கொரோனா நோய்த் தொற்றியவர்களுக்கு உதவித் தொகை கொடுக்க வேண்டும் – ஏன்?

30 Apr 2020

கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அறிவியல் கண்ணோட்டம் தேவை. அதில் வெறும் மருத்துவம், நலவாழ்வு சார்ந்தவை மட்டுமின்றி மக்களின் சமூக பொருளியல் சார்ந்தவை அதன்மேல் கட்டப்பட்டுள்ள பண்பாடு சார்ந்தவை குறித்தும் நுட்பமான அறிவியல் பார்வை தேவை.

7 நாள் ஊரடங்கு அறிவித்தால் நகர்ப்புறத்தில் இருப்போர் தம் சொந்த கிராமங்களை நோக்கிப் புறப்படுவர் என்பது மக்களின் பண்பாட்டு மனம் சார்ந்தது. 21 நாள் ஊரடங்கு என்றால் புலம்பெயர் தொழிலாளர் நடந்தேனும் தம் கூடு சென்று சேர முயல்வர் என்பது வாழ்வின் யதார்தமும் பண்பாடு சார்ந்த ஓர் அம்சமும் ஆகும். சென்னையில் காலவரையறையின்றி ஊரடங்கு நீண்டு கொண்டிருப்பதால் என்னுடைய அப்பா எப்படியாவது ஊருக்கு வந்துவிடுமாறு சொல்கிறார். ’நல்லதோ, கெட்டதோ எல்லாம் ஒன்னாம் இருக்கலாம்பா’ என்பது அவர் தர்க்கம்.  ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு, உணவு விடுதியில் பணியாற்றும் ஒருவரிடம், ’என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டபோது இதே பதிலைத் தான் அவர் சொன்னார். உயிர் போனால் சொந்த மண்ணுல போகட்டுங்க, கும்பகோணம் போயிடுவேன்’ என்றார். நோய்த் தொற்று நெருக்கடி என்றால் நல்லதோ, கெட்டதோ ஊருக்குப் போய்விடுவோம் என்றுதான் நம் மக்களின் மனம் சிந்திக்கும்.

மாநகராட்சிகளில் 4 நாள் ’முழு ஊரடங்கு’ என்று அறிவித்தால் பொருட்களை வாங்கி வைப்பதற்கு சந்தைகளில் மக்கள் குவிவார்கள் என்பதும் பண்பாட்டு மனம் சார்ந்தது. அதை கணிக்கத் தவறியது அரசு. இப்போது இதில் இருந்து படிப்பினை பெற்று  ’முழு ஊரடங்கை’ தளர்த்தும் போது காலையில் இருந்து மாலை வரை கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிப்பு தந்துள்ளது அரசு.

எப்படி இருந்தாலும் படிப்படியாக ஊரங்கு தளர்த்தப்பட்டு இன்னும் ஒருசில வாரங்களில் பொருளியல் நடவடிக்கைகள் தொடங்கிவிடும். மக்களின் தாங்குதிறன் அதன் எல்லையை எட்டிவிட்டது. அடக்கி வைக்கப்பட்ட தண்ணீர் போல் பிழைப்பை நோக்கி மக்கள் ஓடத் தொடங்குவர்.  ஆனால், நோய்த் தொற்று படலம் முடிவுக்கு வந்திருக்காது. ஊரடங்கு தளர்த்தப்படும்போது நோய்த் தொற்று அதிகரிக்கும் என்று தொற்றியல் வல்லுநர்கள் உறுதியாகச் சொல்கின்றனர்.

இதுவரை வந்த மாதிரிகளை வைத்துப் பார்க்கும் பொழுதும் 10 க்கு 8 பேர் எந்த அறிகுறியும் இல்லாமலே நோய்த் தொற்றுக்கு ஆளாகி நடமாடுகின்றனர். எனவே, முதலில் அவர்களை அடையாளம் கண்டு பரிசோதனை செய்து தனிமைப்படுத்த முடியாது. யாருக்கு அறிகுறி இருக்கிறதோ அவர்தான் அந்த பத்தில் இரண்டு பேர்தான் தமக்கு அறிகுறி இருப்பதால் பரிசோதனை செய்ய முன்வர வேண்டும். அப்படியொருவர் வந்தால் தான் அவரில் இருந்து நூல் பிடித்து சென்று அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து பரிசோதனை செய்து அறிகுறியற்ற அந்த 8 பேரைக் கண்டடைந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும்.

சாதாரண சளி, காய்ச்சல், தலைவலி என்றால்கூட வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்பதுதான் அரசின் பரிந்துரை. ஆனால், வழக்கமாக சளி, காய்ச்சல் என்றால் க்ரோசின், பாராசிடமால், டோலோ 650 போன்ற மாத்திரைகளை மருந்து கடையில் இருந்து வாங்கி போட்டுக் கொள்ளும் பழக்கம் நமக்கு இருக்கிறது. காய்ச்சல் இருந்தால்கூட வேலை செய்ய முடியாமல் போகும்வரை அன்றாட வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்கும் பழக்கமும் உண்டு. இதற்கு மேல் வேலை செய்வதற்கு நம்முடைய உடல் ஒத்துழைக்கவில்லை என்றால்தான் மருத்துவரைப் பார்க்கும் பழக்கம் நமக்கு உண்டு. இது பொதுவான காலத்தில் நாம் செய்வதாகும். இதற்கு காரணம் உடல்நலத்தைப் பேணுவதில் போதிய அக்கறை செலுத்துவதற்கு உரிய விடுமுறை, விடுப்புகால ஊதியம் போன்ற வாழ்க்கைப் பாதுகாப்பு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இல்லை.

இன்றைய கொரோனா நோய்த் தொற்று காலத்தில் மருந்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து கடையில் எவருக்கும் மருந்து கொடுக்கக் கூடாது என அரசு ஆணையிட்டுள்ளது , அருகில் இருக்கும் ஒரு கிளினிக்கில் காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்றால்கூட அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற ஆணையும் இருக்கிறது.

இந்நிலையில், ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு விட்டால் அவரோடு வீட்டில் வாழக்கூடிய அவரது குடும்பமும் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். மேலும் நோய்த் தொற்று இருக்கிறதோ இல்லையோ அவரது குடும்பமே வீட்டை விட்டு வெளியே வரமுடியாதபடி தனித்திருக்க வேண்டும். எனவே, ஒட்டுமொத்தமாக ஒரு மாதக் காலத்திற்கு அந்தக் குடும்பம் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது, வேலைக்குப் போக முடியாது.

ஊரடங்கிற்கு முன்பு வெளிநாடு சென்றுவந்தோரிடம் இருக்கக் கூடிய நோய் என்ற நிலை மாறி, இப்போது சமூகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. கோயம்பேடு சந்தையிலும் மயிலாப்பூர் குடிசைப் பகுதிகளிலும் நோய்த் தொற்று காணப்பட்டுள்ளது. எனவே, அடித்தட்டு மக்களை நோக்கி கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது. அத்தகைய அடிதட்டு மக்களால் வாழ்வாதாரமின்றி 28 நாட்கள் மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ இருக்க முடியுமா?

மேலும் ஊரடங்கிற்குப் பின்பு எல்லோரும் வாழ்க்கைக்காக ஓடிக் கொண்டிருப்பார்கள். ஊரடங்கு காலத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால்கூட, ”எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள், நாம் மருத்துவமனையில் இருக்கிறோம். வேலை எதுவும் நடந்து கொண்டிருக்கவில்லை” என்ற ஆறுதலுடன் அவர் இருந்துவிடுவார். இனி ஊரடங்கிற்குப் பின்பு நோய்த் தொற்று ஏற்பட்டால்,  தான் மட்டும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்று நோய்த் தொற்றை மறைப்பதற்கே முயல்வர். அவர் பணிபுரியும் இடத்திலும் வேலையைவிட்டு அவரை அனுப்பிவிட்டு அவருக்கு கொஞ்சம் காசை கொடுத்து வெளியில் ”யாருக்கும் தெரியாமல் ஒரு மாதம் இருந்துவிட்டு வா” என்றுகூட அவரது முதலாளி சொல்லக் கூடும். ஏனென்றால் நோய்த் தொற்று என்று உறுதியானால், அங்கே பணிபுரிபவர்கள் எல்லோரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அந்த இடமே சில நாட்களுக்கு மூடப்படும். அந்த இழப்பை அவரது முதலாளி விரும்ப மாட்டார்.

போதாக்குறைக்கு இப்போது சென்னையில் அதிகரிக்கும் நோய்த் தொற்றுக்கு மக்களைக் குற்றவாளி ஆக்கி ஊடங்களில் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே களங்கம் மற்றும் வாழ்வாதார இழப்பு ( Stigma And Economic Loss) என்ற காரணத்திற்காக ஒருவர் நோய் அறிகுறி இருந்தாலும் அதை மறைக்கவே செய்வார்.

நோய் அறிகுறியை மறைப்பவர்கள் மீது தொற்று நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எப்போதும்போல சட்ட ஒழுங்கு சிக்கலாக்கி அரசு அறிவித்திருந்தாலும்கூட ஊரடங்கு தளர்த்தப்படும்பொழுது ’சிக்கிக் கொள்ளும்வரை மறைத்துப் பார்ப்போம்’ என்றே மக்கள் விசயத்தை அணுகுவர்.

இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு ஆசிய நாடுகள் சில மேற்கொண்டுள்ள உத்தியை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

  • சிங்கப்பூர் அரசு ‘Courage fund’ ’துணிவு நிதி’ என்ற  பெயரில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்படும் குடும்பம் ஒன்றுக்கு தலா 1000 டாலர்கள் கொடுக்கிறது.
  • மலேசிய அரசு கோவிட் 19 நிதியம் என்ற பெயரில் ஒரு நிதி தொகுப்பை ஒதுக்கி நோய்த் தொற்றுக்கு ஆளாகி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவோருக்கு வழங்க முன்வந்துள்ளது.
  • தென்கொரிய அரசு நோய்த் தொற்று அறிகுறி உடையோர் தாமாக முன் வந்து பரிசோதனைக்கும் தொற்று இருப்பின் சிகிச்சைக்கும் உட்படுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பரிசோதனை, சிகிச்சை ஆகியவற்றை கட்டணமின்றி கொடுப்பதுடன் வாழ்க்கை செலவு அல்லது ஊதியத்துடன் கூடிய விடுப்பு என்ற வகையில் பணமும் கொடுக்கிறது. வெளிநாட்டுப் பயணம் சென்று வந்தோருக்கு இது பொருந்தாது என்றும் அறிவித்துள்ளது.

வியட்நாம் அரசும் இத்தகைய ஓர் ஏற்பாட்டை செய்துள்ளது.

எனவே, நோய்த் தொற்றுக்கு ஆளோவோரைப் பார்த்து ’சமூக விலக்கலைக் கடைபிடிக்கவில்லை’ என்றெல்லாம் சொல்லி குற்றவாளி ஆக்காமல் வாழ்வின் யதார்த்தில் இருந்து பரிசீலித்து அவர்தம் குடும்பத்திற்கு உதவித் தொகை வழங்க அரசு முன்வர வேண்டும். அவர்கள் பொருளியல் நிலையை மதிப்பிடுவதற்கு குடும்ப அட்டை, உடலுழைப்பு தொழிலாளர்கள் என்பதற்காக வாரிய உறுப்பினர் பதிவு, வருமானச் சான்றிதழ் போன்ற எண்ணற்ற பல சான்றுகளைக் கேட்கலாம். ஆனால், அவற்றின் நோக்கம் அடித்தட்டு மக்கள் எவ்விதத்திலும் விடுபட்டுவிடக் கூடாது என்பதாக இருக்க வேண்டும்.

கட்டணமின்றி பரிசோதனை செய்து சிகிச்சைப் பார்ப்பது போதாதா? என்று அரசு கேட்கக் கூடும்.  மீண்டும் ஓர் ஊரடங்கு என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுவிடக் கூடாது என்பதும் எண்ணற்ற மருத்துவப் பணியாளர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி நமக்கு இழப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்குநிலையில் இருந்து இக்கோரிக்கைப் பரிசீலிக்கப்பட வேண்டும்.

உலகில் எவர் ஒருவரும் ஏழை என்ற காரணத்திற்காக கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட வில்லை என்றால் அது அந்த ஏழையோடு முடிந்துவிடாது, ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஆபத்தாக பரவிக் கொண்டே இருக்கும் என்ற பொருளில் உலக நலவாழ்வு மையமும் எச்சரித்துள்ளது.

-செந்தில்

சுட்டிகள்:

  1. http://ncov.mohw.go.kr/en/baroView.do?brdId=11&brdGubun=112&dataGubun=&ncvContSeq=&contSeq=&board_id=&gubun=
  2. https://www.gov.sg/article/financial-support-to-help-singaporeans-affected-by-covid-19
  3. https://www.pmo.gov.my/2020/03/govt-launches-covid-19-fund-to-help-patients-and-others-affected/?highlight=quarantine%20fund

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW