கொரோனாவால் இறந்த உடலை அடக்கம் செய்ய முடியாத அவலம்! எப்படி தடுப்பது?

20 Apr 2020

 

கொரோனாவால் உயிரிழந்த ஒரு மருத்துவரின் உடலை அம்பத்தூரில் எரியூட்ட சென்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடலை எடுத்துச் சென்றோர் அங்கேயே விட்டுவிட்டு வந்ததாக சொல்லப்பட்டது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அப்பல்லோ நிர்வாகம் மறுத்தது. பின்னர், ஊருக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட  துயரம் நேர்ந்தது.

நீலகரியில் நோய்வாய்ப்பட்டு கோவையில் சிகிச்சைப் பலனின்றி உயிர்விட்ட மருத்துவர் ஜெயமோகனின் உடலை அடக்கம் செய்யும்போதும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசு அவரது மரணம் டெங்குவால் நேர்ந்தது என்றது.

நேற்று இரவு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிர்விட்ட மருத்துவர் சைமன் ஹெர்குல்சின் உடலை அடக்கம் செய்வதற்கும் எதிர்ப்பு வந்துள்ளது. இது நடந்தது கீழ்ப்பாக்கத்தில். உடலை கொண்டு சென்ற வாகனம் மட்டுமின்றி உடன் இருந்த மருத்துவர்கள், வாகன ஓட்டுநர், மாநகராட்சிப் பணியாளர் ஆகியோர் தாக்கப்பட்டுள்ளனர். இது மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உளவியல் சோர்வையும் மக்களின் மனிதநேயம் மீதான கேள்வியையும் எழுப்பியுள்ளது.

2017 செப்டம்பரில் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குகையில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதற்கான மானுடவியல் சான்றுகள் கிடைத்தன. அவை 30 இலட்சம் ஆண்டுகள் பழமையானது. ஹோமோ சேபியன்ஸ், ஹோமோ எரக்டஸுக்கு முந்தைய ஹோமோ நெலடி என்ற மனிதவகை குரங்கினத்தின் உடல் எச்சங்கள் அவை. இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம் இறந்த உடல்களை ஓரிடத்தில் அடக்கம் செய்யும் மரபு 30 இலட்சம் ஆண்டுகள் பழமையானது என்ற வரலாற்றுப் பெருமிதத்தை மனிதன் கண்டுணர்ந்தான். மனிதனின் பண்பாட்டு வாழ்க்கையில் இறந்த உடலை அடக்கம் செய்வதற்கு முக்கியத்துவம் இருப்பதுபோல நவீன அரசியல் வரலாற்றிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. ஒரு மனிதன் வாழும் போது அவனுக்குரித்தான மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படுவதுபோல் அவன் இறந்த பின்னர் அவனது உடலும் கண்ணியத்துடன் அணுகப்பட்டு அந்த மனிதனின் சமய, பண்பாட்டு நம்பிக்கைகளின் அடிப்படையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என நவீன கால சட்டங்கள் கோரி நிற்கின்றன. அவ்வகையில் கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்களை அடக்கம் செய்வதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் கவலைக்குரியதாகும்.

கொரோனா நோய்ப் பரவல் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை, ஆனால் அளவுக்கதிமான அச்சம் நிலவுகிறது. கொரோனா பேரிடரை தங்கள் பதவி மற்றும் அதிகார அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஆட்சியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக பீதியைக் கிளப்பிட்டனர். அதன் தீய விளைவுகளில் ஒன்று இது. எனவே, இதற்குப் பொறுப்புகூற வேண்டியவர்களும் அவர்களே. ஆயினும் இதற்கு தீர்வு கண்டாக வேண்டும்.

இறந்த உடல் கொரோனாவைப் பரப்புமா?

”இறந்த மனிதன் இரும முடியாது, தும்ம முடியாது, மூச்சுவிட முடியாது.

எனவே, ஒரு மனிதன் இறந்த தருணத்திலேயே நோய்த்தொற்று பரவல் நின்றுபோகும். வைரசு பல்பெருக்கமும் நின்றுவிடும்.

இறந்தவரின் உடல் தோலில் வைரஸ் உள்ள துகள்கள் இருக்கும். எனவே, உடலைத் தொடாதவரை நோய் பரவல் 0% தான்.

உடலைப் புதைப்பதும் எரிப்பதும் முற்றிலும் பாதுகாப்பனதே. எட்டடி குழியிலிருந்து ஏறி எந்த வைரசும் வெளி வரமுடியாது.

4000 டிகிரி வெப்ப தீப்பிழம்பில் வைரசு பிழைக்க முடியாது.

தீப்பிழம்பும் புகையும் வைரசை ஏற்று செல்ல முடியாது.“ என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.

உலக நலவாழ்வு மையமும் இறந்த உடலைப் பார்ப்பதால் கொரோனா பரவுவதற்கான எந்த சான்று இதுவரை இல்லை என்று சொல்லியுள்ளது. மேலும் இறந்தவரின் உறவினர்கள் கையுறைகள் இன்றி உடலைத் தொடுவது கூடாது என்கிறது. புதைக்கவோ அல்லது எரிக்கவோ செய்யலாம் என்றும் சொல்லியுள்ளது. மார்ச் 24 அன்று இறந்த உடலை அடக்கம் செய்வது தொடர்பாக உலக நலவாழ்வு மையம் வெளியிட்ட கருத்துகள் இவை. இதை மக்களிடம் கொண்டு சேர்த்தாக வேண்டும்.

அடக்கம் செய்வதற்கு வரும் எதிர்ப்பை எப்படி தடுப்பது?

இன்று ஒருநாள் தொலைக்காட்சியில் இந்த செய்தி சொல்லப்படுகிறது. நாளைக்கு செய்திதாள்களிலும் இச்செய்தி வரக்கூடும். ஆனால், எத்தனை பேர் தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பவர்கள்? எத்தனை பேர் செய்திதாள் படிப்பவர்கள்? அப்படி என்றால், இந்த விழிப்புணர்வு கருத்து எல்லோரையும் சென்று சேர்வதை எப்படி உறுதிப்படுத்துவது? இதற்குத்தான் நாம் தொடக்கம் முதலே ஒவ்வொரு பகுதியினரைச் சேர்ந்த உள்ளூர்க்காரர்களைக் கொண்டு ஒரு தன்னார்வலர் குழுக்களை அமைத்திடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இதை செய்வதற்காகத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் நடத்த வலியுறுத்துகிறோம். ஆயினும், தமிழக முதல்வர் இது மருத்துவப் பிரச்சனை, இதில் என்ன அரசியல் இருக்கிறது? என்று வம்பு பேசி வருகிறார். எனவே, எந்தவொரு விழிப்புணர்வுச் சென்று அடிமட்டம்வரை சென்று சேர்ந்துள்ளதா? என்பது நமக்கு தெரியாது.

அப்படி என்றால், நாளை ஓர் உயிரற்ற உடலை எடுத்துச் செல்லும்போது வாகனக் கண்ணாடிகளை நோக்கி கல் வரும்போதுதான் அப்பகுதி மக்கள் உடலை அடக்கம் செய்தால் கொரோனா நோய் தொற்றிவிடும் என்று அஞ்சுகின்றனர் என்பது தெரியவரும். இப்படி ஒரு நிலைமையை எதிர்கொள்வதற்கு காவல்துறையின் உதவியுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று அடுத்த யோசனையும் எழுந்துவிட்டது. கொரோனா பொருட்டு அச்சத்தோடு மக்கள் நிற்பார்கள், கொரோனாவைவிட கூடுதல் அச்சத்தை காவல்துறையைக் கொண்டு ஏற்படுத்திவிட்டால் மக்கள் உடலை அடக்கம் செய்வதை தடுக்க மாட்டார்களாம். இதுவா இச்சிக்கலைத் தீர்க்க வழி?

தொடக்கம் முதலே இதை மருத்துவப் பேரிடர் மேலாண்மையாக கையாலாமல் மத்திய மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கு மேலாண்மையாக கையாண்டு வருவதன் பகுதி இது. இதனால் மென்மேலும் குழப்பங்களும் அச்சமும் ஏற்படும், எதிர்பாராத திசையில் இருந்து புதுப்புது சிக்கல்கள் வரும்.

எனவே, இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கேனும் அரசு மக்கள் பிரதிநிதிகளின் துணையை நாட வேண்டும். கொரோனா மரணம் ஒன்று நேரும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் என்ற அரசு இயந்திரத்தின் பகுதியும் எம்.எல்.ஏ, எம்.பி., நகர்மன்ற உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து நின்று செயலாற்ற வேண்டும். அதாவது அரசு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளின் உதவியை நாட வேண்டும். அவர்களின் உதவியுடன் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்தப் பிரச்சனையும் இன்றி மாண்புக்குரிய மனித உடலை அடக்கம் செய்வதை உறுதிப்படுத்த இயலும். இப்பணியை செய்வதற்கு துணைசெய்யுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

இந்த வழிமுறையைக் கடைபிடித்தால் உடலை அடக்கம் செய்வதில் நாம் எதிர்கொண்டு வரும் சிக்கலை உறுதியாக தவிர்க்க முடியும்.

 

– செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW