”சோறு போட்டப் பின் ஊதியம் எதற்கு?” கொரோனா காலத்திலும் தொழிலாளர்களுக்கு எதிராக நீதித்துறை!

11 Apr 2020

ஊரடங்கு காலத்தில் வேலையிழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு  குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த  பொதுநல மனு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சுகாதாரம் மற்றும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பணி நிர்வாகங்களை கையாளும் அளவுக்கு, நாங்கள் நிபுணர்கள் அல்ல எனவும்  இது குறித்து கொள்கை முடிவுகள் எடுப்பது  அரசின் தனிப்பட்ட உரிமை எனவும் அதில், நாங்கள் தலையிட முடியாது எனவும் கூறி தொழிலார்களை கைகழுவிவிட்டது.

1

பேரிடர் காலத்திலும் புலம்பெயர் தொழிலாளர்களை கைகழுவுகிற அரசு இயந்திரம்

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் பத்துகோடி புலம்பெயர்  தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் நடைமுறை பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்ளாமல் மாற்றுத் திட்டமும் இல்லாமல் மத்திய அரசு திடுமென 21 ஊரடங்கை ஓரிரவில் அறிவிக்கிறது. ஊரடங்கு மூன்று மாதம் நீடிக்கபோகிறது என்ற வதந்தியில்  கையில் பணம் இல்லாத சூழலில், முதலாளிகளால் துரத்தப்பட்ட அவல நிலையில் சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்களது கிராமங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடையாக தொழிலாளர்கள் நடக்கத் தொடங்கினர். சிலர் வழியிலே உயிரழந்தனர், சிலர் குழந்தைகளுடன் சுமார் ஐநூறு கிலோ மீட்டர் நடந்து ஊருக்கு வந்து சேர்ந்தனர். இந்த புலம்பெயர் மக்களின் நடை பயணத்தை நாடே கண்டது. இந்த அபாய நடையில் சுமார் 22  தொழிலாளர்கள் மரணமடைந்தார்கள். ஒரு போர்க் காலத்தில் நிகழக்கூடிய மாபெரும் இடப்பெயர்வைப் போல் இந்தியாவின் குறுக்கும் நெடுக்கும் தெற்கிலிருந்து வடக்கும் வடக்கிலிருந்து தெற்கும் மேற்கிலிருந்து கிழக்கும் என மக்கள் நடந்து கொண்டிருந்தனர். கொரோனாவுக்கு எதிரானப் போர் என்று அறிவித்து வாள்வீசிய பிரதமர் முதலில் புலம்பெயர் தொழிலாளர்களின் தலைகளைத் தான் வெட்டி எறிந்தார். இந்தியாவின் வரலாற்றில் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற அவர்களின் கால்தடங்கள் அழிக்க முடியாதப்படி படிந்துவிட்டது. அது சமகால சமூகம், ஆட்சியாளர்கள், ஆளும் வர்க்கங்கள், அதிகாரவர்க்கம், ஊடகங்கள், நடுத்தர வர்க்கம் என அத்தனை பேரின் மீது படிந்த கறையாக வரலாற்றில் நிலைபெறப் போகிறது.

இவ்வாறு பெரும் இன்னலுடன் பலநூறு கிலோமீட்டர் பயணம் செய்து சொந்த ஊருக்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குழுவாக தரையில் அமரவைத்து  ஆபத்தான வேதியில்  மருந்தடிதத்தது உத்திர பிரதேச அரசு.இந்தப் புகைப்படமானது,நாகரிக மனித கூட்டமென்று சொல்வதற்கு சற்றும் தகுதியற்ற ஆளும் வர்க்கத்தால் எவ்வாறு நாங்கள் ஆளப்பட்டோம் என அடுத்த தலைமுறைகளுக்கு அறிவிக்கின்ற அருவருப்பான ஆவணமாகிவிட்டது.

இந்த பின்புலத்தில்தான், பல்வேறு மாநில எல்லைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, கொஞ்சம் கூச்சமின்றி சோறு போட்டபின் பணம் எதற்கு? என்ற கேள்வியையும் தலைமை நீதிபதி கேட்டுள்ளார். முழு ஊரடங்கு நிலவும் போது எல்லாத் துறையினரும் பாதியளவேனும் சம்பளம் வாங்குவதை உறுதிசெய்கிறது அரசு. ஆனால், புலம்பெயர் தொழிலாளர்களை அடிமைகள் போல் நடத்துவதற்கு நீதிமன்றம் ஒத்து ஊதுகிறது. மேலும், அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்பதன் இறுதி அர்த்தமானது இறுதியின் இறுதியாக அரசுக்கு ஆதரவான நிலைப்பாடாக உள்ளது.

புலம்பெயர் தொழிலாளிகள் வந்தால் சுட்டுக் கொல்வோம் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகரா ராவ் ஒருபுறம் கொக்கரிக்கிறார். மறுபுறம் ஆடு, மாடுகள் போல அமரவைத்து தொழிலாளர்கள் மேல் பூச்சி மருந்தடிக்கப்படுகிறது. தற்போது குறைந்தபட்ச ஊதியம் வேண்டும் என்ற அடிப்படை மனிதாபிமான கோரிக்கையையும்  நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தொழிலாளர்கள் நலன்களுக்கு எதிரான இத்தகைய ஆளும் வர்க்கத்தின் போக்கானது  பாராளுமன்ற ஜனநாயக வடிவத்திலான,மத்திய கால கொடுங்கோன்மையை  ஆட்சிமுறைக்கு விசித்திர உதாரணமாக மாறியுள்ளது.

மத்திய மாநில அரசுகள் முதலாக தற்போது நீதிமன்றம் வரையிலும்  ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தொழிலாளர் நலன்களுக்கு எதிராகவும் தொழிலாளர்களைக் குறைந்தபட்ச மனிதநேய அடிப்படையில்கூட நடத்திடாத அவல நிலையை தற்போது காண்கிறோம்.

இம்மக்கள் உருவாக்கிய உழைப்பை அப்புறப்படுத்தினால்,இந்தியாவில் புதிய நகரமே  எழுந்திருக்காது, நாட்டை குறுக்கும் நெடுக்குமாக இணைக்கின்ற சாலைகளும் பாலங்களும் வந்திருக்காது

தற்போது தொழிலாளர்கள் பிரச்சனைகளின் தலையீடு செய்வதற்கு எங்களுக்கு எந்த நிபுணத்துவமும் இல்லை எனவும் அரசின் கொள்கை முடிவில் தலையீடு செய்ய முடியாது எனவும் சொல்கிற நீதிமன்றம்தான் தொழிலாளர்கள்  போராட்டங்களின்போது சட்டப்பூர்வ தலையீடு செய்து, போராட்டத்தை தடை செய்கிறது. போராட்டத்தின் ஈடுபடுகிற தொழிலாளர்கள் மீது சட்ட வன்முறையை ஏவி அச்சுறுத்துகிறது

தொழிலாளர்கள் பற்றின அரசின் கொள்கை முடிவில் தலையீடு செய்ய முடியாது என்ற நீதிமன்றம்,கடந்த கால தொழிலாளர் போராட்டத்தின்  போது எவ்வாறு அரசுக்கு ஆதரவாக ’பெருந்தன்மையுடன்’ தலையீடு செய்தது என்பதை சில உதாரணங்களின் மூலமாக  பார்ப்போம்.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்:

ஊதிய உயர்வு ஓய்வூதியப் பலன்களை வழங்குவதில் தாமதம், தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.), ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) போன்றவற்றைப் பெறுவதால் தாமதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 04.01.2018 அன்று தமிழகம் முழுவதுமுள்ள அரசின் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சுமார்  1,50,000 வேலைநிறுத்த போராட்டம்  செய்தார்கள்,தமிழகம் எங்கும் பேருந்து போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்த வேலை நிறுத்தத்திற்கு முன்னர் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் ,உறுதிமொழிகள் வழங்கப்பட்டும் தொழிலாளர்கள் கோரிக்கைகள் முழுவதும் தீர்க்கப்படவில்லை.

இத்தகைய நிலையில்தான் தொழிலாளர் தரப்பு நியாயத்தை கேட்காமலேயே,வேலை நிறுத்தத்திற்கு மறுநாளான  05.01.2018 அன்று போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்குத் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதைதொடர்ந்து தொழிலாளர் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறியதற்கு  தொழிலாளர்களிடம் பணத்தைக் கொடுக்க இயலவில்லையென்றால் போக்குவரத்து துறையைத் தனியாருக்கு வழங்கி விடலாமே என வரலாற்று சிறப்புமிக்க கருத்தைக் கூறியது.

இந்தியாவில், ஒப்பீட்டளவில் கிராம போக்குவரத்து கட்டமைப்புகளில் மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுகிற வகையில் நமது மாநிலம் செயல்படுகிறது. இதன் அடிப்படையிலேயே போக்குவரத்து துறை தேசியமாக்கப் பட்டது.அதாவது போக்குவரத்தை லாபத்திற்காக அல்லாமல் சேவையாக இயக்கப்படுகிறது.சில நாடுகள் இலவச போக்குவரத்து சேவையைக்கூட வழங்குகின்றன.இந்நிலையில் போக்குவரத்து அமைச்சகத்தின் நிர்வாக குளறுபடிகளாலும் ஊழலாலும் தமிழக போக்குவரத்துத்து துறை மோசமாக சீரழிக்கப்பட்டது.

ஆனால் நீதிமன்றமோ இதுகுறித்தெல்லாம் ஆய்வு செய்யாமல் போராட்டத்தை தடை செய்து போராட்டத்தை ஒடுக்கியது. மேலும் போக்குவரத்துதுறையைத் தனியார்மயமாக மாற்றுவதற்கும் யோசனை கூறியத!.

செவிலியர்கள் போராட்டம்

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் போன்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பர் 2017 இல் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை டிஎம்ஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தைக் கண்டு கொள்ளாத அரசு, வளாகத்திலுள்ள கழிவறைகளை மூடியும், செவிலியர்களை அச்சுறுத்தியும் பணிய வைக்க முயற்சித்தது.அத்தகைய நிலையில்தான் செவிலியர்கள் போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துப் போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிடுகிறது. போராட்டத்தை உடனடியாக கைவிட்டுப் பணிக்கு திரும்பவில்லையென்றால் பணி நீக்கம் செய்யலாம் என அரசுக்கு பரிந்துரைத்தது.

அரசின் கொள்கையில் தலையிடமாட்டோம் என்றும் தொழிலாளர்கள் சிக்கல்களின் நிபுணத்துவம் இல்லை என்ற நீதிமன்றம்தான் இவ்வாறு அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு ஆதரவாக தலையீடு செய்து போராட்டத்தை ஒடுக்கியது.

இவ்வாறு அரசாலும் நீதிமன்றத்தாலும் வஞ்சிக்கப்பட்ட செவிலியர்கள்தான் இன்று கொரோனா கொள்ளை நோய் பரவல் காலத்தில் தங்களது உயிரையும் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்கிறார்கள். விலை மதிப்பில்லாத மனித உயிர்களைக் காக்கின்ற இப்பணியாளர்கள் ஒன்றும் சட்டமன்ற உறுப்பினர் சம்பளத்தையோ நாடாளுமன்ற உறுப்பினர் ஊதியத்திற்கு ஏற்ப கேட்கவில்லை. குறைந்த பட்ச ஊதிய உயர்வைத்தான் கேட்கிறார்கள், பணி நிரந்தரம் செய்யக் கோருகிறார்கள்.

“ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டுச் செல்லலாம். ஆனால் போராட்டம் நடத்தக் கூடாது”என்ற கருத்து கூறிய நீதிமன்றம் மருந்துக்கும் கூட இப்பணியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணரவில்லை. இன்றைய கொரோனா காலத்தில்,செவிலியர்கள் வேலையைவிட்டு சென்றால் என்ன நடக்கும்? மாற்று செவிலியர்களைப் போதிய பயிற்சியின்றி பணிக்கு அமர்த்தக்கூட முடியாதே. ஆனால் செவிலியர்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அர்ப்பணிப்புக் குறையாமல் வேலை செய்கிறார்கள்.

இந்த அடிப்படை கோரிக்கையைக் கூட அரசாலும் நீதிமன்றத்தாலும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

ஜாக்டோ ஜியோ போராட்டம்:

கடந்த ஜனவரி – 2019  இல் அரசுப் பள்ளிகளை மூடக் கூடாது, ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தைப் பின்பற்ற வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான ஜேக்டோ – ஜியோ மாநிலம் தழுவிய  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வராத அரசு பணிக்கு திரும்பாதவர்களை, சஸ்பெண்ட் செய்வதும் , தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியை மேற்கொண்டது.

இதையடுத்து ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது எனவும், உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தின் போது பயணிகள் பாதிப்பு எனவும்,செவிலியர்கள் போராட்டத்தின் போது நோயாளிகள் பாதிப்பு எனவும்,ஆசிரியர்கள் போராட்டத்தின் போது மாணவர் நலன் பாதிப்பு என்ற பேரிலும் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை சட்டப்பூர்வ வன்முறையாலும் பொது மக்களிடம் போராட்டம் குறித்து தவறான கண்ணோட்டத்தை உருவாக்கின்ற கருத்தியல் வன்முறையைப் பயன்படுத்தியும்  ஒடுக்கியது. ஆசிரியர்கள் போராட்டத்தின்போது, ஆசிரியர்களின்  ஊதிய விவரங்களைப் பகிரங்கமாக பத்திரிகைகளில் வெளியிட்ட தமிழக அரசு, ஆசிரியர்களின் போராட்டத்திற்கு  எதிரான மனநிலையை  மக்கள் மத்தியில் உருவாக்கியது. ஆசிரியர்களின் போராட்டத்தில் மிக முக்கியமானக் கோரிக்கை அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது என்பதாகும். அது உண்மையில் அரசுப் பள்ளிகளை சார்ந்து இருக்கிற பரந்துபட்ட மக்களுடைய கோரிக்கையாகும். ஆனால், நீதிமன்ற உத்தரவின் உதவியோடு போராட்டத்தை அரசு ஒடுக்கியது.

மின்வாரியத் தொழிலாளர்கள் போராட்டம்

வர்தா புயலாகட்டும் அல்லது கஜா புயலாகட்டும், புயல் பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதற்கு,  மின்வாரியத் தொழிலாளர்களின் மின்சாரக் கை மட்டுமே பாதிப்படைந்த மக்களைக் காப்பதற்கு முதலில் நீண்டது! பேரிடர் காலத்தில், மக்களின் துயர்துடைக்க உயர் அழுத்த மின்கம்பத்தில் அமர்ந்தபடி பொட்டலச் சோற்றை வாயில் திணித்துக் கொண்டும்,சில சமயங்களில் உயிரையும் விடுகிற அந்த மின்வாரியத் தொழிலாளியின் வாழ்க்கையோ  துயர்மிக்கவையாக உள்ளது!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச கூலியை உயர்த்த வேண்டும் என்ற  நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பத்தாண்டுகாலத்திற்கும் மேலாக  மின்வாரியத் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.

சுமார் இருபது வயதில் ஒப்பந்தத் தொழிலாளியாக,  மின்வாரியத்திற்கு வேலை செய்ய வருகிற தொழிலாளி ஒருவர்  தற்போது  35 வயதைக் கடக்கிறார். இன்று நிரந்தரமாவோம், நாளை நிரந்தரமாவோம் என அவரது வாழ்க்கை பகல் கனவாக நீள்கிறது.பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடத்தி செவிசாய்க்காத நிலையில் கடந்த 24.08.2019 முதல் 27.08.2019 வரையிலான மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமையகத்தில் நடத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் வந்து இப்போராட்டத்தில் பங்கேற்றனர். ஒவ்வொருமுறை போராட்டத்தில் பங்கேற்கும் போதும் அமைச்சரின் வாக்குறுதியை ஏற்றுப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதும்,பிறகு கோரிக்கைகள் மீண்டும் கண்டுகொள்ளப்படாமல் போவதும் தொடர்கதையாகி விட்டது.

இந்த கொரோனா காலத்தில்,நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி நிறுவனங்களும் முடங்க,தமிழக மின்சார வாரியம் இயங்கிக்கொண்டு மக்களுக்கு தடையில்லாத மின்சாரத்தை வழங்கி வருகிறது.இதற்கு காரணம் இந்த தொழிலாளர்களே.இந்த தொழிலாளர்கள் இல்லையென்றால், இந்த ஊரடங்கு காலத்தில் யாரும் மின் வசதியுடன் இருக்க முடியாது.ஆனால் நீதிமன்றம் என்ன செய்கிறது?இது குறித்து எதுவுமே கண்டுகொள்ளாமல் கள்ளமௌனம் காத்து வருகின்றது.

ஒருவேளை தீவிரமானப் போராட்டங்களில் ஈடுபட்டால்,வழக்கபோல போராட்டத்திற்கு தடை உத்தரவு போட்டு தனது மௌனத்தை கலையலாம்!

இறுதியாக:

ஊதியம் கொடுக்க இயலவில்லை என்றால் போக்குவரத்துத் துறையை தனியார் படுத்துங்கள் எனக் கூறிய நீதிமான்கள், ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டு போகவேண்டியதுதானே என செவிலியர் போரட்டத்தில் ஆவேசம் காட்டிய நீதிமான்கள் தற்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க அரசை வற்புறுத்த முடியாது என்கிற நீதியரசர்கள்தான் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துமாறு அரசுக்கு வேண்டுகோள் வைத்து ஊதிய உயர்வு பெற்றார்கள்.

கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியான டிஎஸ் தாக்கூர் அவர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதையடுத்து  மூன்று நீதிபதிகள் குழு, நீதிபதிகளுக்கு சம்பள உயர்வைப் பரிந்துரைத்தனர்.

சாமானியத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டங்களுக்கு தடை போடுகிற நீதிமன்றம்தான் நீதிபதிகளின் ஊதிய உயர்வுக்கு பரிந்துரைத்து சுமார்  200% ஊதிய உயர்வைப் பெற்றுக் கொண்டது.

தொழிலாளர்கள் யாருமே 200  விழுக்காட்டு ஊதியத்தைக் கூட இங்கு கேட்க வில்லை.

சம்பள கமிஷனின் ஊதிய உயர்வு பரிந்துரையைத் தான் கேட்கிறார்கள்.

இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்களின் மாபெரும் இடப்பெயர்வு நிகழ்வானது, இந்திய ஆட்சியாளர்களின் கையாலாகத்தனத்தையும்,விளிம்புநிலை மக்களின் கையறு நிலையையும் காட்டியுள்ளது  அதுபோலவே, நீதிமன்றத்தின் தொழிலாளர்கள் விரோத நிலைப்பாட்டையும் மீண்டும் காட்டிவிட்டது.

நாட்டின் தலைமை நீதிபதி ஓய்வு பெற்ற சில மாதங்களிலேயே ஆளும் கட்சியால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெறுகிற நாட்டிலே, அன்றாடங்காய்ச்ச்சிகள் நீதிக்கு எங்கே போவார்கள்?

 

சோசலிச தொழிலாளர் மையம்  

ஆதாரம்:

https://www.dinamalar.com/news_detail.asp?id=2517000

https://www.hindutamil.in/news/opinion/columns/115723–5.html

https://www.vinavu.com/2017/11/30/chennai-high-court-interim-ban-for-nurses-protest-at-chennai/

https://tamil.oneindia.com/news/india/the-judges-the-supreme-court-high-courts-have-got-near-200-309903.html

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW