இப்பெருந்தொற்றிற்குப் பிறகான நமது வாழ்க்கை – கொரோனா எழுப்பும் பத்து கேள்விகள்

12 Apr 2020

கொவிட்-19 பெருந்தொற்று கடந்த நூற்றாண்டின் இறுதியில் தீர்வுகாணப்பட்டதாக நாம் கருதிய பல கேள்விகளை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது. கடந்த நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட இந்த உலகை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டு, நமது சமநிலைக்கு சவால் விடுகிறது. இப்பெருந்தொற்றிற்குப் பிறகான நமது வாழ்வை, மனித இனத்தின் நிகழும் அணுகுமுறைகளின் மீதான 10 கேள்விகளே முடிவு செய்யும்.

முதலாவதாக இந்த வைரஸ் உடனடி வாழ்வா சாவா நிலைகளில் பயனுடைமை சார்ந்த  கேள்வியை நம்முன் எழுப்புகிறது: பொதுச் சமூகத்தின் நலனுக்கு யாருடைய அல்லது எத்தனை சாவுகள் ஒப்புக்கொள்ளக் கூடியது? “என்னை மன்னியுங்கள், சில மக்கள் சாகத்தான் வேண்டும்… அதுதான் வாழ்க்கை”, என அறிவித்தார் பிரேசில் நாட்டு அதிபர் ஜேர் பொல்சனாரோ. “சாலை விபத்துகளைக் காரணம் காட்டி ஒரு கார் தொழிற்சாலையை மூட முடியாது”, என்றார்.  வயதான குடிமக்கள் நமது சமூகத்தில் பொருளாதார சுமையை உண்டாக்குகிறார்கள் என்ற எண்ணம் நமது பொதுப்புத்தியில் நீண்டகாலமாகவே உள்ளது. அவர்கள் சாவதில் ஒரு அனுகூலமும் உள்ளது – சமூக டார்வினியம், அதாவது வலியவை தான் உயிர் வாழும் என்ற கோட்பாடு இவ்வளவு நேரிடையாக சோதிக்கப்பட்டதில்லை. இப்பெருந்தொற்றுக் காலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் பயனுடைமை விவாதிக்கப்படும். 90 வயதிலிருந்து 99 வயதுக்குட்பட்ட கணவன் மனைவியை குணப்படுத்திய கேரள அரசின் நடவடிக்கை அறிவுக்கு உகந்ததா? பொருளாதார இலக்குகளுக்கும் சமூக இலக்குகளுக்கும் இடையிலான சமநிலை என்பது என்ன?

இரண்டாவதாக, ஒரு தேசத்தின் சக்தி என்பது என்ன? “நம்மிடம் இருக்கும் போர் விளையாட்டுகளைப் போல, நிறைய ‘கிருமி விளையாட்டுகளும்’ இருக்க வேண்டும்” என்று பில் கேட்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்தார். அமெரிக்கா உலகத்தின் இராணுவ மற்றும் பொருளாதார வல்லுரசு. இராணுவ உபகரணங்களின் ஆற்றல் குறைந்து வருவது 09/11க்குப் பிறகு நமக்கு தொடர்ச்சியாக எடுத்துக்காட்டப்பட்டு வருகிறது. ஆனால், அது ஆயதங்களின் மீதான உலக நாடுகளின் பசியைக் குறைக்கவில்லை. தேசத்தின் சக்தியை வளர்க்கும் செயல்திட்டங்கள் பொதுச்சொத்துக்களை எடுத்து பெருநிறுவனங்களின் கைகளில் கொடுப்பதும், அதேநேரத்தில் அந்நாட்டு மக்களை நாடு மேலும் சக்தி அடைந்துவிட்டதாக பொய்யாக நம்பவைக்கும் அரசியலையும் உள்ளடக்கியுள்ளது. தேச சக்தியின் இந்த முரண்பாடு, உலகம் முழுவதும் நிலவுகிறது. இந்தியா குறிப்பாக பரிதாபகரமான நிலையில் உள்ளது. இந்துத்துவ தேசியத்தின் இராணுவமயத்தின் மீதான ஆர்வம் சமூக உள்கட்டமைப்பின் மீதான கவனத்தைக் குறைத்துள்ளது. இந்நாட்டின் நடுத்தர வர்க்கம் இந்தியாவின் இராணுவ பலத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில், சுகாதார கட்டமைப்புடன் ஏற்பட்ட விரும்பத்தகாத சந்திப்பு, அவர்களது கனவுகளை தடுத்துவிட்டது. சக்தி மற்றும் பாதுகாப்பு குறித்து புதிய புரிதல் ஏற்படுமா?

மூன்றாவதாக, உலகமயமாக்கல் எங்கே? அனைத்து நாடுகளும் வைரஸ் பரவலைத் தடுக்க, தங்கள் நாட்டு எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதித்தன, ஆனால் அவை பயனற்ற செயல்களாகி போயின. உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் பன்னாட்டு அரசுமுறை ஆகியவை உலகளாவிய சிக்கலின் போது மட்டுமே கைவிடப்படும் என்பது இப்போது நாம் அறிகிறோம். மனித இனம் எதிர்கொள்ளும் மற்றொரு தீவிரமான சிக்கலான புவி வெப்பமடைதல், எப்போதுமே உடனடியாக எதிர்கொள்ளத் தேவையில்லாததாகவே தோன்றியது, ஆனால் இப்பெருந்தொற்று, உடனடியாக எதிர்கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது. எனவே, உலகமயமாக்கல் அதிகமா குறைவா என்பதைவிட, அதன் குணம் என்ன என்பதே முக்கியம். தற்போது அது இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட உயிரற்ற பேராசையாகவே உள்ளது. மனிதமும், சுற்றுச்சுழலையும் பிரதானமாகப் பார்க்கும் புதிய உலகமயமாக்கல் ஒன்று ஏற்படுமா?

நான்காவது, ஒரு அரசு எவ்வளது அதிகாரத்தை தன்னிடம் குவித்துக் கொள்ள முடியும். 9/11  தாக்குதல் மற்றும் 2008 பொருளாதார நெருக்கடி ஆகியவை அரசின் ஆதிக்கத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது. இப்பெருந்தொற்று அரசுக்கு அதீத அதிகாரத்தை வழங்கும். பயம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், குடிகள் அன்பையும், கட்டுப்பாட்டையும் அரசிடம் எதிர்பார்க்கிறார்கள். தொழில்நுட்பத்தின் மூலமாக பல்வேறு முறைகளில் கண்காணிக்கப்படுகிறார்கள்.

ஐந்தாவது, இந்த விரிவடையும் அரசானது சனநாயக அரசாக வளர்ச்சியடையுமா அல்லது சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லுமா? சீனாவும் சிங்கப்பூரும் சர்வாதிகார நடவடிக்கைகள் பலனளிக்கும் என்று காட்டியுள்ளன. ஜெர்மனி அரசு சனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நடவடிக்கைகளும் பலனளிக்கும் என்று காட்டியுள்ளது. ஆனால், இத்தாலியும் அமெரிக்காவும், தனிமனிதவாதமும் (Individualism), சந்தையும் கூட்டு இலக்குகளைக் குலைத்துவிடும் என்பதைக் காட்டியுள்ளன. சனநாயக மற்றும் சர்வாதிகார நடைமுறைகளின் கலப்பைக் கையாண்டுள்ள இந்தியா ஒரு திறந்த பரிசோதனைக் கூடமாகத் திகழ்கிறது.

அனைவருக்குமான, அனைவருக்கும் எதிரான (All against All) தடையில்லாப் போட்டியே செயல்திறனை அதிகப்படுத்துவதோடு வளர்ச்சியையும் கொண்டுவரும்” என்ற எண்ணத்தைக் கொண்டுள்ள புதிய தாராளவாத அறிவு இனி என்னவாகும்? “இப்படி செயவது சரியான அணுகுமுறை அல்ல. நான் பிற மாநிலங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறேன், விலைகளுக்கு ஏலம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்”, எனப் புலம்பினார் நியூயார்க் ஆளுனர் ஆண்ட்ரூ கொமொள. போட்டி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இங்கில்லை – ஏழைகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு எதிரிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, இந்த புதிய தாராளமய உலகில், பணக்காரர்கள் கார்டெல்களாக (அமைப்புகளாக) ஒன்று சேர்கிறார்கள். செயல்திறனற்ற நாடாக கருதப்பட்ட க்யூபா, பலநாடுகளுக்கு மருத்துவ நிபுணர்களை அனுப்பியுள்ளது. போட்டி ஆபத்தையும், ஒத்துழைப்பு மீட்சியையும் அளிக்கும் என இந்த வைரஸ் நமக்கு கூறுகிறது. இதற்கு மாற்று தான் என்ன? கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த 19ஆவது சீன கம்யூனிஸ்ட் காங்கிரஸில் பேசிய சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், கடந்த 2018 ஆம் ஆண்டு டாவோஸில், முதலாளித்துவவாதிகளுக்கு மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடியும் தாராளமய கொள்கைகளுக்கு மாற்றினை முன்வைத்தனர். “கூட்டுறவு” புத்துயிர் பெற்றுள்ளது. இத்தாலி அலிடாலியாவை (விமான நிறுவனம்) தேசியமயமாக்கியுள்ளது. ஸ்பெயின் அனைத்து மருத்துவமனைகளையும் தேசியமயமாக்கியுள்ளது.

ஏழாவது, வெகுஜனவாதத்திற்கு (Populism) என்னவாகும்? வெகுஜனவாதிகள் நெருக்கடி நிலைகளில் குறிப்படும்படியான எதிர்த்திறனைப் பெற்றுள்ளனர். அச்சிக்கலைத் தீர்க்க முடியாவிட்டாலும், பிற நாடுகளையோ, பிற சமூகத்தினரையோ அல்லது தங்கள் அரசியல் எதிரிகளையோ குற்றம் சாட்டுவதன் மூலம் தங்களை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வர். இவ்வுலகிலுள்ள அனைத்து வெகுஜனவாதிகளுக்கும் இப்போது வைரஸின் தாக்கத்தில் புதிய குற்றச்சாட்டுகள் கிடைத்திருக்கும். தங்கள் பழைய நிகழ்ச்சி நிரலையே இப்புதிய சூழலை பயன்படுத்தி முன்னேற்ற முனைவார்கள். இவர்களில் எவர் தங்கள் நாடுகளின் மீது தனது பிடியை இறுக்குவார்கள்? இவர்களுடைய செயல்பாடுகள் எங்காவது மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்குமா?

எட்டாவது, உலகமயமாக்கலால், “செயல்திறன்” மற்றும் “போட்டி” ஆகிய காரணங்களைக் கூறி, மனிதாபிமானமற்ற முறையில் சுரண்டப்பட்ட தொழிலாளர்களின் நிலை, உலகமயமாக்கலின் ஒளியாலும், நுகர்வு மயக்கத்திலும் மறைக்கப்பட்டிருந்தது. ஸ்வெட்ஷாப்ஸ் (sweat shops) என்று அழைக்கப்படும் உழைப்புக் கூடங்களைப் பற்றிய செய்தி அறிக்கைகள் அவ்வப்போது வெளிவந்தன. ஆனால் இந்த வைரஸ் அவர்களது வாழ்நிலையை வெட்டவெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது, நாம் வெட்கித் தலைகுனியும் வகையில் உள்ள – தினமும் 16 மணி நேர வேலை செய்தாலும், ஊதியத்துடன் கூடிய விடுமுறையோ இலவச மருத்துவ உதவிகளோ வாய்க்கப் பெறாத அமெரிக்கத் தொழிலாளர்கள் நிலையை, தங்கள் வீடுகளுக்கு பல நாட்கள் நடந்தே செல்லும் இந்தியப் புலம்பெயர் தொழிலாளர்கள் நிலையை மற்றும் மேற்கு ஆசியாவின் தொழிலாளர் கூடங்களைக் காண்கிறோம்.

ஒன்பதாவது கேள்வி, நாம் பயணிக்கும் அளவு உண்மையிலேயே பயணிக்கத் தேவை உள்ளதா? 2019 முடிவில், இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவத் துவங்கியிருந்த நேரத்தில், சிலர் தங்களது அடிக்கடி பயணிக்கும் பயணி நிலையை தக்க வைத்துக் கொள்ள பயணித்துக் கொண்டிருந்தனர். கடந்த அக்டோபரில் வெளியான பிரிட்டனின் காலநிலை மாற்றத்திற்கான குழு வெளியிட்ட அறிக்கையில், “ஏர் மைல்ஸ் (விமானத்தில் பயணிக்கும் தூரத்திற்கு ஏற்ப வழங்கப்படும் சலுகைகள்) மற்றும் அடிக்கடி விமான பயணம் மேற்கொள்வோருக்கு வழங்கப்படும் சலுகைகள் தடை செய்யப்பட வேண்டும்” எனக் கூறியிருந்தது. பெரிய வரவேற்பை இதுவரை அடைய முடியாத விமானப் பயணங்களைத் தவிர்க்கக் கோரும் இயக்கம் (no-fly movement) இனி அடையலாம். “டிஜிட்டல் தொழில்நுட்பம் நன்றாக வேலை செய்வதை நாம் இப்போது உணர்ந்து கொண்டுள்ளதால், சில வணிகப் பயணங்களைத் தவிர்க்கலாம்”, என டேம்லர்/மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ ஓலா கல்லேனியஸ் பி.பி.சி யின் பேட்டியில் கூறினார். வசதி படைத்தவர்களின் பயணங்களுக்கு வேறு ஒரு விளைவும் உண்டு: மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்படுவது.

சமூகம் பற்றிய சிந்தனை

பத்தாவது கேள்வி, சமூகம் பற்றியும் எல்லைகள் பற்றியும் நமக்கிருந்த சிந்தனைகள் எவ்வாறு மாறியுள்ளது என்பது பற்றியது. கொவிட்-19 சிக்கல் எதிர்மறை முரண்பாடுகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஒரு பக்கம், மக்கள் மிகச்சிறிய இடங்களுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இச்சிக்கலைத் தீர்க்க சமூக நடவடிக்கைகள் தேவை. புதிய தாராளமயம் மனிதர்கள் இடையிலான தொடர்புகளை வெறும் பரிமாற்றங்களாகவும், ஒவ்வொரு பரிமாற்றத்தையும் தனித்தனியாகவும் மாற்றிவிட்டது. இத்தகைய குறுகிய நோக்கங்கள்,  இந்த தலைமுறையை அடுத்த தலைமுறையிடமிருந்து பிரிக்கிறது, காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளும் அறிவுறுத்தல்களாகவே உள்ளன. ஒரு நிலையான கட்டமைப்பு முறை என்பது, கால அளவிலோ, நில அளவிலோ உடனடி பலனைத் தராத சுயநலத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆபத்துகளும் வெகுமதிகளும் நீண்ட இடைவெளிகளுக்கும் நீண்ட காலநிலைகளுக்கும் பரப்பப்பட வேண்டும். இதுதான் இந்த பெருந்தொற்று நம்மீது எறிந்திருக்கும் மிகப்பெரிய சவால்.

-வர்கீஸ் ஜார்ஜ்

 

தமிழில்: பாலாஜி

 

Ten questions posed by the virus –

https://www.thehindu.com/opinion/op-ed/ten-questions-posed-by-the-virus/article31282596.ece/amp/?__twitter_impression=true

RELATED POST
1 comments

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW