தொடர்ந்து செய்யக்கூடிய நடவடிக்கைகளை நாம் கொண்டிருக்க வேண்டும். ”

 

ஸ்வீடன் மாதிரியிலுருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?  

ஒரு தொற்றுநோயைத் தழுவி, உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற வெவ்வேறு வழிகள் உள்ளன. ஸ்வீடனின் திட்டத்தை சரியானதென இப்போதே கூறுவது கடினமானது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கான பல்வேறு வழிகளையும், அதற்கான விலையையும் நாம் விவாதிக்க வேண்டும்.

இஸ்ரேலின் மிகவும் புகழ்பெற்ற கணினி விஞ்ஞானிகளில் ஒருவரான மொபைலியின்(Mobileye) நிறுவனர் அம்னோன் ஷாஷுவா, இஸ்ரேலுக்காக வடிவமைக்கப்பட்ட ஸ்வீடிஷ் பாணி நோய் எதிர்ப்பு சக்தி பாதையை பல வாரங்களாக ஆதரித்து வருகிறார். “ஸ்வீடன் பாணியிலான மாதிரியானது பொருளாதார பார்வையில் இருந்து பயனளிக்கிறது மட்டுமல்லாமல் அதிக ஆபத்துள்ள நோய் எதிர்ப்புத்திறன் குறைவான மக்களின் நோய் பரவுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது” என்றும் குறிப்பிடுகிறார்.

மினசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கை மையத்தின் இயக்குனர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம் திங்களன்று WCCO வானொலிக்கு அளித்த பேட்டியில், “ஸ்வீடன் நாம் கவனிக்க வேண்டிய ஒரு மாதிரி என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது மட்டுமே மாதிரி அல்ல, ஆனால் நிச்சயமாக இந்த விவாதங்களை நடத்தப்பட வேண்டும். “, “இந்த வைரஸ் குறைந்தது 60 சதவிகிதம் அல்லது 70 சதவிகித மக்களை பாதிக்கும் வரை பரவிக்கொண்டிருக்கும்என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக தடுப்பாற்றல் வரலாற்று ரீதியாக தொற்றுநோய்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இயற்கையின் வழியாகும்” என்று பொது சுகாதார மருத்துவர் டாக்டர் டேவிட் காட்ஸ்  தி நியூயார்க் டைம்ஸில் எழுதிய ஒரு கட்டுரையில் விவரித்துள்ளார்.

நாம் இயற்கையின் சக்திக்கு முன் மண்டியிட வேண்டும், நாம்தான் ஒருவிதத்தில் அவற்றைக் கட்டவிழ்த்து விடுகிறோம்

 

-தாமஸ் பியெட்மன்

 

தமிழில்: ராதா

 

https://www.nytimes.com/2020/04/28/opinion/coronavirus-sweden.html

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW