பொருளாதார மீட்சிக்கான வழி

23 Apr 2020

பொருளாதார நடவடிக்கையின் சுழற்சி உற்பத்தியிலிருந்து தொடங்குகிறது. தொழிலாளர்கள் தாங்கள் பெறும் ஊதியத்தைக் கொண்டு சந்தையிலிருந்து பொருட்களை வாங்குகின்றனர். சந்தைக்கு பொருட்களை விநியோகிக்க வணிக நிறுவனங்கள் ஆலைகளை நிறுவிகின்றன. இந்த சுழற்சி முறையை இவ்வாறு எழுதலாம்: உற்பத்தி > ஊதியம் > தேவை > முதலீடு. இந்த சுழற்சி தற்போது தடைபட்டுள்ளது.  உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது, தொழிலாளர்கள் ஊதியம் பெறுவதில்லை, சந்தையிலும் தேவை எழவில்லை. இந்த சுழற்சியை  இரண்டு புள்ளிகளில் இருந்து மீண்டும் துவக்கலாம். ஒன்று, உற்பத்தியை மீண்டும் துவக்குவது. இந்திய தொழில்துறைக்கான கூட்டமைப்பு மற்றும் அசோச்சம் (Assocham) போன்ற பெரும் வணிக அமைப்புகள் கோரியுள்ளதைப் போல, அரசு பெருநிறுவனங்கள் மீதான வரியைக் (Corporate Tax) குறைப்பதன் மூலமும், கடன்கள் மீதான கட்டணத்தை ஒத்திவைப்பதன் மூலமும் உற்பத்தியை மீண்டும் துவக்க வணிக நிறுவனங்களை ஊக்குவிக்கலாம். இங்கு சிக்கல் என்னவெனில், பெருநிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவுதான். அதனால், குறைந்த பணமே தொழிலாளர்கள் மத்தியில் புலங்கும். இதனால், சந்தையில் தேவையும் குறைவாகவே இருக்கும். இம்முயற்சியானது, ஆறு ரன்கள் எடுக்க அடிக்கப்பட்ட கிரிக்கெட் பந்து சேற்றில் விழுவதற்கு ஒப்பானது. அப்பந்து மேலெழும்பாது. பெருவணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்  அவர்கள்  உற்பத்திசெய்த பொருட்களின்இருப்பை அதிகரித்துக் கொள்ளவே உதவும்.

பொருளாதார சுழற்சியை மீண்டும் துவக்கத் தேவையான மற்றொரு முயற்சி, உற்பத்தி > ஊதியம் > தேவை > முதலீடு என்ற சுழற்சியில் ஊதியத்தின் மீது கவனம் செலுத்துவதாகும். அரசு மக்களிடம் வாங்கும் திறனை ஏற்படுத்தும்போது, அவர்கள் துணி, காகிதம், காலணிகள் என தங்களுக்குத் தேவையானதை வாங்குவார்கள். சலுகைகள் வழங்கப்படுகிறதோ இல்லையோ, தேவை இருப்பதை அறிந்து கொண்டால் வணிக நிறுவனங்கள் உற்பத்தியில் தாமாகவே இறங்கி விடுவார்கள். ஆனாலும், பொருளாதார சுழற்சியை மீண்டும் இயங்கச் செய்ய இது போதாது. அரசு மக்களுக்கு பணம் அளித்து அதன் மூலம் சந்தையில் தேவை உருவாகிறது என்று வைத்துக் கொள்வோம். இவ்வாறாக உருவான தேவையை பெருநிறுவங்னகள் பூர்த்தி செய்கின்றன என்று வைத்துக் கொள்வோம். உற்பத்தி செய்யப்பட்ட துணி விற்றுவிடும். ஆனால், இந்த சுழற்சி அத்தோடு தடைபட்டு விடும். ஏனெனில் பெருநிறுவனங்கள் சில தொழிலாளர்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கும். இரண்டாவது சுழற்சியில், மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டிய பணம் தடைபடும். சேற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட கிரிக்கெட் பந்து மீண்டும் சேற்றை நோக்கியே அடிக்கப்படும்.

ஆனால், சந்தையின் தேவையை சிறு வணிகங்கள் பூர்த்தி செய்தால், நிலைமை முற்றிலும் வேறாக இருக்கும். அரசு மக்களுக்கு பணம் வழங்கி அதன் மூலம் சந்தையில் தேவை உருவாகிறது என வைத்துக் கொள்வோம். மேற்குறிப்பிட்ட சூழ்நிலையைப் போலவே இப்போதும் துணி விற்றுவிடும். ஆனால், இந்தப் பரிவர்த்தனையினால், அதிக ஊதியங்கள் வழங்கப்படும். இதன்மூலம் ஊதியங்கள் கிடைக்கப்பெற்ற தொழிலாளர்கள் அவ்வூதியப் பணத்தை மீண்டும் சந்தைக்கு கொண்டு வருவார்கள். மைதானத்துக்குள்ளேயே இரண்டு ரன்கள் எடுக்க அடிக்கப்படும் கிரிக்கெட் பந்து மீண்டும் கொண்டு வரப்பட்டு, மீண்டும் மீண்டும் அடிக்கப்படும். பொருளாதாரம் மெல்ல மீண்டெழுந்தாலும், அது நிலைத்து நிற்கும். மேலும், பெருவணிக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும், கார், இருசக்கர வாகனம், தொலைக்காட்சி உள்ளிட்டவையும் விற்கத் துவங்கும். ஆயுர்வேத மருத்துவர்கள் சிலசமயம் நோயாளிகளுக்கு மீண்டும் பசி ஏற்பட வேண்டும் என்பதற்காக அவர்களை பட்டினி கிடக்கச் செய்வார்கள். அதுபோல, அரசும் பெரு நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்காமல் அவர்களை பட்டினி கிடக்கச் செய்து அவர்களுக்கு உதவும்.

சரி, அரசு எப்படி சந்தையில் தேவையை உருவாக்க செய்ய முடியும்? முதல் வழி, மின்சார உற்பத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புத் துறைகளில் அரசின் முதலீட்டை அதிகப்படுத்துவது. நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் லாரிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால், இம்முயற்சி வெற்றியைத் தராது. மேலும் இது போன்ற முதலீடுகள், அதிக மூலதனத்தையும் குறைவான தொழிலாளர்களையும் கோருபவை. ஆதலால், சுழற்சியின் அடுத்தகட்டத்தில், சந்தையில் தேவை அதிகமாகாது. இரண்டாவது வழி, பெருநிறுவன வரியிலிருந்து (corporate tax) விலக்கு அளிப்பதும், பெருவணிக நிறுவனங்களின் கடன் கட்டணங்களை ஒத்தி வைப்பதும். குறைந்த தொழிலாளர்களுக்கே ஊதியம் வழங்கப்படுமாதலால், இவ்வழியும் உற்பத்தியை மீண்டும் துவக்க உதவாது. மூன்றாவது வழி, மக்கள்நல செலவினங்களுக்கு அதிக நிதியை ஒதுக்குவது. உதாரணத்திற்கு, 5 கிலோ தானியங்களை இலவசமாக வழங்கலாம், வயதான குடிமக்களுக்கு ஓய்வூதியத் தொகையை முன்வழங்கலாம். இவ்வழி சரியான திசையை நோக்கிச் சென்றாலும் சந்தையில்  தேவையை  அதிகரிக்க உதவாது. இத்தகைய திட்டங்கள் வருங்கால தேவையை நிகழ்காலத்திற்கு கொண்டு வரவே உதவும்.

அப்படி என்றால் நம்முன் நிற்கும் கேள்வி இதுதான்: வாங்கும் சக்தியை எவ்வாறு மக்களுக்கு அளிப்பது? அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சந்தையில் தேவையை அதிகரிக்க, தன் நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் 1000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.75000) வழங்க ஆணையிட்டுள்ளார். நம் நாட்டில் சுமார் 30 கோடி குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.2000 அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கலாம் என நான் பரிந்துரைக்கிறேன். இதற்கு கிட்டத்தட்ட ரூ 2 இலட்சம் கோடி தேவைப்படும். அரசு, பணப்பற்றாக்குறை அதிகரிப்பு பற்றி கவலைகொள்ளாமல், புதிதாக கடன் வாங்கி  இச்செலவினத்தை மேற்கொள்ள வேண்டும். தற்போதுள்ளதைப் போன்ற சிக்கலான காலகட்டங்களில், பணப்பற்றாக்குறையை (fiscal deficit) மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) 10% வரை அதிகரிக்க அனுமதிக்கலாம் எனப் பல பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நம்முடைய பணப்பற்றாக்குறை கடந்தாண்டு 4% ஆக இருந்தது. நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட ரூ 200 இலட்சம் கோடியாக உள்ளதால், மேலும் 6% அல்லது 12 இலட்சம் கோடி கடன் வாங்க நமக்கு வாய்ப்பு உள்ளது. வரும் ஆறு மாதங்களில் ஒன்றிய அரசுக்கு வரி மூலம் கிடைக்கும் வருவாயில் 50% குறைய வாய்ப்புள்ளதால் சுமார் ரூ 3 இலட்சம் கோடி இழப்பு ஏற்படும் என வைத்துக் கொள்வோம். அப்போது கூட மக்களிடையே வழங்குவதற்கு, அரசின் கைகளில் ரூ.9 இலட்சம் கோடி இருக்கும். துவக்கத்தில், அரசு ரூ.2 இலட்சம் கோடி கடன் வாங்கி, 30 கோடி குடும்பங்களுக்கு வழங்கலாம். தேவைப்பட்டால், மேலும் கடன் வாங்கி, மக்களுக்கு அளிக்கலாம். இந்தப் பணம், சந்தையில் துணி, காகிதம் மற்றும் காலணிகளுக்கான தேவையை உருவாக்கும். இந்தத் தேவையை சிறு வணிகங்கள் பூர்த்தி செய்யும்போது,  பொருளாதார சுழற்சி மீண்டும் இயங்கத் துவங்கும். ஏனெனில், அப்போதுதான், பல தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்கும். அதன் மூலம், ஊதியம்-தேவை-முதலீடு-உற்பத்தி சுழற்சி முறை துவங்கும். இதில் ஆபத்து என்னவெனில், சந்தையில் எழும் தேவையை பெருவணிகங்கள் மட்டுமே பூர்த்தி செய்தால், சில தொழிலாளர்களுக்கு மட்டுமே ஊதியம் கிட்டும். அதனால், கிரிக்கெட் பந்து மீண்டும் சேற்றிலேயே விழும்.

குறைந்தபட்ச ஊதியத்துக்கான தொகையை ஏற்பாடு செய்ய, எரிபொருள் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு உயர்த்தலாம். இந்த கலால் வரி மூலம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ரூ. 4 இலட்சம் கோடி வருவாயை அரசு திரட்டுகிறது. இவ்வரியை உயர்த்துவதன் மூலம் ஏற்படும் சுமை, மாநிலங்களுக்கிடையில் அதிக போக்குவர்த்துகளைக் கையாளும் பெருநிறுவனங்கள் மீதும், அதிக ஆற்றலை செலவழிக்கும் பணக்காரர்கள் மீதும் தான் விழும். முடிவாக, நலத்திட்டங்களுக்கு செலவிடுவதன் மூலமும், சிறு தொழில்களுக்கு சலுகைகள் அளிப்பதன் மூலமும் தேவையை அதிகப்படுத்தலாம்.

அரசு பணப்பற்றாக்குறையை அதிகரிக்க விடும், அதிகமாக கடன் வாங்கும், அதிகமாக செலவழிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இந்த முயற்சிகள் அனைத்தும் பெருவணிகங்களுக்கு வரிச் சலுகைகள் அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டால், அவை எந்த பலனையும் தராது. ஏனெனில், பெரு நிறுவனங்கள் மூலம் குறைந்த எண்ணிக்கையிலுள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே ஊதியம் கிடைக்கும். இதன் மூலம் உற்பத்தி > ஊதியம் > தேவை > முதலீட்டின் அடுத்த சுழற்சி துவங்காது. இந்த சுழற்சியை மீண்டும் மீண்டும் நடக்க வகைசெய்யும் பட்சத்தில் மட்டுமே பணப்பற்றாக்குறை அதிகரிக்க நாம் அனுமதிக்கலாம்.

-பாரத் ஜுன்ஜுன்வாலா (முன்னாள் பேராசிரியர், ஐ.ஐ.எம்)

தமிழில்: பாலாஜி

https://www.frontierweekly.com/views/apr-20/20-4-20-Perils%20and%20Benefits%20of%20Fiscal%20Deficit.html

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW