நீட்டி முழங்கும் வெற்றுரைகள் வேண்டாம் – நிதி வேண்டும் பிரதமரே!

15 Apr 2020

தில்லி அரசின் மாமன்னராக கருதிக் கொண்டு வெற்று உரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் பிரதமர். முழு ஊரடங்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கம் பற்றிய எவ்வித கவலையும் இல்லை, இதில் மாநில அரசுகளே நேருக்குநேர் கொரோனா பேரிடரையும் மக்களின் துயரங்களையும் எதிர்கொண்டு வருகின்றன என்ற எண்ணமும் இல்லை. அவரது வெற்று உரைகளால் வயிறு நிரம்புமா?, பரிசோதனைக் கருவிகள், முகக் கவசம், கையுறை, உயிர்வளியூட்டிகள் வாங்க முடியுமா? படுகுழியில் வீழ்ந்துவிட்ட மக்களின் பொருளியல் வாழ்க்கையை மீட்க முடியுமா? ஒருவரியில் சொல்வதானால், 5 பைசாவுக்கு பொறாத பேச்சப் பேசுவதற்கு  எதற்கு பிரதமர் பொறுப்பு?

  • வருமானம் தரும் துறைகள் எல்லாம் மத்திய அரசுக்கு, செலவு செய்யும் துறைகள் எல்லாம் மாநில அரசுக்கு! அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே மாநில அரசின் தலையில் ஏற்றி வைக்கப்பட்ட ஏற்பாடு இது. ஒவ்வொரு மனிதனுக்கும் உறுதி செய்ய வேண்டிய உடல்நலம் குறித்த நலவாழ்வுத் துறை மாநில அரசின் பட்டியலில் இருக்கிறது. அத்துறைக்குக்கு தேவையான அத்தனை செலவுகளும் மாநில அரசுகள் தலையிலேயே விழுகின்றது. கொரோனா பேரிடருக்கு எதிராக மாநில அரசின் ஒட்டுமொத்த இயந்திரமும் பம்பரமாய் சுழன்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. மாநில அரசுகளிடம் இருந்து அன்றாட புள்ளி விவரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு எந்த வேலையையும் மத்திய அரசு செய்வதில்லை. ஆனால், எவ்வித கூச்சமுமின்றி திரைப்பட கதாநாயகன் போல் பக்கம் பக்கமாக வசனங்களைப் பேசுவதற்கு வந்துவிடுகிறார் பிரதமர் மோடி.

 

  • தமிழக அரசு மார்ச் 25 முதல் மார்ச் 31 வரை ஊரடங்கு என்று அறிவித்திருந்தது. மார்ச் 23 அன்றே இந்த அறிவிப்பை வெளியிட்டு மக்களை தயார்படுத்த முயன்றது. ஆனால், மார்ச் 24 அன்று மாலை 8 மணிக்கு உரையாற்றிய பிரதமர், மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாள் ஊரடங்கு என்று பெரியண்ணன்தனமாக அறிவித்தார். இப்போது ஊரடங்கை நீட்டிக்கும் போது,  தமிழக அரசு ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என சொல்லியிருந்த நிலையில் இந்தியா முழுமைக்கும் மே 3 வரை ஊரடங்கு தொடரும் என்று உரையாற்றுகிறார். ஊரடங்கை நீட்டிப்பதும் தளர்த்துவதும் மாநில அளவில் இன்னும் சொல்லப்போனால் மாவட்ட அளவில் அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்பட வேண்டியது. தில்லியில் அமர்ந்து கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சேர்த்து அறிவிப்பு வெளியிடுவது அடிமுட்டாள்தனம், அடாவடித்தனம். அதிலும் கூட சமூக விலகல், முகக் கவசம் அணிதல் போன்ற அறிவுரைகளை மட்டும் வழங்குவதற்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள். பிரதமர் செய்திருக்க வேண்டிய கடமைகள் வேறு உள்ளன.

 

  • போதிய நிதியை மாநிலங்களுக்கு வழங்கியிருக்க வேண்டும்  மத்திய அரசு. அப்படி வழங்காத நிலையில் இந்த பேரிடரை எதிர்கொள்வதற்கு மாநில அரசுகள் மாநில மக்களிடம் இருந்து திரட்டி வருகின்றன. ஆனால், அதற்கும் முட்டுக்கட்டைப் போடுகிறது மத்திய அரசு. தேசிய பேரிடர் துயர்தணிப்பு நிதியம் என்று ஒன்று இருக்கும் போது PM-Cares என்று புதிய அறிவிப்பை வெளியிட்டு கொரோனா தடுப்புக்காக நிதி திரட்டிக் கொண்டிருக்கும் மத்திய அரசு, PM-Cares க்கு நிதி கொடுத்தால்தான் அது பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியாக(CSR) எடுத்துக் கொள்ளப்பட்டு வரிச்சலுகை வழங்கப்படும், மாநில அரசுக்கு கொடுத்தால் அந்த சலுகை கிடையாது என்று அறிவிப்புத் தந்துள்ளது. தர்மகர்த்தா கோயில் உண்டியலைத் திருடிய கதையாய் இருக்கிறது. தானும் கொடுக்க மாட்டான், கொடுப்பவனையும் தடுப்பான் என்ற பாணியில் மத்திய அரசின் ஒற்றையாட்சித் திமிர் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.

 

  • கார்ப்பரேட்களுக்கு 1,45,000 கோடி ரூபாய்க்கு வரி சலுகை, , கார்ப்பரேட்களின் கடனில் சுமார் 6,65,000 கோடி ரூபாய் தள்ளுபடி, தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பதற்கு சுமார் 2,35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, நாடாளுமன்றத்தைப் புதுப்பிப்பதற்கு 20,000 கோடி ரூபாய் என பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு ஆயுத வியாபாரிகளுக்கும் ஆடம்பரத்திற்கும் மக்கள் பணத்தை வாரி இறைத்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு, கொரோனா பேரிடர் தடுப்புக்கென்று மருத்துவக் கருவிகள் வாங்க 15,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. அதுவும் மூன்று கட்டமாக பயன்படுத்துவதற்காம்! முதல் கட்டமாக, ஜூன் 2020 வரை பயன்படுத்துவதற்கு 7774 கோடி ரூபாயைக் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில, ஒன்றிய ஆட்சிப்புலங்களும் பயன்படுத்த வேண்டுமாம். அதில் இப்போது உடனடியாக ஒதுக்கியிருக்கும் நிதி 4113 கோடி ரூபாய்! இதில் தமிழ்நாடு பெற்றிருக்கும் நிதி 314 கோடி ரூபாய் . ஆனால், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு தமிழக முதல்வர் கேட்டிருக்கும் தொகை 3000 கோடி ரூபாய்! 100 ரூ கேட்ட இடத்தில் 10 ரூபாயைக் கொடுப்பதற்கு மாநில அரசு என்ன பிச்சையா கேட்கிறது?

 

  • மாநில அரசு ஒருவார கால ஊரடங்கை மதிப்பிட்டு 3,280 கோடி ரூபாயை துயர்தணிப்பு நடவடிக்கைகளுக்கென்று ஒதுக்கியது. அதன்படி, அரிசி வாங்கும் குடும்ப அட்டை ஒன்றுக்கு தலா ரூ 1000, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு தலா 1000 ரூ என நிதியுதவியை அறிவித்தது. ஆனால், தான்தோன்றித்தனமாக மூன்று வார ஊரடங்கை அறிவித்த பிரதமர் மார்ச் 24 அன்று துயர்தணிப்புக்கு என்று எந்த நிதியுதவி சார்ந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. இதை சுட்டிக்காட்டி, தாம் அறிவித்தது ஒரு வாரத்திற்கான நிதியுதவியே, மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்கும் பட்சத்தில் கூடுதல் நிதியுதவியை செய்ய வேண்டும். அதற்கென்று நிதி ஒதுக்குமாறு கோரி தமிழக முதல்வர் மார்ச் 25 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு 3000 கோடியும் துயர்தணிப்புக்கு 1000 கோடி ரூபாயும் ஒதுக்குமாறு கேட்டிருந்தார். பின்னர், இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு மாநிலங்களுக்கு என்று மொத்தமாக ஒரு இலட்சம் கோடியை ஒதுக்கி அதில் தமிழகத்திற்கு 9000 கோடி ரூபாயைக் கொடுக்குமாறு மார்ச் 28 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் மாநில முதல்வர்களுடன் நடத்திய கலந்துரையாடலிலும் பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதங்களைச் சுட்டிக்காட்டி நிதி கோரினார். ஆனால், கல்லூளிமங்கனைப் போல், ஏப்ரல் 3 அன்று அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு மொத்தமாக ரூ 11,092 கோடி ரூபாயை ஒதுக்கி அதிலிருந்து ரூ 510 கோடி ரூபாயைத் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கினார். இத்தனைக்கும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டிற்கு வெறும் 510 கோடி ரூ! குரங்கு அப்பம் பிரித்த கதைப் போல் இதற்கு அடிப்படையாக அவர்கள் சொல்வது தமிழகத்தை வஞ்சிக்கக் கூடிய 15 வது நிதிக் குழுவின் பரிந்துரைகளை! ஆனால், ஊரங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்று முடிவு செய்வது , மக்களுக்கு அறிவுரைகள், கைதட்டச் சொல்வது, விளக்கேற்றச் சொல்வது என்பதற்கெல்லாம் முன்னுக்கு வரும் மோடி, பேரிடரை எதிர்கொள்ள பணம் கேட்டால் கொரோனாவைப் போல் கண்ணுக்கு தெரியாமல் மறைந்துவிடுகிறார்.

 

  • போதாக்குறைக்கு ஜி.எஸ்.டி சட்டத்தின் படி மாநிலங்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய நிதியைக்கூட கொடுக்காமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. சனவரி 2020 இல் மட்டும் தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெற்றுக் கொண்ட ஜி.எஸ்.டி. தொகை 6,703 கோடி ரூபாய். அதன்படி இந்தியாவில் அதிகம் பங்களிக்கும் மாநிலங்களில் 4 வது இடத்திலும் தென்னிந்திய அளவில் 2 ஆவது இடத்திலும் தமிழகம் இருக்கிறது. ஜி.எஸ்.டி. ஐ பொருத்தவரை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை  12,263 கோடி ரூபாய் என இவ்வாண்டு பிப்ரவரி 14 அன்று தமிழக அரசு நிதிநிலை அறிக்கையை முன்வைக்கும்போது மாநில நிதித்துறை செயலர் எஸ். கிருஷ்ணன் சொன்னார். இந்த இக்கட்டான நேரத்தில் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையையாவது கொடுங்கள் என்று ஏப்ரல் 2 அன்று முதல்வர் கேட்டுப்பார்த்தார். ஆனால், பேரிடர் நிதியை விட்டுத்தள்ளுவோம். கொடுக்க வேண்டிய பணத்தைக் கூட கொடுக்க மறுத்து தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார் மோடி.

”நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டு பேரும் ஊதிஊதி சாப்பிடலாம்” என்று சொல்வது போல், உன் வரிப் பணம் எனக்கு, செலவு உனக்கு, சுமை உனக்கு, கடமையெல்லாம் உனக்கு, வாய் ஜம்பம் அடிப்பது மட்டும் என் வேலை” என்று இருக்கிறது மத்திய அரசும் பிரதமர் மோடியும் நடந்து கொள்ளும் விதம்.

பிரதமரின் நீட்டி முழங்கும் வெற்று உரைகள் வேண்டாம் – நிதி வேண்டும்! தமிழகத்திற்கு சேர வேண்டிய நிதி வேண்டும்!

– செந்தில்

 

ஆதாரம்:

https://www.thehindubusinessline.com/economy/states-to-centre-clear-gst-compensation-dues-including-that-of-feb-march/article31248943.ece

GST dues from Centre to TN over Rs 12K crore:Finance Secretary
https://www.deccanherald.com/national/south/gst-dues-from-centre-to-tn-over-rs-12k-crorefinance-secretary-804734.html

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW