தமிழக அரசு எம்ஆர்பி செவிலியர்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் – தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிக்கை!

13 Apr 2020

கடந்த 2015ம் ஆண்டு முதல் எம்ஆர்பி (மருத்துவ பணிகள் தேர்வாணையம்) மூலமாக சுமார் 7,000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் ரூபாய் 14,000 தொகுப்பு ஊதியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணியை செய்து கொண்டிருக்கின்றனர்.

 

தேர்வு செய்யும்போது அரசு இரண்டு வருடம் பணி நிறைவுற்றதும் அவர்களை காலமுறை ஊதியத்தில் ஈர்க்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது.

 

ஆனால் ஐந்து ஆண்டுகளாகியும் சுமார் 1,800 செவிலியர்கள் மட்டுமே காலமுறை ஊதியத்தில் இன்றுவரை ஈற்கப்பட்டுள்ளனர்.செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக இவர்கள் 12 மணி முதல் 24 மணி நேரம் வரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர்.

 

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 90% இந்த ஒப்பந்த செவிலியர்களே பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான் நோய் தடுப்பு நடவடிக்கைகளை செய்துகொண்டிருக்கிறது. ஒப்பந்த செவிலியர்கள் பலருக்கு மாத ஊதியம் கூட சரியான காலங்களில் வழங்கப்படுவதில்லை. பல செவிலியர்களுக்கு நான்கு மாதம் வரை ஊதியம் நிலுவையில் உள்ளது. கூடுதல் நேரம் பணி செய்யும் பணிகளுக்கு எந்தவித கூடுதல் பலனும் வழங்கப்படுவதில்லை.

 

தமிழ்நாடு அரசு செவிலியர் பணிக்கு நேரடியாக காலமுறை ஊதியத்தில் (Time Scale of Pay) தேர்வு செய்வதில்லை. ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை தேர்வு செய்து பல வருடங்கள் ஒப்பந்தத்தில் வைத்து பின்னர் காலமுறை ஊதியம் மாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த வேலை நிறுத்தத்தின் விளைவாக பொதுநல வழக்கில் சம வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டு இன்றுவரை காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை இதுகுறித்து பலமுறை தமிழ்நாடு MRB செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக சுகாதார செயலாளர் மற்றும் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தும் எந்த பலனுமில்லை .

 

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த செவிலியர்கள் தேசிய சுகாதார திட்டத்தில் பெறப்படும் பங்களிப்பின் மூலம் செவிலியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காலமுறை ஊதியம் வழங்க முடியாது என்று அரசு தரப்பு கூறுகிறது.

 

ஆனால் தேசிய சுகாதார இயக்கத்தின் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல் படி ஊழியர்களை தேர்வு செய்வதும் ஊதியம் வழங்குவது மாநில அரசுகளின் பொறுப்பு என்றும் சுகாதாரத் திட்டங்களை மேம்படுத்த ஒரு தொகையை மாநிலங்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மாநில அரசு முறையான ஊதியம் வழங்குவதை தவிர்க்க மத்திய அரசு மீது பழியை போடுவது சரியானது அல்ல. உழைப்புக்கேற்ற ஊதியத்தை மாநில அரசு செவிலியர்களுக்கு வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கேட்டுக்கொள்கிறது.

 

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சையில் செவிலியர்களுக்கு  உள்ள குறைபாடுகள்:

 

  1. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிக அளவில் பரவி கொண்டிருக்கக்கூடிய நிலையில் செவிலியர்கள் நேரடியாக நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதில் மருத்துவ பணிகள் தேர்வாணையம் (எம.ஆர்.பி) மூலம் தேர்வு எழுதி முறையாக தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர் மற்றும் நிரந்தர செவிலியர்கள் ஆகியவர்கள் எப்போதும் போல ஒரே விதமான பணியை பாரபட்சமின்றி செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்கள் வெறும் 14000ரூ ஊதியம் மட்டுமே பெற்று அரசு இரண்டு வருடங்கள் பணி நிறைவு பெற்றதும் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை தாண்டி இன்று ஐந்து வருடங்களாக கொத்தடிமைகளை போல நடத்தபட்டுக்கொண்டிருக்கின்றனர்‌.

 

  1. நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைப் பிரிவில் செவிலியர்கள் சமரசமின்றி கொரோனா நோய்க்கு எதிரான போரை செய்துகொண்டிருக்கின்றனர். குறிப்பாக கேரளாவில் ரேஷ்மா என்னும் செவிலியர் தனக்கு நோய் தொற்று வந்தபிறகும் தன்னை தனிமைப்படுத்திகொண்டு நோயிலிருந்து குணமடைந்த பிறகு இன்னும் நான் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆர்வமாய் இருக்கிறேன் என்று கூறினார். அந்த மனநிலை தான் அனைத்து செவிலியர்கள் மத்தியில் இருக்கிறது.

 

  1. அரசு அறிவித்த இரட்டை ஊதியம் நேரடியாக கரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் (isolation ward) வார்டில் பணி புரியும் செவிலியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கொரோனா வார்டில் நேரடியாக பணிசெய்யும் செவிலியர்கள் முதல் ஏழு நாள் வார்டில் பணிபுரிந்து பின்பு 7 நாள் விடுப்பு பின்பு 7 நாள் பணி பின்பு 7நாள் தனிமைப் படுத்துதல் ஆகிய நிலைகளில் பணிபுரிந்து அந்த ஒரு மாதமும் மருத்துவமனையிலேயே தங்கி பணிபுரிய வேண்டும். சுமார் 1000 செவிலியர்கள் தமிழகம் முழுவதும் கொரோனா வார்டில் பணிபுரிகிறார்கள். இந்த இரட்டை ஊதிய பலன் ஒப்பந்த செவிலியர்களுக்கு வழங்கப்படுமா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

 

 

  1. மேலும் அவ்வாறு நேரடியாக கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பல இடங்களில் தங்கும் விடுதி மற்றும் உணவு ஆகியவை சரியாக கிடைப்பதில்லை. தனிமைப்படுத்துதல் நிலையில் செவிலியர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறை வழங்கப்படவேண்டும். ஆனால் செவிலியர்களுக்கு தனித்தனி அறை வழங்கப்படுவதில்லை.

 

  1. அரசு அறிவித்த காப்பீட்டுத் திட்டம் ஒப்பந்த செவிலியர்களுக்கும் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். எப்போதும் போல எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்களுக்கு இது வழங்கப்படாது என்ற நிலை ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தாக முடியும்.

 

  1. கொரோனா அறிகுறியுடைய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் வார்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு கவசங்களான N95 முக கவசம் பாதுகாப்பு கையுறைகள்,கவுன்கள் வழங்கப்படுகிறது. அறிகுறி இல்லாமல் நோயாளிகள் சாதாரண காய்ச்சல் பிரச்சனைகளுக்காக சிகிச்சைக்கு வரும் நிலையில் அவர்கள் முதல் கட்டமாக ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ அல்லது கொரோனா சிகிச்சை பிரிவு இல்லாத இதர மருத்துவமனைகளிலோ தான் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களை கையாளும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்றை தடுக்கும் N95 முக கவசம் உட்பட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

  1. கொரோனா நோய் என்பதன் அறிகுறி நோய் தொற்றி 14- 21 நாட்களுக்கு பின்பு தான் தெரியவரும். ஆனால் ஒரு நோய் தொற்றுடைய அறிகுறி இல்லாத ஒரு நபரிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று 100% வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசு நேரடியாக கொரோனா வார்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே N95 முக கவசம் உட்பட்ட  பாதுகாப்பு கவசங்கள் வழங்குகிறது.

 

  1. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனை பிற பகுதிகளில் உள்ள ஊழியர்களுக்கும் N95 முக கவசம் உட்பட்ட அனைத்து பாதுகாப்பு கவசங்களும் வழங்க வேண்டும். சானிடைசர் போன்ற உபகரணங்கள் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும் நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும் முன் அவர்கள் சானிடைசர் உபயோகித்து முக கவசம் அணிந்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

  1. ஊதியத்துடன் கூடிய தனிமைப் படுத்திகொள்ளும் விடுப்பு (Quarantine leave) பிற செவிலியர்களுக்கு வழங்குவது போல எம.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்களுக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

  1. அரசு அறிவிக்கும் எந்த சலுகையாக இருந்தாலும் மருத்துவமனைகளின் அதிகாரிகள் இது ஒப்பந்த செவிலியர்களுக்கு பொருந்தாது என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பது எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

 

  1. ஒரே பணியை செய்யும் எம.ஆர்.பி ஒப்பந்த மற்றும் நிரந்தர செவிலியர்களை அதிகாரிகள் பாரபட்சம் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது.

 

  1. முழு அடைப்பு காலத்தில் மருத்துவ ஊழியர்கள் பணிக்கு செல்ல ஓரிரு மருத்துவமனைகளுக்கு மட்டுமே பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர் புறம் மற்றும் கிராமப்புறங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அரசு போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும்!

 

  1. நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் எம.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்களுக்கும் வழங்கவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

 

  1. கொரோனா நோய் தொற்று காரணமாக அரசு கூடுதலாக 1000 செவிலியர்களை பணி நியமன ஆணை வழங்கியது அவர்கள் பணி நிரந்தரம் கோர முடியாது என்ற அரசின் நிபந்தனையின் காரணத்தாலும் சொந்த ஊரிலிருந்து பலநூறு கிலோமீட்டர் தொலைவில் பணியிடம் வழங்க்கப்பட்டதாலும் அவர்களில் பலர் பணியில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வெறும் ஆயிரம் செவிலியர்களின் பணி நியமனம் போதாது. இன்னும் பல ஆயிரம் செவிலியர்களை அரசு எந்த நிபந்தனையும் இல்லாமல் நேரடியாக பணி அமர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 

  1. குறைவான அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் வந்து சேரும் நிலையில் நேரடியாக பணி செய்யும் செவிலியர்களுக்கு அது கிடைப்பதில் சிரமமாக உள்ளது. இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு சரி செய்து தரவேண்டும் என்று தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

 

பிற மருத்துவ ஊழியர்களின் கோரிக்கை:

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் 50% க்கும் மேல் உள்ள ஊழியர்கள் ஒப்பந்த முறை மற்றும் புற ஆதார முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களின் பணித்தன்மை நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக இருந்தாலும் ஊதியத்தில் முரண்பாடு பணி பாதுகாப்பின்மை மற்றும் பணி இடத்தில் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றை அரசு கவனத்தில் கொண்டு அனைத்து மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்து பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

 

மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புனர் ,மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் ஊர்தி ஓட்டுனர்கள் ஆகிய பணியிடங்கள் 60% க்கும் மேல் ஒப்பந்தம் மற்றும் புற ஆதாரம் முறையிலேயே பணியமர்த்த படுகிறது. இந்த முறையை அரசு கைவிட வேண்டும்.

 

மேலும் வீட்டு கண்காணிப்பில் இருக்கும் நோயாளிகளை வீடுகளில் சென்று கண்காணித்தல் மற்றும் களப்பணியில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அரசு போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும்.

 

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்

9790600202

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW