தமிழக அரசே! அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டு! ஊரடங்கு சரிபார்த்தலைக் காவல்துறையிடமிருந்து, பொதுநல சக்திகள் கைகளுக்குமாற்று!

30 Mar 2020

கொரோனா ஆபத்து! நான்கு மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவு, எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், மார்ச் 31 வரை என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், ஏப்ரல் 14 வரை என இந்திய ஒன்றிய அரசு திடீரென அறிவித்தது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் பிழைப்புக்காக இடம் மாறி வாழ்க்கை நடத்தும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள், அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வார்கள்? வேலை வாங்கிய நிறுவனங்கள், ஒப்பந்த்தாரர்கள் கை விரித்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் அவரவர் ஊர்களை நோக்கி நெடும்பயணம் தொடங்கினர். ஊரடங்கு, தனித்திருத்தல் அனைத்தும் வார்த்தைகளாக மட்டுமே ஆகிப் போயின. கிராமபுரத்திலே வாழும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் நிலை?  ஏப்ரல் 3 ஆம் தேதியிலிருந்து நியாய விலைக் கடைகளில் அரிசியும், ஆயிரம் ரூபாயும் கிடைக்குமாம். அது வரை? என்ன செய்வது? காவல்துறையால் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியுமா? என்ன மாற்று ஏற்பாடு?

 

மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் சுகாதாரம் பேணலாம். காவல்துறை லத்திகள் மூலம் சட்டம் ஒழுங்கைக் காக்கலாம். ஏ.சி. அறைகளிலிருந்து நிர்வகிக்கும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை மட்டுமே கொண்டுள்ள ஊராட்சி நிர்வாகம் என்ன செய்ய முடியும்? எது வரை இறங்க முடியும்? ஊருக்கு ஊர் அங்கன்வாடிகள், பால்வாடிகள், நியாயவிலைக் கடைகள் வைத்துள்ள தமிழ்நாடு அரசு இன்று வரை யாருக்கும் சோறு போடவில்லை. உணவுப் பொருள் வினியோகம் செய்யவில்லை. என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க எந்த ஏற்பாடும் இல்லை. பிரதமர், முதல்வர், சனாதிபதி, கவர்னர் மாறி, மாறி அறிவிப்புகள், உரைகளாக வந்த வண்ணம் உள்ளது. வெளியே வந்தால் லத்திகளைச் சந்திக்கும் மக்கள் யாரிடம் தங்களது குறைகளைச் சொல்வது? தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்கள் சார்ந்த கட்சிகள் உள்ளனரே! பகுதிகள் வரை தனது தொண்டர்களை வைத்திருப்பவர்கள் அரசியல் அமைப்புகளே!

 

இவர்களின் பாத்திரம் இல்லாமல் அரசு தனித்துச் சாதிக்க முடியுமா? இன்று வரை கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்காத நெருக்கடிச் சூழலில் அனைத்து வகை மருத்துவ வல்லுனர்களையும் கலந்தாலோசித்து மருத்துவத் தீர்வைக் கண்டு பிடிக்க முயற்சிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டியது காலத்தின் கட்டாயம்! அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லாமலிருப்ப்து மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் அரசின் செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

 

கீழ்மட்டம் வரை அனைத்துக் கட்சித் தொண்டர்களின், தன்னார்வலர்களின் ஒருங்கிணைப்பு மட்டுமே கொரோனா அபாயத்தை எதிர்கொள்ள முடியும். அச்சமூட்டுவதன் மூலமோ, பீதியை உருவாக்குவதன் மூல்மோ எதையும் சாதிக்க முடியாது? பெரும்பான்மை மக்களுக்கு எந்தவித பேரிடர் நிவாரண் உதவிகளையும் வழங்காத அரசின் பொறுப்பற்ற தன்மையை, அல்லாடும் மக்களின் துன்ப துயரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டியது ஊடகங்களின் தார்மீகக் கடமையாகும். அரசுதரப்புக் கருத்துக்களை மட்டுமல்லாமல், மக்கள் மீது அக்கறையுள்ள அனைத்து அரசியல் சக்திகளையும் சந்தித்து, அவர்களின் ஆலோசனைகளை, கருத்துகளை வெளிக் கொண்டுவர வேண்டியது ஊடகங்களால் மட்டுமே சாத்தியமாகும்.

 

தமிழக அரசே! 

> அனைத்துக் கட்சிகளின் ஆலோசணைக் கூட்டத்தை கூட்டு!

> கீழ்மட்டம் வரை (ward) தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் தலைமையில் அனைத்துக் கட்சிகள், மக்கள் நல  ஆர்வலர்களின், உதவிக் குழுக்களை உருவாக்கு!

> மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க பகுதிவாரியாகத் தொண்டர் குழுக்களை உருவாக்கு!

> குடும்பம் ஒவ்வொன்றுக்கும் நிவாரணத் தொகையாக ரூ 15,000/- வழங்கிடு!

> உணவுப் பொருள்களை, நிவாரண நிதியையும் நியாய விலைக் கடைகள் மூலம்

வீடுகளுக்குச் சென்று உடனடியாக வழங்கு!

உயிர்க் கொல்லி அபாயக் கொரோனாவை மருத்துவ அறிவால், மக்கள் பலத்தைக் கொண்டு எதிர் கொள்வோம்!

  –மீ.த. பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW