செய்ய வேண்டியதை செய்யத் தவறிய முதல்வர் – கொரோனா பேரிடரிலும் பதவி அரசியல்!

15 Apr 2020

ஒரளவுக்கு தற்சார்புடன் செயல்படக்கூட நலவாழ்வுத் துறைசார் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கிவருகின்றன. 1911 Indian Research Fund Association இந்திய ஆய்வுநிதிக் கழகம் என்ற  பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் விடுதலைப் பெற்ற இந்தியாவில் 1949 இல் பெயர் மாற்றம் அடைந்து இயங்கி வரும் உலகின் பழமையான மற்றும் பெரிய நிறுவனங்களில் ஒன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) ஆகும். இதன்கீழ் பல்வேறு அமைப்புகள் இயங்கி வருகின்றன. தேசிய கிருமியியல் நிறுவனம் (NIV) 1952 இல் இருந்து பூனேவில் செயல்பட்டுவருகிறது. தேசிய தொற்றியல் நிறுவனம் (1999) இல் இருந்து சென்னையில் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த நோய்த் தடுப்பு இயக்கத்தின் ( IDSP) இன் கீழ் மத்திய கண்காணிப்பு மையம் ( Central Surveilance Unit) அதற்கு கீழ் மாநிலக் கண்காணிப்பு மையங்கள் மற்றும் அவற்றின் கீழ் மாவட்டக் கண்காணிப்பு மையங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீடீர் என்று ஏதாவது தொற்று நோய்ப் பரவல் இருக்கிறதா? என்பதை வாரந்தோறும் மத்தியக் கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பியாக வேண்டும். இதுபோல் ஆண்டு முழுவதும் இடைவிடாது செயல்படக் கூடிய நலவாழ்வுக் கட்டமைப்பின் உறுப்பு அமைப்புகள் இந்தியாவில் உள்ளன. மேலும் தமிழ்நாட்டில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் என்ற பெயரில் மருத்துவ கருவிகள் வாங்குவதற்கான தற்சார்பான நிறுவனம் ஒன்று 1995 இல் செயல்பட்டு வருகின்றது.

இந்நிறுவனங்களின் துணையோடு தமிழக நலவாழ்வுத்துறை எபோலா, MERS, SARS போன்ற தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திய அனுபவம் கொண்டது. எனவே, இப்போது கொரோனா நோய்த் தடுப்புக்கான உத்தியை வகுப்பதிலும் இவைதான் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.

இவற்றின் செயல்பாட்டுக்கு எந்த மாண்புமிகுக்களின் வழிகாட்டுதலும் தேவையில்லை. ஜெயலலிதாவோ அல்லது அவரது புகைப்படத்தை சட்டைப் பையில் வைத்திருக்கும் பழனிச்சாமியோ அல்லது கருணாநிதியோ அல்லது அவர் வாரிசு முக ஸ்டாலினோ யார் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் போதிய நிதி ஒதுக்கினால் இந்நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். அப்படி என்றால் கொரோனா பேரிடரின் போது முதலமைச்சர் செய்திருக்க வேண்டியதென்ன?

முதல்வரின் கடமை என்ன?

  1. போதிய நிதி ஒதுக்குதல்:

மக்களின் துயர்தணிப்புக்கும் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் போதிய நிதியை ஒதுக்க வேண்டியது முதல்வரின் முதல் கடமை. நிதி கேட்டு அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். மருத்துவக் கருவிகளுக்கு 3000 கோடி ரூபாயைக் கேட்டார். மத்திய அரசோ 314 கோடி ரூபாய் தந்தது. துயர்தணிப்புக்கு என்று 9000 கோடி ரூபாய் கேட்டார். மத்திய அரசோ 510 கோடி ரூபாய் தந்தது. கொரோனா துரத்துகிறது என்று வீட்டுக்குள் முடக்கப்பட்ட மக்களை இப்போது பட்டினிச் சாவு துரத்திக் கொண்டிருக்கிறது. முதுகெலுப்பு இல்லாத முதல்வர் மக்களைக் கைவிட்டு, மத்திய அரசின் காலைப் பிடித்தப்படி தன் ஆட்சியைப் பாதுகாத்து கொள்வதில் முழு அக்கறையில் இருக்கிறார்: கேரள அரசு ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையாக உச்சநீதிமன்றத்தை அணுகும் போது தமிழக அரசு மத்திய அரசுக்கு மகுடிப் பாம்பை ஆடிக் கொண்டிருக்கிறது.

இதன் விளைவு – பட்டினியில் தவித்திருக்கும் மக்கள், போதிய மருத்துவப் பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் பணி செய்து வரும் மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும், நீண்டுக் கொண்டிருக்கும் ஊரடங்கும் ஆகும்.

          2. சமூக கட்டமைப்பை செயல்பட வைத்தல்:

முதல்வரின் இன்னொரு முக்கியமான பணி என்ன என்பதற்கு தமிழ்நாடு மருத்துவ இயக்குநர் குழந்தைச்சாமி நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பதில் இருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளின் நிலைமையைப் பார்க்கும் போது அச்சமாக இருக்கிறதே என்று பேட்டி எடுப்பவர் கேள்வி எழுப்புகிறார்கள். முன்னதாக, இந்தியாவில் உள்ள நலவாழ்வுக் கட்டமைப்புப் பற்றி அப்பேட்டியில் விளக்கியிருந்த திரு குழந்தைசாமி, மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் உள்ள வேறுபாடு குறித்துப் பேசத் தொடங்குகிறார். கஜாப் புயல், சென்னை வெள்ளம் போன்ற பேரிடரின் போது யாராவது ஆதரவின்றி தெருவில் நின்றார்கள் என்று சொல்ல முடியுமா? இங்கே ஒரு சமூக அமைப்பு ( Social System) இருக்கிறது. அரசக் கட்டமைப்பு மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் இருப்போர் தொடங்கி பலரும் உதவ முன்வருவார்கள். நம்மால் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கையை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்த முடியும் என்றெல்லாம் சொல்லிவிட்டு இத்தாலியைப் பார்த்து அஞ்ச வேண்டியதில்லை என்று பதிலளிக்கிறார்.

அரசுடைய நலவாழ்வுக் கட்டமைப்பு கொரோனா பேரிடரை எதிர்கொள்வதற்கு அரசின் ஏனைய துறைகளான வருவாய் துறை, உள்ளாட்சி துறை, சட்டம் ஒழுங்கு போன்றவை செயல்பட வேண்டும். அதுமட்டுமின்றி, ஒரு புதிய நோய்த் தொற்று என்ற வகையில் நலவாழ்வுக் கட்டமைப்புக்கு இசைவாக திரு குழந்தைசாமி சொல்லும் சமூகக் கட்டமைப்பும் செயல்பட வேண்டும்,

கஜா, சென்னை வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது ஊரடங்கு என்ற ஒன்று இல்லாததால் அந்த சமூகக் கட்டமைப்பு துயர்தணிப்புக்கு தானாக இயங்க தொடங்கிவிட்டது. ஆனால், கொரோனா விசயத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் நலவாழ்வுக் கட்டமைப்புக்கு எப்படி துணை செய்வது என்பது சமூக கட்டமைப்புக்கு புலனாகவில்லை. இந்த இடத்தில்தான் ஆட்சித் தலைமையின் பாத்திரம் முன்வருகிறது. ஆட்சித் தலைமையாக இருக்கும் முதல்வர் இந்த சமூக கட்டமைப்பை செயல்பட வைப்பதற்கான ,முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். இந்த சமூக கட்டமைப்பின் பகுதியாக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தொழிற் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், சமய நிறுவனங்கள், சாதி சங்கங்கள் என பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் ஊடாக நலவாழ்வுக் கட்டமைப்பின் முன்னெடுப்புகளுக்கு ஒத்திசைவாக சமூகத்தை ஊடாட செய்திருக்க வேண்டும். மேற்படி சமுதாய நிறுவனங்களின் துணையுடன் வார்டு அளவிலான தன்னார்வலர் குழுக்களை அமைத்து அரசக் கட்டமைப்புடன் செயல்பட வைத்திருக்க வேண்டும்.

 

ஆனால், முதல்வரோ வரவிருக்கும் தேர்தலைக் கணக்கு வைத்து இந்த உயிர்ப்புள்ள சமூகக் கட்டமைப்பையும் சேர்த்து வீட்டுக்குள் முடக்கினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மறுத்தார். இதை ஒரு மருத்துவப் பிரச்சனை என்றார். மக்களின் பாத்திரத்தை மட்டுப்படுத்தி வெறும் மண் புழுக்களாக வீட்டுக்குள் அடங்கி இருக்க சொன்னார். ஒரு மருத்துவப் பேரிடரை சட்ட ஒழுங்கு சிக்கலைப் போல் கையாண்டனர். நோயாளிகளையும் மக்களையும் காவல்துறையினரைக் கொண்டு கையாள வைத்தார்.  இதன் விளைவாக பின்வரும் கேடுகள் ஏற்பட்டன

  • தன்னார்வலர் குழுக்களை சமூக நிறுவனங்களின் துணையுடன் அமைத்திருந்தால் விழிப்புணர்வை சமூகத்தைன் வேர் வரை கொண்டு சென்று அச்சத்தையும் பீதியையும் குறைத்திருக்க முடியும். உதவிப் பொருட்கள், பணம் ஆகியவற்றை வீட்டு வாசலிலேயே கொடுத்திருக்க முடியும், கொரோனா நோய்க்கான அறிகுறிக் கொண்டோரை அடையாளம் காண உதவியிருக்க முடியும், ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வைப்பதில் பங்காற்றி இருக்க முடியும், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பிரிவினரான முதியவர்கள், நீரிழிவு, புற்றுநோய், சுவாசக் கோளாறு போன்ற நோயுடையோரை அடையாளம் காண்பதற்கு உதவியிருக்க முடியும், கொரோனா அல்லாத பிற தேவைகளுக்காக மருத்துவ உதவிகள் தேவைப்படுவோருக்கு உதவியிருக்க முடியும்.
  • மேற்படி அத்தனைப் பணிகளையும் செய்ய வேண்டிய சுமை அரசக் கட்டமைப்பின் மீது விழுந்தது. அரசக் கட்டமைப்பின் மையமாக விளங்கிக் கொண்டிருக்கும் நலவாழ்வுக் கட்டமைப்பின் மீது அழுத்தம் ஏற்பட்டது. சமூக நிறுவனங்களின் பங்கேற்புடன்  தன்னார்வலர் குழுக்கள் உருவாக்கப்படும் அவை செயல்பட்டிருந்தால் நலவாழ்வுக் கட்டமைப்பின் மீதான சுமை வெகுவாக குறைந்திருக்கும். அது இன்னும் நுட்பமான விவகாரங்களில் நேரத்தையும் உழைப்பையும் செலுத்த உதவியிருக்கும். அதன்மூலம் ஊரடங்கை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு இது பெரிதும் பங்களித்திருக்க முடியும். இது நமக்கு ஒரு பேரிழப்பாக மாறிவிட்டது.
  • வீட்டு வாசலில் ‘உள்ளே வராதே’ என்று ஸ்டிக்கர் ஒட்டினார்கள். இயந்திரகதியான தொலைக்காட்சி விளம்பரங்கள்! அரசியல் லாபத்திற்காகவும் டி.ஆர்.பி. ரேட்டிங்குக்காகவும் கிளப்பிவிடப்பட்ட அதீத பீதி கொரோனா நோய்த் தொற்றாளர்களைக் குற்றவாளிகள் போல் சித்திரித்தது. இதனால்தான், மதுரையில் முஸ்தபா என்ற தொழிலாளி  தற்கொலை செய்ய நேர்ந்தது. நோய் அறிகுறி உள்ளோர் காவல் துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்புகொள்ளுமாறு ஒலிப்பெருக்கியில் தெருதோறும் சொல்லப்படுகிறது. காவல்துறையின் அத்துமீறலால் மதுரையில் பெரியவர் அப்துல் ரஹீம் செத்தார்.
  • மக்கள் நோய்த் தொற்றாளர்களை அச்சத்துடன் பார்த்தனர். நோய்த் தொற்று இருக்கக் கூடும் என்ற காரணத்திற்காக தனிமைப்படுத்த ஆட்களை அரசு அதிகாரிகள் அழைத்துவரும்போது, ’தங்கள் பகுதியில் தங்க வைக்கக் கூடாது’ என மறியல் செய்யத் தலைப்பட்டனர்.
  • கொரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்தவர் உடலைப் புதைக்கவிடாமல் தடுத்தனர். இதற்கு முன்னானப் பேரிடரிர்களின் போது, எந்த மக்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டனரோ அந்த மக்கள் அச்சத்தினால், தங்கள் மனிதத் தன்மையை இழந்தவர்களாக நடந்துக் கொண்டார்கள்.
  • வீராப்புடன் மருத்துவப் பிரச்சனை என்று சொல்லிக் கொண்டிருந்த முதல்வர் தில்லி மாநாட்டு நோய்த் தொற்று விவகராம் வந்தவுடன் நிலைமையைக் கையாள முடியாமல் மதத் தலைவர்களை அழைத்து பேச வேண்டிய தேவை ஏற்பட்டது. தன்னுடைய புத்தி பின்புத்தி என்பதை இதன் மூலம் சொல்லாமல் சொல்லிக் கொண்டார். இப்போது ஓரளவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் நலவாழ்வுக் துறையினருக்கு உதவி வருகின்றனர். ஆனால், ஏனைய சமுதாய அமைப்புகள் பங்களிக்க முடியாத காரணத்தில் தில்லி மாநாட்டை ஒட்டிய வெறுப்பு அரசியல் சமூகத்தின் ஆணி வேர் வரை பாய்ச்சப் பட்டு வருகின்றது.
  • நோயுற்றோர் பெரும்பாலும் மருத்துவர்களைக் கடவுளாகப் பார்ப்பார்கள். ஆனால், கொரோனா நோய்த் தொற்றாளர்கள் மருத்துவருக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுகிறது. நோய்த் தொற்று அறிகுறிப் பற்றிய தெளிவை ஏற்படுத்தத் தவறியதால் இது மக்களுக்கும் நலவாழ்வுத் துறையினருக்கும் இடையிலான முரண்பாடாக உருவெடுக்கிறது. இந்த முரண்பாட்டைத் தணிப்பதற்கு காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர். மக்களைக் குற்றவாளிகளாக்கி களத்தில் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் நலவாழ்வுத்துறை உள்ளிட்ட பிற அரசு துறைப் பணியாளர்களுக்கு எரிச்சலையும் மனநெருக்கடியையும் உருவாக்கியுள்ளது முதல்வரின் பதவி அரசியல்.
  • இதையும் மீறி பசியாற்றும் பணியில் மட்டும் மேலே சொல்லப்பட்ட சமூக கட்டமைப்பில் உள்ள தொண்டுள்ளம் கொண்டோர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தபோது அதைக்கூட தடுப்பதற்கு அரசாணைப் போட்டார் முதல்வர். அந்த அரசாணைக்குப் பிறகு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், துயர்தணிப்புப் பொருட்களில் கட்சி, அமைப்புகளின் பெயர்கள் இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது. அப்படியென்றால் தன்னார்வலர்கள் தன் விருப்பம் போல் செயல்பட்டால் கொரோனா நோய்த் தொற்றி விடும் என்ற கவலையா? இல்லை அரசு பட்டினிப் போட்டுக் கொண்டிருக்கும்போது யாராவது பசியாற்றினால் அவர்களின் அடையாளம் தெரிந்துவிடும் என்ற கவலையா?

செறிவான மனித வளம், எழுத்தறிவுப் பெற்ற பெருந்திரளான மக்கள் கூட்டம்,  ஈக உணர்வு கொண்ட சமூக முன்னணியாளர்கள், பதவி, பட்டத்திற்கு அப்பாற்பட்ட தொண்டுள்ளம் கொண்ட இயக்கங்கள், மக்களுடன் நெருங்கி ஊடாடக் கூடிய கட்சிகளின் கட்டமைப்பு என இத்தனையும் கொண்ட ஒரு சமூகத்தில் கொரோனா பேரிடர் மேலாண்மை என்பது சட்ட ஒழுங்கு மேலாண்மையாக கையாளப்பட்டுக் கொண்டிருப்பதற்கானப் முழுப் பெருமையும் முதல்வர் பழனிச்சாமியை சாரும்!

எதிர்க்கட்சி தூங்கி எழுந்து ஒருவழியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முயன்றபோது அதையும் நிறுத்துவதற்கு காவல்துறை மூலம் தடைப் போட்டார் முதல்வர். வைக்கோல் போரை சுற்றிசுற்றி வரும் நாய் போல் தானும் செய்யமாட்டான், வேறு யாரும் செய்யவும் விடமாட்டான் என்று முதல்வர் மல்லுகட்டுக் கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் அரை நூற்றாண்டுகாலமாக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எந்தவொரு தமிழக நலன் சார்ந்த சிக்கலிலும் ஒன்றுபட்டு செயல்படாத அரசியல் கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக பழனிச்சாமியும் செயல்பட்டார். கொரோனா ஒரு பேரிடர் என்று உலகமே அல்லாடிக்  கொண்டிருக்கும் போதும் பதவி அரசியலுக்காக செய்ய வேண்டியதை செய்யத்தவறிய முதல்வர் பழனிச்சாமி என்ற புகழ் மாலையை சூட்டிக் கொண்டுவிட்டார். மனிதன் எவ்வளவு அற்பமானவனாகவும் நடந்து கொள்ளக் கூடும் என்பதற்கு மீண்டுமொரு தமிழக அரசியல் தலைவர்கள் எடுத்துக்காட்டாக ஆகிவிட்டனர்.

செய்தக்கஅல்ல செயக் கூடும் செய்தக்க

செய்யாமையானுங் கெடும்.

– செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW