கொரோனா இருளை செயல்பாடின்மை எனும் சூனிய நம்பிக்கையால் அகற்ற முடியுமா ?

05 Apr 2020

கொரோனா கொள்ளை நோய்த் தொற்றிலிருந்து  நாம் தப்பிவிடுவோமா? ஊரடங்கை மேற்கொண்டு கால நீட்டிப்பு செய்கிற திட்டமேதேனும் அரசிடம் உள்ளதா? ஊரடங்கிற்கு பின்னாலான நிலைமை எப்படி இருக்கப் போகிறது? ஊரடங்கு காலத்தில் எதிர்கொண்ட பொருளாதார இழப்பீட்டை எப்படி ஈடு செய்யப் போகிறோம் என சாமானிய மக்களிடம் பல்வேறு கேள்விகளும் ஐயங்களும் தொக்கி நிற்கிற நிலையில்தான் இரு தினங்களுக்கு முன்பாக நாட்டு மக்களிடத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

சாமானிய மக்கள் மத்தியில் நிலவக் கூடிய ஐயங்களையும் குழப்பங்களையும் தீர்க்கிற வகையிலே பிரதமரின் உரை அமையப்போகிறதென்ற எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில்தான், மக்களிடம் மேற்கொண்டு கீழ்வரும் புதிய கேள்விகளை பிரதமர்  எழுப்பி திகைப்படையச் செய்துவிட்டார்.

  1. பிரதமர் தனது உரையில் வேண்டுகோள் விடுத்ததுபோல இன்று இரவு வீட்டில் மின் விளக்கை அணைக்கலாமா கூடாதா?
  2. எப்படி விளக்கு ஏற்றுவது?

இது ஒரு விசித்திரமான நிலைதான். இது ஏதோ மத்திய கால மன்னர் ஆட்சியில் நடைபெறுகிற கேலிக்கூத்து நிகழ்வுகளின், நிகழ்கால பிரதிபலிப்பாக அல்லவா உள்ளது. என அறிவுடைய ஒருவர் அங்கலாய்க்கலாம். இருபத்தி மூன்றாம் புலிகேசி படக் காட்சிகளையோ அல்லது வாரப் பத்திரிக்கைகளில் வருகிற மன்னர் பற்றின புளித்த நகைச்சுவைகளையோ நினைவுபடுத்தலாம். ஆனால் இதுதான் உண்மை!

மற்ற நாட்டு மக்கள் எதிர் கொண்டிராத நிலைதான்! ஏனைய நாட்டு மக்களாவது கொரோனா என்ற ஒரு பொது எதிரிக்கெதிராக போராடுகிறார்கள். நமக்கு இங்கே கொரோனவோடு கூடுதலாக நம்மை ஆள்கிற கட்சிகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய கேடு கெட்ட நிலையில் இருக்கின்றோம்..

பிரதமரின் வேண்டுகோளால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய குழப்பத்திற்கு ஒரு பாதி பதில் கிடைத்துவிட்டது. ஆம்.இரண்டாவது ஐயத்திற்கு  இந்திய ராணுவம் விளக்கமளித்து விட்டது. மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு முன் ஆல்கஹால் சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்றும் சானிடைசர்களுக்கு பதில் ‘சோப்’ பயன்படுத்துங்கள் எனவும்  இந்திய ராணுவம் அறிவுறுத்திவிட்டது. சரி முதல் கேள்விக்கு வருவோம்.

மின்விளைக்கை அணைக்கலாமா கூடாதா?

பிரதமர் காலையில் பேசி முடித்தபின்னர், இது குறித்தான விவாதங்களும் மின்வாரியத்தின் சுற்றறிக்கைகளும் சமூக ஊடகங்களின் பரவின. அதாவது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மின்விளக்கை அணைத்து மீண்டும் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சேர ஆன் செய்வதால், மின் பகிர்மான கட்டமைப்பில் தொழில்நுட்ப ரீதியாக சிக்கல் ஏற்படும் என்றும், இதை தவிர்க்கின்ற வகையிலே, மின்விளக்கை அணைக்காமல் விளக்கேற்ற வேண்டுமென்றும், மின் விளக்கை ஒரு வேலை அனைத்தாலும், வீட்டிலுள்ள பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட இதர மின் சாதனங்களை ஆன் செய்திருக்கவேண்டுமென்றும் மக்களுக்கு ஆலோசனைகளும் அறிவுறைகளும் சமூக ஊடகங்களில் பரவின.

பிறகு, நேற்றிரவு, ‘மின்விளக்குகளை ஒரு சேர ஆப் செய்து ஆன் செய்வதால் சிக்கல் ஒன்றுமில்லை என மின்வாரியம் சார்பாக விளக்கமொன்றை செய்தி ஊடகங்கள் வெளியிட்டன.

கொரோனா குறித்து விவாதங்களை பின்னுக்கு தள்ளியுள்ள இந்த விளக்கு விவகாரத்தை நல்ல வேலையாக எந்த செய்திச் சேனலும் விவாத தலைப்பாக்கி  நான்கு  பேரை வைத்து விவாதிக்கவில்லை. அது போகட்டும்.நமது ஆராய்ச்சியை தொடருவோம்.

  • ஒரு சேர மின் விளக்கை அணைத்து பிறகு மீண்டும் ஒரு சேர ஆண் செய்வதால் மின் பகிர்மான கட்டமைப்பு நிலைகுலைவிற்கு உள்ளாகும் என்றும், மக்கள் மின் விளக்கை அணைக்காமல் மெழுகுவர்த்தியையோ விளக்கையோ ஏற்றுங்கள் என மகாராஷ்டிரா மாநில மின்துறை அமைச்சர் நிதின் ராவுத் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.
  • முன்னாள் மத்திய மின்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷோ, மின் பகிர்மான கட்டமைப்பிற்கு சேதாரம் இல்லாமல் முறையாக இந்த நிலைமையை கையாளவேண்டும் என எச்சரிக்கின்றார்.
  • மின்பகிர்மான கட்டமைப்பு சீர்குலைந்தால், அவசர மருத்துவ சிகிச்சை பிரிவுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம், ஆகவே இந்த அறைகூவலை கைவிடுங்கள் என சிபிம் பொலிட் பீரோ பிரதமருக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

ஆக, வழக்கம்போல, எந்தவித முன் யோசனையற்ற, விளைவுகள் குறித்த கிஞ்சித்தும் அக்கறையற்ற வழக்கமான பிரதமரின் அறிவுப்புகளை சேதாரம் இல்லாமல் கூடுமானவரையில் சுமூகமாக முடிக்கின்ற பொறுப்பு அதிகாரி வர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டது.

உடனடியாக விழித்திக் கொண்ட மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங், துறைசார்ந்த மேல்மட்ட அதிகாரிகளை அழைத்து ஆலோசனை செய்கிறார்.

நாட்டின் மின் பகிர்மான கட்டமைப்பை நிர்வாகிக்கின்ற பவர் கிரிட் கார்பரேசன் (POWER GRID) மற்றும் POSOCO , NLDC ஆகிய அரசு பொதுத்துறை மின்சார நிறுவனங்களின் மேல்மட்ட அதிகாரிகளை அழைத்து நிலைமையை சுமூகமாக கையாண்டு பிரதமரின் புகழுக்கு கலந்கமேற்படாமல்  முடிக்கின்ற பணி ஒப்படடைக்கப்படுகிறது.

சரி இந்தப் பிரச்சனையை மின்துறை நிறுவனம் எவ்வாறு கையாளும் எனப் பார்ப்போம்

  • முன்னதாக அமலில் உள்ள ஊரடங்கால் எந்தவித தொழிற்சாலைகளும் இயங்கவில்லை. இதன் காரணாமாக தற்போது மின்சார தேவை அல்லது மின் பலுவானது(Load Demand) சுமார் 25 விழுக்காடு குறைந்துவிட்டது. அதாவது கடந்த ஆண்டு ஏப்ரலில் 2 ஆம் தேதியில் 32 GW ஆக இருந்த மின் பலு தற்போது  125.81 GW ஆகத்தான் உள்ளது.
  • இந்நிலையில் இன்று ஒரே நாளில் நாட்டில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஒன்பது மணிக்கு வீட்டின் விளக்கு அணைக்கப்படும்போது, மின் பலு திடுமென செங்குதாக சரிந்து செல்லும்.
  • இவ்வாறு திடுமென சரிவு ஏற்படுவதால் தேவைக்கும்(DEMAND) உற்பத்திக்கும்(PRODUCTION) இடையிலான சமநிலை குலையும். இதனால் வோல்டேஜ்(Voltage) மற்றும் பிரிகுவன்சி(Frequency) பண்புகளில் நிலைகுலைவு ஏற்பட்ட நாட்டின் மின் பகிர்மான அமைப்பு சேதமடையலாம்.
  • இதை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு நான்கு முதல் ஒருவாரம் கூட ஆகலாம்.
  • ஆக, இதை தடுக்கும் விதமாக மின்சார உற்பத்தி பகுதியில் மின் உற்பத்தியை குறைத்து தேவையில் ஏற்படுகிற திடீர் மாற்றங்களை சமப்படுத்துவதன் ஊடாக நிலைமையை மின்சாரத் துறை அதிகாரிகள் சமாளிப்பார்கள். அதாவது சிறு உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக அணைத்து விடுவார்கள்.

ஆக, மின்துறை அதிகரி வர்க்கம் சீர்குலைவுகளை தடுத்து  நிலைமையை வெற்றிகரமாக கையாண்டுவிடும் என்பதில்  ஐயமில்லை.

ஆனால் நமது கேள்வி என்னவென்றால்.

கொரோனாவிற்கு எதிரான அரசின் எதிர்ப்பு நடவடிக்கையில் இது எந்தளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதுதான். இந்நடவடிக்கைக்கு  ஏன் சம்மந்தமில்லாமல் மனித ஆற்றலையும் நேரத்தையும் செலவிட வேண்டுமென்பதுதான்.

அரசு செயல்படுவதற்கும் அக்கறை கொள்வதற்கும்  இன்னும் எவ்வளவோ விஷயங்கள் உள்ள நிலையில் இந்த விளக்கணைக்கின்ற விவகாரமும் அதனால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப சிக்கலும் அவசியம்தானா என்ற கேள்வி எழுகிறது.

  1. தற்போது வரை வெறும் இந்தியாவில் 70,000 கொரோனா பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன, இந்த பரிசோதனைகளை அதிகரிக்க  அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் தொற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இரண்டாம் தொடர்பு பரிசோதனை மூன்றாம் தொடர்பு பரிசோதனை என சுமார் 2,50,000 பரிசோதனைகளை செய்துள்ளார்களே? இது குறித்து பிரதமரோ, மத்திய சுகாதார அமைச்சகமோ ஏன் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை?
  2. பரிசோதனைகளை அதிகரிக்க பரிசோதனை கிட்களின் எண்ணிக்கையையும் பரிசோதனை  மையங்களின் எண்ணிக்கைகளையும் உயர்த்துவது அவசியம். இதற்கு அரசு எந்தளவில் செயல்பட்டுள்ளது?
  3. உயிர் காக்கும் சுவாசக் கருவிகள், சுவாசக் கவசங்கள், படுக்கைகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதா?அதன் எண்ணிக்கை குறித்த அரசின் விளக்கமென்ன?
  4. மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு எந்தளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது?
  5. ஊரடங்கு நடைமுறையால், தினசரி வருமானத்தை இழந்துள்ள அமைப்புசார தொழிலாளர்களைக்கு அறிவிக்கப்பட்ட பொருளாதார உதவித்தொகைகள் இன்னும் ஏன் பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளது? இதை எப்போது அரசு செய்யப்போகிறது?
  6. மாநில அரசுகளுக்கு போதுமான நிதி ஒதீக்கீடு செய்யப்பட்டுள்ளதா?
  7. புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உத்தரவாதப் படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
  8. பல நூறு கிலோ மீட்டர் நடைபயணத்தில் உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இன்னும்  ஏன் நிவாரணம் வழக்கப்படவில்லை?

இவ்வளவு வேலைகளை செய்ய வேண்டிய மத்திய அரசு தற்போது என்ன செய்துகொண்டுள்ளது? கைதட்டுவதாலோ விளக்கேற்றுவதாலோ என்ன பயன் கிடைக்கப் போகின்றது?

கொரோனாவால் உருவான இருளை நாம் நம்பிக்கை எனும் ஒளி மூலம் அகற்ற வேண்டும் என்ற பிரதமரின் பேச்சில் நடைமுறையில் எந்தப் பொருளும் இல்லை, பலனும் இல்லை.

மக்களிடம்  நம்பிக்கை ஒளியேற்றுவது என்பதன் நடைமுறைப் பொருள் என்பது  மக்கள் நலனுக்கு அரசு செயல்படுவது என்ற ஒன்று மட்டுமே.

மாறாக கொரொனோ இருளை செயல்பாடின்மை எனும் சூனிய நம்பிக்கையால் அகற்றுவோம் என்பதன் பொருள் மத்திய அரசின் செயல்பாடின்மையை பூசி மெழுகுவதன்றி வேறொன்றுமில்லை.

பிரதமர் மோடியின் தற்போதைய வேண்டுகோளானது மின்துறைக்கு தொழில்நுட்ப சிக்கலையும் நாட்டு மக்களுக்கு குழப்பத்தை மட்டுமே  ஏற்படுத்தியுள்ளது. தற்போது, கொரோனா என்னும் இருளை விட நாட்டை சூழ்ந்துள்ள பாஜக எனும் இருளைத்தான் நாம் அகற்ற வேண்டும். இல்லையென்றால் காலம் பூராவும் விளக்கேற்றியும் கைதட்டியும் நமது காலம், இருளிலே கரைந்துவிடும்!

 

-அருண் நெடுஞ்சழியன்

ஆதாரம்:

https://www.deccanherald.com/business/coronavirus-states-scramble-to-secure-power-grid-during-pm-modis-lights-off-campaign-821234.html

https://energy.economictimes.indiatimes.com/news/power/pms-april-5-blackout-call-puts-power-sector-on-alert-mode-to-maintain-grid-stability/74966251

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=576672

 

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW